Skip to main content

பயாஸ்கோப்பில் ‘பதேர் பாஞ்சாலி’ !

பயாஸ்கோப்பில்  ‘பதேர் பாஞ்சாலி’ !

இந்தக் கட்டுரையைப் படிக்கும் முன் என் சிறுவயது சினிமா ஆர்வம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.



பள்ளிக்கூட வாசலில் ‘பயாஸ்கோப்’பில் படம் பார்க்கும்போது,  ‘அது எப்படி வேலை செய்கிறது’ என்று ஆர்வமாகப் பார்த்திருக்கிறேன். வேலைக்குச் சென்றவுடன் முதல் சம்பளத்தில் பயாஸ்கோப் ஒன்றை வீட்டுக்கு வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஒரு பொருட்காட்சியில் ’வீட்டிலே சினிமா’ என்று ஒரு சின்ன புரெஜக்டர் வாங்கி கதவு எல்லாம் அடைத்து, தாத்தாவின் 9×5 வேட்டியைத் தொங்கவிட்டு,  100 வாட் பல்ப் சூடாகி நெருப்பு வரும் வரை படம் ஓட்டியிருக்கிறேன்.

எட்டாவது படிக்கும்போது, பள்ளி மைதானத்தில் ‘உத்தம புத்திரன்’ ஏற்பாடு செய்திருந்தார்கள். படத்தை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது, சிவாஜி ஜன்னல் வழியாக ஒரு செடியின் கொடியைப் பிடித்துத் தாவிப் போனபோது, படச்சுருள் எரிந்து சிவாஜிக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமலேயே கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு உத்தம புத்திரன் சிடி வாங்கி, ’குதித்த சிவாஜி என்ன செய்தார்’ என்று தெரிந்துகொண்டேன். சமீபத்தில் வந்த ’மாநாடு’ படத்தைக் கூட வீட்டில் இருக்கும் புரெஜக்டர் மூலம் தான் பார்த்தேன். என் முதல் வேலையும் சினிமா சம்பந்தப்பட்டது என்றால் ஆச்சரியப்படுவீர்கள். அதையும் சொல்லுகிறேன்.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக சென்னை வந்தேன். பல மென்பொருள் நிறுவனங்கள் படி ஏறி இறங்கிக்கொண்டிருந்தபோது கோடம்பாக்கத்தில் ஒரு நிறுவனம் “நைனா நீ கம்ப்யூட்டர் படித்தது எல்லாம் இருக்கட்டும். தற்குறிப்பில் பொழுதுபோக்கு – ஓவியம் என்று போட்டிருக்கே, அதனால் எங்கள் நிறுவனத்தில் நாளை வந்து சேர்ந்துகொள்ளுங்கள் ” என்று தேநீரும் பிஸ்கெட்டும் கொடுத்து அனுப்பினார்கள். அந்த வேலை கிடைத்ததற்குக் காரணம் நடிகை திவ்ய பாரதி.

நான் வேலைக்குச் சேர்வதற்கு சில ஆண்டுகள் முன் நடிகை திவ்ய பாரதி மாடியிலிருந்து குதித்து இறந்து போயிருந்தார். வேலைக்குச் சேர்ந்த நிறுவனம் திவ்ய பாரதி நடித்துப் பாதியில் விட்ட படங்களை வேறொருவர் நடித்து, அவள் முகத்தைக் கணினி கிராபிக்ஸ் மூலம் திவ்ய பாரதி முகமாக மார்பிங் செய்ய முயன்று கொண்டிருந்தார்கள். என்னையும் முகத்தை மாற்றும் வேலைக்கு அமர்த்தினார்கள். தினமும் டீ, பிஸ்கெட் சாப்பிட்டுக்கொண்டு, சிலருக்குச் சலாம் போடும் வேலையாக நீடித்தது.



ஒரு நாள் மதியம்  என்ன செய்வது என்று தெரியாமல் சற்று கண்ணசந்த சமயம்  திவ்ய பாரதி ஆவி ’இனியும் இங்கே ஓர் ஆணியும் பிடுங்க வேண்டாம்’ என்றது. உடனே ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு திவ்ய பாரதிக்கு டாடா காண்பித்திவிட்டு கிளம்பினேன்.

இன்று ’கணினி உதவி இல்லாமல் எந்தச் சினிமாவும் இல்லை’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம். பட சுருள் வழக்கிழந்து எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. ’தொழில்நுட்பம் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது’ என்று தெரிந்துகொள்ள இன்னொரு சம்பவத்தைச் சொல்லுகிறேன்.

சில மாதங்களுக்கு முன் ஓடிடி படங்கள் திகட்ட, பழைய ’கிளாசிக் படம்’ ஒன்றைப் பார்க்கத் தீர்மானித்தேன். 1955ல் வெளிவந்த சத்யஜித் ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’ நினைவுக்கு வந்தது. தேடியபோது முளைவிட்ட பயிர்போலப் பல இடங்களில் எட்டிப் பார்த்தது. அதில் ஒன்று மிக நேர்த்தியான பிரிண்டாக இருந்தது.

பல அண்டுகளுக்கு முன் கருப்பு வெள்ளையில், நடுவில் கோடுகளும், புள்ளிகளும் ஓட, மங்கலாக, சப்டைட்டில் இல்லாமல் குத்துமதிப்பாகப் பார்த்திருந்தேன். ஆனால் சமீபத்தில் இந்தப் படம் மேக்கப் அறையிலிருந்து வெளியே வரும் நடிகைபோலப் பளிச்சென்று இருந்தது.

படத்தை முழுவதும் பார்த்தபிறகு இப்படி மெர்சலான பிரிண்ட் பற்றித் தேட ஆரம்பித்தேன். தேடியபோது பல ஆச்சரியங்கள் காத்துக்கொண்டு இருந்தது.

இந்தியாவில் பழைய படங்களின் நகல்களை(நெகட்டிவ்) ஒழுங்காகப் பாதுகாப்பதில்லை. ஏதோ ஒரு பெட்டியில் எங்கோ ஒரு மூலையில் கூரைப் புடைவைபோலக் கிடக்கும். நாளடைவில் அவை பிசுபிசுப்பாக அழுகிய தக்காளி போல ஆகிவிடும். அப்படியே அழுகாமல் கிடைக்கும் படங்கள் கீறல் பல விழுந்து பாடாதியாக இருக்கும்.



சத்யஜித் ரேவிற்கு ஆஸ்கர் கிடைத்த பிறகு அவருடைய படங்களைப் பார்க்கும் ஆர்வம் பலருக்கு வந்தது. ரே படங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவருடைய படங்களின் நகல், நெகட்டிவ் லண்டன் சென்றது. துரதிஷ்டவசமாக அங்கே நடந்த தீ விபத்தில் அவை சேதம் அடைந்தது. அவர்கள் அதைக் கடாசவில்லை. சாம்பலுடன் மிச்சச் சொச்சங்களை அள்ளிப் போட்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸுக்கு திரைப்பட ஆவண கிடங்கிற்கு அனுப்பினார்கள்.

20 வருடங்கள் கழித்து ஜானஸ் பிலிம்ஸ்(Janus Films) என்ற நிறுவனம் ரேயின் படங்களை மீட்டெடுக்க ஆரம்பித்தார்கள். லாஸ் ஏஞ்சல்ஸில் திரைப்பட ஆவண கிடங்கில் பழைய நெகட்டிவ் இருப்பதும் அவர்களுக்குத் தெரியவந்தது. அதைத் திறந்து பார்த்தபோது பல படச்சுருள்கள் கருகி, ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு பிசுபிசுப்பாக இருந்ததைக் கண்டு அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.  அதிலிருந்து நல்லவற்றை மட்டும் எடுத்து ஸ்கேன் செய்து முப்பது நொடிகள் டிஜிட்டலில் படமாகக் கொண்டு வந்தார்கள். ’இதைப் பரிசோதித்துச் செப்பனிடத் தகுதியானவர்கள் இருக்கிறார்களா’ என்று தேடியபோது,  பல நிபுணர்கள் ரிடையராகியிருந்தார்கள், அல்லது இறந்திருந்தார்கள்.



’கோடாக்’(Kodak) போன்ற பெரிய நிறுவனங்கள் கூட ’எறிந்த படச் சுருளை மீட்டெடுப்பது கஷ்டம்’ என்று கைவிரித்தார்கள். இத்தாலியில் ஒரு நிறுவனம்  ’நாங்கள் செய்கிறோம்’ என்று அவர்களுக்குக் கைகொடுத்தார்கள்.

மடங்கி நெளிந்த படச்சுருளைச் சரி செய்து, ரசாயனத்தில் ஊற வைத்து, கழுவி, வெட்டி ஒட்டி, ஓரத்தில் உடைந்த ஓட்டைகளைச் சரி செய்து, ஸ்கேன் செய்து, ஒவ்வொரு ஃபிரேம்களில் உள்ள புள்ளி கோடுகளை நீக்கி, ஒலிகளை மீட்டெடுத்து, துல்லியமாக்கி, இரவு பகலாகக் கணினி உதவிக் கொண்டு ரிப்பேர் செய்தார்கள்.

பழைய எம்ஜிஆர்., சிவாஜி படங்களின் சுவரொட்டிகள் ‘புத்தம் புதிய காபி ’ என்று விளம்பரம் செய்வார்கள். இவர்கள் செய்தது  ‘புதிய பிரிண்ட்’ சாதனை !

இதற்குப் பிறகு 1968ல் வெளிவந்த சிவாஜி நடித்த ’ஹரிச்சந்திரா’  படம் பார்த்தேன். அது வேற கதை, அதை இன்னொரு கடைசிப் பக்கத்தில் சொல்லுகிறேன்!

- சுஜாதா தேசிகன்
நன்றி: கல்கி கடைசிப் பக்கம்
(11.2.2022)

Comments