Skip to main content

ஜான்ஸ்போர்ட்டும் ஜோல்னா பையும்

 ஜான்ஸ்போர்ட்டும் ஜோல்னா பையும்நான் பள்ளியில் படிக்கும் காலத்தில்  விதவிதமாக ”ஸ்கூல் பேக்” எடுத்துக்கொண்டு வருவார்கள்.

கரூர் கைத்தறி படுக்கை விரிப்பில் செய்த ஜோல்னா பை ; காக்கி வண்ணம், கேன்வாஸ் துணியில் இரண்டு தோள்பட்டையுடன் பின்புறத்தில் ’டக்பேக்’ மில்டரி பைகள்( உபத்திரவம் இல்லாமல் உச்சா போவதற்குச்  சௌகரியம்).  சேட்டுக் கடையில் பணம் வைக்கும் அலுமினியத்தில் பெட்டி; வயரில் பின்னிய கூடை கூட எடுத்துவருவார்கள்.

கல்லூரி படிக்கும்போது புத்தகங்களைக் கையில் எடுத்துக்கொண்டு செல்வது மீசை வைத்த ஆண் மகனுக்குக் கவுரவம். சந்தேகமாக இருந்தால் இப்போதே  சின்னி ஜெயந்த் நடித்த எந்தப் படத்தை வேண்டுமானாலும் பாருங்கள்.இன்று எல்லாம் மாறிவிட்டது. எல்லோர் முதுகிலும்  ’பாக்பேக்’ ( backpack) ஏறிக்கொண்டு விட்டது. பாக்பேக் இந்தியாவிற்கு 90களின் இறுதியில் வந்தது. வந்த சமயம் எனக்கு அதன் மீது காதல் ஏற்பட்டது. முன்பு கடைசிப் பக்கத்தில் ஏற்பட்ட சட்டை காதல் பற்றி எழுதியிருந்தேன் அல்லவா? அதே போல் தான் இதுவும். கொஞ்சம் காஸ்ட்லியான அவசரக் காதல். சொல்லுகிறேன்.

அலுவலகத்தில் சக ஊழியர் அமெரிக்காவிலிருந்து திரும்பினார். எல்லோருக்கும் சாக்லெட் கொடுத்துக்கொண்டு இருந்தபோது அவர் முதுகுப்பை (முதுகு குப்பை என்று படிக்காதீர்கள் ) என்னை வசீகரித்துப் பார்த்தவுடன் காதல் ஏற்பட்டது.  பையை வாங்கி பார்த்தேன். அதன் நடுவில் ‘ஜான்ஸ்போட்’ (JanSport) என்று பொறிக்கப்பட்டு பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைபோல அமர்க்களமாக இருந்தது.டாய்லெட் போவது போல அமெரிக்கா செல்லும் என் நண்பனிடம்,  “அடுத்த முறை அமெரிக்கா செல்லும்போது எனக்கு இதே மாதிரி ஒரு பை வேண்டும்; எவ்வளவு ஆனாலும் தந்துவிடுகிறேன்” என்று உத்தரவாதம் கொடுத்தேன்.

அடிக்கடி சாக்லேட் கொடுத்தானே தவிர, பையை மட்டும் வாங்கிவரவில்லை. நானும் கேட்பதை நிறுத்திவிட்டேன். திருச்சி, சென்னை பர்மா பஜார் என்று எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தேன். அமெரிக்கா சொந்தங்கள் பேசும்போது அவர்களின் காலிங் கார்ட் பஸ்பம் ஆகும் வரை இந்தப் பையைப் பற்றிப் பேசினேன். ஹும்ம்…

சில வருடங்களுக்குப் பிறகு அலுவலகம் அமெரிக்காவிற்கு அனுப்பியது. குளிரில் வீடு தேடிய பிறகு ’ஜான்ஸ்போர்ட்’ பை வாங்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் விமானத்தை விட்டு இறங்கினேன்.

கைச்செலவுக்கு கையில் நூறு டாலருடன் வீடு தேடியபோது ஓர் இடத்தில் ‘ஜான்ஸ்போர்ட்’ கடையைப் பார்த்து என் நண்பனின் கையை இழுத்துக் கொண்டு கனவுக் கன்னி பின் ஓடுவது போலக் கடைக்குள் பிரவேசித்தேன். விமான நிலைய நகைக் கடை மாதிரி உள்ளே யாரும் இல்லாமல்  தினுசு தினுசாக தொங்கவிட்டிருந்தார்கள். ஓரத்தில் தொங்கிக்கொண்டிருந்த என் க.கயை எடுத்துக்கொண்டேன். என் நண்பனுக்கு அதில் 39.99$ என்று போட்டிருந்ததைப் பார்த்து மயக்கமே வந்துவிட்டது. (அந்தக் காலத்தில் 40 டாலர் என்பது பெரிய விஷயம் ). இன்னும் இரண்டு வாரத்தில் தேங்க்ஸ் கிவிங் சேல், காஸ் மாஸில் சீப்பாக இடைக்கும் என்று சொல்லிப் பார்த்தான். ஆனால் நான் விடுவதாக இல்லை. மொத்தப் பணத்தையும் கொடுத்து கடைக்காரர் அந்தப் பையை என்னிடம் ஒப்படைத்த சமயம்,  தி.ஜாவின் மோகமுள் யமுனா தன்னை பாபுவிடம் ஒப்படைத்தது போல உணர்ந்தேன்.

நான் வாங்கிய பை நண்பர்கள் மத்தியில் பிரபலமானது. “இந்தப் பையையா வாங்கினே ?” என்று அதை வாங்கி முதுகில் மாட்டி இதற்கு 40 டாலரா ?  என்று விசாரித்தார்கள்.

தினமும் பல் தேய்த்துக் குளித்தபிறகு,  அந்தப் பை என் முதுகில் விக்கிரமாதித்தனின் வேதாளம் போல ஒட்டிக்கொண்டு அலைந்தது. இந்தியா வந்தபிறகு பல வருடங்கள் கழித்து அந்தப் பையே ‘என்னால் இனிமே முடியாது’ என்று ஐசியூ தாத்தாபோல விட்டுப் பிரிந்து சென்ற சமயம் இந்தியாவிலேயே அந்தப் பை கிடைக்க ஆரம்பித்தது,  எல்லோரும் மாட்டிக்கொண்டு அலைந்தார்கள்.

ஒரு சாதாரண நாள் டி.வி.யில் ’சலங்கை ஒலி’ படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் கமல் ஒரு ஜோல்னா பையுடன் வருவதைப் பார்த்து  ”முன்பு திருச்சி கோர்ட்டுக்கு எதிரே  ’ஜோல்னா பை’  விற்பார்கள். இப்போது கடையும் இல்லை, பையும் இல்லை” என்று என் அம்மாவிடம் கூறினேன்.சில வருடங்கள் முன் திருச்சி சென்றபோது என் அம்மா அக்மார்க் ஜோல்னா பையை என் கையில் கொடுத்தாள். அதை வாங்கிக் கொடுத்த ஒரு வாரத்தில் புற்றுநோய் என்று கண்டறியப்பட்டு, அடுத்த எட்டு வாரத்தில் எங்களை விட்டுப் பிரிந்தது எல்லாம் ‘ஃபாஸ் ஃபார்வர்ட்’ செய்த சினிமா போல நிகழ்ந்தது.

70வது வயதில் அந்தப் பையை எங்கே அலைந்து திரிந்து வாங்கியிருப்பாள். இன்றும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.


- சுஜாதா தேசிகன்
நன்றி : கல்கி கடைசிப் பக்கம் (4.2.22)

Comments