Skip to main content

ஆண்டார் பல்லக்கு முன்னே; அழகர் பல்லக்கு பின்னே !

ஆண்டார் பல்லக்கு முன்னே; அழகர் பல்லக்கு பின்னே !

இந்த பதிவை படிக்கும் முன் கையில் ஒரு பேப்பர், பென்சில் இருந்தால் உசிதம். 

“A chain reaction is a sequence of reactions where a reactive product or by-product causes additional reactions to take place. In a chain reaction, positive feedback leads to a self-amplifying chain of events.”  என்கிறது wikipedia  

இந்த பதிவும் கிட்டதட்ட அதே மாதிரி தான். 

படிக்க ஆரம்பிக்கும் போது  பல பெயர்கள் வரும்.கையில் நீங்கள் வைத்துக்கொண்டு இருக்கும் பேப்பர் பென்சிலை கொண்டு பெயர்கள் வரும் போது அதை  எழுதிக்கொண்டு வாருங்கள் பிறகு ஒவ்வொருவருக்கும் உள்ள தொடர்பை கோடுகள் போட்டு குறித்து வைத்துக்கொண்டு மீண்டும் படித்து பாருங்கள்.  நோட் பேட், எக்ஸெல் எல்லாம் நேர விரயம்... 

2016ல் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளை சேவிக்க ரூ250/= க்யூவே பெரிதாக இருக்க, ’அப்பால’ இருக்கும் இன்னொரு ரங்கநாதப் பெருமாளாகிய அப்பக்குடத்தானை செவிக்க வண்டியைத் திருப்பினேன்.

தன் வலது கையில் அப்பக்குடத்தை வைத்திருக்கும் இந்தப் பெருமாளுக்கும் எனக்கும் ரகசிய சம்பந்தம் ஒன்று உண்டு. சொல்கிறேன். 

விவரம் தெரியாத சின்ன பையனாக இருந்த போது … கவனிக்கவும் … விவரம் தெரியாத சின்ன பையனாக இருந்த போது … ஒரு நாள் கொள்ளிடக்கரை கல்லணை வழியாக கோயிலடி என்று அழைக்கப்படும் அப்பகுடத்தானை சேவிக்கச் சென்றேன். சந்நிதி பூட்டியிருந்தது. விசாரித்ததில் அர்ச்சகர் வீட்டைக் காண்பித்தார்கள். அர்ச்சகரிடம் பெருமாளை சேவிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தேன். அவரும் அதற்குச் செவிசாய்த்து சந்நிதியின் கதவை திறந்தார். ஆனால் அகத்தில் எதையோ மறந்துவிட்டார். இதோ வந்துவிடுகிறேன் என்று சென்றார்.கியூரியாசிட்டியினால் ஒரு  காரியம் செய்தேன் கருவரை உள்ளே சென்று பெருமாள் பக்கம் இருக்கும் அப்பகுடத்தையும் பெருமாளையும் தொட்டு சேவித்துவிட்டு வெளியே வந்தேன். சிறிது நேரத்துக்குப் பிறகு வந்த அர்ச்சகர் “நம்மாழ்வார் இங்கிருந்து தான் தன் கடைசிப் பாசுரத்தைப் பாடி மோட்சமடைந்தார்” என்றார். 

நான் தொட்டுக் கொஞ்சிய எனக்குப் பிரியமான அப்பகுடத்தானை சேவித்துவிட்டு அன்பில் சுந்தர்ராஜப் பெருமாளை சேவிக்கக் கிளம்பினேன்.

சுந்தர்ராஜப் பெருமாள்  சுடசுட பொங்கலுடன் வரவேற்றார். பருப்பு விற்கும் விலையில், பருப்பு இல்லாமல் அல்லது துளியூண்டு பருப்பை வைத்து எப்படி அருமையான பொங்கல் செய்யமுடியும் என்ற ரகசியத்தை அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். கோயிலுக்கு வெளியில் இந்த ஆட்டுக்குட்டிகளுக்கு அமுதனுடன் தழைகளை கொடுத்துவிட்டு திருவெள்ளறைக்கு என் பயணத்தை தொடர்ந்தேன்.

மணல் லாரிகள் ‘சைடு’ கொடுக்காமல் செல்லுகையில், மணக்கால் என்ற ஊர் பலகை வர “இங்கே தான் ஆளவந்தாருக்கு ஆசாரியரான மணற்கால் நம்பிகள் பிறந்த இடம்” என்று பெயர் பலகையை கை கூப்பிச் சேவித்துவிட்டு ஒரு கிமீ தூரம் செண்டிருப்பேன் மீண்டும் ஒரு மணல் லாரி என்னை ஓரம் கட்ட கொஞ்சம் எரிச்சலுடன் பார்த்த போது “ ”மணற்கால் நம்பி அவதார ஸ்தலம்” என்ற சின்ன பலகை என் கண்ணில் பட்டவுடன் வண்டியை அங்கே அங்கே சென்ற போது கதவு பூட்டியிருந்தது. கதவு திறப்பதற்கு முன் அவரை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.உய்யக்கொண்டாரின் பிரதான சீடர் மணற்கால் நம்பி இயற்பெயர் “ஸ்ரீராமன்”. உய்யக்கொண்டாரின் மனைவி பரமபதிக்க, அவருடைய திருமாளிகை காரியமெல்லாம் மணற்கால் நம்பியே செய்துவந்தார். உய்யக்கொண்டாரின் இரண்டு சின்ன பெண் குழந்தைகளையும் இவரே பார்த்துக்கொண்டார். ஒரு நாள் அந்தக் குழந்தைகளை நீராட்டி அழைத்து வரும் வழியில் வாய்க்காலில் சேறாயிருப்பதைக் கண்டு அவர்களுடைய கால்கள் சேற்றில் படாமல் இருக்கத் தானே ’படியாய்க்கிடந்து’, அவர்களை தன் முதுகிலே கால் வைத்துக் கடக்க செய்தார். தம்முடைய குழந்தைகளில் கால் சுவடுகளை அவர் முதுகில் பார்த்த உய்யக்கொண்டார் அவருடைய ஆசாரிய அபிமானத்தைக் கண்டு வியந்து அவருக்கு ’மணற்கால் நம்பி’ என்று திருநாமம் சாத்தினார்.

ஆசாரிய சம்பந்தம் இருந்தால் மட்டுமே பகவானால் உத்தாரணம் பண்ண முடியும் என்பதற்கு மணற்கால் நம்பிச் சிறந்த உதாரணம். அவருடைய பெயரே இந்த ஊரின் பெயராக இன்றும் இருக்கிறது!.மணற்கால் நம்பி அவதார ஸ்தலத்துக்குச் சென்ற போது கோயில் பூட்டியிருந்தது. ”அர்ச்சகர் வேலைக்குச் சென்றுவிட்டார்” என்று அவர்கள் வீட்டு மாமி எங்களுக்காகக் கோயிலை திறந்துவிட்டார். மணற்கால் நம்பிக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு, அவருடைய ஆசாரியனான உய்யக்கொண்டரை சேவிக்க திருவெள்ளறைக்கு சென்றேன்… 

திருவெள்ளறைக்கு சென்ற போது, பலிபீடத்துக்குத் திருமஞ்சனம் நடந்துகொண்டு இருந்தது.

உள்ளே புண்டரீகாட்சனை சேவித்துவிட்டு, மணக்கால் நம்பியின் ஆசாரியரான உய்யக்கொண்டார் மற்றும் எங்கள் ஆழ்வான் இருவரையும் சேவித்தேன்.

என் பெண் ஆண்டாளுக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கும் இந்தக் கோயிலுக்கும் ஒரு தொடர்பு  இருக்கிறது.

பத்து வருடம் முன் இந்தக் கோயிலுக்கு ஆண்டாளை அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன். பெருமாள் தீர்த்தம் வாங்கிய பின் ”இன்னும் கொஞ்சம் வேண்டும்” என்றாள். அர்ச்சகர், அந்தத் தீர்த்த வட்டிலை அப்படியே அவள் கையில் கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் குடித்துவிட்டு தா என்றார்!.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு இந்த ஊரில் அவதரித்த உய்யக்கொண்டார் தான் திருப்பாவை தனியனான “அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு... என்ற தனியனை எழுதினார்.

இந்த ஊரில் அவதரித்த இன்னொரு ஆசாரியன் ‘’எங்கள் ஆழ்வான்’ அவரைப் பற்றியும்  கொஞ்சம் பார்த்துவிடலாம்.. 

ஆழ்வான் என்றால் கூரத்தாழ்வான் தான் ‘எங்கள் ஆழ்வானுக்கும்’ ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டுமே ? இருக்கிறது… 

உடையவர் ஸ்ரீபாஷய வியாக்கனத்தை சொல்லச் சொல்ல அதை எழுத ஸ்ரீகூரத்தாழ்வானை பணித்தார். துரதிஷ்டவசமாக அந்தப் பணியை முடிக்கும் முன் அவர் கண் பறிபோனது. ஸ்ரீபாஷய விவரணத்தை முடிக்க கூரத்தழ்வானை போலத் தேர்ந்த பண்டிதரைத் தேடினார். அப்போது விஷ்ணுசித்தரைப் பற்றி கேள்விப்பட்டு அவரை நியமித்தார் இராமானுஜர். 

இவருடைய அறிவும் ஆற்றலும் கூரத்தாழ்வனுக்கு நிகராக இருப்பதைக் கண்ட உடையவர் பூரிப்புடன் “எங்கள் ஆழ்வானோ?” என்று விளிக்க விஷ்ணுசித்தர் ”எங்கள் ஆழ்வான்” ஆனார்.  எங்கள் ஆழ்வான் உடையவரை விட 80 வயது சிறியவர் ( காலம் கிபி 1069-1169 ) உடையவர் இவரை திருகுருகைப்பிரான் பிள்ளானிடம் அனுப்பி அவரையே ஆசாரியராகக் கொள்ள செய்தார். எங்கள் ஆழ்வானை ”அம்மாள் ஆசாரியன்” என்றும் அழைப்பர். அதற்கும் ஒரு காரணம் இருக்கு… ஸ்ரீரமானுஜர் நியமித்த முக்கியமான ஆசாரியர் நடாதூர் ஆழ்வான், ஸ்ரீபாஷயத்தை பலரிடம் கொண்டு சென்றவர். இவருடைய பேரன் நடாதூர் அம்மாள். தன் பேரனுக்கு ஸ்ரீபாஷயம் சொல்லித்தர ஆரம்பிக்க நடாதூர் அம்மாள் துடிப்புடன் பல சந்தேகங்கள் கேட்க ஆரம்பித்தார். “எனக்கு வயதாகிவிட்டது, அதனால் நீ எங்கள் ஆழ்வானிடம் கற்றுக்கொள் அவர் தான் உன் சந்தேகங்களுக்கு தக்க விளக்கம் சொல்லுவார்” என்று அனுப்பினார்.

காஞ்சியிலிருந்து புறப்பட்டு, நடாதூர் அம்மாள் எங்கள் ஆழ்வானின் வீட்டுக் கதவை தட்டிய போது உள்ளேயிருந்து யார் ? என்று கேட்க அதற்கு அம்மாள் “நான் தான்” என்று பதில் கூற அதற்கு உள்ளிருந்து “நான் செத்த பின் வரவும்” என்று பதிலுரைத்தார் எங்கள் ஆழ்வான்.

குழம்பிய  நாடாதூர் அம்மாள் தன் தாத்தாவிடம் வந்து கேட்க அவர் “நான்” என்ற சொல்லாமல், நான் என்ற மமதை இல்லாமல் “அடியேன்” என்று சொல்ல வேண்டும் என்று அறிவுரைத்தார்.

அம்மாளும் திரும்ப சென்று “அடியேன் வந்திருக்கிறேன்” என்று சொல்ல எங்கள் ஆழ்வானுக்கு அபினான சிஷ்யனாக விளங்கினார் நடதூர் அம்மாள்.

உய்யக்கொண்டார்


எங்கள் ஆழ்வான் என்ற ஆசாரியரை ”அம்மாள் ஆசாரியன்” என்றும் அழைப்பர்.  சிஷ்யனின் பெயரை வைத்து ஒரு ஆசாரியனா ? காரணம் இருக்கு.

ஒரு தாய் தன் குழந்தைக்குப் எப்படிப் பரிவுடன் சரியான பதத்தில் பாலை ஊட்டுவாளோ அதே போல தேவப் பெருமாளுக்கும் பக்குவமாக இளம் சூடான பாலமுது சம்பர்ப்பிக்கும் சேவை செய்தார். “எனக்குத் தாய் தந்தை கிடையாது ஆனால் நீர் என் தாய் போல் என்ன கவனித்துக்கொள்கிறீர்” என்று சொன்னாராம். அதனால் தான் அவருக்கு நடாதூர் ”அம்மாள்” என்று திருநாமம் கிடைத்தது.

இப்பேர்பட்ட சிஷ்யனினாக இருக்கிறானே என்று எங்கள் ஆழ்வான் “அம்மாள் ஆசாரியன்” வைத்துக்கொண்டார். 

மீண்டும் மணக்கால் நம்பியிடம் செல்லலாம்…. மணற்கால் நம்பி தான் ஆளவந்தாரை நம் சம்பிரதாயத்துக்கு கொண்டு வந்தார் 

நாதமுனிகளின் பேரனான ஆளவந்தார் கிபி 976 ஆம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாதமுனிகள் வடநாட்டில் பெருமாளுக்கு கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார். அவரே பிறகு ஆளவந்தார் என்று புகழ்பெற்றார். 

( படம் : எங்கள் ஆழ்வான் அவருடைய திருவடியில் நடாதூர் அம்மாள் திருவெள்ளறை)

ஆளவந்தார் ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில் ( அந்த சம்பவங்கள் முன்பு எழுதியிருக்கிறேன்) , தன் ஆசார்யரின் கட்டளையை நிறைவேற்றத் தக்க சமயம் என்று எண்ணி ஆளவந்தாரைக் காண வந்தார், ஆனால் அவரால் அரண்மனைக் காவலை தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை. அரண்மனை சமையலறையில் பணிபுரிபவர்களின் வாயிலாக, ஆளவந்தார் தூதுவளைக் கீரையை விரும்பி உண்பார் என்ற விஷயத்தை விசாரித்து தெரிந்துக்கொண்டு, தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார். ஆறு மாதம் கடந்த பிறகும் ஆளவந்தார் இவரைப் பற்றி விசாரிக்காமல் போக, திடீர் என்று நான்கு நாட்கள் கீரை கொடுப்பதை மணக்கால் நம்பி நிறுத்தி விட்டார். ஆளவந்தார் ஏன் “நான்கு நாட்களாக ஏன் தூதுவளை கீரை இல்லை?” என்று சமையல் பணியாட்களை விசாரிக்க “ஒரு வயதான பிராமணர் ஆறு மாதங்களாக கொண்டு வந்து கொடுத்துக்கொண்டு இருந்தார், நான்கு நாட்களாக அவர் வரவில்லை” என்று கூறினார்கள். ’அவர் மறுபடி வந்தால் எனக்குத் தெரிவியுங்கள்’ என்று ஆளவந்தார் பணித்தார். 

மறுநாள் நம்பி கீரையை கொண்டு போய் கொடுக்க சமையற்காரர் ஆளவந்தாரிடம் அவரை அழைத்துக்கொண்டு சென்றார். 

ஆளவந்தார் நம்பியை பார்த்து உங்களுக்கு என்ன நிதி வேண்டும் ? என்று கேட்க நம்பி எனக்கு ஒன்றும் வேண்டாம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டு போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். 

தினமும் நம்பி அரண்மனைக்கு வந்து கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக ஆளவந்தாரின் உள்ளம் தினமும் நம்பியின் வரவை நாடத் தொடங்கியது. கீதையின் உட்பொருளில் திளைத்த ஆளவந்தார் “அவனை அடைவதற்கு உபாயம் எது?” என்று கேட்க நம்பியும் சரம ஸ்லோகத்தை உபதேசித்து, “அவனை அடைவதற்கு அவனே உபாயம்” என்று ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரியபெருமாளைக் காட்டி “உங்களுடைய பாட்டனார் நாதமுனிகள் தேடிவைத்த நிதி இதுவே” என்றார். 

”நீண்ட அப்பெரியவாய கண்களை”க் கொண்டு பெரியபெருமாள் ஆளவந்தாரை ஆட்கொண்டார். அதன் பிறகு ஆளவந்தார் எல்லாவற்றையும் துறந்து துறவு மேற்கொண்டு ஸ்ரீரங்கத்தையே உறைவிடமாகக் கொண்டு நிர்வாகம் செய்து, ஸ்ரீராமானுஜரை வைணவத்துக்கு இட்டு வந்து, பெரும் தொண்டாற்ற வைத்த பெருமை ஆளவந்தாரையே சாரும். 

ஆளவந்தாரின் சிஷ்யர்களின் ஒருவர் திருமலையாண்டான். திருமாலிருஞ்சோலையில் அவதரித்தவர். திருக்கோட்டியூர் நம்பிக்கு ஒரு வயது சின்னவார். ஆளவந்தாரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஈடு முதலான வியாக்கியானங்களில் “ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமலையாண்டான் அருளிச் செய்யும்படி” என்று வருவதை பார்க்கலாம். இவர் எம்பெருமானாருக்கு திருகோட்டியூர் நம்பியின் நியமனத்தால் திருவாய்மொழி அர்த்த விஷேசங்களை காலஷேபம் சாத்தித்தார். அப்போது உடையவர் வேறு மாதிரி அர்த்தம் சொல்ல கோபப்பட்டு காலசேபத்தை நிறுத்துவிட்டார். பிறகு திருக்கோட்டியூர் நம்பி “ஆளவந்தாருக்கு தோன்றாத அர்த்தம் எம்பெருமானாருக்கு தோன்றாது” என்று மீண்டும் உபதேசம் செய்ய பணித்தார். 

மதுரை  கள்ளழகருக்கு இவர்கள் கைங்கரியம் இன்றும் நடக்கிறது. “ஆண்டார் பல்லக்கு முன்னே; அழகர் பல்லக்கு பின்னே” என்ற வழக்கு இன்னும் இருக்கிறது!

இன்று மணக்கால் நம்பி, திருமலையாண்டான் திருநட்சத்திரம். 

ஸ்ரீ மணக்கால் நம்பி திருவடிகளே சரணம்.
ஸ்ரீ திருமலையாண்டான் திருவடிகளே சரணம்.

சுஜாதா தேசிகன் 
மாசி, மகம். 
17.02.2022

Comments

Post a Comment