Skip to main content

ஓலைப் பத்திரக் கதைகள்

ஓலைப் பத்திரக் கதைகள்சமீபத்தில் திரு உ.வே.சாவின் கட்டுரை தொகுப்பு ஒன்றை படித்தேன். பெரும்பாலும் செவிவழிக் கட்டுரைகள், தனி மனித வாழ்வு சம்பவங்களின் தொகுப்பாக, 18-19ம் நூற்றாண்டு வாழ் தமிழ் மக்களின் வாழ்வின் ஒரு பகுதியை ஆவண படுத்துகிறது என்று சொல்லலாம்.  

மருத பாண்டியர்கள் வீரத்துக்கு மட்டும் அல்லாமல், பக்தியும், புலவர்களையும், தம் மக்களையும் காப்பாற்றும் குணம் படைத்தவர்கள். அதில் மருத  பாண்டியரைப் பற்றிய ஒரு கர்ண பரம்பரையாக சொல்லப்பட்ட கதை ஒன்றை படித்தேன். 

முள்ளால் எழுதிய ஓலை !

மருத பாண்டியர் தம் இறுதிக் காலத்தில் தங்களைவிட வலியவரான சிலருடைய பகைமைக்கு இலக்கானார்.  பல தந்திரங்கள் செய்து பகைவர்களின் கைகளில் அகப்படமால் தப்பித்தார். ஒரு சமயம் திருக்கோட்டியூர் பெருமாள் கோயிலுக்கு எதிரிலுள்ள மண்டபமொன்றில் தங்கி இருந்தார்.  வலக்கையில் ஒரு கொப்புளம் உண்டாகி அவரை வருத்தியது. பகைவர்கள் ஊர் எல்லைக்குள் வந்துவிட்டார்கள் என்ற செய்தி ஒரு அந்தரங்க வேலையாள் வந்து சொன்ன போது வீரத்தால் அவருடைய இரத்தம் கொதித்தது. ஓர் ஆடையை உடனே கிழித்து அவர் கைக் கொப்புளத்தை இறுகக் கட்டிக்கொண்டு குதிரையில் புறப்பட்டார். 

இதை அறிந்த விரோதிகள் அவரை சூழ்ந்துக்கொண்டு தாக்க ஆரம்பித்த போது மருத பாண்டியர் அவர்களை தாக்கி அவர்களிடம் அகப்படாமல் தப்பித்து ஒரு கிராமத்துக்கு வந்தார். அவ்வூர் அக்கிரகாரத்தை அடைந்த போது, இரவு முழுவதும் உணவு இல்லாமலும், பகைவர்களிடம் போராடியதாலும் அவருக்கு பசியும் தாகமும் மிகுதியாக இருந்தது. 

அங்கே ஒரு கூரைவீட்டின் வெளியே சில குழந்தைகள் நிற்க ஒரு கிழவி கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்.  பாண்டியர் குதிரை அவர்கள் வீட்டின் முன் வந்து நின்றது. 


கிழவி நிமிர்ந்து பார்த்து “யாரப்பா ! உனக்கு என்ன வேண்டும் ?” என்றாள்

“அம்மா பசியும் தாகமும் என்னை மிகவும் வாட்டுகிறது… ஏதாவது இருந்தால் போட வேண்டும்” என்றார் பாண்டியர். 

”தண்ணீரில் போட்ட பழைய சோறு தான் இருக்கிறது.. வேண்டுமானால் தருகிறேன் அப்பா” என்று கிழவி அன்பாக சொன்னாள். 

“ஏதாயிருந்தாலும் எனக்கு இப்போது அமிர்தமாகும்.. பிறகு மற்றொரு விஷயம் நான் இரவு முழுவதும் பிரயாணம் செய்து தூக்கம் இல்லை அதனால் ஒதுக்குபுறமாக தூங்க ஒரு இடம் வேண்டும்” என்றார் 

“இது என்ன பெரிய விஷயம்.. வீட்டு பின்புறம் ஒரு கொட்டகை இருக்கு அங்கே தூங்கலாம்.. .குதிரைக்கும் தீனி தருகிறேன்” என்று அன்போடு பழைய சோற்றை பரிமாறினார்.  ராஜபோஜனத்தைக் காட்டிலும் அது சிறந்ததாக இருந்தது. 

பிறகு கிழவி கொடுத்த ஓலைப்பாயொன்றில் படித்து உறங்கினார். 

விழித்து எழுந்த போது சூரியன் உச்சியில் இருந்தான். மருது பாண்டியருக்கு உண்ட உணவும், தூக்கமும் ஒரு புது தெம்பை கொடுத்தது. அவர் மனதில் நன்றி  உணர்வு பொங்கி வழிந்தது. அந்த கிழவிக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டும் என்று துடித்தார். 

“அம்மா ! “ என்று கிழவியை அழைத்தார். கிழவி வந்தாள். 

“இந்த குழந்தைகள் யார் ? உங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா ?”

“அயலூருக்கு ஒரு விசேஷத்துக்காக போயிருக்கிறார்கள்.. குழந்தைகள் என் பேரக் குழந்தைகள்” என்றாள். 

”சரி, உங்கள் வீட்டில் ஏடு எழுத்தாணி இருந்தால் கொண்டு வாருங்கள்” 

“இங்கே ஏடேது? எழுத்தாணியேது.. அவர்கள் எங்கெ வைத்திருக்கிறார்கள் என்று தெரியாதப்பா” என்றாள்

உடனே குதிரைக்கரனை கூப்பிட்டு வீட்டுக் கூரையிலிருந்து ஒரு பனையோலையையும் வேலியிலிருந்து ஒரு முள்ளையும் கொண்டுவரச் சொன்னார். 

கையில் இது இரண்டும் கிடைத்த உடன் பாண்டியர் ஏதோ எழுதலானார்.  கிழவி அதை வியப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தார். 

முள்ளால் எழுதிய அந்த சாஸனத்தை கிழவியின் கையில் கொடுத்து “அம்மா சிவகங்கை ஸமஸ்தான அதிகாரிகளிடம் இதை நீங்கள் கொடுத்தால் உங்களுக்கு அநூகூலம் உண்டாகும்” என்று சொல்லிவிட்டு அவர் குதிரை மேலேறிக் குதிரைக்காரனுடன் புறப்பட்டார். 

சில நாள் கழித்து கிழவியின் பிள்ளைகள் ஊரிலிருந்து வந்த சமயம் அந்த அவ்வோலையச் அதிகாரிகளிடம் காட்டுவதற்கு முன் சம்ஸ்தானத்தை விரோதிகள் கைப்பற்றிக் கொண்டதாக அறிந்து வருந்தினாள்.  

பாண்டியரை பகைவர்கள் பிடித்து சிறையில் வைத்தனர். சிலவருடங்கள் கழித்து அவருடைய கடைசி கலத்தில் “உம்முடைய விருப்பம் யாது ?” என்று பகைவர்கள் கேட்க அதற்கு “நான் சிலருக்கு சுரோத்திரியமாக யார் யாருக்கு எந்த எந்தக் பொருளை வழங்கினேனோ அவைகளெல்லாம் அவரவரகளுக்கு கொடுக்க வேண்டும். இது என் பிரார்த்தனை. வேறு எதுவும் இல்லை” என்றார். அவருடைய இறுதி விருப்பத்தை பகைவர்கள் அங்கீகரித்து நிறைவேற்றினார்கள். 

மருத பாண்டியர் வழங்கிய பொருள்கள் உரியவர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்ற செய்தியை அறிந்த கிழவி தன்னிடமுள்ள முள்ளால் எழுதிய ஓலையை காட்டினாள் ஏதாவது கிடைக்கும் என்று நம்பிக்கையில் அதை அனுப்பிவைத்தாள். 

என்ன நடந்தது  ? 

சீட்டு பெற்ற சீமாட்டி

ஸ்ரீநம்பிள்ளை ( ஸ்ரீராமானுஜருக்கு பிறகு வந்த ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்)  ஸ்ரீரங்கத்தில் காலக்ஷேபங்கள் செய்து கொண்டு இருந்த போது கோயிலுக்கு வரும் கூட்டத்தை விட இவருடைய காலக்ஷேபங்களுக்கு அதிக கூட்டம் வரத் தொடங்கியது. ”நம்பிள்ளை கோஷ்டியோ அல்லது நம்பெருமாள் கோஷ்டியோ” என்று வியந்தனர். 

அவர் காலக்ஷேபங்கள் அவருடைய திருமாளிகையில் ( இல்லத்தில் ) நடைபெற்றது. கூட்டம் அதிகமாக, இடப்பற்றாக்குறை ஏற்பட்டது.  நம்பிள்ளையின் அடுத்த இல்லத்தையும் ஒன்றாக சேர்த்தால்,  பலபேர் வந்து காலஷேபம் கேட்க வசதியாக இருக்கும் என்று நினைத்தார்கள். பக்கத்து அகத்தில் ஓர் ஸ்ரீவைஷ்ணவ கிழவி வசித்து வந்தாள்.

நம்பிள்ளையின் சிஷ்யர் ஒருவர் அந்த அம்மையாரிடம் சென்று “நம் ஆசார்யன் திருமாளிகை இடம் பற்றாமல் சிறியதாக இருக்கிறது உமது அகத்தை ஆசார்யனுக்கு சமர்பித்துவிடுமே” என்றார்.

அதற்கு அந்த அம்மையாரோ “கோயிலிலே(ஸ்ரீரங்கம்) சாண் இடம் யாருக்கு கிடைக்கும் ? நான் பகவான் திருவடியை அடையும்வரை இவ்விடத்தை ஒருவருக்கும் கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டார்.

இந்த விஷயத்தை சிஷ்யர் நம்பிள்ளையிடம் சொன்னார். 

நம்பிள்ளை அந்த அம்மையாரை வேறு ஒரு சமயம் பார்த்த போது “காலக்ஷேபம் கேட்க வருபவர்கள் கஷ்டப்படுகிறார்கள் உமது இடத்தைத் தரவேண்டும்” என்று மீண்டும் விண்ணப்பம் செய்தார்.

“அவ்விதமே செய்கிறேன் ஆனால் தேவரீர் பரமபதத்தில் எனக்கு ஓர் இடம் தந்தருள வேண்டும்” என்று பதில் கோரிக்கை வைத்தார் அந்த அம்மையார்.

”நான் எப்படிக் கொடுக்க முடியும் ? அதை வைகுண்ட நாதனன்றோ தந்தருள வேண்டும்” என்றார். 

“தேவரீர் பெருமாளிடம் சிபாரிசு செய்து விண்ணப்பம் செய்யலாமே” என்றார் 

“சரி செய்கிறேன்” என்றார் நம்பிள்ளை ஆச்சரியத்துடன். 

“ஸ்வாமி, அடியேன் ஒன்றும் தெரியாத சாது, பெண்பிள்ளை வேறு அதனால் சும்மா தருகிறோம் என்றால் போதாது. சாஸனமாக எழுதித் தந்திடும்” என்றாள் 

நம்பிள்ளை மேலும் ஆச்சரியப்பட்டு ஒரு ஓலையை எடுத்து 

”அகில ஜகத் ஸ்வாமியும் அஸ்மத் ஸ்வாமியுமான ஸ்ரீவைகுண்டநாதன் இவ்விமையாருக்கு பரமபதத்தில் ஓர் இடத்தை தந்தருள வேண்டும் இப்படிக்கு , 

திருக்கலிகன்றி தாஸன்,
தேதி, மாதம், வருடம்”

என்று எழுதிக் கையெழுத்திட்டு கொடுத்தார். 

என்ன நடந்தது ? 

முடிவுகள் : 

1.  கிழவி அனுப்பிய ஓலையில் அவள் வசித்த அந்த கிராமத்தையே சுரோத்திரியமாகப் ( இனாமாக வழங்கப்பட்ட நிலம்) பெற்றாள். வீட்டின் கூரையின் மீது இருந்த பனையோலையும், வேலி முள்ளையும் கொண்டு மருது பாண்டியர் எழுதிய அந்த காட்சி அவள் கண் முன்னே வந்து சென்றது. பழையது உண்டு, முள்ளால் எழுதிய ஓலைக்கு அவ்வளவு மதிப்பிருந்ததைக் கண்டு வியந்தாள்.  இன்றும் இந்த கிராமத்துக்கு ‘பழஞ்சோற்றுக் கருநாதனேந்தல்’ என்று வழங்கப்படுகிறது என்பர்

2. நம்பிள்ளையிடன் பனை ஓலை சீட்டை பெற்று  சிரஸில் வைத்துக்கொண்டு சந்தோஷமாக தம்  இருப்பிடத்தை உடனே நம்பிள்ளைக்கு கொடுத்தார்.  சீட்டைப் பெற்ற அவ்வம்மையார் மூன்றாம் நாள் திருநாடு அடைந்தார். 

பயன்பட்ட நூல்கள் 

முள்ளால் எழுதிய ஓலை - உ.வே.சா கட்டுரை தொகுப்பு
ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரை

-  சுஜாதா தேசிகன்
நன்றி: வலம் ஏப்ரல் 2019 பிரசுரமானது.

 ( முகப்பு படம்: இணையம் )

Comments