Skip to main content

பாகவத திருப்பாவை - 24 ( போற்றி )

பாகவத திருப்பாவை - 24 ( போற்றி )


அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி! * 
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி! *
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி! * 
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி! **
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி! *
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி! *
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் *
இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்

மஹாபலி காலத்தில் இவ்வுலகங்களை அளந்த உன் திருவடிகளைப் போற்றுகிறோம்!
தென் இலங்கை சென்று இராவணனை அழித்தாய்! உன் திருத்தோள் வலிமையைப் போற்றுகிறோம்!
சகடாசுரனைக் கட்டுக்குலைய உதைத்தாய்! உன் புகழைப் போற்றுகிறோம்!
கன்று வடிவில் வந்த வத்ஸாசுரனை எறிக்கருவியாகக் கொன்றாய் ! உன் திருவடிகளைப் போற்றுகிறோம்!
கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, கோகுலத்தைக் காத்தவனே, உன் குணத்தைப் போற்றுகிறோம்!
பகைவர்களை அழிக்கும் உன் கையில் உள்ள வேலைப் போற்றுகிறோம்!
இவ்வாறு எப்பொழுதும் உன் வீரத்தைப் பாடி, எங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இங்கு வந்துள்ளோம்.
நீ எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.

சென்ற பாசுரத்தில் ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் ”உன் சீரிய சிங்காசனத்து இருந்து  யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்” என்று கூறிய பிறகு இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் பெருமாளின் திருவடிக்குப் பல்லாண்டு பாடுகிறாள். நடுவில் என்ன நடந்திருக்கும் ? 

சீரிய சிங்காசனத்திலிருந்து என்று ஆண்டாள் கூற பெருமாள் திருப்பள்ளி அறையிலிருந்து சில அடிகள் நடந்து சென்று சிங்காசனத்தில் ஏற அமர, அதைக் கண்ட ஆண்டாள் எப்பேர்ப்பட்ட  பஞ்சு போன்ற மிருதுவான திருவடி இது ! அதை நடக்க வைத்துவிட்டோமே.. அத்திருவடிகள் கன்னி  போய்விட்டதே என்று பதறி அதற்குப் பல்லாண்டு பாடுகிறாள். 

ஆண்டாள் கொஞ்சம் ‘ஓவர் ரியாக்ட்’ செய்கிறாளோ என்று நினைக்க வேண்டாம். பெருமாளின் பாதங்கள் எவ்வளவு மென்மை என்று தென் இலங்கை சென்றபோது ஸ்ரீராமரின் பாதம்பற்றிப் பாகவதம் இப்படி விவரிக்கிறது(10.10.4)

பகவான் ஸ்ரீராமசந்திர மூர்த்தி தன் தந்தையான தசரதனின் சொல்லைச் சத்தியமாக்குவதற்காக அரச போகங்களைத் துறந்து காடுகள் தோறும் அலைந்தார். அவரது திருவடிகள் லோகச் சுந்தரியான சீதாபிராட்டியின் தாமரை போன்ற மென்மையான திருக்கரங்களின் ஸ்பரிசத்தைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாத அளவு மென்மையானது. கோமளமான அந்தத் திருவடிகளைக் கொண்டு காடுகளில் அலைந்தார். அத்திருவடிகள் அயர்ந்தபோது லட்சுமணனும் அனுமனும் பிடித்துவிட்டார்கள். 

இத்திருவடிகள் நடந்து வருவதைக் கண்ட அவர்கள் பிரம்ம லோகத்துக்குச் சென்ற திருவடி இது என்ற பரவசத்தில் அதற்குப் பல்லாண்டு பாடுகிறார்கள். 

உலகை அளந்த பெருமாளின் பகவான் இரண்டாவது அடி சத்திய லோகத்தைச் சென்று அடைந்தது(8.21.1). தன் உலகிற்கு வந்த பலவானது திருவடிகளுக்கு அர்க்யம், பாத்யம் சமர்ப்பித்து, பரம பக்தியுடன் ஆராதனம் செய்து அதை மனம் உருகித் துதித்து, அவன் திருவடிகளைத் திருமஞ்சனம் செய்தார் பிரம்மா. அந்தப் பரம பவித்திரமான தீர்த்தமே ஆகாய கங்கையாகி விண்ணுலகிலிருந்து கீழ் நோக்கி மண்ணுலகில் பாய்ந்து மூவுலகங்களையும் தூய்மையாக்கியது. (மேலும் பாகவதத்தில் பெருமாள் திருவடியைக் கொண்டு உலகை அளந்த வர்ணனை மிக விஸ்தாரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது)

சிங்காசனத்தில் ஏறிய கண்ணனின் அந்தப் பிஞ்சு திருவடிகளைத் தரிசித்த அவர்களுக்குக் கண்ணின் திருவடிகளால் நிகழ்ந்த அவனுடைய வியக்கத் தக்க பால லீலைகளை நினைத்துப் பல்லாண்டு பாடுகிறார்கள். 

ஒரு நாள் குழந்தை கண்ணன் (10.7.4-7) முதன்முதலாகத் தவழ்ந்து எழுந்துகொண்டான். அன்று கண்ணனின் பிறந்த நட்சத்திரமும் சேர்ந்துகொண்டது. யசோதை கொண்டாட்டமாகக் குழந்தைக்கு மந்திரங்களின் கோஷத்துடன் தலைக்கு மங்கள ஸ்நானம் செய்தாள். வந்திருப்பவர்களுக்கு ’அம்பரமே தண்ணீரே சோறே’ என்று நந்தகோபன் அன்னம், வஸ்திரங்கள் , பசுக்கள் என்று வந்தவர்களை உபசரித்து,  தானம் கொடுப்பதில் மும்முரமாக இருந்தார்(10.7.6)

குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்தி குளித்தபிறகு நன்றாகத் தூங்கிவிடும். கண்ணனும் அப்படியே. கண்களின் கண்களில் தூக்க கலக்கம் உண்டானதைக் கண்டு நிழலாக, பாதுகாப்பாக ஒரு வண்டியின் கீழே குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு வந்தவர்களை உபசரிக்க சென்றுவிட்டாள் யசோதை. 

எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று பசி எடுக்கும். கண்ணனுக்கும் பசித்தது.அழுதான். ஆனால் யசோதை மும்மரமாக இருந்தாள். அழும் சத்தம் அவள் காதில் விழவில்லை. குழந்தை தாய்ப்பாலுக்கு ஏங்கி இரண்டு கால்களையும் உயரத் தூக்கி உதறியது. வண்டியின் கீழே குழந்தையின் மிகச் சிறிய தளிர் போன்ற மென்மையான கால்களால் உதைக்கப்பட்ட வண்டி தலைகீழாகப் புரண்டு முறிந்து விழுந்தது. 

அடுத்து அசுரனாக வந்த கன்றுக் குட்டியை வீசி எறியும்போது (ஜாவலின் துரோ மாதிரி) ஒரு காலை ஊன்று ஒரு காலைத் தூக்கியபொழுது அந்த இன்னொரு திருவடி ஆகாசத்தில்  தொங்க .. அந்த அழகான குஞ்சித பாதத்திற்குப் பல்லாண்டு பாடுகிறாள். (கழல் என்பது போர்க்களத்து அணிந்து செல்லும் அணிகலன்) நம்மாழ்வார் கண்ணன் ஒண் கழல்கள் மேல் செய்யத் தாமரைப் பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன் சொன்ன’ இந்தப் பத்துப் பாசுரங்களையும் சேவிப்பவர்கள் ‘வையம் மன்னி வீற்றிருந்து  விண்ணும் ஆள்வர் மண்ணூடே’ என்கிறார். 

அடுத்து ஆண்டாள் கண்ணனின் கோவர்த்தன மலையைத் தாங்கும் கண்ணனின் குணத்தைப் போற்றுகிறாள். இதில் ஆண்டாள் என்ன குணத்தைப் போற்றுகிறாள் என்று பார்க்கலாம். 

ஸ்ரீராம சரம ஸ்லோகம் எல்லோரும் அறிந்தது. ஸ்ரீராமாயணத்தில் விபீஷண ஆழ்வாருக்குச் சரணாகதி அளிக்கும் முன் ஸ்ரீராமர் ”ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே Iஅபயம் சர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம” என்கிறார். அதாவது ”உன்னுடையவன் என்று எந்தப் பிராணி வந்தாலும் அபயம் அளிக்கிறேன். இது என் விரதம்” என்கிறார். தன்னை விடத் தாழ்ந்தவனாக இருந்தாலும் நெருங்கிப் பழகிய ஸ்ரீராமரை குணவான் என்பார்கள். சீல(சௌசீல்யம்) குணத்துக்கு எடுத்துக்காட்டு ஸ்ரீராமர். 

இதையே கண்ணனும் கோவர்த்தன மலையைத் தாங்கும்போது கூறுகிறார். பாகவதத்தில் ( 10.25.17-18) ”என்னையே அண்டிச் சரணடைந்த, என்னால் காப்பாற்றப்பட வேண்டிய இந்தக் கோகுலத்தை என் யோகசத்தியால் காப்பாற்றுவேன். இது என் கொள்கை” என்று கூறி, ‘நாய்க்குடையைப் சிறுவன் பிடுங்கிக் குடையாகப் பிடிப்பது போல, ஒரே கையால் கோவர்த்தன மலையை விளையாட்டாகக் குடை போலத் தூக்கிப் பிடித்தார். 

அரசருக்குச் சேவகம் செய்பவர்கள் குடை பிடிப்பது வழக்கம். உடன் இருப்பவர்களுக்கு அரசன் குடை பிடிப்பதுண்டா ? உண்டு அதைத் தான் கண்ணன் செய்தான். சர்வேஸ்வரனான கண்ணன் ஆயர்களுக்கும், பசுக்களுக்கும், குடை பிடித்துத் தன்னைவிடத் தாழ்ந்தவரோடு நெருங்கிப் பழகி சௌசீல்யத்தின் எல்லைக்கே சென்றான். அதனால் தான் ஆண்டாள் குணம் போற்றி என்கிறாள். 

அடுத்து ’வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி’ என்கிறாள். 

நாச்சியார் திருமொழியில் இந்தப் பாசுரத்தைப் பாருங்கள் 

அன்று இன்னாதன செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில், கூடிடு கூடலே

இதில் ஆண்டாள், வரிசையாகக் கண்ணன் செய்தவற்றை பட்டியலிடுகிறாள் -  முன்பு வெறுக்கக்கூடிய கெட்ட காரியங்களைச் செய்த சிசுபாலனும், வழியில் நின்ற பெரிய இரட்டை மருதங்களும், ஏழு காளைகளையும், பகாசுரனும், வெற்றி வேலைப் பிடித்து மிடுக்கான கம்சனும் விழும்படியாக செய்த கண்ணன் என்கிறாள் ஆண்டாள். ஆகக் கம்சன் கையில் வேல் இருந்தது என்று தெரிகிறது. 

பாகவதத்தில் கம்சனை வதம் செய்த காட்சி இப்படி விவரிக்கப்படுகிறது. சினம் கொண்ட கண்ணன் மிகவும் உயரத்திலிருந்து கம்சன் அமர்ந்த இருக்கையின் மீது எளிதில் தாவி ஏறினார். தனக்கு யமன் நொறுங்கி வந்துகொண்டு இருக்கிறது என்று உணர்ந்த கம்சன் இருக்கையை விட்டு எழுந்து கத்தியையும், கேடயத்தையும் கையில் எடுத்துக் கொண்டான். 

வேலுடன்/கத்தியுடன் இருந்த கம்சன் மீது குதித்து அவனிடமிருந்த வேலை அபகரித்து அவனை வீழ்த்தினார் என்று யூகித்தால், ‘வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி’ என்று ஆண்டாள் கூறுவது இங்கே பொருந்துகிறது. 

( நாச்சியார் திருமொழி இன்னொரு பாசுரத்தில் ’வேலைப் பிடித்தென்னை மார்கள்’ என்றும் கூறுகிறாள்)

பெருமாளுக்குப் பல்லாண்டு பாடும்போது அசுரன், கம்சன் போன்ற பெயர்களை எதற்கு உச்சரிக்க வேண்டும் என்று ஆண்டாள் எண்ணியிருக்க வேண்டும். அதனால் இப்பாசுரத்தில் எங்கேயும் கண்ணனை எதிரியாக பார்த்தவர்களின் பெயர்களை குறிப்பிடவில்லை ஆண்டாள். 

ஆண்டாளின் குறிக்கோள் அடி போற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி என்று அவன் குணத்தை நாவினால் நவிற்று இன்பம் எய்திட அறுசுவை போற்றியே அவளின் குறிக்கோள். 

- சுஜாதா தேசிகன்
அன்று - 24
05.02.2022
படங்கள் உதவி: திரு.கேஷவ்

Comments