Skip to main content

செண்டலங்காரர் தெட்டபழம்

செண்டலங்காரர் தெட்டபழம் 
தமிழில் சுமார் நூறு வார்த்தைகளை மட்டுமே நாம் அன்றாடம் பேசவும் எழுதவும் உபயோகிக்கிறோம். ஆழ்வார்கள் உபயோகித்த வார்த்தைகள் பல ஆயிரம் இருக்கும். நம் சொல்லகராதி (vocabulary) மிகக் குறைவு, ஆதலால் நமக்கு எளிய உரைகள் தேவைப்படுகின்றன. கீழே உள்ள பெரியாழ்வார் பாசுரத்தில் எவ்வளவு வார்த்தை உங்களுக்கு தெரியும் என்று பாருங்கள்.
 
பருப்பதத்துக் கயல் பொறித்த
 பாண்டியர் குலபதி போல்
 திருப் பொலிந்த சேவடி என்
 சென்னியின் மேல் பொறித்தாய்
 
எளிய விளக்கம்: மேரு மலையில் தனது கயல் (மீன்) சின்னத்தை வெற்றிக்கு அடையாளமாகப் பொறித்த பாண்டியர் குலத்துப் பேரரசனைப் போன்று அழகு பொலிந்த திருவடிகளை என் தலை மீது அடையாளமாக (பெருமாள்) பொறித்தருளினான் என்று ஆழ்வார் கூறுகிறார். இன்னும் கொஞ்சம் ஆழமாக இந்தப் பாசுரத்தை அனுபவிக்க மேலும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
 
பெரியாழ்வார் காலத்தில் மூன்று பாண்டியர்கள் அரசு செய்தார்கள். அவர்கள் முறையே கோச்சடையான், மாறவர்மன், பராந்தகன். பராந்தகன் பரம வைஷ்ணவன். ஆனால் அவன் தந்தை மாறவர்மன் அப்படி அல்ல. பெரியாழ்வார் காலத்தில் சமயவாதம் நிகழ்ந்து மாறவர்மன் ஆழ்வாருக்கு அடியவன் ஆனான். செப்பேட்டில் ‘பரமவைஷ்ணவதானாகி’ என்று வருவதே இதற்குச் சான்று.
 
இந்தப் பாசுரத்தில் பாண்டியனைச் சிறப்பித்துப் பேசி அவனுடைய இலச்சினையை ஏன் பெரியாழ்வார் பெருமாளின் திருவடிக்கு ஒப்பிடுகிறார் என்று கொஞ்சம் ஆராயலாம்.
படம்: கயல் பொறித்த
 
பாண்டியரின் இலச்சினை இரண்டு மீன் நடுவில் ஒரு சாட்டை போல இருப்பதைப் பார்க்கலாம். சாட்டை போல இருப்பது பாண்டியரின் செங்கோல். இதைப் பார்த்தவுடன் ஆழ்வாருக்குப் பெருமாளின் திருவடியும், தன் நெற்றியில் இருக்கும் திருமண்னும் (நாமம்) நினைவுக்கு வந்திருக்கும் என்று தோன்றுகிறது.
 
மேலே சொன்ன இந்த உதாரணம் எதற்கென்றால், செய்யுளில் சொற்கள் சாதாரணமாக நமக்குத் தெரியும். ஆனால் சரியான பொருள் தெரிந்தால்தான் அதன் அலாதியான சுவை புரியும்.
 
பாண்டியனின் சின்னத்தில் நடுவில் செண்டு போல இருப்பதைப் பார்த்தால் உ.வே.சாமிநாதையர் எழுதிய ‘செண்டலங்காரர்’ என்ற கட்டுரை நினைவுக்கு வருகிறது. அதன் சுருக்கத்தை இங்கே தருகிறேன்.
 
செண்டலங்காரர்
 
வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதம் தமிழிலே சுவையானது. தமிழர்களுடைய உள்ளத்தை அது கவர்ந்தது. உ.வே.சாமிநாதையர் தன் இளமையிலே அந்நூலைப் படித்து அதிலுள்ள சந்த அமைப்பைக் கண்டு வியந்திருக்கிறார்.
 
அதில், சூதாடித் தோற்ற வரலாற்றில் சூதாட்டம் முடிந்தபிறகு துரியோதனன் அரசவைக்குத் திரௌபதியை அழைத்து வரத் தன் தம்பி துச்சாதனனுக்குக் கட்டளையிடுகிறான். காந்தாரியோடு இருந்த திரௌபதியை அவன் வலியப் பிடித்து இழுத்து வருகின்றான். அதை விவரிக்கும் செய்யுள் இது.
 
 
 
“தண்டார் விடலை தாயுரைப்பத்
 தாய்முன் னணுகித் தாமாரைக்கைச்
 செண்டால் அவள்பைங் குழல்பற்றித்
 தீண்டா னாகிச் செல்கின்றான்
 வண்டார் குழலு முடன்குலைய
 மானங் குலைய மனங்குலையக்
 கொண்டா ரிருப்ப ரென்றுநெறிக்
 கொண்டா ளந்தோ கொடியாளே”
 
“தன்னுடைய தாயாகிய காந்தாரி, ‘நீ போய் வா’ என்று கூற, துச்சாதனன் அன்னை போன்ற திரௌபதியின் முன் சென்று தன் கையிலுள்ள செண்டால் அவளது கூந்தலைப் பற்றிச் செல்லலானான். கொடிபோன்ற திரௌபதி, அந்தோ!, தன் குழல் குலைய மனங்குலையத் தான் செல்லுமிடத்தே தன் கணவர் இருப்பர் என்ற தைரியத்தோடு சென்றாள்” என்பது இச்செய்யுளின் பொருள்.
 
உ.வே.சாவிற்கு ‘கைச் செண்டால் அவள்பைங் குழல்பற்றி’ என்று வரும் வரியில் ஐயம் வந்தது. செண்டு என்பதற்குப் பூச்செண்டு என்று பொருள் கூறுவர். துச்சாதனன் கையில் பூச்செண்டு எங்கிருந்து வந்தது?
 
திரௌபதி கூந்தலில் அணிந்திருந்த மாலையைப் பிடித்து இழுத்தான் என்று வைத்துக்கொண்டால், திரௌபதி அக்காலத்தில் தீண்டாத நிலையில் இருந்தாள், அதனால் அவள் கூந்தலில் மலர் அணிந்திருக்க சாத்தியமில்லை. செண்டென்பதற்குப் பந்தென்று ஒருபொருள் உண்டு. பந்துக்கு இங்கே என்ன சம்பந்தம் என்று பல ஐயங்கள் ஐயருக்கு இருந்திருக்கின்றன.
 
பல வருடங்கள் கழித்துத் தமிழ் யாத்திரையில் சீர்காழி-மாயூரம் பக்கம் ஆறுபாதி என்னும் ஊருக்கருகில் சென்று கொண்டிருந்தபோது அங்கே ஒரு பெருமாள் கோயில் இருக்க, அங்கே சென்றார். அக்கோயிலின் வாசலில் தர்மகர்த்தாவும் வேறு சிலரும் யாரோ பெரிய உத்தியோகஸ்தர் ஒருவருடைய வரவை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தபோது உ.வே.சா. அவர்களைப் பார்த்து, இவர்தான் அந்தப் பெரிய உத்தியோகஸ்தர் என்று எண்ணிவிட்டார். "வாருங்கள், வாருங்கள்" என்று உபசரித்து வரவேற்றுப் பெருமாள் தரிசனம் செய்து வைத்தார்.
 
தரிசனம் செய்தபோது பெருமாள் திருக்கரத்தில் பிரம்பைப்போல ஒன்று அவர் கண்ணில் பட்டது. அதன் தலைப்பில் இரண்டு வளைவுகள் இருந்தன. தர்மகர்த்தாவை நோக்கி, “இது புதிதா யிருக்கிறதே, என்ன?” என்றார். “அதுதான் செண்டு” என்று தர்மகர்த்தா கூற, “செண்டா!” என்று சொல்லி, “எங்கே, அதை நன்றாகக் காட்டுங்கள்” என்று உ.வே.சா கேட்க, கோயில் அர்ச்சகர் கற்பூர தீபத்தால் அந்தச் செண்டை நன்றாகப் பார்க்கும்படி காட்டினார். உ.வே.சாவின் மனக்கண்முன் திரௌபதியின் உருவம் வந்து நின்றது. துச்சாதனன், தலைப்பு வளைந்த பிரம்புபோன்ற ஒரு கருவியால் அவள் கூந்தலைப் பற்றியிழுக்கும் காட்சி அவர் கண்முன்னே வந்தது.
 
அர்ச்சகர் காட்டிய கற்பூர தீபம் பெருமாள் திருக்கரத்திலிருந்த ஆயுதத்தைக் காட்டி, பலகாலமாக அவர் மனத்திலிருந்த சந்தேக இருளை அகற்றியது.
 
அர்ச்சகர் மேலும் “இந்தப் பெருமாளும் மன்னார்குடியில் எழுந்தருளியிருக்கும் பெருமாளும் ஒரே அச்சு. அங்கும் பெருமாளின் திருக்கையில் செண்டு உண்டு. ‘செண்டலங்காரப் பெருமாள்’ என்றும் அவரது திருநாமம்” என்று கூறினார்.
 
மன்னார்குடிப் பெருமாளுக்குச் செண்டலங்காரப் பெருமாளென்னும் திருநாமம் உண்டென்று தர்மகர்த்தா கூறியதை இலக்கிய வாயிலாகவும் பிறகு உறுதி செய்துகொண்டார். பெருமாள் தரிசனத்தின் பயன் அன்று அவருக்குக் கிடைத்தது.
 
 
தெட்டபழம்
 
ஸ்ரீராமானுஜர் காலட்சேபம் (வேந்தம் மற்றும் ஆழ்வார்ப் பாசுரங்களுக்கு விளக்க உரை) செய்யும்போது அன்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பாசுரங்களை அனுபவித்துக்கொண்டு இருந்தார்.
 
பட்டு அரவு ஏர் அகல் அல்குல், பவளச் செவ்வாய்,
 பணை நெடுந்தோள், பிணை நெடுங்கண், பால் ஆம் இன்சொல்*
 மட்டு அவிழும் குழலிக்கா, வானோர் காவின்
 மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்!* அணில்கள் தாவ
 நெட்டு இலைய கருங் கமுகின் செங் காய் வீழ,
 நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு* பீனத்
 தெட்ட பழம் சிதைந்து, மதுச் சொரியும் காழிச்
 சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
 
 


 
சீர்காழி (காழிச் சீராமவிண்ணகரம்) பெருமாள் பற்றிய பாசுரம்: “சத்தியபாமைக்குப் பரிசாக பாரிஜாத மரத்தைக் கொணர்ந்து பெருமான் திருவடியை அடைய விருப்பம் உள்ளவர்களுக்கு காழிச் சீராம விண்ணகரமே கதி” என்கிறார் ஆழ்வார்.
 
இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் ஊரை எப்படிச் சொல்லுகிறார் பாருங்கள் என்று விவரிக்கத் தொடங்கினார். “பட்டுச் சேலையை விரித்த மாதிரியான நிலப்பரப்பு. அங்கே பவழம் போலச் சிவந்த வாய், மூங்கில் போன்ற நீண்ட தோள்களையும் அமுதம் போன்ற இனிமையான வாய்மொழிகளையும்... என்று அடுக்கிக்கொண்டு விவரித்த ஸ்ரீராமானுஜர், அங்கே நீண்ட இலைகளை உடைய கரிய பாக்கு மரங்களின் செங்காய்கள் அணில்கள் தாவியதால் கட்டுக் குலைந்து கீழே விழுந்தன” என்றார்.
 
விவரிக்கும்போது ‘தெட்ட பழம்’ என்ற சொல்லுக்குச் சரியான பொருள் அவருக்குப் பிடிபடவில்லை. சரியான பொருள் கூற முடியாமல் தவித்தார். அவர் மனதில் ‘தெட்ட பழம்’ என்னவாக இருக்கும் என்ற ஐயம் உண்டாயிற்று.
 
பிறகு ஒருசமயம் அவர் திய்வதேச யாத்திரையில் சீர்காழி தலத்தின் சோலை வழியாக, திருமங்கை ஆழ்வார் வர்ணித்த இயற்கை அழகை அனுபவித்துக்கொண்டு வந்தபோது அங்கே ஒரு நாவல் மரம் பழுத்துக் குலுங்கியதைக் கண்டார். நாவல் மரத்தின் கிளையில் அமர்ந்துகொண்டிருந்த ஒரு பையன் கிளைகளை அசைக்க, கீழே உதிர்ந்த நாவற்பழங்களைச் சிறுவர்கள் பொறுக்கிக்கொண்டு இருந்தார்கள்.
 
அப்போது ஒரு சிறுவன் “அண்ணே தெட்ட பழமாகப் பார்த்துப் பறித்துப்போடு” என்று மரத்தின் மீதமர்ந்த பையனைப் பார்த்து கூற, ஸ்ரீராமானுஜர், “பிள்ளாய் தெட்ட பழம் என்றால் என்ன?” என்று வினவ, அதற்கு அந்தச் சிறுவன் “பழுத்த பழம்” என்று சொல்ல, ஸ்ரீராமானுஜர் அந்தச் சிறுவனை வணங்கினார். ஆழ்வார் அங்கு வழங்கும் வட்டார மொழியில் அருளிச் செய்திருப்பதை உணர்ந்து வியந்தார்.
 
- சுஜாதா தேசிகன் 
 நன்றி வலம் மார்ச் 2019 
முகப்பு படம் : செண்டலங்காரர் - மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலன். 

Comments