Skip to main content

பாகவத திருப்பாவை - 25 ( ஒளித்து )

 பாகவத திருப்பாவை - 25 ( ஒளித்து )



ஒருத்தி மகனாய்ப் பிறந்து * ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் * 
தரிக்கிலான்ஆகித் தான் தீங்கு நினைந்த * 
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் ** 
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! * உன்னை
அருத்தித்து வந்தோம்; பறை தருதியாகில் *
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி * 
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் 

தேவகிக்கு மகனாகப் பிறந்து அதே இரவில் 
யசோதைக்கு மகனாக ஒளித்து வளர்ந்துவர,
அதைப் பொறுக்காது உன்னைக் கொல்ல நினைத்த 
கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றாய்!
எங்கள் குறை தீர்க்கும்படி உன்னைப் பிரார்த்தித்து 
வந்தோம்; விரும்பியதைத் தருவாயானால் 
லட்சுமி தேவி விரும்பும் உன் குணச்செல்வத்தையும் 
உன் வீரத்தையும் பாடி வருத்தம் நீங்கி மகிழ்வோம். 


இந்தப் பாசுரத்தில் ஒளிந்து என்று கூறாமல், ஒளித்து என்று ஆண்டாள் கூறுகிறாள். ஒளிந்து என்றால் கம்சனுக்குப் பயந்து ஒளிந்துகொண்டு என்ற பொருளில் வரும். பெருமாளுக்குப் பயம் ஏது ? 


இதை ஆண்டாள் பாகவதத்தில் எங்கே எடுத்திருப்பாள் என்று தேடியபோது, கண்ணனையும் பலராமனையும் கம்சன் அழைக்க அங்கே சென்று மல்லர்களை வீழ்த்த அரங்கில் நுழையும் சமயம், நகரத்தின் மக்கள் கண்ணனையும் பலராமனையும் கண்ட பெரும் மகிழ்ச்சியில் முகம் மலர, கண்ணனின் திருமுக அழகைப் பருகியும் அவர்கள் மனம் நிறைவு பெறவில்லை. 


கண்களால் பருகுபவர்போலும், நாக்கால் நக்கிச் சுவைப்பவர்கள் போலும், மூக்கால் முகர்பவர் போலும் கைகளால் கட்டி அணைப்பவர்கள் போலும் நின்றனர். 


அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டார்கள் “நாராயணனின் அம்சமாக வசுதேவர் வீட்டில் பிறந்தவர்களாம். இதோ இந்தக் கிருஷ்ணர் தேவகியிடம் பிறந்து கோகுலத்தில் எடுத்துச் செல்லப்பட்டு நந்தனின் வீட்டில் ’ஒளித்து’ வைக்கப்பட்டு வாழ்ந்தவராம்!” (10.43.23,24)


ஆண்டாள் கூறிய ஒளித்து என்ற வார்த்தையை இங்கே ஒப்புநோக்குக. 


கண்ணனின் திருவவதாரம் பாகவதத்தில் மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் படிப்பதே நமக்குப் பயன் தரும் என்ற காரணத்தால் அதை இங்கே சுருக்கமாகத் தருகிறேன் (10.3.1-12)


மங்களமான சிறப்புக்கள் அனைத்தும் கூடிய நன்னாள் தோன்றியது. அப்போது நட்சத்திரங்களும், கிரகங்களும் தாரகைகளும் சாந்தமாயிருக்க பிரம்ம தேவரின் நட்சத்திரமான ரோஹிணி நட்சத்திரம் உதயமாகியது. திசைகள் தெளிந்திருந்தன. வானத்தில் மேகங்கள் மறைக்காமல் நட்சத்திரங்கள் தூய்மையாக ஒளிவிட்டு உதயமாகியது. ஆறுகளில் நீரோட்டம் தெளிந்திருந்தன. மடுக்களில் தாமரைகள் பூத்திருந்தன, கலகல என்று பறவைகளும் வண்டுகளும் சூழக் காடுகள் அழகாக, இனிய நறுமணத்துடன் தூய்மையான காற்று, இனிய ஸ்பரிச சுகம் தருவதாக வீசிற்று, அந்தணர்கள் வளர்த்த அக்னி முன்பு கம்சனின் அட்டூழியத்தால் ஒளியின்றி இருந்தன, இப்போது ஜ்வாலையுடன் பிரகாசித்தது ( நெருப்பென்ன நின்ற நெடுமாலே ! ) பூமி முழுவதும் மங்களமாக விளங்கியது. 


வானில் துந்துபிகள் முழங்கின, தேவர்களின் உள்ளங்கள் தெளிவடைந்தன, கின்னரரும் கந்தருவரும் பாடினர், சாரணர் துதித்தனர், பெண்கள் அப்சரசுகளுடன் நடனமாடினார்கள். 


இருள் நிறைந்த நள்ளிரவில் பகவான் கிழக்கில் பூர்ணசந்திரன் உதிப்பதுபோலத் தேவகியிடம் உதயமானார் ( மதி நிறைந்த நன்னாளால்)


புருஷோத்தமன் இவரே என்று அறநூல்கள் கூறுவது போன்று வியக்கத்தக்க அழகான உருவுடன் விளங்கினார். கண்கள் செந்தாமரை போலவும், நான்கு திருக்கரங்களிலும் சங்கம் - கதை - சக்கரம் - செந்தாமரை முதலிய திவ்ய ஆயுதங்கள், கழுத்தில் கௌஸ்துப மணி, இடுப்பில் மஞ்சள் பட்டாடை, நீருண்ட மேகம் போன்ற உடல், வைடூரியக் கற்கள் பதித்த கிரீடமும், குண்டலங்களும்… என்ற குழந்தையான பகவானை வசுதேவர் கண்டார். 


பகவான் விஷ்ணுவையே புலவராகப் பெற்ற மகிழ்ச்சியில் பூரிப்படைந்து, அந்தணர்களுக்குப் பதினாயிரம் பசுக்களைத் தானம் செய்தார். 


சிறையில் இருப்பவர் எப்படி தானம் செய்ய முடியும் ? நேரிடையாகத் தர இயலாததால் மனத்தால் தானம் செய்தார்!. 


தேவகி கண்ணனைப் பார்த்து “பரமபுருஷராகப் பிரளயத்தில் இவ்வுலகங்கள் யாவையும் ஒன்றுடன் ஒன்று மோதாவண்ணம் தங்கள் உடலில் தாங்குகிறீர்கள். என்னிடம் நீங்கள் பிறந்துள்ளதைப் பாவியான கம்சன் அறிய வேண்டாம். நான் கம்சனிடம் பயந்து நடுங்குகிறேன். அனைத்துமானவரே சங்கு, சக்கரம், கதை பத்மம் இவற்றின் ஒளியோடு கூடிய நான்கு திருக்கரங்கள் கொண்ட இந்தத் தெய்வ வடிவினை ஒளித்துக் கொள்வீராக” என்கிறாள். 


ஆண்டாளின் ஒளித்து என்ற வார்த்தை இங்கேயும் பொருந்துவதைக் காணலாம். 


அந்த இரவில் வசுதேவர் புதல்வனை எடுத்துக் கொண்டு கிளம்ப முற்பட்டபோது இடைவிடாத மழையில், அலைபுரண்டு விளங்கிய யமுனை ஸ்ரீராமனுக்குக் கடல் வழி தந்தது போல வழி தந்தாள். இதற்குப் பிறகு என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும். 


ஓர் என்றால் ஒப்பற்ற என்று பொருள். ஆண்டாள் ’ஓர் இரவு’ என்கிறாள்.  

இரவு என்றால் இருட்டு. அந்த இருட்டும் இரவும்  கண்ணனை கம்சனிடமிருந்து காத்தது. அதனால் இரவு ஒப்பற்றதாகியது! அதனால் இருள் கூடிய இரவை ஸ்ரீ பிள்ளை உறங்கா வில்லி தாஸர் வணங்குவார்!


இன்று ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லி தாஸர் திருநட்சத்திரம். 


- சுஜாதா தேசிகன்
ஒருத்தி - 25
மாசி ஆயில்யம், பௌர்ணமி 
ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லி தாஸர் திருநட்சத்திரம்.

Comments