மனிதன் உருவாக்கிய புத்திசாலி
வருடத்தின் ஆரம்பத்தில் தொடங்கி, பொங்கல் வரை தமிழகத்தில் ‘சென்னை புத்தகக் கண்காட்சி’ நடைபெறும். ‘சென்னை புத்தகக் கண்காட்சி’ என்று பொதுவாகத் தொலைக்காட்சி செய்தித்தாள் போன்ற ஊடகங்கள் அழைத்தாலும் , அதன் ’official’ பெயரில் ‘கண்’ என்ற வார்த்தை இருக்காது – சென்னை புத்தகக் காட்சிதான்!
யார் கண் பட்டதோ இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளார்கள். ( தற்போது இந்த மாதம் 16 தொடங்கி மார்ச் 3 வரை நடக்க உள்ளது)
பல வருடங்களாக தொடர்ந்து ’புக் ஃபேர்க்கு’ சென்றுக்கொண்டிருக்கிறேன். (தமிழ் கூறும் நல்லுலகம் Book Fair என்று தான் அழைப்பார்கள்). பல மாற்றங்களைப் பார்த்திருக்கிறேன். புத்தகக் கடைகளுக்கு நடுவில் சாமியார் மடங்களும், புத்தகத்துடன் நேந்திரம் சிப்ஸ், ஜூஸ் என்று சாம்பிளை வாயில் திணிக்க, புனைவுகள் சுருங்கி அபுனைவுகள் (non-fiction) காற்றடித்த பலூன் போலப் பெரிதாகியதைப் பார்க்க முடிந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இவை வணிகப்புனைவுகள். இலக்கியப் புனைவுகள் மிக மிகக் குறைவாகவே வருகிறது. ஏன் என்ற காரணத்தைச் சொன்னால் எழுத்தாளர்கள் கோவித்துக்கொள்வார்கள் இருந்தாலும் சொல்லுகிறேன் – கூகிள்.
ஒரு முறை சுஜாதாவிடம் பத்திரிக்கை ஒன்று மீண்டும் “ஏன் எதற்கு எப்படி” போன்று ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்க, அதற்கு அவர் இப்போது கூகிளில் இருக்கிறது. நான் எழுதினால் அது ‘போங்கு ஆட்டம்’ என்று மறுத்துவிட்டார்.
எதை எழுத வேண்டும் என்றாலும் அதற்குத் தேவையான விஷயங்களுக்கு இன்று நூலகத்துக்குச் செல்ல வேண்டாம். பல புத்தகத்தைப் படிக்க வேண்டாம். எந்த நூலில் எந்தப் பக்கத்தில் எந்த பாராவில் இருக்கிறது என்று கூகிள் நொடியில் சொல்லிவிடுகிறது. கூகிள் சொல்லும் தகவல்களைக் கொஞ்சம் தூசு தட்டியோ, டிங்கரிங் செய்தோ ஒரு மணி நேரத்தில் எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் முந்நூறு வார்த்தைகளில் சுமாரான கட்டுரை எழுதிவிடலாம்.
இன்னும் சில வருடங்களில், ஏன் இன்றே கணினி செயற்கை அறிவு கொண்டு இலக்கணச் சுத்தமாக கட்டுரைகளை எழுதித் தந்துவிடுகிறது.
எனக்கு 100 வார்த்தையில் இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை வேண்டும். கட்டுரையின் தொனி எப்படி இருக்க வேண்டும் (சிந்தனை மிக்க, பிரமிப்பாக, நேர்மையாக, நகைச்சுவையாக, ஊக்கமளிக்கும்) என்று உங்கள் தேர்வைச் சொல்லிவிட்டு காபியை பாதி விழுங்குவதற்குள் கட்டுரையைத் தயார் செய்து கொடுத்துவிடுகிறது.
புத்தகக் கண்காட்சி குறித்து சில தகவல்களைப் பார்க்கலாம்.
[சென்னை இசை விழாவுடன், சென்னை புத்தகக் கண்காட்சி மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது. 1976ல் காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தோராயமாக 22 ஸ்டால்களுடன் பெரும்பாலானவை ஆங்கிலப் புத்தகங்களுடன் முதன்முதலில் நடத்தப்பட்டது.
1977ல் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) நிறுவப்பட்டது, இது தமிழ்நாட்டின் முக்கிய வெளியீட்டாளர்களின் சங்கமாகும். 24வது சென்னை புத்தகக் கண்காட்சியில் தான் தமிழ்ப் பதிப்பகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
1990 களின் பிற்பகுதியில், பொங்கல் விடுமுறைக் காலத்துடன் ஒத்துப்போக ஜனவரி நடுப்பகுதிக்குக் கண்காட்சி மாற்றப்பட்டது. பொருளாதாரத் தாராளமயமாக்கலால் கடந்த 15 ஆண்டுகளில் புதிய வெளியீட்டாளர்கள் பலர் அதிகரித்துள்ளார்கள்.
இந்த வருடம் கோவிட்-19 தொற்று காரணமாக சென்னை புத்தகக் கண்காட்சியை ஒத்திவைக்கும் தமிழக அரசின் முடிவால், கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் நம்பிக்கையைத் தகர்த்துள்ளது. ]
மேலே நீங்கள் […..] இதற்குள் நீங்கள் புத்தகக் கண்காட்சி குறித்த படித்த பகுதியை நான் எழுதவில்லை. எனக்கு நூறு வார்த்தைகள் புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுதிக் கொடு என்று செயற்கை அறிவுடன் கூடிய செயலியிடம் (content generator) கூற ஒரே நிமிஷத்தில் அதை ஆங்கிலத்தில் எனக்குக் கொடுத்தது. கூகிள் மொழிபெயர்ப்பு கொண்டு அடுத்த பத்து நொடிகளில் தமிழில் ‘ready to eat’ போல கட்டுரை தயார்!
இப்போதே ஓவியம் (பார்க்க பிகு), இசை என்று செயற்கை அறிவு கொண்டு கணினியே இதை எல்லாம் செய்கிறது. இன்னும் சில வருடங்களில் திரைப்படப் பாடல்களுக்கு மெட்டு கொடுத்தால் பாடல் வரிகளை எழுதிகொடுத்துவிடும் (படங்களில் பாடல் இருந்தால்!).
சுஜாதா 1988ல் ஒரு கட்டுரையில் கம்யூட்டர், மென்பொருள்பற்றி விளக்கிக்கொண்டு வரும்போது பாரதியின் இந்தக் கண்ணன் பாட்டைக் குறிப்பிட்டு, கம்யூட்டருக்கு இந்தப் பாடல் அப்படியே பொருந்துகிறது என்றார்.
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே;
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்,
இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை,தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்பேன்;
கற்ற விததை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!
ஆனால் எவ்வளவு நூற்றாண்டுகள் சென்றாலும் கணினியால் கம்ப ராமாயணமோ, கல்கியின் பொன்னியின் செல்வனையே எழுத முடியாது. அதனால் தான் புத்தகக் கண்காட்சியில் பொன்னியின் செல்வன் எப்போதும் அதிகமாக விற்பனை ஆகிறது!
பி.கு:- காக்கையும், சிங்கமும் வரைந்து கொடு என்று கணினியிடம் கேட்டேன். அது வரைந்து கொடுத்த ஓவியம்.
- சுஜாதா தேசிகன்
நன்றி: கல்கி கடைசிப் பக்கம் ( 21-01-2022 )
Comments
Post a Comment