ஸ்ரீ சொட்டை நம்பி S/O ஸ்ரீ ஆளவந்தார்
ஸ்ரீ ஆளவந்தாருக்கு நான்கு குமாரர்கள். திருவரங்கப் பெருமாள் அரையர்,தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையாரசு நம்பி, சொட்டை நம்பி.
நாதமுனிகளின் வம்சத்துப் பெயரான ‘சொட்டை’ குலமே இவருடைய திருநாமம். குருகைகாவலப்பனை ஆளவந்தார் சந்திக்கும்போது அவர் யோக நிலையில் இருந்தார். அப்போது கண் விழித்துச் சொட்டை குலத்திலிருந்து யாரேனும் இருக்கிறீர்களா என்று கேட்டார் என்ற கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
பெருமாள் சம்பந்தப்பட்டப் பொருட்களுக்குப் பல பெயர்கள் உண்டு கிட்டத்தட்ட கோட்-வேர்ட் மாதிரி. உதாரணமாக, பெருமாளுக்கு அலங்காரம் செய்யும்போது இரண்டு துணிகளை ஒன்றாக ஊசி நூலைக்கொண்டு சேர்த்துத் தைக்கும்போது அர்ச்சக ஸ்வாமிகள் ‘ஊசியைக் கொண்டு வாரும்’ என்று சொல்லாமல். ‘ஆண்டாளைக் கொண்டு வாரும்’ என்று தான் சொல்லுவார்கள்.
ஸ்ரீரங்கத்தில் இதே போல் சொட்டை என்ற வார்த்தைக்கும் மிகுந்த ஏற்றத்துடன் ஓர் அர்த்தம் இருக்கிறது. நம்பெருமாள் பல்லக்கில் புறப்பாடு கண்டருளும்போது அவருடைய திருவடிகளை இணைக்கும் கம்பிகளுக்குச் சொட்டை என்று பெயர். இருபுறமும் அதைக் கயிறு ( பாசம் என்று கூறுவார்கள் ) கொண்டு கட்டுவார்கள்.
நம்பெருமாள் புறப்பாட்டுக்குண்டான சாமான்கள் அனைத்தும் ஓர் அறையிலிருக்கும். ஆனால் இந்தச் சொட்டை கம்பி, பாசக் கயிறு போன்றவை எல்லாம் நம்பெருமாள் கைலியினால் மூட்டைப் போலக் கட்டி அவை பெரிய பெருமாளின் திருவடிக்கு அருகிலேயே எப்போதும் இருக்கும். இந்த மூட்டைக்குப் பெயர் சொட்டை மெத்தை.
நம்பெருமாளைத் தழுவி நிற்கும் இந்தக் கம்பிகளையும், பெரிய பெருமாளின் திருவடிக்கருகில் இருக்கும் சொட்டை மெத்தையையும் அவன் எப்போதும் சொட்டைக்குலமாகவே கருதுகிறான்.
ஒருமுறை சொட்டை நம்பி, திருக்கோட்டியூர் நம்பியைக் கடுங் சொற்களால் பேசிவிட்டார். இதனால் கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி, சொட்டை நம்பியைப் பார்த்து “என் அருகில் இருக்காதே.. தூரப் போ” என்று கோபமாகக் கூற சொட்டை நம்பியும், கங்கை கொண்ட சோழபுரம் சென்று அரசாங்க வேலை பார்த்து வந்தார்.
அவருடைய கடைசிக் காலத்தில் அவர் ஸ்ரீரங்கம் வந்தவர், உடம்பு முடியாமல் படுத்துக்கொண்டு இருக்கிறார். பாதி வாழ்க்கையை அரசாங்க பதவியில் கழித்த இவருக்கு ஸ்ரீ வைஷ்ணவம் பற்றி என்ன தெரியும் என்ற நினைப்பில்
சிலர் “தேவரீர் மனதில் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர் ?” என்று கேட்க அதற்குச் சொட்டை நம்பி அடியேனுக்கு ஆளவந்தார் சம்பந்தம் அதனால் பரமபதத்தில் நிச்சயம் இடம் உண்டு ஆனால் அங்கே சென்றவுடன் பரமபதநாதனை வணங்குவேன், அவர் திருமுகம் நம்பெருமாளின் திருமுகம் மாதிரி குளிர்ந்து இல்லை என்றால், ‘தொப்பென்று கீழே குதித்துவிடுவேன்’ ஆனால் பரமபதம் சென்றால் மீண்டும் இங்கே வர முடியாது என்று வேதம் சொல்லுகிறது. அதை மீற வேண்டியிருக்கிறதே “ என்றாராம்.
4.2.2022
இன்று தைப்பூரட்டாதி
ஸ்ரீ சொட்டை நம்பி திருநட்சத்திரம்
Comments
Post a Comment