Skip to main content

அமரன் - ஒரு மகத்தான படைப்பு

 அமரன் - ஒரு மகத்தான படைப்பு



கோடம்பாக்கத்துக்கும் காஷ்மீருக்கு வெகுதூரம். எப்போதுமே அது ஒரு ‘long distance relationship’ பொதுவாக நாற்றுப்பற்று படங்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் கண்டுகொள்ளுவதில்லை. இதற்கு முன் வந்த சில நல்ல தேசப்பற்று (ஹிந்தி) படங்களைத் திரையிடக் கூட இல்லை. தமிழ்த் திரையுலகம் செய்த பூர்வ ஜென்மப் புண்ணியம் அமரன் வந்திருக்கிறது.

'பயோபிக்’ எடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது. இது மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு. மொத்தமாக 31 வருடங்களே நாட்டுக்காக வாழ்ந்து நாட்டுக்காகவே தன் உயிரை நீத்த ஒரு துணிவான ராணுவ வீரனின் கதை. கதை சொல்லும்போது பெயர்களை மாற்ற முடியாது, தேவையில்லாத காட்சிகளைப் புகுத்த முடியாது ஒரு கட்டமைப்புக்குள் படத்தை எடுத்தாக வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகத் தேசிய உணர்வோடு ’ஜெய் ஹிந்த்’ போன்ற வாக்கியங்கள் ஒலிக்கத் தமிழில் கதை சொல்லுவது சவாலான விஷயம். அதைச் செய்திருக்கிறார்கள். இதை எல்லாம் கவனமாகவும் நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள்.

”India’s Most Fearless True Stories of Modern Military Heroes” என்ற பென்குயின் புத்தகத்தில் முகுந்த் வரதராஜன் பற்றிய ( “‘I Got Hit. I Can’t Believe It’, Major Mukund Varadarajan” ) பதினைந்து பக்கக் கட்டுரையைப் படித்துவிட்டுப் படத்தைப் பார்த்தால் அச்சு பிசகாமல் அப்படியே காட்சிப் படுத்தியிருக்கிறார்கள் என்பது புரியும். அதற்காக அந்தப் படக் குழுவைப் பாராட்ட வேண்டும்.

தினமும் தங்கம் விலை வருவது போல, செய்தித்தாள்களில் காஷ்மீர் எல்லையில் தீவிரவாதத் தாக்குதல்பற்றித் தினம் செய்தித்தாளில் சுரணையே இல்லாமல் படித்துக்கொண்டு செல்கிறோம். ஆனால் ஒவ்வொரு ராணுவ வீரனின் குடும்பம் எத்தகைய மகத்தான தியாகங்களைச் செய்கிறார்கள் என்பதை இந்தப் படம் மற்ற படங்களைப் போலப் பதியவைக்கிறது. குறிப்பாக இந்து, முகுந்தனிடம் ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கும்போது தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலில் தொலைப்பேசியில் கேட்கும் குண்டு வெடிக்கும் சத்ததை கேட்கும்போது தான் நமக்கு அதன் ஆழம் புரிகிறது.

நாட்டுக்காகக் குளிர் வெய்யில் என்று பெரிய சவால்களைச் சந்திக்கும் தாம்பரத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண மத்தியமக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரனுக்கு ஒரு 2 BHK பிளாட் வாங்கத் தன் நாற்பது ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் எப்படித் தவணை (ஈ.எம்.ஐ) கட்டலாம் என்பது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது என்பதைப் போகிற போகில் சொல்லிவிட்டுப் போகிறார் இயக்குநர்.

இந்தப் படத்திற்கு சிவகார்த்திகேயன் சிறந்த தேர்வு. தமிழ் அல்லாது வேறு ஒருவரை இதில் நடிக்க வைத்திருந்தால் தமிழ்மக்கள் இந்தப் படத்தை இவ்வளவு கொண்டாடியிருப்பார்களா என்பது என் சந்தேகம். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இருவரும் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஏன் அந்தக் குழந்தை கூட அருமையாகச் செய்திருக்கிறது. அனிருத் போலப் பாத்திரங்களை உருட்டாமல், ஜி.வி பிரகாஷ் படத்தில் இசை இருப்பதே தெரியாமல் இசை அமைத்திருக்கிறார். அதுவும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம்.

ராணுவ முகாம், சண்டைக் காட்சிகள், கற்களை வீசி எறியும் காட்சிகள் போன்றவை நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவி காதல் காட்சிகள் எல்லையை மீறாமல் கவிதைபோல எடுத்திருக்கிறார்கள். நல்ல ரசத்தில் கொஞ்சம் தண்ணீர் கலந்தாலும் அதன் சுவை மாறாதது போலத் திரைக்கதையில் சில இடங்களில் தோய்வு ஏற்பட்டாலும் படம் அயர்ச்சி ஏற்படாத வண்ணம் படம் செல்கிறது.

என். டி. ராமராவை மக்கள் பூஜித்தார்கள். அவர் நடிப்பிற்காக அல்ல, அவர் ஏற்று நடித்த ’கடவுள்’ பாத்திரங்களுக்காக. ‘மாஸ்’ காட்டி நடிக்கும் தமிழ்ப் படங்களில் முதல் முறையாகத் தேசப்பற்று ‘மாஸ்’ காட்டியிருக்கிறது. அதனாலேயே படம் முடியும்போது நம்மையும் அறியாமல் நமக்குக் கண்களில் நீர் ததும்புகிறது.

ஜெய் ஹிந்த்
ஜெய் பஜ்ரங்பலி

-சுஜாதா தேசிகன்
பிகு: பிராமணர்கள் விஷயத்தைத் தனியாக எழுதுகிறேன்.

Comments