ராக்கெட்ரி சமாசாரம்
2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது. இந்தப் படத்தை குறித்து கல்கி கடைசிப் பக்கத்தில் 2022ல் எழுதியது.
நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ’ராக்கெட்ரி’ படத்தை நானும் என் பையனும் சென்றோம். எப்படிப் பட்ட படம் என்பதைப் பலர் விமர்சனம் செய்துவிட்டார்கள். கல்யாணச் சத்திரத்திலிருந்து தாம்பூலப் பையுடன் வெளியே வருவது மாதிரிப் படத்தின் முதல் பகுதி ‘ஒரே டெக்னிக்கல்’ விஷயம் என்று பலரும் விமர்சித்துவிட்டார்கள்.
படத்தின் முதல் பகுதியில் ராக்கெட் என்ஜின் பற்றி கிட்டத்தட்ட ஓர் ஐஐடி மாணவர் போல நடிகர் மாதவன் பொறியாளர் வகுப்பு எடுத்துவிட்டார். இடைவெளியின் போது டெஸ்ட் வைத்து அதில் பாஸ் செய்தால் தான் அடுத்த பகுதி படம் பார்க்கலாம் என்று சொல்லிவிடுவாரோ என்று பலரும் பாப்கார்ன் கூடச் சாப்பிடாமல் இருந்தார்கள்.
எழுத்தாளர் சுஜாதா இருந்திருந்தால் நிச்சயம் இந்தப் படத்தில் தன் பங்களிப்பைக் கொடுத்து கடினமான விஷயத்தைச் சாதாரண சோளப்பொரி ரசிகரும் புரிந்துகொள்ளும் விதமாக சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது.
ராக்கெட்ரி படத்தை இன்னும் பார்க்கவில்லை (அ) சாவகாசமாக ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருப்பவர்களுக்கு இந்த வாரக் கடைசிப் பக்கம்.
ராக்கெட் எப்படிப் பறக்கிறது என்று தெரிந்துகொள்ளுவதற்கு முன், ஓர் ஊதிய பலூனை திறந்துவிடுங்கள். அது மேலே பறக்கும். இதற்குக் காரணம் நியூட்டனின் மூன்றாம் விதி. ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு. (ஹாலிலிருந்து சத்தம் போட்டால், கிச்சனிலிருந்து சப்பாத்தி கட்டை பறந்துவரும் மதன் கார்ட்டூன் ஒன்று ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது)
பலூனிலிருந்து காற்று வெளியேறுவது ( ஒரு வினை ) அதற்கு (எதிர் வினையாக) பலூன் மேலே செல்கிறது. பலூனின் வாய் மிகக் குறுகலாக இருந்தால் ? பலூன் அதிக உந்துதலுடன் வேகமாக மேலே செல்லும். இந்த பலூன் சமாசாரம் புரிந்துவிட்டால் ராக்கெட் என்ஜின் பற்றிய அடிப்படை உங்களுக்கு தெரிந்துவிட்டது. கீழே மீதம் உள்ள இருநூறு வார்த்தைகளைத் தைரியமாக படிக்கலாம்.
பலூனை நம் வீட்டுக்குள் சுற்றும் விண்வெளிக்குச் செல்லாது, அதனால் ராக்கெட் விடுகிறார்கள்.
ராக்கெட் உள்ளே சில பல விஷயங்களை எரிக்க அதனால் வெளியேற்றப்படும் வெப்ப வாயு பலூனிலிருந்து காற்று போல வெளியேற உந்துதலை உருவாக்குகின்றன. ராக்கெட் அடிப் பகுதி குறுகிய முனையாக இருக்க அதிக உந்துதலுடன் ராக்கெட் விண்வெளியை நோக்கிச் செல்கிறது. ராக்கெட் உள்ளே எரிபொருள் எரிந்துகொண்டு இருக்க, அது காலியாகும் வரை மேலே செல்லுகிறது.
ராக்கெட் உள்ளே எரிபொருள் எரிக்கப்படும் இடம் தான் ராக்கெட் என்ஜின். திட மற்றும் திரவ என்று இரண்டு முக்கிய வகையான எரிபொருள்கள் உபயோகிறார்கள். திரைப்படத்தில் நம்பி நாராயணன் திரவ எரிபொருள் கொண்டு ராக்கெட் விடலாம் என்று யோசனை கூறுவது நினைவு இருக்கலாம்..திரவ எரிபொருளாக திரவ ஹைட்ரஜன் பயன்படுத்துகிறார்கள். இவை தீபாவளி ராக்கெட் இல்லை. இதில் வெளியேற்றப்படும் வெப்பம் 3,200 °C ( 13 மே 2022 அன்று, சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 °C). இதனால் ஏற்படும் மிக அதிக உந்து சக்தியை யோசித்துப் பாருங்கள்.
மிட்நைட் மசாலா பார்த்த பதின்ம வயது பாலகன் மாதிரி இவ்வளவு சூடானால் ’நேத்து ராத்திரி யம்மா’ என்று ராக்கெட்டே பஸ்பமாகிவிடும். அதனால்
டான்டலம் கார்பைடு(tantalum carbide), ஹாஃப்னியம் கார்பைடு(hafnium carbide) போன்ற பொருட்களை உபயோகிறார்கள். இவை 4,000 °C வரை தாக்குப்பிடிக்கும்.
இப்போது ஒரு குட்டிக் கேள்வி. எரிந்துகொண்டு இருக்கும் மெழுகுவத்தியை ஒரு கோப்பை கொண்டு மூடினால் ? சில நொடிகளில் அணைந்துவிடும் எரிவதற்கு ஆக்ஸிஜன் தேவை என்று எப்போதோ படித்த ஞாபகம் வந்தால் போதும். ராக்கெட்டில் எரிபொருளை எரிக்க ஆக்ஸிஜனும் தேவைப்படுகிறது.
பலூன் மெழுகுவத்தியை நினைத்துக்கொண்டு கீழே உள்ளப் படம் புரிகிறதா என்று பாருங்கள்.
1. திரவ ராக்கெட் எரிபொருள். 2. ஆக்ஸிஜன் டாங்க். 3. எரிபொருள், ஆக்சிஜனை கொண்டு செல்லும் பம்புகள். 4. இரண்டு திரவங்களைக் கலந்து எரிக்கும் அறை. 5. சூடான காற்று குறுகிய தொண்டையில் செல்லும் போது உந்துதல் அளவு அதிகமாகி. 6. மிகுந்த வேகத்துடன் ராக்கெட்டில் இருந்து வெளியேறுகிறது. ராக்கெட் பறக்கிறது.
அசல் ராக்கெட் என்ஜின் படம் கீழே
நம்பி நாராயணன் படத்தை நம்பி பார்க்கலாம். பாருங்கள்!
Comments
Post a Comment