துறவியின் காலில் விழுந்த கதை
கங்கைகொண்ட சோழபுரத்தில் உடையார் ஸுப்ரஹ்மண்ய பட்டர் என்பவர் சோழசக்கரவர்த்தியின் ராஜசபையில் அமைச்சராகவும், புரோகிதராகவும் பணியாற்றினார். சாஸ்திரங்களில் வல்லவராகச் சக்கரவர்த்தியின் அபிமானத்துடன் உயர் பதவியிலிருந்தார்.
ஒரு சமயம் ஏதோ ராஜாங்க வேலையாகத் திருவரங்கம் வந்தார். அன்று நம்பெருமாள் உற்சவம். தீர்த்தவாரி கண்டருளுவதற்காக திருப்புன்னை மரத்துக்குக் கீழ் நம்பெருமாள் எழுந்தருளியிருந்தார். சுற்றும் அடியவர்களின் கோஷ்க்கு நடுநாயகமாக ஸ்வாமி எம்பெருமானார் திரிதண்டத்துடன் நின்றுகொண்டிருந்தார்.
அங்கே ஸுப்ரஹ்மண்ய பட்டர் இந்த காட்சியைக் கண்டார்.
கோயிலுக்கு வந்துகொண்டு இருந்த பக்தர்கள் கூட்டம் நேராக துறவியான எம்பெருமானார் திருவடிகளைத் தண்டனிட்டுக்கொண்டு இருந்தார்கள்(சேவித்துக்கொண்டு இருந்தார்கள்). அப்படித் தண்டனிட்டவர்களை எம்பெருமானார் ஒன்றும் சொல்லவில்லை. (கோயிலில் ஜீயரைத் தண்டனிட்டால் உடனே அவர்கள் இங்கே அப்படிச் சேவிக்கக் கூடாது என்று தடுத்துவிடுவார்கள். அதை இன்றும் நாம் பார்க்கலாம்).
அவர்கள் தண்டனிடுகிறார்கள் ஆனால் சன்னியாசியான ஸ்ரீ ராமானுஜர் அதைத் தடுக்காமல் அங்கீகரிக்கலாமா ? அவர்களைத் தடுத்து அவர்களுக்குச் சரியான அறிவுரையைச் சொல்லியிருக்க வேண்டாமா ? இதன் காரணத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் செருக்குடன் ஸ்ரீ ராமானுஜரை அணுகிக் கேட்டுவிட்டார்
“ஜீயரே ஒரு விஷயத்தைக் உம்மிடம் கேட்க வேண்டும்?”
“தாராளமாகக் கேளுங்கள்” என்றார் உடையவர் பணிவுடன்.
”நம்பெருமாள் இங்கே இருக்க அவர் முன்பே உங்களைச் தண்டனிடுகிறார்கள்... . அவர்களுக்குத் தான் விஷயம் தெரியவில்லை என்றால் தேவரீரும் அதை வேண்டாம் என்று கூறாமல் ஏற்றுக்கொண்டதற்கு என்ன காரணம் ?”
“கேட்க வேண்டிய விஷயம் தான், ஆனால் நீர் கேட்டது தான் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது” என்றார் எம்பெருமானார்.
ராஜபுரோஹிதர் புரியாமல் நின்றார். உடையவர் தொடர்ந்தார்.
“நீர் ராஜசபையில் இருக்கும் போது சோழசக்கரவர்த்தியை பார்க்கப் பல சிற்றரசர்கள் வருவார்கள் இல்லையா ?”
“ஆமாம் வருவார்கள்”
”அவர்கள் ராஜசபையில் வரும் போது சக்ரவர்த்தி மேலே அரியணையில் வீற்றிருக்க இந்த சிற்றரசர்கள் கீழே அரசருடைய காலணியை எடுத்து தலையில் வைத்துக்கொள்வதைக் கண்டிருப்பீரே ? அப்போது அரசர் அரியணையில் இருக்கும் அவன் காலில் விழாது அவன் காலணியைத் தலையில் வைத்துக்கொள்வது தகாது என்று நீர் தடுப்பீரா ? மேலும் சிற்றரசர் அரசனின் காலணிகளையா கொண்டாடுகிறான் ? காலணிகளைக் கொண்டாடினால் அரசன் அன்றோ சந்தோசப்படுகிறான் காலனியா சந்தோஷப்படுகிறது ? ”
எம்பெருமான் திருவடி நிலைகளாகத் தன்னை பாவித்துக்கொண்டார் ஸ்வாமி எம்பெருமானார்.
- சுஜாதா தேசிகன்
21.8.2023
Comments
Post a Comment