Skip to main content

ஸ்ரீ கிருஷ்ண பிரேமி அண்ணா

 ஸ்ரீ கிருஷ்ண பிரேமி அண்ணா



பத்து வயது இருக்கலாம். சென்னை ஐஸ் அவுஸ் அருகில் இருந்த கல்யாண மண்டபத்தில் ஸ்ரீகிருஷ்ண பிரேமி அவர்களுடைய உபன்யாசத்துக்கு என் அப்பா அழைத்துச் சென்றார். நல்ல கூட்டம். கதவு பக்கம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தேன். சுவாரசியமாக எதுவும் இல்லாமல் ஸ்ரீ பக்த மீரா கதையைக் கேட்க ஆரம்பித்தேன். என்னையும் அறியாமல் கண்ணில் இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது.

ஒரு விதையை மண்ணில் விதைத்தால் முளைக்காது. முளைவிடத் தண்ணீர் சூரிய ஒளி இரண்டும் தேவை. அது போலத் தான் பக்தியும். நாம் விதைகளாக இந்த உலகில் புதைந்து கிடக்கிறோம். ஸ்ரீ கிருஷ்ண பிரேமி போன்ற தண்ணீரும், சூரியன் போன்ற பெருமாள் கருணையும் சேர்ந்தால் தான் பக்தி முளைவிடும்.

கிருஷ்ணப் பக்தி உண்டாவதற்குக் கோடி ஜன்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். பக்தி என்பதற்கு definition கோகுலத்துக் கோபிகைகள். இதைப் படிக்கும் போது இன்னும் ஒரு கோடி ஜன்மம் எடுத்து புண்ணியம் செய்ய வேண்டுமே என்று தோன்றும். சுலபமான வழி எதுவும் கிடையாதா ?

இருக்கிறது. அது ஸ்ரீ கிருஷ்ண பிரேமி போன்றவர்களின் உபன்யாசத்தைக் கேட்பது. கிருஷ்ணப் பக்தியை என் போன்று பலருக்கு அவர் ஊட்டிவிட்டார். சமூக ஊடகம் எதுவும் இல்லாத காலத்தில் ஊர் ஊராகச் சென்று அதை அவர் ஒரு தவமாகச் செய்தார். தமிழர்களுக்குக் கன்னட , மஹாராஷ்டிரா பக்தர்களின் கதைகளை உள்ள பக்தி உணர்வைச் செவி வழியே உள்ளே புகுத்தினார்.

25 வருடம் முன் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகளின் உபன்யாசம் ஒன்றில் பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனாக அடியார்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு இருக்கும் விட்டிலினை விவரிக்க விவரிக்க பண்டரீபூருக்கு உடனே செல்ல வேண்டும் என்று தோன்றியது. உடனே போக முடியாவிட்டாலும் போக வேண்டும் என்று மனதின் ஓரத்தில் இருந்தது. பல வருடங்கள் கழித்து அம்மாவை அழைத்துக்கொண்டு சென்றேன்.

2015ல் கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிமீ தூரத்தில் இருக்கும்

சேங்கனூர் என்ற சிறு கிராமத்துக்குச் சென்றிருந்தேன். ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அவதரித்த ஊர். அன்று அவர் திருநட்சத்திரம். அதே நாள் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி அவர்களின் திருநட்சத்திரமும்!.

ஸ்ரீகிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள் கோயிலுக்கு வந்திருந்தார். சிறுவனாக பத்து வயதில் பார்த்த பிறகு அவரை அன்று மீண்டும் பார்த்துச் சேவித்தேன். ”சௌக்கியமா?” என்று என்னை விசாரித்தவரிடம் சிறுவயதில் நான் அவரிடம் கேட்ட மீரா பாய் கதையைப் பற்றிக் கூறி அதுதான் இன்று பெரியவாச்சான் பிள்ளை அவதார ஸ்தலம் வரை என்னை அழைத்து வந்திருக்கிறது என்றேன்.

”திருநாமம்?”

“தேசிகன்” என்றவுடன் இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டார்.

ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.

80களிலிருந்து இன்று வரை அவரின் உபன்யாசத்தை கேசட், சிடி, பென்டிரைவ் என்று பல தொழில் நுட்பத்தில் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். எப்போது கேட்டாலும் மனதில் ஒரு தெளிவும் அமைதியும் கிடைக்கும். பாசுரங்களை எப்படி அனுபவிக்க வேண்டும் என்று அவரிடம் கற்றுக்கொள்ளலாம்.

உதாரணத்துக்குத் திருமங்கை ஆழ்வாரின் இந்தப் பாசுரத்தை நீங்கள் படித்திருப்பீர்கள்.

முளைக் கதிரை, குறுங்குடியுள் முகிலை, மூவா
மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற*
அளப்பு அரிய ஆர்-அமுதை, அரங்கம் மேய
அந்தணனை, அந்தணர் தம் சிந்தையானை*
விளக்கு ஒளியை, மரதகத்தை, திருத்தண்காவில்
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு*
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக; என்று
மடக் கிளியைக் கை கூப்பி வணங்கினாளே.

இதில் கிளியைக் கைகூப்பி வணங்குகிறார் ஆழ்வார். கிளியை வணங்கலாமா ? அது சாதாரணப் பறவை தானே என்று நமக்குத் தோன்றலாம். இதற்கு ஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள் என்ன சொல்லுகிறார் என்று கீழே அந்த ஒலிப்பதிவில் கேட்கலாம். 

https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/663441941&fbclid=IwAR0GODDcewR3E-NRA6L-bgCR92ZFnMsKkK3MHaDbl-lM1Fl-tqvW6uayuUU

அத்திவரதர் வெளியே வந்த போது, அத்திவரதர் மீண்டும் குளத்திற்கு அடியில் எழுந்தருளச் செய்ய வேண்டாம் என்றார். இதற்குப் பல விமர்சனங்கள் எழுந்தது. நன்றாக யோசித்தால் அவர் சொன்னதற்கு காரணம் ஒன்றே ‘பொங்கும்’ பரிவு. ’அஞ்சும்’ குடியில் பிறந்த ஆழ்வார்களைப் போல பிரேமத்தின் காரணத்தால் அவருக்கு உகக்கவில்லை. பக்தி உணர்வுப்பூர்வமானது. பக்தியைப் புரிந்துகொள்ள அறிவு தேவை, ஆனால் பக்திக்கு அறிவு தேவை இல்லை.




சென்ற வருட இறுதியில் ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகளைச் சந்தித்து ராமானுஜ தேசிக முனிகள் டிரஸ்ட் மூலம் வெளிவந்த ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தங்களை அவரிடம் சமர்ப்பித்து ஆசீர்வாதம் வாங்கினேன். ஆழ்வார்களின் அருளிச் செயல்களை கையில் வாங்கிக்கொண்ட உடன் அதைத் தன் சிரசில் (தலையில்) வைத்துக்கொண்டார்.
 
நாம் தலையில் வைத்துக் கொண்டாட வேண்டியவர் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி அண்ணா.

- சுஜாதா தேசிகன்
31.-08-2023


Comments