காந்தாரா சாப்டர் 1
பள்ளியில் படித்தபோது, மலையாளப் படங்கள் ‘பிட்’டாகவும், தெலுங்குப் படங்கள் வெறும் மசாலாவாகவும் மட்டுமே பார்க்கப்பட்டன. கன்னடப் படங்கள் திரைப்படங்களே இல்லை என்று ஒதுக்கப்பட்டன. அவை தமிழ்நாட்டுக்குள் வந்ததில்லை. மற்ற திராவிடப் பிரதேசங்களில் தமிழ்ப் படங்கள் ’வேற லெவல்’ என்று கோலோச்சிக்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். சேட்டன்களின் கதைக்களம் எல்லாம் யோசிக்கக்கூட முடியாதவையாக, கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, திரைக்கதையும் கதைச் சொல்லும் விதத்தையும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார்கள். தெலுங்குப் படம் ‘பாகுபலி’ வந்த பிறகு ஒரு தனி அந்தஸ்து கிடைத்துவிட்டது. எந்த அந்தஸ்து கிடைத்தாலும், படம் ஆரம்பிக்கும் முன் மங்களகரமான மஞ்சள் எழுத்தில் திருவேங்கடமுடையானுடன் பக்தியுடன் ஆரம்பிக்கிறார்கள். கன்னடப் படங்கள் மெதுவாகத் தவழ்ந்து ‘யூ டர்ன்’ என்ற படம் வந்த போது ‘அட’ என்று சொல்ல வைத்து, ‘காந்தாரா’ வந்த பிறகு ‘அடடா’ என்று சொல்லவைத்தார்கள். இன்று காந்தாராவின் அடுத்த பாகமாக வந்திருக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’ பாகுபலிக்கே போட்டி என்று பெயர் வாங்கியிருக்கிறார்கள். இதன் செலவு கிட்டத்தட்ட 125 கோடி என்கிறார்கள். 350 கோடி செலவில் தமிழ்ப் படமான ‘கூலி’ எடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் படித்த வாட்ஸ்அப் ஜோக் - ‘இரண்டு இன்ச் பை மூன்று; சிமெண்ட் ஒரு மூட்டை, பத்து செங்கல் – மொத்தம் 4000 கோடி’ ‘கூலி’ போன்ற படங்களுக்கு அப்படியே பொருந்துகிறது (ஓடிடியில் கூலி வந்த போது ‘இதையா தியேட்டரில் போய் பார்த்தீங்க?’).
இன்று நுண்ணறிவுக் கணினி இயலையே புரட்டிப் போட ஆரம்பித்திருப்பது போல விரைவில் தமிழ் திரையுலகையும் புரட்டிப்போடும். பெரும்பாலான பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் ஏமாற்று வேலையாகவே இருப்பதால், சமீபத்தில் பார்த்த நல்ல தமிழ்ப் படம் என்ன என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. அதனால் தொழில் தருமம் தெரிந்த ஏ.வி.எம் போன்ற மினிமம் கேரண்டி பட நிறுவனங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள்.
சமீபத்தில் `காந்தாரா' படத்தின் அடுத்த பாகமாக வந்திருக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’ பார்த்தேன். மேக்கிங்கில் தனித்து நிற்பதால், படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ‘கொடுத்த காசுக்குத் திருப்தியாக இருக்கிறது’ என்று அதன் குறைகள் மறந்துவிடுகிறது. படமெங்கும் ஒரு ‘richness’ இருக்கிறது.
கதை ஒரு நாட்டுப்புற ‘ஃபேண்டசி’ வகைப் படம். ஆனால் படம் ஆரம்பித்து சற்று நேரத்தில் பகல் வெளிச்சத்தைக் காணாத அந்தக் பழங்குடி இனத்தின் காட்டுப்பகுதியில் நாமும் அவர்களுடன் சேர்ந்துவிடுகிறோம். இது தான் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
ரிஷப் ஷெட்டி தான் நம்பிய கதையை, தன் கற்பனையை நேர்த்தியாக எடுத்திருக்கிறார் (முதல் பாதி கதை கொஞ்சம் பிடிபடாமல் சென்றாலும்). நல்ல ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் (சில சண்டைக் காட்சிகள் சலிப்பூட்டுகிறது), தேர்ந்த நடிகர்கள், ஆங்காங்கே சில நகைச்சுவை என்று படத்தை சலிப்பூட்டாமல் நகர்த்திச் சென்றதில் வெற்றியடைந்திருக்கிறார்கள். கடைத்தெருவில் தறிகெட்டு ஓடும் தேர், குதிரை என்று விஷுவல்களில் மிரட்டியிருக்கிறார்கள். கிராபிக்ஸ் கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் படத்தில் வரும் பெரும் குழியில் அந்தப் புலி விழுந்திருக்கும். குலசேகரா கதாபாத்திரத்தில் அடால்டாக வில்லத்தனம் செய்யும் நடிகர் குல்ஷன் தேவையா இந்தப் படத்திற்கு பெரும் பலம். கடைசிக் காட்சிகளில் கடும் உழைப்பு சாமியாடுகிறது.
நடக்கவே இடமில்லாத இடுக்கான அரண்மனைக் காட்சிகளுக்குச் சரியான ஒளியமைப்பு என்று தனித்து நிற்கச் செய்கிறது. நிச்சயம் கலை இயக்குநரைப் பாராட்ட வேண்டும்.
‘கல் தெய்வமா?’ என்று நகைத்துக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு, அந்தக் கல்லையே முன்னிலைப்படுத்தி, தமிழ்த் திரையுலகம் கடக்க வேண்டிய ஒரு மைல்கல்லை அமைத்திருக்கிறார்கள் கன்னடர்கள்.
இப்படத்தைப் பற்றி என் நண்பரிடம் பேசிய போது “சார் நீங்க காவியக் கற்பனை ‘கங்குவா’ பார்த்திருக்கீங்களா ?” என்றார்.
-சுஜாதா தேசிகன்
27.10.2025
Comments
Post a Comment