Skip to main content

பொய்யிலாத மணவாள மாமுனி

பொய்யிலாத மணவாள மாமுனி 


’பொய்யிலாத’ என்று பதம் ஏன் வருகிறது என்று பல காலமாக தெரியாது. ஒரு முறை மதுரைப் பேராசிரியர் ஸ்ரீ.உ.வே. அரங்கராஜன் ஸ்வாமிகளைக் கேட்டபோது அதை விளக்கினார். அதைக் குறித்து கடைசியில் கூறுகிறேன். 

சில வருடங்களுக்கு வைகாசி விசாகம் அன்று ஆழ்வார் திருநகரியில் இருந்தேன். அன்றுதான் நம்மாழ்வார் மற்றும் திருவாய்மொழிப் பிள்ளையின் திருநட்சத்திரம். வீதிப் புறப்பாட்டின்போது மணவாள மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளையை சேவித்துவிட்டு, மாலை மரியாதைகளுடன் சில வாழைப்பழப் பிரசாதங்களுடன் விடைபெற்றுச் சென்றார். 

பிறகு நம்மாழ்வார் சந்நிதிக்குச் சென்றேன். வரிசையில் நின்ற என்னை ஒரு பெரியவர் அழைத்தார். சென்றேன். 

“இந்தப் பிரசாதத்தை கொடுக்க தகுந்தவரை தேடிக்கொண்டிருந்தேன். நீர் வாங்கிக்கொள்ளும். திருவாய்மொழிப் பிள்ளை மாமுனிகளுக்கு அளித்த பிரசாதம்” என்று கையில் வாழைப்பழத்தைக் கொடுத்தார். 

திருவாய்மொழிப் பிள்ளை தான் மணவாள மாமுனிகளின் ஆசாரியர். 

திருவாய்மொழிப் பிள்ளை, சரம தசையில் மிகுந்த கவலையுடன் இருந்தார். அதைக் கண்ட சீடர்கள், 'பரம பக்தராகிய உங்களுக்கு மரண பயம் இருக்காதே, பிறகு ஏன் இந்தக் கவலை?' என்று கேட்டார்கள். அதற்கு பிள்ளை, 'எனக்கு வேறு என்ன கவலை? ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களின் மீது தீவிர நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டு, இந்தப் பக்தி மார்க்கத்தை எனக்குப் பிறகு யார் வளர்க்கப் போகிறார்கள்? என்றுதான் என் மனம் துயரப்படுகிறது,’ என்றார்.

குழுமியிருந்த சீடர்களில் ஒருவர் முன்வந்து, 'அதற்கென்ன? அடியேன் இருக்கிறேன்!' என்று உறுதியளித்தார். மிகுந்த மகிழ்ச்சியடைந்த பிள்ளை ‘வார்த்தை மட்டும் போதுமா?’ என்று கேட்க, அந்த சீடர் அவருடைய பாதங்களைத் தொட்டு உறுதியளித்தார். அவர் தான் மணவாள மாமுனிகள்! 

அப்போது குரு மகிழ்ச்சியடைந்து மாமுனிகளை அருகே அழைத்து, 'இனி ஸ்ரீரங்கத்திலேயே நிரந்தரமாக வசித்து, ஆழ்வார்களின் சித்தாந்தத்திற்குப் புத்துயிர் அளிக்க வேண்டும். திருவாய்மொழியை பரப்புவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.' என்று கட்டளையிட்டார்.

இனி பொய்யிலாத என்ற சொல்லைப் பார்க்கலாம். உண்மையை பேசாமல் இருப்பது பொய் என்று நமக்குத் தெரியும். உண்மையை மறைப்பதும் பொய்யில் சேர்த்தி. 

மணவாள மாமுனிகள் விளக்கவுரை தனிச் சிறப்புப் பெற்றது. மூல நூலை அறிமுகப்படுத்தும் அழகு, அதைத் தெளிவாக விளக்கும் விதம், ஆங்காங்கே முக்கியக் கருத்துக்களைச் சுருக்கித் தரும் பண்பு ஆகியவை வியக்கத்தக்கவை. பெரிய அறிஞர்களுக்கே தோன்றாத சந்தேகங்களை அவரே எழுப்பி, அதற்கான தீர்வுகளையும் தெளிவாகக் காட்டுவார். மற்ற மதங்களை மறுத்துப் பேச வேண்டிய நிலை வந்தாலும், யாருடைய மனமும் புண்படாதபடிக்கு, வீண் கேலி கிண்டல்கள் இல்லாமல், சாஸ்திர உண்மைகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு எழுதுவார். 

மாமுனிகளின் உரைகளில் உள்ள மிக முக்கியமான ஒரு சிறப்பம்சம், அவர் ஒரு கருத்தை விளக்கும்போது, அந்தக் கருத்து வேறு எந்த ஆசிரியரின் நூலிலும் இடம் பெற்றிருந்தால், அதை மறைக்காமல் எடுத்துக்காட்டிவிடுவார். நேர்மையான நடையில் "இன்ன ஆசிரியர், இன்ன இடத்தில், இன்னபடி சொல்லியிருக்கிறார்; அவருடைய வாசகங்கள் இவை" என்று மிகத் தெளிவாக, விளக்கமாகக் குறிப்பிட்டுச் சொல்வார். இந்தத் தனிப்பெரும் சிறப்பின்  காரணமாகத்தான், "பொய்யிலாத மணவாள மாமுனி புந்தி வாழி" (பொய்யில்லாத மணவாள மாமுனியின் அறிவு வாழ்க!) என்ற வாழ்த்து அவருக்கு அமைந்தது.

இன்று ஐப்பசி திருமூலம் - ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருநட்சத்திரம். 

-சுஜாதா தேசிகன்

27.10.2025

ஐப்பசி திருமூலம்

ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம் 

படம் : ஆழ்வார் திருநகரியில் அடியேன் எடுத்தது.

Comments