புதிய தலைமுறைக்கு ஓர் அட்வைஸ்
புதிய தலைமுறை என்ற சேனல் அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது செய்தி. இதில என்ன சார் ஆச்சரியம், இதே போல் கடந்த காலங்களிலும் நடந்திருக்கிறது என்று பரவலாக பேசப்படுகிறது. ஏன் இப்படி நடந்தது என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், எந்த பிரதான ஊடகமும் இதை தைரியமாக சொல்லப் போவதில்லை. சொன்னால் அவர்கள் சேனல் எங்கோ தொலைந்துவிடும்.
தமிழக மொத்த மீடியாவும் இன்று ஜெயா / சன் டிவி என்ற குழுமங்களுக்குள் ஏதோ ஒன்றில் அடங்கிவிடும். அதனால் புதிய தலைமுறை குறித்து எனக்கு வருத்தம் இல்லை. சும்மா வேடிக்கை பார்க்கலாம். இந்தப் பதிவு இன்றைய இந்தியப் புதிய தலைமுறை குறித்து.
‘அரசு’ கேபிள் நிறுவனம், பெயருக்கு ஏற்றார் போல அரசு நடத்துகிறது. அதனால் மீடியாவின் சிகை அவர்கள் கையில். முடக்கவோ, தொலைந்து போக செய்யவோ முடியும். இதே போல தான் ஆண்டராய்ட், ஆப்பிள், கூகுள், ஜீ.மேயில், வாட்ஸ்-ஆப் போன்ற இன்ன பிற வஸ்துக்களும். கூகுள் பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோர் எல்லாம் வெளிநாட்டு அரசு கேபிள் நிறுவனம் போன்றவை. நாளை காலை, கூகுள், ஜீமெயில் இல்லை என்றால் உங்கள் நிலையை யோசித்துப் பாருங்கள் ? நம் சுதந்திர அடிமைகள்.
பல வருடங்களுக்கு முன் கொரியா சென்றிருந்தேன். எல்லாமே கொரியாவில் தான் இருந்தது. புத்தகங்கள், மென்பொருள், உலாவிகள், வலைத் தளங்கள்.. எல்லாமே. கூகுள் மேப் எல்லாம் முழுவதும் அங்கே கிடையாது. அதே போல் தான் சீனா; சீனப் பெருஞ்சுவர் கொண்டு அங்கேயும் கூகுள் இல்லாமல் குடித்தனம் நடத்துகிறார்கள். எங்கள் டேட்டா எங்களின் சொந்த மண்ணில் இருக்க வேண்டும் இல்லை என்றால் இடத்தை காலி செய்யுங்கள் என்கிறார்கள். நாளையே டிரம்ப், கூகுள் உபயோகிக்கும் இந்தியர்கள் எல்லோரும் வருடத்துக்கு ரூ10 கட்ட வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய முடியும் ?
காந்தியின் சுதேசி பற்றி நாம் படித்துவிட்டு கடந்து செல்கிறோம். இன்றைய நுண்ணறிவு உலகில் அதன் முக்கியத்துவம் மிக அதிகமாக தோன்றுகிறது. உங்கள் கணினியில் கூகுள் குரோம், மைக்ரோசாப்ட் எட்ஜ் என்று இரண்டு உலாவிகள் இருக்கின்றன என்றால், தினமும் கணினியை திறக்கும்போது ‘ஏம்பா என்னுடையதையே ‘டிபால்ட்’ உலாவியாக உபயோகித்துக்கொள்ளவும் என்று சளைக்காமல் வருவதை நீங்கள் பார்க்கலாம். இவர்கள் செய்வது ஏழைகளுக்கு ஆசை வார்த்தை காண்பித்து மதமாற்றம் செய்வதற்கு சமம். இங்கே ஏழை நாடுகளை குறிவைக்கிறார்கள். அவ்வளவு தான். ஒரு முறை இவர்கள் தரும் சேவையை உபயோகிக்க பழகிவிட்டால், வாழ்நாள் முழுவதும் அந்த நிறுவனத்தைச் சார்ந்தே அடிமையாக இருக்க வேண்டும். இதுதான் அவர்களின் குறிக்கோள். லாலிபாப் காண்பித்துக் குழந்தையைக் கடத்துவது போல நம்மை கடத்துகிறார்கள்.
ஜோஹோ (Zoho) போன்ற நிறுவனங்கள் முளைத்தால் அவர்களை பெரும் பணத்தை வாரி இரைத்து வாங்கி அழித்து அடக்கம் செய்துவிடுவார்கள். ஜோஹோ தப்பித்துவிட்டது. காரணம் தேசப் பற்றும், இந்தியா சுயமாக வளர வேண்டும், கிராமங்களின் வளர்ச்சி என்ற திட நம்பிக்கை மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட ஸ்ரீதர் வேம்பு.
பிரதமர் மோதி சுதேசி குறித்து ‘மேக் இன் இந்தியா’ என்று பல காலம் முன்பே பேசினாலும், சமீபத்திய 50% வரி விதிப்புக்கு பிறகு இது சூடு பிடித்துள்ளது. (டிரம்ப்புக்கு தலையல்லால் கைமாறிலேன்) சமீபத்தில் மோதி தன் உரையில் சுதேசி பொருட்களைக் குறித்து மீண்டும் பேச, அகர முதல எழுத்தெல்லாம் என்பது போல அகரத்தில் ஆரம்பிக்கும் அமைச்சர் ‘அ’ஸ்வினி வைஷ்ணவ், ‘அ’மித் ஷா இருவரும் இந்திய மென்பொருள் தொகுப்பான சோஹோவிற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார்கள்.
ஒரு நாட்டின் தலைவர் ஜிமெயிலை கைவிடும் போது, இனி உங்களை சார்ந்து இல்லை என்பதை உலகிற்கு சொல்வதோடு, ’அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்று மறைமுகமாக நமக்கும் உணர்த்துகிறார்கள் . . இனி மெதுவாக, படிப்படியாக இந்திய அரசின் எல்லா உபயோகமும் இந்திய மென்பொருள் சார்ந்தே இருக்கும் என்று நினைக்கிறேன். விரைவில் நாமும் அதற்கு மாறியே ஆகவேண்டிய என்ற கட்டாயம் ஏற்படலாம். நல்லதுக்கே. ’அரட்டை’யை பலர் உபயோகிக்க ஆரம்பித்து, ’வாட்சாப்’வுடன் ஓப்பிட ஆரம்பித்திருப்பதே அரட்டையின் முதல் வெற்றி என்பேன். நானும் மெதுவாக ஜோஹோவிற்கு மாறிக்கொண்டு இருக்கிறேன்.
ஜோஹோவின் திடீர் பிரபலம் தமிழ்நாட்டில் சிலருக்கு வயத்தைக் கலக்கியிருக்கிறது. ’நான் உச்சா போகும்’ படத்தை ஜோஹோ மூலம் அனுப்பினால் யாரெல்லாம் பார்ப்பார்கள் போன்ற குதர்க்கமான வாதங்களை முன் வைத்து தடம் புரள முயற்சிக்கிறார்கள். இதற்கு ஸ்ரீதர் வேம்பு ‘நம்பிக்கை’ வேண்டும் என்கிறார். இந்திய நாட்டின் பெரும் தலைவர்களே இதை உபயோகிக்க ஆரம்பித்துள்ளார்கள் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். அந்த நம்பிக்கை இல்லையா ? கவலைப்படாதீர்கள் இன்னொரு விஷயத்தை சொல்லுகிறென். திராவிட கட்சியினர் ஜோஹோவை எதிர்க்க தொடங்கியுள்ளார்கள், அதனால் ஜோஹோ நல்லதாகத்தான் இருக்க வேண்டும்!
-சுஜாதா தேசிகன்
9.10.2025
Comments
Post a Comment