நேற்றைய அசோகமித்திரன் கட்டுரையை தொடர்ந்து இன்று ரா.கி.ரங்கராஜன் அவர்களுடையது.
சமிபத்தில் எனக்கு பிறந்த நாள் வந்தது. (எத்தனையாவது பிறந்த நாள் என்று கேட்க நினைப்பவர்கள் 'எத்தனையாவது' என்பதற்கு சரியான இங்கலிஷ் வார்த்தையை கண்டுபிடித்துச் சொல்லுங்கள். பார்க்கலாம் ரொம்பப் பேரிடம் கேட்டு வருகிறேன். மகாமகா இங்கிலீஷ் பேராசிரியர்கள்கூட முழிக்கிறார்கள்)
பிறந்த நாள் என்றால், வாழ்த்து வராமலா இருக்கும் ?. வந்தன தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலர் எழுதியிருந்தார்கள், இருந்தாலும்..
"என் அன்புள்ள அப்பாவுக்கு உங்களுடைய இந்தப் பிறந்த நாளன்று நீங்கள் என்னை எப்படியெல்லாம் வளர்த்து மனிதனாக்கினீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, சின்ன பையனாயிருந்தபோது காலில் ஏதோ புண் ஏற்பட்டிருந்தது. தூங்கும் போது என்னை அறியாமல் அதை சொறிந்து சொறிந்து ரத்தக் களரியாக்கிக் கொண்டிருந்தேன். அதற்காகவே முரட்டுக் கதர்த்துணையில் க்ளவுஸ் மாதிரி உறை தைத்துப் போட்டு அது கழன்றுவிழுந்து விடாமலிருக்க முடிச்சுப் போட்டு வைத்தீர்கள். தினம் ராத்திரி உங்களுடைய கடைசி வேலை அது.
அந்த நாளில் ஹாவாய் செருப்பு, சிங்கப்பூர் செருப்பு என்று சொல்லப்பட்ட ரப்பர் செருப்பு வாங்கித்தந்தீர்கள். தீடீர் தீடீரென்று அதன் 'வார்' அறுந்து போய்விடும். நான் கஷ்டபடக் கூடாது என்பதற்காக, செட் செட்டாக வார்கள் வாங்கி வைத்திருப்பீர்கள். ஒன்றின் வார் அறுந்ததும் உடனே புதிதாகப் போட்டு விடுவீர்கள்.
தீபாவளி சமயத்தில் நான் கடை கடையாகப் போய், வாசலில் தொங்க விட்டிருக்கும் சட்டைத் துணியைப் பார்த்து எனக்குப் பிடித்தது எது, அது எந்தக் கடையில் தொங்குகிறது என்பதை உங்களிடம் சொல்வேன். அந்தத் துணியை வாங்கி வந்து டெய்லரிடம் கொடுக்கும்படி சொல்வேன். அதற்கு இரண்டு மூன்று நாளாகும். "சீக்கிரமா வாங்கி வாங்க. இல்லாட்டி அந்தத் துணி கடையில் தீர்ந்து போயிடும்' என்று நான் நச்சரிப்பேன். நீங்கள் கோபப்பட மாட்டீர்கள்.
பரீட்சை சமயத்தில், ராத்திரி அம்மா மறந்து போய்த் தூங்கி விட்டால் நீங்கள் டீ போட்டு எடுத்து வந்து எனக்காக ஆற்றிக் கொடுப்பீர்கள். இன்ஜினியரிங் காலேஜில் சீட் கிடைப்பதற்காக ஒரு லட்ச ரூபாய் கஷ்டப்பட்டு கொடுத்தீர்கள். நான் கம்ப்யூட்டர் சயன்ஸ் படிக்க ஆசைப்பட்டேன். மேலும் பத்தாயிரம்தந்தால்தான் அந்த குரூப் தருவோம் என்றார்கள். அதையும் எப்படியோ சமாளித்துக் கொடுத்தீர்கள். இன்றைக்கு நான் நல்ல நிலைமையில் இருப்பது உங்களால் தான் அப்பா !
இப்படிக்கு உங்கள் பிரியமுள்ள..."
"அன்புள்ள அப்பாவிற்கு அநேக நமஸ்காரம். இங்கு நான் மாப்பிள்ளை மாமியார் அனைவரும் சவுக்கியம். இன்றைக்கு உங்க்ள் பிறந்த நாள். என்னை எப்படியெல்லாம் அன்போடும் அக்கரையோடும் வளர்த்தீர்கள் என்பதை நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்.
நான் வீணை கற்றுக் கொண்டேன், ஞாபகம் இருக்கிறதா ? வாசித்து வாசித்து வலதுகை விரல்களில் கோடு விழுந்து எரிச்சலாக எரியும். தினம் தினம் நீங்கள் தேங்காய் எண்ணெயில் பஞ்சைத் தேய்த்துத் தடவி விடுவீர்கள்.
நான் தூங்கும்போது மேலே துணி விலகயிருக்கும். நீங்கள் மெதுவாக, என் தூக்கம் கொடாமல் போர்வையை போர்த்திவிட்டுப் போவீர்கள்.
எனக்காக ஒரு முறை தாவணி வாங்கி வந்தீர்கள். அது ப்ளூ கலர். ஸ்கூல் யுனிபாரமும் ப்ளூ கலர்தான். வேறே கலர் வாங்கியிருக்கக் கூடாதாவென்று நான் அம்மாவிடம் முனகிக் கொண்டிருந்தது உங்களுக்கு கேட்டுவிட்டது. அதற்குள் நான் அதைக் கட்டிக் கொண்டுவிட்டேன். இருந்தாலும் பரவாயில்லை என்று அந்த தாவணியைக் கழற்றித் தரச் சொல்லி, நீட்டாக மடித்துக் கடைக்கு எடுத்துப் போனீர்கள். அதை எடுத்துக்கொண்டு வேறே கலரில் தரச் சொல்லி கேட்டீர்கள். உடுத்திக் கசங்கிப் போன துணியைக் கடைக்காரன் வாங்கிக் கொள்வானா ? மாட்டேன் என்று சொல்லிவிட்டான். நீங்கள் மறுபடி பணம் கொடுத்து, புதிதாக வேறு கலரில் ஒரு தாவணி வாங்கி வந்தீர்கள். ஞாபகம் இருக்கிறதா, அப்பா ?
என் சினேகிதன் எல்லோரும் அப்போது சல்வார் கமீஸ் போட ஆரம்பித்தார்கள் நானும் போட்டுக் கொள்ள ஆசைப்பட்டேன் அம்மா முடியவே முடியாது, தாவணி தான் போட வேண்டுமென்று சொன்னாள். நீங்கள் என்னை ஆதரித்து, சல்வார் கமீஸ் துணி வாங்கித் தந்தீர்கள். தைத்துப் போட்டுக் கொண்டேன். எனக்கு ரொம்ப அழகாயிருக்கிறதென்று என் சிநேகிதிகள் எல்லாரும் சொன்னார்கள்.
என்னை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று எத்தனை பாடுபட்டீர்கள்! பெண் பார்க்கிறேன் பேர்வழி என்று சும்மா சும்மா வந்து கொண்டிருந்தால் எனக்கு என்னவோ போலிருக்கும் என்பதற்காக, எவ்வளவு பேரை வடிகட்டி வீட்டுக்கே வராமல் பண்ணினீர்கள்! மகாலிங்கபுரம் கோயிலில் எனக்காக எழுதி வைத்துவிட்டு, எத்தனை நடை நடந்திருப்பீர்கள்!.
நாலு மாசம் முன்பு நான் அங்கே வந்திருந்த சமயம், மாப்பிள்ளை மதுரைக்குப் பறப்பட்டாரே, நினைவு இருக்கிறதா அப்பா ?
மதுரைக்கு நாலு ஸ்டேஷன் முன்பு ரயில் தடம் புரண்டதென்று டி.வி.யில் நியுஸ் சொன்னதும் எல்லாரும் எப்படிப் பதறிப் போனோம் ? நீங்கள் மதுரையில் இருக்கும் உங்கள் சிநேகிதருக்கு ஃபோன் போட்டு, அந்த இடத்துக்குப் போய் பார்த்து உடனே தகவல் தெரிவிக்கும்படி ராத்திரியோடு ராத்திரியாகச் சொன்னீர்கள். மாப்பிளை பத்திரமாக இருக்கிறார் என்று சேதி வருவதற்குள் என்னைக் காட்டிலும் நீங்கள்தானே அதிகம் தவித்தீகள்!
என் நாத்தனார் புருஷன் வேளச்சேரியில் வீடு கட்ட ஆரம்பித்து, சொஸைட்டியில் போட்ட லோன் அப்ளிகேஷன் லேசில் சாங்ஷன் ஆகாமல் திண்டாடியபோது, அந்த சொஸைட்டியின் மேலதிகாரிக்கு எப்படியோ சிபாரிசு பிடித்து, ஆறு மாதத்துக்கு இழுத்துக் கொண்டு போகக் கூடிய லோனை இரண்டே மாதத்தில் வாங்கித்தந்தீர்களே. அந்த ஒரு காரியத்தில் இந்த வீட்டில் என் மதிப்பும் கவுரவமும் எவ்வளவு கும்மென்று உயர்ந்த்து தெரியுமா ?
இப்படி ஒவ்வொன்றையும் இன்றைக்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். கண்ணில் ஜலம் வருகிறது அப்பா.
இப்படிக்கு உங்கள் அன்புள்ள.. ."
மேற்கண்டவாறு நிஜமாகவே எனக்கு கடிதங்கள் வந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் ? ஊகூம். இயந்திரத்தனமாக இண்டர்நெட்டில் இரண்டு வரி வாழ்த்து. அதிலேயே ஒரு க்ரீட்டிங்ஸ் கார்டு ( என்னுடைய கம்ப்யூட்டரில் அதை வரவழைப்பதற்குள் அடுத்த பிறந்த நாள் வந்துவிடும் போலிருக்கிறது )..
[ நாலு மூலை, 208 பக்கம், ரா.கி.ரங்கராஜன், கிழக்கு பதிப்பகம், விலை 80/= ), பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் சென்னை வருவதற்குள் படித்து முடித்து ஒரு சின்ன் தூக்கம் போடலாம் ]
Comments
Post a Comment