கல்யாணத்திற்கு முன் வாராவாரம் பைக் எடுத்துக்கொண்டு ஒரு திவ்விய தேசம் சென்று வந்துக்கொண்டிருந்தேன். வந்த பிறகு அந்த கோயிலை பற்றி ஒரு சிறு குறிப்பை ஒரு நோட்டு புத்தகத்தில் "சென்ற வாரம் சென்ற இடம்" என்ற தலைப்பில் எழுதியும் வைப்பேன்.
அவ்வாறு எழுதியதில் இரண்டை இங்கு தந்துள்ளேன்.
திருநீர் மலை !
இந்த ஞாயிற்றுகிழமை சினிமாவிற்கு சென்று ஷெரன் ஸ்டோனை(sharon stone) பார்ப்பதற்கு பதில். திருநீர் மலைக்குச் சென்று திருமங்கை ஆழ்வார் வர்ணித்த
"அன்றயர்குலக்கொடியோடு அமாமலர்மங்கையொடுஅன்பளவி அவுணர்
எந்தானும்இரக்கமிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும்பொழில்சூழ்
நன்றயபுனல்நறையூர்திருவாலிகுடந்தை தடம்திகழ்கோவல்நகர்
நின்றான்இருந்தன்கிடந்தான்நடந்தாற்குஇடம் மாமலையாவதுநீர்மலையே."
இந்த நான்கு கோலங்களை கொண்ட நீலவண்ணனை பார்ப்பது என்று முடிவு செய்தேன்!.
திருநீர் மலை சென்னை தாம்பரம் ரயில் பாதையில் பல்லாவரம் ஸ்டேஷனிலிருந்து சுமார் 3 மைல் தூரத்தில் "ponds" தொழிற்சாலை நறுமணம் கமவழ அமைந்த அமைதியான இடம். இந்த மலையை நீர்சூழ்ந்திருந்ததால் ஆறு மாத காலம் திருமங்கை ஆழ்வார் ஊருக்கு வெளியே காத்திருந்ததாகவும் இதனால் இம்மலைக்கு நீர்மலை என்ற பெயர் உண்டானதாகவும் வரலாறு.
300 அடி உயரத்தில் இருக்கும் இம்மலையை சுற்றி பசுமையான புல்வெளிகள், அதன் மேல் தவழ்ந்துவரும் மிகமெல்லிய காற்று - இனிமை
கோயிலுக்கு செல்லும் சாலைகளில் மாட்டுவண்டிகளில் மாட்டுத்தோல் ஏற்றி செல்வது விந்தை.
திருப்பதி
இந்த வாரம் 30ரூ டிக்கேட் வாங்கி 12 மணி நேரம் "க்யூ"வில் நின்று ஒரு செல்வந்தரை சந்திக்க சென்றிருந்தேன்!.
பணக்காரர்கள் லாபத்தில் 10% காணிக்கை செலுத்தவும், மத்தியமர் லட்டு வாங்கவும், ஏழைகள் மொட்டை போடவும், ஆந்திரவா(அ)தமிழ்நாடா என்று அறிந்துக்கொள்ள முடியாத வினோத இடம் - திருப்பதி. இங்கு எல்லாவற்றுக்கும் "க்யூ" வரிசை. கோபுரங்களை பித்தளை (தங்கம் ?) தகடுகளால் உண்மையான வேலைப்பாடுகளை மறைத்திருக்கிறார்கள். திருவள்ளரை,அன்பில் ஆகிய இடங்களில் கோபுரம் இடிந்த நிலையில் அரச மரம் முளைத்திருப்பதை பார்த்திருந்தால் முரண்பாட்டைக் கவனித்திருப்பீர்கள்!.
பெருமாள் சன்னதியிலிருந்து தள்ளப்பட்டு, மலைமேலிருந்து ஜீப்பில் கீழே இறங்கி வரும் பொழுது ,இரவு 1 மணி,மழை,அக்ஸிலேட்டர் உடைந்து போய், காப்பாத்த யாரும் இல்லாமல், நியுட்டிரலில் இறங்கும் பொழுது பொய்கையாழ்வார் பாடிய
"உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமனென்றும் உளன்கண்டாய் உள்ளுவருள்ளத்து-உளன்கண்டாய் வெள்ளத்தினுள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தினுள்ளானென்று ஓர்"
என்ற பசுரம் நினைவுக்கு வந்தது.
Comments
Post a Comment