உடைந்த கையை ஒட்டின கதை
(1943)
எஸ்.வி. ராமகிருஷ்ணன்
என் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. ஜனவரி 1943. யுத்தத்தின் தாக்கம் உக்கிரமாக இருந்த காலம். நான் எண்ணும் எழுத்தும் அரைகுறையாகக் கற்றுக் கொண்டு ஆனால் பள்ளிக் கூடத் தில் சேராமல் சுதந்திரப் பறவையாக இருந்த கடைசிக் காலம். நாள் முழுக்க விளையாட முடியும் என்றிருந்த நேரம். சென்னையில் இருந்து வந்திருந்த, என் வயதை ஒத்த உறவுக்காரப் பெண் சரோஜா வுடன் மும்முரமாக சிங்க விளை யாட்டு விளையாடிக்கொண்டி ருந்தேன். நான்தான் சிங்கம். அவள் தயைகூர்ந்து ஆடாக இருக்க ஒப்புக் கொண்டிருந்தாள். சிங்கமாகிய நான் ஒரு கட்டிலின் மேல் வீற்றிருக்க, சரோஜா கட்டிலின் கீழ் பயந்து பதுங்கினாள்.
சிங்கம் ஒரு கர்ஜனையுடன் கீழே பாய்ந்தது. துரதிர்ஷ்டவசமாகக் கட்டிலிலிருந்து தொங்கிக்கொண்டி ருந்த ஒரு நாடாவில் அதன் ஒரு கால் மாட்டிக்கொள்ளவே, சிம்ம கர்ஜனை ஓலத்தில் முடிந்தது. நான் அழுத அழுகையைக் கேட்டு எல் லோரும் ஓடி வந்தார்கள். என்னை அள்ளி எடுத்துக்கொண்டு மாடியிலி ருந்து கீழே கொண்டு போய் பரி சோதித்தார்கள். கீழே விழுவதும் விழுந்தால் அழுவதும் சகஜமான விஷயங்கள்தானே, இது என்ன கொஞ்சம் ஜாஸ்தியாகவே கவனிக் கிறார்கள் என்று எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. என் மரியாதை போய்விடக் கூடாதே என்பதற்காகத் தொடர்ந்து ஓலமிட்டேன்.
“எலும்பு உடைந்துவிட்டாற் போலிருக்கிறது” என்று அப்பா சொன்னது கேட்டது. அதற்கெல் லாம் எனக்கு அர்த்தம் தெரியாத தால் சிராய்ப்பு மாதிரி ஏதோ இன்னொரு காயம் என்று நினைத் துக்கொண்டேன். என்னைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு ‘லேடியாஸ்பத்திரி’ என்று பொது மக்களால் அழைக்கப்பட்ட லேடி டாக்டர் மேரி வர்க்கியிடம் போனார்கள். ‘வர்க்கியம்மா’ எங்கள் குடும்ப டாக்டர் மட்டுமல்ல, எங் கள் வீட்டில் எல்லாப் பிரசவங் களையும் பார்த்து என்னையும் என் சகோதர சகோதரிகளையும் இவ் வுலகிற்கு அறிமுகம் பண்ணி வைத்தவரும் ஆவார். அப்போது பார்த்து பக்கத்து கிராமம் ஒன்றில் பிரசவம் பார்க்க அவர் போயிருந் தார். உடனே பெரியாஸ்பத்திரி என்று பெயர் பெற்ற கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். அங்கே ஒரு ‘ஆம்பிள்ளை டாக்டரும்’ ஒரு லேடி டாக்டரும் இருந்தனர். முதலாமவர் என்னைப் பரி சோதித்துவிட்டுக் கோயமுத்தூருக்கு எடுத்துப் போகும்படி அறிவுரை கொடுத்தார். அப்புறம் அம்மா சொல்லித் தெரிந்தது : என் இடது முழங்கை எலும்பு ஒடிந்துவிட்ட தாம். மூட்டில் பார்த்து முறிந்து வைத்ததால் எக்ஸ்ரே எடுத்து ரிப்பேர் பண்ண வேண்டிய கேஸாம். தாராபுரம் ‘பெரியாஸ்பத் திரி’யில் எக்ஸ்ரே கிடையாததால் கோயமுத்தூருக்குத்தான் போக வேண்டுமாம்.
எலும்பு முறிந்தால் மிகவும் வலி இருக்குமென்று பின்னால் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் நிஜமா கவே அன்று தொடர்ந்து வலி ஏதும் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஒருவேளை எனக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், கோயமுத்தூருக்கு, அதுவும் காரில், போகும் வாய்ப்பும் கொடுத்த சந்தோஷத்தில் வலி அமுங்கிப் போயிருக்கக்கூடும். அப்போது கார் என்பது மிக அபூர்வம். எங்கள் வீட்டிலும் கார் கிடையாது. அப்பா அவசரமாகக் கச்சேரிக்கு (கோர்ட்டு) போய் வேலைகளை முடித்துக் கொண்டு சீக்கிரமே திரும்பினார். வழக்குகளுக்கு ‘வாய்தா’ வாங்கி இருக்க வேண்டும். டாக்ஸிக்குச் சொல்லியனுப்பினார்கள். தாரா புரத்தில் அந்த நாளில் டாக்ஸி என்றால் கள்ள டாக்ஸிதான். அதா வது பிரைவேட் கார் என்று பதிவு செய்துகொண்டு கறுப்பு போர்டில் வெள்ளை எண்கள் எழுதியிருப் பார்கள். ஆனாலும் வாடகைக்குத் தான் ஓடும். இந்தக் கார்களின் முக்கியமான உபயோகம் கல்யாண ஊர்வலங்களே. அதனாலோ என் னமோ அவை எல்லாமே கூரையை சுலபமாகத் திறக்கக்கூடிய ‘டூரர் டாப்’ வண்டிகளாகத்தான் இருந் தன. வெயிலிலும் மழையிலும் இருந்து பாதுகாப்பு கொடுப்பது கேன்வாஸ் துணிதான். (21 வருடங் கள் கழித்து என் கல்யாண ஊர் வலம் நடந்தபோது கூட இவை இருந்தன. பின்னால் காணாமற் போய்விட்டன.)
கிளம்புவதற்குள் ஒரு சிக்கல். கோவை வரை போய்த் திரும்பி வர வேண்டிய பெட்ரோல் இல்லை யாம். அப்போது உலக யுத்தத்தின் காலமாகையால் பெட்ரோலுக்குப் பயங்கரத் தட்டுப்பாடு நிலவியது. ரேஷன் என்று கொஞ்சம் கொடுப் பார்கள். கூடுதலாக வேண்டுமா னால் குதிரைக் கொம்புதான். எப்ப டியாவது ‘பிளாக் மார்க்கெட்டில்’ வாங்கிக்கொண்டு ஒரே மணியில் வந்துவிடுவதாகச் சொல்லி தாராள மாகவே பணம் வாங்கிக்கொண்டு போன டாக்ஸி டிரைவர் மூன்று மணி நேரம் ஆகியும் காணாமற் போக என் அம்மாவும் அப்பாவும் தவித்துப்போனார்கள். கடைசியில் கொஞ்சம் பெட்ரோலும் கொஞ்சம் சீமெண்ணையும் (சீமை எண்ணை -வெள்ளைக்காரன் கொண்டுவந்த எண்ணை; அதாவது கிரஸின் ஆயில்) கலந்து குடித்துவிட்டு ஒரு ஹைதர் காலத்து கார் வந்து நின்றது. இதை வைத்துக்கொண்டு கோய முத்தூர் போய்ச் சேர முடியுமா என்று அம்மாவுக்குக் கவலை. ஆனா லும் ஓட்டையோ உடைசலோ எப்படியோ ஒழுங்காகப் போய்ச் சேர்ந்துவிட்டோம்.
கோவையில் ராமராவ், லஷ்மண ராவ் என்று இரண்டு டாக்டர்கள். இருவரும் சகோதரர்கள். இதற் கென்று ஆஸ்பத்திரி கட்டி வைத்து ஜில்லாவில் யாருக்காவது எலும்பு முறியாதா என்று காத்துக்கொண்டி ருந்தார்கள். அன்று நான் கிடைத் தேன். ராமராவ் ரொம்ப நல்லவர். தம்பி கொஞ்சம் முசுடு. கோபக் காரர் என்று சொன்னார்கள். நல்ல வேளையாக ராமராவ்தான் என்னி டம் வந்தார். அன்பாகப் பேசினார். எண்ணத் தெரியுமா என்று கேட் டார். தெரியும் என்று பெருமை யாகச் சொன்னேன் எத்தனை வரை எண்ணுவாய் என்றார். தைரியமாக “நூறு” என்று சொன்ன பிறகு மனதுக்குள் கொஞ்சம் சந்தேகம் எழுந்து உறுத்தியது. ஆனால் என் கவலைக்கு அவசியம் இருக்க வில்லை. அவர் குளோரோபாரம் (அந்தக் காலத்தைய மயக்க மருந்து) கொடுப்பதற்காகத்தான் கேட்டிருக் கிறார். பெரியவர்களைக்கூட அப்படித்தான் எண்ணச் சொல்லி மயக்கம் கொடுப்பார்கள் என்று பின்னால் தெரிந்தது. பத்தொன்பது எண்ணிய பிறகு நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது. அதனால் லக்ஷ்மணராவின் முன்கோபம் (அவர்தான் எலும்பை இணைத்தா ராம்) என்னைப் பாதித்திருக்க முடியாது.
நான் விழித்தபோது என் இடது கையை மடக்கி பிளாஸ்டர் போட்டிருந்தது. இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் தாராபுரம் திரும்ப முடி யாது. அடிக்கடி டாக்டரிடம் கொண்டுவந்து காட்ட வேண்டும் என்பதால் இரண்டு வாரம் போல் நானும் என் அம்மாவும் கோவை யிலேயே எங்கள் மாமா வீட்டில் தங்கினோம். மாமா என்றாலும் என் அம்மாவின் கூடப்பிறந்த சகோ தரர் அல்ல. பெரியப்பாவின் பிள்ளை, ஒன்றுவிட்ட சகோதரர். இப்போது எல்லாம் சொந்த அண்ணன் வீட்டில் போய்த் தங்குவதற்கே யோசனை செய்கிறார் கள். அந்த நாளில் சொந்த பந்தங்கள் எல்லாம் இன்னும் நெருக்கமாக இருந்தன. ஒன்று விட்டாலும் சரி, இரண்டு விட்டாலும்கூட சரியே, தைரியமாக உரிமையோடு போய் ‘டேரா’ போடலாம்.
மாமா வீடு இருந்தது இப்போது ராம் நகர் என்றழைக்கப்படும் அன்றைய ‘பிராமின் எக்ஸ்டென் ஷன்.’ சுருக்கமாக எக்ஸ்டென்ஷன் என்று சொல்வார்கள். கோவையில் அந்தப் பகுதி அந்தக் காலத்தில் மிக அழகாகவும் அமைதியாகவும் இருந்தது. பிளான் போட்டு அமைத்த ஒழுங்கான, விசாலமான வீதிகள், மரங்கள் அடர்ந்த காம்ப வுண்டு கொண்ட தனித்தனி வீடு கள். மாமா வீட்டில் ஒரு மயில்கூட இருந்தது. ஆனால் அது தோகையை விரித்து ஆடாதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதற்கு அம்மா சொன்ன காரணம்: அது பெண் மயிலாம், ஆண் மயில்கள் தான் டான்ஸ் ஆடுமாம்.
கை சீராக முன்னேற்றம் அடைந் ததால் கொஞ்ச காலத்துக்குப் பிறகு பிளாஸ்டரை உடைத்து ஒரு பெரிய துணிக்கட்டு போட்டார்கள். இன்னும் சில நாளில் ஊருக்குப் போக அனுமதித்தார்கள். இப்போது மறுபடி ஒரு கார் சவாரி. ஆனால் இம்முறை அது (என் பெற்றோருக்கு) ஒரு பதட்டமில்லாத, சமாதான மான யாத்திரையாக இருந்தது. சில வாரங்களுக்குப் பின் மீண்டும் ஒரு முறை வந்து காட்ட வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்கள்.
அடுத்த கோவை விஜயம்தான் கடைசி விசிட் கூட. கை முழு குணமாகிவிட்டது. என்று சொல்லிக் கட்டை எடுத்துவிட்டார்கள். பிறகு ஊருக்குப் போய், ஒட்டின கைக்கு மறுபடியும் பலம் வருவதற்காக தினசரி ஒரு சின்ன பயிற்சி. அதா வது ஒரு டிபன் பாக்ஸில் மணலை நிரப்பி என்னிடம் கொடுப்பார்கள். எங்கள் வீட்டுக் காம்பவுண்டிலேயே நான் முறிந்து ஒட்டின என் இடது கையால் அதைத் தூக்கிக்கொண்டு மேலும் கீழுமாகப் பத்து தடவை நடக்க வேண்டியது. கைக்கு இன்னும் முழு பலம் வராததால் சில சமயம் அது கொஞ்சம் கஷ்ட மாக இருந்தது. அதற்கு நானே ஒரு வழி கண்டுபிடித்தேன். கஷ்ட மாக இருக்கும்போதெல்லாம் டிபன் பாக்ஸை வலது கைக்கு மாற்றி நடந்துகொண்டிருந்தேன். பத்து தடவை என்னவோ கரெக்டாக நடந்துவிடுவேன். ஒரு நாள் அம்மா அதைக் கண்டுபிடித்துக் கொஞ்ச லாகக் கடிந்துகொண்டாள். அப் போதுதான் எனக்கு அந்தப் பயிற் சியே ஒடிந்த கைக்குத்தானே என்பது உறைத்தது!
சீக்கிரம் எலும்பு நன்றாகப் பிடித்துக்கொள்ளவும் பலப்படு வதற்கும் இன்னும் ஒரு உபாயமும் கையாளப்பட்டது. இது நாட்டு வைத்திய முறை. ‘கொசத்தி’ என் றழைக்கப்பட்ட குயவனின் மனை வியை அழைத்து என் கைக்கு மயி லெண்ணை தடவி நீவி விடச் சொல்லுவார்கள். அதற்கு ஏன் மயில் எண்ணை என்று பெயர், அது மயிலில் இருந்து எடுத்ததா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அதன் மணம் என்னமோ சுகந்தமாக இருக்கவில்லையே என்பது மட்டும் நினைவிருக்கிறது.
எப்படியோ கை சீக்கிரத்திலேயே குணமாகிவிட்டது. ஐந்தே மாதங் களில் நான் பள்ளியில் சேர்ந்த போது என் இடது கைக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. எல்லாம் சுபம்!
நன்றி : உயிர்மை(Oct 2005 )
[...] உடைந்த கையை ஒட்டின கதை October 20, 2005 By Desikan Leave a Comment [...]
ReplyDelete