Skip to main content

ஜோ ஜோ - தீபாவளி

[%image(20051026-jothika_7.jpg|200|149|Jothika_7)%]

நேற்று காலையிலிருந்து பெங்களூரில் 'ஜோ ஜோ'ன்னு நல்ல மழை. சென்னைக்கு போகும் பல ரயில்கள் ரத்தாகியுள்ளது என்று NDTVவில் சொன்னார்கள். தீபாவளிக்கு சென்னைக்கு போக முடியுமா என்று தெரியவில்லை. ஆபிஸிலிருந்து வீட்டுக்கு போவதே கஷ்டமாகயிருக்கிறது. பார்க்கலாம்.


 


 



தீபாவளி என்று சொன்னால் நினைவிற்கு வருவது, பட்டாசு, புது துணி மற்றும் திபாவளி ரிலீஸ் படங்கள். ஆனால் இன்று ?


[%image(20051026-jothika_1.jpg|172|216|Jothika_1)%]

தீபாவளி திருநாள் நாயக்கர் காலத்தில்தான் தமிழகத்தில் தொடங்கி இருக்கும் என்று படித்த ஞாபகம். நான் ஸ்கூல் படித்த போது இருந்த தீபாவளி வேறு, இன்று நான் பார்க்கும் தீபாவளி வேறு.


போன வாரம் சென்னைக்கு போன போது தி.நகரில் எப்போதும் போல் இந்த வருடமும் மக்கள் கூட்டம். ஒரு மாறுதலுக்கு இந்த முறை போலிஸ் போக்குவரத்தை அருமையாக கட்டுப்படுத்தியிருந்தார்கள். பனகல் பார்க் அருகில் இரண்டு புதிய கடைகள் வந்திருக்கிறது - சரவணா ஸ்டோர்ஸ் 'பிரமாண்டமாய்' மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கலெக்ஷன்ஸ். இந்த கடைகளில் நிஜமான 'தள்ளு'படியை காணமுடிந்தது.


கூட்டத்தை பார்த்தாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. இந்த ஜோதியில் கலக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில் "வேடிக்கை பார்க்காம இந்த தூண் பக்கத்தில் பத்திரமா இந்த பையை பார்த்துக்கோங்க நான் அஞ்சு நிமிஷத்தில வந்திருவேன்" என்று என் மனைவி உள்ளே போனாள். இது எவ்வளவு பெரிய பொய் என்று எலோருக்கும் தெரியும். என் அதிர்ஷ்டம் ஒரு புண்ணியவான் எழுந்துப்போக எனக்கு உக்கார சீட் கிடைத்தது. நான் கல்கியின் சிவகாமி சபதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.


[%image(20051026-jothika_2.jpg|172|216|Jothika_2)%]

ஒரு குழந்தை ஒரு பெண்மணியை "அம்மா, வா" என்று கூப்பிட்டது. அந்த பெண்மணி கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றாள். எனக்கு 'பக்' என்றது. திரும்பவும் "அம்மா வா" என்றது. இப்போது வேறு ஒரு பெண்மணி.


பிறகு தான் தான் தெரிந்தது அந்த குழந்தை போகிற வருகிற எல்லா புடவை கட்டின பெண்களையும் 'அம்மா வா' என்று கூப்பிடுகிறது என்று. அந்த குழந்தையை பார்க்க பாவமாக இருந்தது. என்னிடத்தில் இருந்த ஒரு பிஸ்கேட் பாக்கெட்டை எடுத்து கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சாபிப்பிட தொடங்கிற்று. சாப்பிட்டு முடித்துவிட்டு, மறுமடியும் 'அம்மா வா'. பக்கத்தில் இருந்தவர் "பாவம் சார், ரொம்ப நேரமா குழந்தை அம்மாவை கேட்கிறது உள்ளே கூட்டிண்டு போங்க" என்றார். பிஸ்கேட் பாக்கெட் கொடுத்ததனால் என்னை அந்த குழந்தைக்கு அப்பா என்று நினைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். அப்போது அந்த குழந்தை என்னிடத்தில் வந்து நான்கு விரலை மடக்கி ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டியது. .


நான் 'ஒன்' என்றேன்.


"அதுக்கு போகவா?" என்றது.


"சரி, என்றவுடன் அங்கேயே .."


[%image(20051026-jothika_3.jpg|172|216|Jothika_3)%]

அந்த குழந்தை இரண்டு விரலையும் நீட்டுவதற்குள் " 'இந்த கலரா'ன்னு அட்வர்டைஸ் பண்றா, ஆனால் நான் கேட்ட கலர் இல்லவேயில்லை, அடுத்த கடைக்கு போகலாம் வாங்க" நல்லவேளை சிவகாமியின் சபதத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறது.


நான் திருச்சியில் இருந்த போது. தீபாவளி என்றால் எங்கள் வீட்டு முன் யாராவது வந்து "தீபாவளி இனாம்" கேட்பார்கள். இந்த பழக்கம் நாயக்கர் காலத்தில் தொடங்கியதா என்று தெரியாது. பாட்டி கதவை திறந்து "உங்களை எல்லாம் நான் பார்த்ததே இல்லையேபா"


"பாட்டி, எங்களை பார்க்கவே முடியாது, ஏன்னா நாங்கள் வருஷா வருஷம் தீபாவளிக்கு இனாம் வாங்க மட்டும் தான் வருவோம்!. பல இடத்துக்கு போவணும் சீக்கிரம் கொடுங்க பாட்டி"


"சரி, உன் கண் ஏன் சிவந்திருக்கு ராத்திரி சரியா தூங்கலையா ?"


போதைக் கண்ணுக்கும், தூங்காத கண்ணுக்கும் பாட்டிக்கு வித்தியாசம் தெரியாது.


[%image(20051026-jothika_4.jpg|172|216|Jothika_4)%]

இப்படி டெலிபோன், தபால், மின்சாரம், குழாய் ரிப்பேர், எதிர் விட்டில் பால் கறக்கும் கோனார், பூக்காரி, நாதஸ்வரத்தில் "மல்லிகை முல்லை.." வாசிக்கும் கோஷ்டி..


அதேபோல் தீபாவளி என்றால் என் நண்பன் பாலக்கரை ஆறுமுகம் ஹோட்டல் சென்று வான்கோழி பிரியாணி சாப்பிட்டுவிட்டு வந்து தான் பட்டாசு, புது துணி எல்லாம். கட்டாயம் வானொலி ( தமிழில் ரேடியோ ) "உன்னை கண்டு நான் ஆட" என்ற பாடல் வரும். பிஜிலி வெடி, கொட்டாங் குச்சியில் யானை வெடி, ராக்கேட்டை படுக்க வைத்து விடுவது...  மற்றொன்று தீபாவளி அன்று அட்லீஸ்ட் ஒரு படமாவது பார்க்க வேண்டும். சில சமயம் இரண்டு. "மச்சி நாளைக்கு தலைவர் படம் ரீலிஸ்" என்ற உரையாடல்கள்.


தீபாவளி அன்று பக்கத்திவீட்டு மாமா எங்காத்துக்கு உள்ளே வந்து நான்கு மணிக்கெல்லாம் என்னை எழுப்பி "என்னடா ? கங்கா ஸ்நானம் ஆச்சா?" என்பார். அவருக்கு அன்று அது ஒரு கடமை. பார்க்கும் எல்லோரிடமும் இதை கேட்பார். போன் அடித்தால் அதே "கங்கா ஸ்நானம் ஆச்சா" விசாரிப்புகள்...


[%image(20051026-jothika_5.jpg|172|216|Jothika_5)%]

என் அப்பா எல்லா தீபாவளி மலர்களையும் வாங்கி விடுவார். ஆனந்த விகடன் கொஞ்சம் சைஸ் சின்னதாக இருக்கும். கல்கி ஒரு மாதத்து நியூஸ் பேப்பர் எல்லாம் பைண்ட் செய்தால் எப்படியிருக்குமோ அந்த சைஸில் இருக்கும். எனக்கு ஆனந்த விகடனில் பின் அட்டை , மற்றும் உள்ளே இருக்கும் தலை தீபாவளி, மைசூர் பாக்கில் மண்டை உடையும் ஜோக்ஸ்.....


"ஏங்க...ஏங்க காஞ்சிபுரம், தர்மாவரம், பனாரஸ் இந்த ஊரெல்லாம் நெனச்சா உங்களுக்கு என்ன ஞாபகம் வருது"


"திருப்பதி, திருச்செந்தூர், பழனி ஞாபகம் வருது"


போன்ற ஜோக்ஸ் எல்லாம் இப்போது கிடையாது.


தீபாவளி ஸ்வீட் எல்லோர் விட்டிலும் ஒரு வாரத்திற்கு முன்பே பண்ண ஆரம்பித்துவிடுவார்கள். அதில் நிச்சயம் தீபாவளி லேகியம் இருக்கும்(தீபாவளி மருந்து என்றும் பாடம்). பக்கத்து வீடு, எதிர்த்த வீடு, அடுத்த தெரு என்று எல்லோரும் வீட்டிலிருந்தும் தீபாவளி பக்ஷணம் வரும். அதே போல் நானும் எங்க வீட்டு பக்ஷணத்தை அவர்கள் வீடுகளுக்கு கொண்டு போய் கொடுக்கணும். இன்று கிருஷ்ணா ஸ்வீட், அடையார் ஆனந்த பவன், கிரண்ட் ஸ்னெக்ஸ் என்று மாறிவிட்டோம். "தீபாவளி பக்ஷணமா ? நோ வே, ஆர் யூ கிரேசி ?"


இப்போது தீபாவளி "இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக" காலை 4 மணிக்கு தொடங்கி இரவு 12 மணிக்கு முடிகிறது. நடிகைகளின் அசட்டு பேட்டி, புது பட பாடல்கள், பட்டிமன்றம் என்பது தான் இப்போதைய தீபாவளி மெனு. இந்த சானலை பார்க்கவா அதை பார்க்கவா என்ற நிலையில் நமக்கு நேரம் சரியாக இருக்கிறது.


[%image(20051026-jothika_6.jpg|180|157|Jothika_6)%]

"போனை எடுத்து கீழே வை, நல்ல சீன் பார்க்கிறப்ப எவனாவது உயிரை எடுப்பான்"


"சீக்கிரம் பெட் ரூமில் இன்னொரு டிவி வாங்கனும் எந்த் பிரோகிரமும் சரியா பார்க்க முடியர்தில்லை" என்று பேசிக்கொள்ளும் நாம் வாழ்கை, உறவுகள், நட்பு என்று எல்லாவற்றையும் 29  இன்ச்சில் (டிவியில்) அடக்கிவிட்டோம்.


இன்னும் கொஞ்ச நாளில் "தீபாவளிக்கு நாங்க எல்லாம் வாங்கிவிட்டோம் அப்ப நீங்க ?" என்று டிவியில் விளம்பரத்தில் காலி பையை தூக்கி காண்பிக்கும் குடும்பத்தை மட்டும் தான் நாம் பார்க்க போகிறோம்.


பழசை எல்லாம் யோசித்தால் எதோ 'கருப்பு-வெள்ளை' திரைப்படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சி மாதிரி இருக்கிறது.


எல்லோருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.



[ பிகு1: "ஜோ ஜோ"ன்னு மழை அதான் ஜோதிகா படங்கள்.
  பிகு2: எவ்வளவு நாள் தான் குஷ்பு பற்றியே படித்துக்கொண்டிருப்பது, ஒரு மாறுதலுக்கு ஜோதிகா இருக்கட்டுமே என்று ஹிஹி!]

[படங்கள் உதவி: RMKV]



 


 


 



 

Comments

Post a Comment