Skip to main content

மதுரை திவ்வியதேசங்கள் மூன்று

நவதிருப்பதிக்கு அடுத்த நாள் மதுரையில் இருக்கும் மூன்று திவ்விய தேசங்களுக்கு செல்வதாக திட்டம். முன்னாள் இரவு சாப்பிட்ட மதுரை பரோட்டாவின் உதவியால் காலை சீக்கிரம் எழ முடிந்தது. மதுரையிலிருந்து 21 கீமீ தூரத்தில் இருக்கும் அழகர் கோயிலுக்கு புறப்பட்டோம்.



[%image(20051206-small_azhgar_kovil_front_vi.jpg|250|172|அழகர் கோயில் முகப்பு தோற்றம்)%]

இக்கோயிலுக்கு மற்றொரு அருமையான பெயர் இருக்கிறது - திருமாலிருஞ்சோலை. கிழக்கு மேற்காக 10 மையில் தூரம் 1000 அடி உயரமும் உள்ள இந்த மலை சுனைகளும், அரிய மூலிகைகளைகளும் நிறைந்ததாக திகழ்கிறது என்று கூட வந்தவர் சொன்னார். பெயருக்கு ஏற்றவாறு எழிலார்ந்த பசுமையான மலையடிவாரத்தில் அமைந்த அமைதியான இடம். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,நம்மாழ்வார் என்று 6 ஆழ்வார்கள் 123 பாடல்களில் பாடப் பெற்ற இடம். பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலும் குறிப்பு இருக்கிறது.


மகாவிஷ்ணுவிற்கு இராம, கிருஷ்ண அவர்தாரங்களுக்கு அழகர் என்னும் சொல் சம்ஸ்கிருதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெருமாளுக்கு கூடலழகர், கள்ளழகர் என்று திருநாமங்கள் உண்டு. ஆண்டாள் - வாயழகர், குழலழகர், கொப்பூழில் எழுகமலப்பூவழகர் என்று வர்ணித்துள்ளார். அச்சோஓரழகியவர் என்கிறார் திருமங்கையாழ்வார். சோலைமலைக்கரசர் என்று திவ்வியபிரபந்தம் உற்சவர் சுந்தரராஜ பெருமாளை வர்ணிக்கிறது. இந்த கோயிலில் இருக்கும் உற்சவர் முழுவதும் தங்கத்தாலானது என்று நம்பப்படுகிறது.


நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?


என்று ஆண்டாள் பாடினாள். இதை அறிந்த ஸ்ரீ இராமனுஜர், ஆண்டாளின் விருப்பம் போல் திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தாடா அக்கார அடிசலும், வெண்ணையும் சமர்பித்தார். பின்பு ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை அடி பணிந்து நின்றார். தான் பாடியதை செயல் படுத்திய இராமனுஜரின் செயலுக்கு உகந்து “வாரும் என் அண்ணலே” என்றார். இராமனுஜர் பல நூற்றாண்டு இளையவர் என்றாலும் அவர் ஆண்டாளுக்கு அண்ணனார்.
மேலும் விரிவான விளக்கத்திற்கு இங்கே பார்க்கவும்.


ஆண்டாள் 'நூறு' என்று ஆரம்பிக்கும் பாடல் பாடியது போல் திருமங்கையாழ்வார் 'ஆயிரம்' என்று பாடியுள்ளார்.


ஆயிரம் தோள் பரப்பி முடியாயிரம் மின்னிலக
ஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை
ஆயிரம் யாறுகளுஞ் சுனைகள் பலவாயிரம்
ஆயிரம் பூம்பொழிலுடைய மாலிருஞ்சோலையதே


பெரியாழ்வார்


...கூர்வேல் கோனெடு
மாறன் தென்கூடற் கோன்
தென்னன் கொண்டாடிய தென்
திருமாலிருஞ்சோலையே" என்கிறார். பாண்டிய மன்னர்கள் இந்த கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது.


கள்ளழகர் சித்திரை மாதத்தில் ஆற்றில் இறங்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புராதன ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும், சைவ ஸ்ரீவைஷ்ணவ பேதம் நீங்கி ஒற்றுமை வளர்க்க இப்படியொரு விழாவை உண்டாக்கினார்கள் என்று கருதலாம்.


[%image(20051206-small_azhagar_kovil_mantapa.jpg|200|150|அழக்ர் கோயில் மண்டபம்)%]

கோயிலுக்கு வெளியில் பல மண்டபங்கள் பாழடைந்த நிலையிலும் அழகாக இருக்கிறது. படத்தில் உள்ள மண்டபம் என்னை மிகவும் கவர்ந்தது. என்ன மண்டபம் என்று தெரியவில்லை. யாருக்காவது தெரியுமா ?


கோயிலில் உள்ள கோபுரத்தில் பல அழகிய சிற்பங்கள் இருக்கிறது.சில சிற்பங்கள் வயது வந்தவர்களுக்கு மட்டும். அதில் ஒரு சிற்பம் குழந்தை பிறப்பதை சித்தரிக்கிறது. கோயில் உள் மண்டபங்களில் பாண்டியர்கள், நாயக்கர்கள் கைவண்னத்தை காணலாம்.  


[%image(20051206-small_azhagar_kovil_monkeys.jpg|250|188|குரங்குகள்)%]

இந்த கோயிலில் பெரிய வடை போன்ற ஒன்று பிரசாதமாக விற்கிறார்கள். வாங்கி பிழிந்தால் அரை லிட்டர் எண்ணை இலவசம். நிச்சயமாக G-for-H கிடையாது. இந்த கோயிலின் மற்றொரு விசேஷம் குரங்குகள். திரும்பிய இடத்தில் எல்லாம் பார்க்கலாம். காமிரா எடுத்துச் சென்றால் கவனமாக இருக்க வேண்டும், இல்லை குரங்குகள் பிடிங்கி உங்களை படம்பிடிக்கும். நீங்கள் கார் அல்லது வேனில் சென்றால், கோயிலுக்கு போகும் போது அதில் யாரையாவது விட்டுசெல்ல வேண்டும். பல குரங்குகள் ஸ்கூரு டிரைவருடன்(screw driver) அலைகிறது.


 


கள்ளழகருக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு திருமோகூருக்கு கிளம்பினோம்.


நாமடைந்தால் நல்வரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிக் சென்றடந்தால்
காமரூபங் கொண்டு எழுத்தளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்றென்னுமின் ஏத்துமின் நமர்காள்


என்று நம்மாழ்வார் பாடபெற்ற இத்தலம் மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் யாணை மலைக்கு பக்கத்தில் உள்ளது. திருமங்கையாழ்வாரும் இந்த இடத்தை பாடியுள்ளார். மிகவும் அழகான, அமைதியான கிராமத்தில் நெல் வயல்களுடே காணப்படும் இத்தலம் எல்லோரையும் மோகிக்கும் என்பதுல் ஐயமில்லை.
அகம்(251) பாடலில் இந்த ஊர்பற்றி சங்ககாலப் புலவர் மாமூலனார் பாடியுள்ளார்.


... வேல் கொடித்
துனைக்காலன்ன புனைதேர் கோசர்
தொன் மூதலத்தரும் பனைப் பொறியில்
இன்நிசை முரசங் கடிபிகுத் திரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியாமைதிற் பகைதலை வந்த
மாகெழுதானை வம்ப மோரியர்


நந்தர்கள் மீது வெற்றி கொண்ட மெளரியர்கள் படையெடுப்பவர்களாக விளங்கி பெரியதோர் பேரரசை நிறுவினர். படையெடுத்து முன்னேறினர். மோகூரை முறியடித்தனர். பொதியமலைவரை சென்றனர் என்கிறது பாடல்.
இந்த கோயில் பக்கத்தில் அழகிய குளத்தில் சைகிள், வண்டிகளை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.


[%image(20051206-small_thirumookur_leaves.jpg|250|188|முடிச்சு போட்ட தென்னை ஓலை)%]

மூலவர் காளமேகப் பெருமாள்(நீருண்ட கருமேகம் போன்ற திருமேனியுடன் கருணை மழைபொழிவதால்) நின்ற திருக்கோலம். உற்சவர் பெயர் ஆப்தன். இங்குள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதி சிறப்புடையது. கோயிலில் தென்னை ஓலைகளை முடிச்சுப்போட்டிருக்கிறார்கள். ஒரு அறிவிப்பு முடிச்சு போட கூடாது என்று இருக்கிறது!. இங்கேயும் ஒரு பாழடைந்த மண்டபம் இருக்கிறது. நிச்சயம் ராமர் கோயிலாக இருந்திருக்க கூடும் என்று நினைக்கிறேன். அருகில் அனுமார் சந்நதி இருக்கிறது.


அடுத்ததாக கூடல் அழகர் கோயிலுக்கு சென்றோம்.


 


[%image(20051207-koodal_periyazhavar.jpg|250|165|கூடலழகர் கோவில் - பல்லாண்டு விளக்கப்படம்)%]

பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்ததை சுருக்கமாக கீழே தந்துள்ளேன்.
'வல்லபதேவன்' என்ற அரசன் மதுரையை தலைநகராக கொண்ட பாண்டியநாட்டை ஆட்சி புரிந்து வந்தான். ஒரு நாள் இரவில் அவன் நகர்வலம் வரும்போது ஒரு வீட்டுத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி யாரென்று விசாரித்தான். அதற்கு அவன் 'நான் திவ்யதேச யாத்திரை செய்து விட்டு வடநாடெங்கிலும் சுற்றி, கங்கை நீராடி வரும் அந்தணர்' என்றான். அதுகேட்ட அரசன் அவனிடம் 'உனக்கு தெரிந்த நீதி ஒன்றைச் சொல்லு' என்றான். அந்தணனும், 'மழைக்காலத்துக்கு வேண்டியதை வெயில் காலத்திலும், இரவுக்கு வேண்டியதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும், மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் தேடுக' என்னும் பொருளுடைய சுலோகத்தைச் சொன்னார். இது வல்லபதேவனின் சிந்தனையை கிளறியது. கடைசியக சொன்ன மறுமையை பற்றிய கருத்துக்கு 'அதன் பொருட்டு இதுவரையிலும் நாம் என்ன முயற்சி செய்தோம்?' என்று இரவு முழுவதும் தூங்காமல் சிந்தித்தான். மறுநாள் அரசவையில் உள்ள தன் குரு செல்வநம்பியை அழைத்து 'மறுமையில் பேரின்பம் பெறுவதற்கு என்னவழி?' என்று வினவினான். உடனே நாடெங்கிலும் உள்ள அறிஞர்களைக் கூட்டி 'பரதத்துவநிர்ணயம்' ( பரம்பொருள் பற்றிய முடிவு ) செய்தால் இவ்வினாவுக்கு எளிதில் விடை கிடைக்கும் என்று யோசனை தந்தார் செல்லநம்பி. அவரது அறிவுரையை ஏற்ற பாண்டியனும் பரதத்துவ நிர்ணயம் செய்வார்க்கு பொற்கிழியளிப்பதாக பறைசாற்றிடச் செய்தான். விஷ்ணுசித்தர் 'மால்நெறியே மேல் ஒருநெறியும் இல்லா மெய்ந்நெறி' என்றும் அந்நெறியில் நிற்பவரே வீடுபேற்றிற்கு உரியவர் என்றும் ஸ்ரீமந்நாராயணனே பிரபஞ்ச காரணமான பரமாத்மாவென்றும் அவனை சரணடைவதே சகல விருப்பங்களையும் அடையும் உபாயம் என்றும் அவனே அறுமுதலான உறுதிப்பொருள்களை அளிக்கவல்லவன் என்று பரதத்துவத்தை பாண்டியன் சபையில் நிலைநாட்டினார். அப்போது கம்பத்தில் கட்டப்படிருந்த பொற்கிழி தானாக அவர் முன்னே தாழ வளைந்தது. வல்லபதேவன் மகிழ்ந்து 'பட்டபிரான்' என்ற பட்டம் சூட்டி யானைமேல் ஏற்றி நகர்வலம் வரசெய்தான். இந்த காட்சியை பெருமாள் பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து விஷ்ணுசித்தருக்கு காட்சி தந்தார். அதை கண்ட பெரியாழ்வார் உன் அழகுக்கு கண்பட்டுவிடாதோ என்று நினைத்து எம்பெருமானை பல்லாண்டு வாழ்க என்று பாடிய இடம் இந்த திருக்கூடல்.


[%image(20051206-small_koodal_azhagar_vimana.jpg|250|271|)%]

மூன்று நதிகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும், இரண்டு நதிகள் கூடும் இடத்தை கூடலூர் என்றும், அதே போல் 'கிருதமாலா' என்னும் நதி பூமாலை போன்று இரு பிரிவாய்ப் பிரிந்து மதுரையை அரண்போலச் சுற்றி மீண்டும் ஒன்று சேர்வதால் இவ்வூர் கூடல் நகராயிற்று. இந்த கோயிலில் இருக்கும் அஷ்டாங்க விமானம் ( அஷ்ட அங்கம் ) மூன்று தளங்களும் ஐந்து சிகரங்களும் கொண்டு மிக அழகாக இருக்கிறது. மேல் தளத்திற்கு சென்று அங்குள்ள பெருமாளை பார்த்தோம். இதே போல் திருக்கோட்டியூரிலும் பார்த்திருக்கிறேன்.


மதுரை பேருந்து நிலையத்தில் மதுரை மல்லி அழகாக தொடுக்கப்பட்டு 100 பூ ஐந்து ரூபாய்க்கு விற்கிறார்கள். மதுரையில் தாவணி போட்ட பெண்களை பார்க்கமுடிகிறது. மதுரை பேருந்து நிலையமே தாவணி போட்டிருக்கிறது -  மாட்டுத்தாவணி.


திருமாலிருஞ்சோலை ( படங்கள்)
திருமோகூர் ( படங்கள்)
திருகூடல் ( படங்கள்)


சிலபடங்கள் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி.

Comments