Skip to main content

E=ஹிஹி2

சுஹாசினி, குஷ்பு விவகாரத்தை படித்துக்கொண்டிருந்த விக்கிரமாதித்தனை எரிச்சலாக பார்த்தது வேதாளம்.


"எவ்வளவு நாள் தான் இந்த விஷயத்தை படித்துக்கொண்டிருப்ப?"  என்றது வேதாளம்.
"உன்னோடு பெரிய தொந்தரவு, கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்க விடு" என்று விக்கிரமாதித்தன் திரும்பவும் படிக்க ஆரம்பித்தான்.


வேதாளம் விடுவதாக இல்லை "இன்னிக்கு உன்னை எங்க வேதாள உலகத்திற்கு அழைத்து போகலாம் என்று இருக்கேன்"


"உன்னோட தொந்தரவே தாங்கல..வேதாள உலகம் வேறயா?"


"சீக்கிரம் கிளம்பு, வெங்கட் நாராயணா ரோட்டில் ரத்தனா புதுசா கபே திரந்திருக்காங்க, ஒரு சாம்பார் இட்லி சாப்பிட்டு போகலாம்" என்றது.


விக்கிரமாதித்தனும், வேதாளமும் சாம்பார் இட்லி சாப்பிட்டுவிட்டு வேதாள உலகத்திற்கு கிளம்பினார்கள். இந்த முறை வேதாளம் விக்கிரமாதித்தனை தோளில் தூக்கிக்கொண்டு வேகமாக பறந்தது.



"இவ்வளவு வேகமாக பறக்காதே எனக்கு பயமாக இருக்கிறது"


"பயமா? என்னது இது சின்னபுள்ள தனமா இருக்கு ? " என்றது வேதாளம் வடிவேலு ஸ்டைலில்.


"இன்னும் கொஞ்சம் வேகமா போனா என் வேஷ்டி அவுந்துடும் அப்புறம் நீ பயந்துடுவ"
"ஐயோ! நான் வேகமா போகலை, இது தான் என் நார்மல் ஸ்பீடு. உனக்கு ஒண்ணு தெரியுமா ? யாராலையும் ஒளியின் வேகத்தை விட வேகமாக போக முடியாது"


"ஆரம்பிச்சுட்டையா உன் வேலையை"


"எதாவது சொன்னா கேட்டுக்கோ. ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 300,000 கீமீ"


"அப்படியா?"


"ஒளியின் வேகத்தால் ஒரு நொடிக்கு பூமியை ஏழு முறை சுற்றி வரலாம்"


"அந்த வேகத்தில் சென்றால் என்ன ஆகும் ?"


"அந்த வேகத்தில் செல்ல முடியாது ஆனால் அந்த வேகத்தில் சென்றால், முதலில் உன் வேஷ்டி அவுரும், உன் நீளம் கம்மியாகும், கடிகாரம் மெதுவாக ஓடும் ..." என்று அடிக்கிக்கொண்டு போனது வேதாளம்.


விக்கிரமாதித்தனுக்கு ஒண்ணும் புரியவில்லை. "என்ன ? இதெல்லாம் பகுத்தறிவுக்கு முரண்பாடாக இருக்கிறதே" என்றான்.


வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசித்தது. அப்போது வேதாளத்தின் ஒன்றுவிட்ட சித்தப்பா அவர்களை ஓவர் டேக் செய்து கொண்டு வேகமாக போனார். விக்கிரமாதித்தனுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.


ஒ.வி.சித்தப்பா வேகமாக போகப்போக அவர் சின்னதாக, ரஜினி பட கட்டவுட் போல் தெரிந்தார்.


"என்ன உங்க சித்தப்பா தட்டையாக தெரிகிறார்?"


"அதுவா, அவர் கொஞ்சம் வேகமாக போகிறார் அதனால் அப்படி தெரிகிறார்"


"எப்படி ?"


"இந்த எஃபெக்டுக்கு பேர் தான் Contraction of moving bodies!"


 


[%image(20051211-street1.jpg|300|225|street 1)%]

(விக்கிரமாதித்தன் முதலில் பார்த்தது ) 


   


 


 


 


 


 


 


[%image(20051211-street2.jpg|108|225|Street 2)%]

சரி உன் வேஷ்டியையும், என்னையும் கொஞ்சம் கெட்டியா புடிச்சிக்கொ என்றது வேதாளம்.  இப்போ கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் போகப்போகிறோம்.
'ஜூட்' என்று சொல்லி வேகமாக பறந்தது. விக்கிரமாதித்தனுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அவனை சுற்றி எல்லாம் சுருங்கி தட்டையாக கட்டவுட் போல் இருந்தது. ஜன்னல், கதவு, பெட்டிக்கடை, மாடு எல்லாம் சுருங்கி தெரிந்தது! ( பார்க்க படம்) ஆனால் ஒன்று விட்ட சித்த்ப்பா பக்கத்தில் போனவுடன் அவர் சாதாரணமாக தெரிந்தார்.


"என்னப்பா இது?"


"இதுதாம்பா relativity(சார்நிலை). இது சிறப்பு சார்நிலை(Special theory of relativity) என்று பெயரிடப்பட்டது. அதாவது காலம் ( time), வெளி(space) இவற்றுக்கிடையேயான தொடர்பு சக்தி ( energy) பெருண்மை(matter) இவற்றுக்கு இடையேயான தொடர்பும்..."


"போதும்பா எனக்கு தலைசுற்றுகிறது" என்றான் விக்கிரமாதித்தன்


"சரி அங்கே தெரியும் மணிக்கூண்டில் என்ன மணி"  என்றது கேட்டது வேதாளம்


விக்கிரமாதித்தன் மணிக்கூண்டில் பார்த்து "நாலு" என்றான்.


"உன் கைகடிகாரத்தில் ?"


"அதுவும் சரியாக நாலு"


[%image(20051211-clock.gif|180|248|clock)%]

"சரி இப்போ திரும்பவும் கொஞ்சம் வேகமா போகப்போறோம்" என்ற வேதாளம். திரும்பவும் விக்கிரமாதித்தனை தூக்கிக்கொண்டு வேகமாக பறந்து சென்றது. கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் மணிக்கூண்டு பக்கத்தில் வந்தது. இப்போ மணி என்ன என்றது.


விக்கிரமாதித்தன் மணிக்கூண்டில் மணியை பார்த்தான். அது "நான்கு மணி முப்பது நிமிடம்" என்றது. கைகெடிகாரத்தில் நான்கு மணி பத்து நிமிடம் என்றது.


விக்கிரமாதித்தனுக்கு தலை சுற்றியது.


"என்னப்பா இது, மணி கூண்டு கடிகாரம் கொஞ்சம் வேகமாக ஓடுகிறது என்று நினைக்கிறேன்" என்றான் விக்கிரமாதித்தன்.


வேதாளம் "அதெல்லாம் இல்லை இதற்கு பேர் தான் Dilatation of Time " என்றது.


விக்கிரமாதித்தன் மேலும் குழம்பினான். போய் ஒரு காப்பி சாப்பிடலாம் என்று ஒரு கடைக்கு போனார்கள். கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு மேஜையில் இரண்டு இடம் காலியக இருந்தது. உட்கார்ந்தார்கள். பக்கத்தில் ஒரு பாட்டியும் ஒரு முப்பது நாற்பது வயது மதிக்கதக்க இளைஞனும் உட்கார்திருந்தார்கள்.
பாட்டி அந்த இளைஞனிடம் கொஞ்சி பேசிக்கொண்டிருந்தார். விக்கிரமாதித்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. இளைஞன் பாட்டியின் உதட்டில் ஒரு இங்கிலிஷ் கிஸ் கொடுத்தான். 'கலிகாலம்' என்றான் விக்கிரமாதித்தன்.


இளைஞன் சிரித்துக்கொண்டு "சார், இது என் மனைவி" என்றான்.


விக்கிரமாதித்தனுக்கு தலை நிஜமாகவே சுற்றியது. இளைஞன் மேலும் தொடர்ந்தான்.


"எனக்கு சேல்ஸ் வேலை. அதனால் நிறைய இடங்களுக்கு போகவேண்டும். இங்கு உள்ள பிளைட் எல்லாம் ரொம்ப வேகமாக போகிறது. பாதி நேரம் பிளைட்டிலேயே போவதால் எனக்கு முதிர்ச்சி மெதுவாகத்தான் வருகிறது.அதானால் இவளைவிட நான் இளமையாக இருக்கிறேன்"


அப்போது வேதாளம் "அங்கே தூரத்தில் கட்டத்தின் மீது என்ன தெரிகிறது?" என்றது.


"சிகப்பு விளக்கு எரிகிறது" என்றான் விக்கிரமாதித்தன்.


"சரி என்னை கெட்டியாக பிடித்துக்கொள்" என்று வேதாளம் விக்கிரமாதித்தனை தூக்கிக்கொண்டு சிகப்பு விளக்கை நோக்கி பறந்தது.


அப்போது விக்கிரமாதித்தன் அந்த சிகப்பு விளக்கு பச்சை நிறமாக மாறுவதை பார்த்து திடுக்கிட்டான்.


வேதாளம் கண்ணடித்துவிட்டு விளக்க ஆரம்பித்தது. சிகப்பு ஒளியை ( =650nm)  நோக்கி  நாம் போன போது நம்முடைய வேகம் 0.17c1 ( c என்பது ஒளியின் வேகத்தை குறிக்கிறது2) . சிகப்பு நிறம் நமக்கு பச்சை நிறமாக( = 550 nm) தெரிவதற்கு காரணம் Relativistic Doppler Effect என்றது.


விக்கிரமாதித்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. .


சரி, குஷ்பு பேசியது சிலருக்கு தப்பாக தெரிகிறது சிலருக்கு சரியாக தெரிகிறது. இதுவும் ரிலேட்டிவிட்டி தானே என்றான் விக்கிரமாதித்தன்.


"உன்னை திருத்தவே முடியாது" என்று விக்கிரமாதித்தனை தோளிலிருந்து இறக்கிவிட்டது.


 




 



[%image(20051212-einstein.gif|140|198|einstien)%]

இந்த வருடம் முழுக்க ஐன்ஸ்டினைப் பற்றி உலகமே பேசிக் கொண்டிருந்தது. ஏன் தெரியுமா ? ஐ.நா.சபை இந்த வருடத்தை உலக இயற்பியல் ஆண்டாக அறிவித்திருந்திருந்தது.


* "உங்க பையனைப் போல ஒரு மக்கை நான் இதுவரை பார்த்ததில்லை, என்னால் இவனுக்கு பாடம் எடுக்க முடியது. தயவு செய்து இவனைல் கூப்பிட்டுக் கொண்டு போய்விடுங்கள்" - ஐன்ஸ்டினின் பெற்றொரை அழைத்து அவரது ஆசிரியர் கூறியிருக்கார். "இவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தால் நேரம், பணம் எல்லாம் வேஸ்ட்" என்றும் கூறியிருக்கார்.


* ஜாலியாக பாட்டு கேட்பது, சைக்கிளில் ரவுண்ட் அடிப்பது இவை அவரது இளமைக்கால பொழுதுபோக்குகள். உயர் நிலைப் பள்ளியில் படித்த போது, தத்துபித்தென்று இவர் எழுதிய கட்டுரைக்கு ஏதோ போனால் போகட்டுமென்று வெறும் பாதி மார்க் போட்டிருக்கிறார்கள்.


* "யுனிவர்சிட்டிக்கெல்லாம் போய் படிப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு கிடையாது" என்று தன் கைபட எழுதி வைத்திருந்தார் ஐன்ஸ்டின்.


 


[%image(20051212-WYP2005_small_logo.gif|125|113|wyp)%]

இந்த ஆண்டு(2005) இயற்பியல் ஆண்டு. இந்த பதிவு விசேடச் சார்நிலைக் கோட்பாடை (Special Theory of Relativity) கொடுத்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின்க்கு சமர்ப்பணம்.


Coinciding with the 100th anniversary of Albert Einstein's "Miraculous Year", the events of the World Year of Physics 2005 aim to raise the worldwide public awareness of physics and more generally for physical sciences.


இயற்பியல் பற்றிய பல கட்டுரைகள், தகவல்களுக்கு  http://iyarpiyal.org/
அனிமேஷன், ஐன்ஸ்டின் படம்  உதவி : http://nobelprize.org/ 





 1. 0.17c என்பது குத்துமதிப்பாக 5.0 10^7 m/s
2. ஒளியின் வேகம் 299792458 m/s 
 



 

Comments