ஹரன்பிரசன்னா, எனி இண்டியன்.காமில் இருக்கிறார். வயது 29. http://www.nizhalkal.blogspot.com.
நான் சந்திக்க நினைக்கும் எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதாவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குத் தேசிகன் மூலம் கிடைத்தது. சுஜாதாவின் எழுத்துகளை மிகவும் விரும்பி வாசித்திருந்த நான், அதை வாசித்த காலத்திலேயே சுஜாதாவைச் சந்திக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். சென்னையில் வுட்லாண்ட்ஸ் டிரைவ் இன்னில் சுஜாதாவைச் சந்தித்தபோது, எனக்குள் ஒரு இனம்புரியாத சந்தோஷமும் வாழ்நாளில் நாம் நினைத்த ஒன்று நிறைவேறுகிறது என்கிற எண்ணமும் இருந்தது. சந்திப்பு முடியும்போது, நான் சந்திக்க நினைத்திருந்த ஆதர்ச எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர் என்று அவரிடம் சொன்னேன். சிரித்தார்.
தேர்ந்தெடுத்துக்கொண்ட கேள்விகளுடன் செல்லாமல், ஒரு சிறிய சந்திப்பு என்றளவிலேயே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் சென்றிருந்தேன். சந்திப்பு அப்படியே அமைந்தது. சுஜாதா புதியதாக எதையும் சொல்லிவிடவில்லை. இத்தனை வருடங்களாக அவர் எதை எழுதிக்கொண்டிருக்கிறாரோ அதையே சொன்னார். மீண்டும் மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டிருந்த கேள்விகளே மீண்டும் கேட்கப்பட்டன. நேரில் சந்தித்துக் கேட்கிறோம் என்கிற நிகழ்வே முக்கியமானதாக இருந்தது. நான் பல கேள்விகள், துணைக்கேள்விகள் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். முக்கியமாக நான் கேட்டது, இனிமேல் கணேஷ் வசந்த் கதைகள் எழுதுவீர்களா? அவர் உடனே சொன்னார், இல்லை என்று. (ரஜினி மாதிரி இப்ப நான் இல்லைன்னு சொல்றேன், ஆனா நாளை என்ன நடக்கும்னு ஆண்டவந்தான் முடிவு செய்யனும் என்று சொல்வாரோ என எதிர்பார்த்திருந்தேன்!) நான் உடனே "நன்றி சார்" என்றேன். அதற்கு அவரின் எக்ஸ்பிரஷன் என்னவாக இருந்ததென்று சொல்லமுடியவில்லை. நான் ஒரு வேண்டுகோளாக, "இனியும் புனைவுகளில் அதிகம் கவனம் செலுத்தாமல், உங்களுக்குக் கிடைத்திருக்கிற இந்த பெரும் வாய்ப்பைப் பயன்படுத்தி, இளைஞர்களின் கவனம் பதியவேண்டிய இலக்கியங்களின் பக்கம் அவர்களின் பார்வை திரும்ப எழுதவேண்டும். திருப்பாவையின் உரையை உங்கள் நடையில் எழுதலாம்" என்றேன். "ஒரே சீரியஸா எழுதிக்கிட்டு இருந்தா, நான் எழுதுறதைப் படிக்கிறதை விட்டுருவாங்க. அதையும் எழுதி, இதையும் எழுதினாத்தான், அவங்களை நான் சொல்ற விஷயத்தைக் கவனம் பெற வைக்க முடியும்" என்றார். ஒப்புக்கொண்டேன். சுஜாதா என்கிற நல்ல மனிதரைக் கண்டேன் என்பதே உண்மை. அவரது அரட்டை மற்றும் கேள்விப்பட்ட விஷயங்களில் இருந்து, அவர் இவ்வளவு தூரம் இயல்பாக, நட்புடன் பேசுவார் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. சந்திப்பு ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே, அவரது சில கமெண்ட்டுகளில் மிக ஈர்க்கப்பட்டு, பலமாகச் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். தான் எழுதியதைப் பற்றிச் சொல்லும்போது எந்த வித யோசனைக்கும் இடமில்லாமல் தன் மனதில் பட்டதைப் பட்டெனச் சொன்னர் சுஜாதா. பாய்ஸ் படம் பற்றிப் பேசும்போது, "நீங்கள் எழுதாத வசனங்கள் சில இடம்பெற்றதாமே" என்றேன். "இல்லவே இல்லை" என்றார். திரைக்கதை எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில், கதாபாத்திர அறிமுகத்தின் போது தரப்பட்டிருந்த எடுத்துக்காட்டில் பாய்ஸ் படம் பற்றிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ( பாய்ஸ் படம் வருவதற்கு முன் அவர் எழுதிய விமர்சனம் 'கடவுள்களின் பள்ளத்தாக்கு என்ற புத்தகத்தில் வந்துள்ளது என்றார் )அதில் வரும் கவிதைக்குப் பதில் படத்தில் வேறொரு கவிதை இடம்பெற்றிருந்தது. அதைச் சுட்டிக்காட்டி, நீங்கள் எழுதியதே இடம் பெறவில்லையே என்றேன். 100% அப்படியே இடம்பெறும் என்று எதிர்பார்க்கக்கூடாது; இயக்குநர்கள் விருப்பத்திற்கேற்ப சிலவற்றை மாற்றுவார்கள் என்றார். அந்நியனில் ஏ.ஆர்.ரகுமான் இல்லாத குறை தெரிகிறது என்றார். ஒப்புக்கொண்டார் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தபோது, படம் வந்ததும் பாடல்கள் பிடிக்கும் என்றார். கூட இருந்தவர்கள் வழி மொழிந்தார்கள். நான் ஏ.ஆர்.ரகுமான் இல்லாத குறை எப்போதும் இருக்கும் என்றேன் மற்றவர்களிடம். வலைப்பதிவுகளைப் பற்றிப் பேசும்போது, "15 நிமிடப் புகழ் என்று நீங்கள் சொன்னதற்கு உங்களை விமர்சிக்காத வலைப்பதிவுகள் குறைவு" என்றேன். "அப்படியா" என்று கேட்டுக்கொண்டார். "ஏறக்குறைய 550 வலைப்பதிவுகளில் 20 கூட நல்ல வலைப்பதிவுகள் தேறாது; எல்லாரும் நினைவலைகளாக எழுதிக் கொல்கிறார்கள். அன்றொரு நாள் மழை பெய்த போது, நான் பத்தாம் வகுப்புப் படித்த போது பெய்த மழை ஞாபகம் வந்தது.. என்றே எழுதுகிறார்கள்; குமுதத்தையும் ஆனந்தவிகடனையும் விமர்சித்துவிட்டு அதைவிட மோசமாகத்தான் எழுதுகிறார்கள்; பத்திரிகை உலகில் தீவிரமாக எழுதுகிறவர்களே வலைப்பதிவுலும் தீவிரமாக வினையாற்றுகிறார்கள்; மற்றவர்களெல்லாம் எதையோ என்னவோ எழுதுகிறார்கள்" என்றேன். கேட்டுக்கொண்டார்.
வெகு இயல்பான சந்திப்பாக இருந்தது. வீட்டிலிருப்பவர்கள் மாறி மாறி சுஜாதா என்ன சொன்னார் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். என் தீவிர விசிறியாம் அவர் என்று சொன்ன பின்பு, அவர்கள் யாரும் மீண்டும் அக்கேள்வியைக் கேட்கவில்லை. சுஜாதா என்கிற எழுத்தாளர் பிம்பம், அவரது சந்திப்பின் மூலம், என் நெருங்கிய உறவினர்களில் ஒருவரான ஒரு பிம்பமாக மாறிவிட்டிருக்கிறது.
* - * - *
க்ருபா ஷங்கர், Newhorizon Media, கணித்துறை. வயது 26 இருக்கலாம். www4.brinkster.com/shankarkrupa
ஆறு மணிக்குதான் பரிநிரலி சந்திப்புக்குக் கிளம்பிக் கொண்டு இருப்பதாக யக்ஞா
சொன்னான். பரிநிரலி, சுஜாதா என்று இரண்டு நிகழ்ச்சிகளும் ஒரே நேரத்தில் நடந்தாலும், பரிநிரலி விவாத அரங்கம் ஆரம்பிக்க தாமதம் ஆகும் என்று பட்சி சொல்லியது. எப்பொழுதும் போல் பட்சி தவறாகவே சொல்லி இருந்தது பிறகுதான் புரிந்தது. சுஜாதாவிடம் நான் கேட்க நினைத்த கேள்விகள்:
1) அப்துல்கலாம் பற்றி சுவையாக (மசால் தோசை, பானிப்பூரி மாதிரி) இரண்டு வார்த்தைகள், மற்றும் அனுபவங்கள்.
2) மைக்ரோசா·ப்ட் வளர்ச்சியைத் தாமதப்படுத்த லினக்ஸ் பரவலாக
வேண்டுமென்றால் தமிழ் வளர்ச்சி தாமதப்படாதா? இன்னும் கொஞ்ச காலத்திற்கு லினக்ஸை கவனிப்பதை ஒற்றி வைத்துவிட்டு எல்லோரும் விண்டோஸில் தமிழ்
சுஜாதாவும் மற்றவர்களும் ஆர்வத்துடன் உரையாடிக்கொண்டு இருந்த வேளையில் எதற்கு கரடிப் பட்டம் வாங்க வேண்டும் என்ற யோசனையால் அதையெல்லாம் முடியவில்லை.
நடந்து கொண்டிருந்த உரையாடலே விஷயசாரமுடன் இருந்தது - திரைப்படம், கவிதை, நாவல். வளரும்/வளரநினைக்கும் எழுத்தாளர்களுக்கு சுஜாதா வழங்கிய டிப்ஸ், 'நிறையப் படிக்கணும்.'
தேசிகனிடம் கேட்கவேண்டும், சுஜாதாவோட உண்மையான வயசு 40ஆ இல்ல 45ஆ?
* - * - *
சுவடு சங்கர், வயது 24 இருக்கலாம். இன்·போஸிஸ், கணித்துறை, suvadu.blogspot.com
எதற்கெல்லாம் தாமதமாகப் போகவேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமற்போய் விட்டது வரவர. உட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன்னுள் ஒரு மணி நேரம் தாமதமாக நுழைந்தபோதுகூட என் மண்டை சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டுதான் இருந்தது. அந்த ஏசி ஹாலுக்குள் பத்துப்பதினைந்து டம்ளர் ஐஸ் வாட்டர் மட்டும் முன்வைத்துக்கொண்டு அந்த எழுபது வயது இளைஞர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த அத்துணை தீவிரமான முகங்களைப் பார்த்தபோதுதான் என் தலைமைச் செயலகத்தில் மின்சாரம் அற்றுப்போனது. சபீனா போட்டு அலம்பிய மாதிரி சுத்தமான மூளையுடன் சுஜாதா அவர்களின் முன்னால் போய் நிற்கும்போது "இவர்தான் சுவடுகள் ஷங்கர்" என்று இகாரஸ் பிரகாஷ் குரலில் (ஐயா! நீவிர் நீடூழி வாழ்க) ஒலிக்குறிப்புகள், ஒன்று தவிர்த்து ஒன்றாக என் காதுகளில் விழுந்துகொண்டிருக்க, நான் ஆட்டுக்கணக்காக (sheepish, ஹிஹி) சிரித்தது இன்னும் நினைவிலிருந்து படுத்துகிறது.
என் கண்களில் ஆனந்தக்கண்ணீர் சொறிந்தது, அரித்தது என்றெல்லாம் டுமீல் விட்டால் காமெடியாக இருக்கும். அதெல்லாம் வேண்டாம். ஆனால், இந்த மனுஷர் முன்னால் என்ன பேசுவது என்று விளங்கத்தானில்லை. "சாரி, மன்னிக்கணும், ஒரு எக்ஸாம் இருந்துச்சு. எழுதிட்டு வர லேட்டாயிடுச்சு" என்று சொல்ல, டிரேட்மார்க் புன்னகை ஒன்று சுஜாதாவிடமிருந்து. என் திருவாய் திறந்து என்ன முத்து உதிர்த்தாலும் அது உலகத்தரமான நகைச்சுவையாக இருக்கும் என்பது முதலிலேயே புரிந்துவிட்டதால் உட்லண்ட்ஸில் செவிக்கு மட்டுமே உணவு, வாய் திறப்பது கனவு என்று அக்கணமே விதிக்கப்பட்டது. அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
என்னென்னமோ பேசிக்கொண்டிருந்தனர். சுரேஷ¤ம், பிரகாஷ¤ம் இன்ன பிறரும் கேள்விகள் பல சரமாரியாக எடுத்துவிட சுஜாதா சளைக்காமல் பதிலளித்துக்கொண்டிருந்தார். அவரது கதைகள் கொலை செய்யப்பட்ட சினிமாக்களிலிருந்து, 'கற்றதும் பெற்றதும்' வரை காதுகளில் விழுந்தது. ஆயினும் நான் வரும்போதே நிறைய பேசி முடித்திருந்ததால் பேச்சு தொய்வடையத் தொடங்கியிருந்தது. சீக்கிரமே சுஜாதா 'ஓக்கே, டயமாச்சு' mode-க்குப் போக, பிறகு ·ப்ளாஷ் வெளிச்சத்தில் அவரை வழியனுப்பிவைத்தோம்.
சுஜாதா ஜே.ஜேவும் கிடையாது. நான் பாலுவும் கிடையாது. எனவே எங்கள் முதல் சந்திப்பில் ஏதும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடவில்லை (அட்ரா, அட்ரா! என்னா பில்டப்பு என்னா பில்டப்பு!). ஆனாலும் அவரிடம் எனக்கு இயல்பாக எதுவும் பேசுவதற்கோ கேட்பதற்கோ தோன்றவேயில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இதை எதிர்பார்த்தேன் என்றும் தோன்றுகிறது.
சுஜாதாவை இன்னும் ஒரு எழுபது வயது முதியவராக என்னால் சத்தியமாகக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. ஒரு முப்பத்தைந்து நாற்பது வயது இருக்கலாம் மிஞ்சிப்போனால். அவ்வளவுதான். அவரை அப்படித்தான் என்னால் பார்க்கமுடிகிறது. நேருக்கு நேர் அவரது முதுமையை சந்திக்கும்போது அவர் தாத்தா வேடமிட்டு வந்திருப்பது போன்றதொரு பிரமை. மெதுவாக அவர் காரில் ஏறி அமரும்போது வேகமாக ஓடிப்போய் அவரது முதிய வேடத்தைக் கலைத்துவிட்டு "சும்மா சீன் போடாதீங்க சுஜாதா" என்று சொல்ல ஆவலாக இருக்கிறது. கலைந்துவிடக்கூடிய வேடமாக இருந்தால் அதைச் செய்யக்கூடிய முதல் ஆசாமி நானாகத்தான் இருப்பேன்.
* - * - *
ஐகாரஸ் பிரகாஷ், வயது 33, Indscan- வைத்திருக்கிறார். Industrial Research. http://icarus1972us.blogspot.com
உட்லாண்ட்ஸ் ஓட்டலில் அந்த சந்திப்பு நடந்து முடிந்ததும், உஷா மீண்டும் மீண்டும் என்னைக் கேட்டார். " நெஜமாவா? நெஜமாவா? ... என்னால நம்பவே முடியலையே... " அவரால் நம்ப முடியாமல் போன விஷயம், என்ன என்றால், நான் வாத்தியாரை முதல் முதலாக இப்போதுதான் நேரில் சந்திக்கிறேன் என்பதைத்தான்.
தேசிகன் ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்துக்கு வழக்கம் போலவே இருபது நிமிடங்கள் தாமதமாகச் சென்றிருந்தேன். நான்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்த அந்த இடத்தில், ஆளாளுக்கு நாற்காலிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு, சுஜாதாவை சூழ்ந்திருந்தனர். கிடைத்த சந்தில் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு நானும் அமர்ந்த போது, தேசிகன் அறிமுகப்படுத்தினார்.
முதன் முதலாக இப்போதுதான் நேரிலே பார்க்கிறேன் என்றாலும், அதற்கென்று பிரத்தியேகமான உணர்வு ஒன்றும் தோன்றவில்லை. நீண்ட நெடுநாட்களாகப் பழகி வந்திருந்த ஒருத்தரிடம் சகஜபாவத்துடன் உரையாடுவதைப் போலத்தான் இருந்தது. என்ன என்னமோ கேட்டுக் கொண்டிருந்தார்கள். நானும் என் பங்குக்கு எதையாவது கேட்கவேண்டும் என்று தோன்றினாலும், அத்தனை பேர் கூடியிருக்கிற இடத்திலே அறியாமையைக் காட்டிக் கொள்ள வேண்டுமோ என்றும் தோன்றியது. ஒரு இறுக்கமான கேள்வி பதில் செஷனாக இல்லாமல், ஜாலியாக கிண்டலும் கேலியுமாகச் சென்றதும். அதற்கு வாத்தியார் ஈடு கொடுத்ததும் இனிய ஆச்சர்யங்கள்.
சிறுகதை எழுதுவது எப்படி என்கிற அரதப் பழசான கேள்வியில் இருந்து துவங்கி, பாய்ஸ் படம் , ஹைக்கூ, பொய்க்கூ, அந்தக் காலத்தில் வந்த லவ்லெட்டர்களுக்காக ஊட்டுக்காரம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது, ( இந்தக் காலத்திலும் வருகிறதா என்று கேட்க நினைத்து, கேட்கவில்லை ) பிரிவோம் சந்திப்போம், வானம் வசப்படும்., நகரம் சிறுகதை, முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படம், அடுத்து எழுதப் போகும் படங்கள் என்று ஒருவர் மாற்றி ஒருவர் கேட்க, சந்திப்பு ஜாலியாகச் சென்றது.
நடுவிலே 'ஆ' வை பிரகாஷ்ராஜ், படமாக எடுப்பதற்காகக் கேட்டிருக்கிறார் என்று சொன்னதும், உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தேன் (" வாணா சார்.. ப்ளீஸ்... கெடுத்து குட்டிச் சுவராக்கிடுவாங்க, இருள் வரும் நேரத்தை பண்ண மாதிரி" )
ஏழுவயதில் முதன் முதலாக, புரிந்தும் புரியாமலும் வாசித்த பெண் இயந்திரம் கதையில் இருந்து, நாளது வரையில், ஒரு எழுத்தாளர் என்ற அடிப்படையிலே அவரும், வாசகன் என்ற முறையிலே நானும் ஒரு இணைக்கோட்டிலே பயணம் செய்திருக்கிறோம். ஆனால் சந்தித்துக் கொண்டதில்லை. இன்று சந்தித்துக் கொண்டாலும், அதனாலே பெரிய ரசாயன மாற்றம் ஏதும் நிகழ்ந்து விடவில்லை. நீண்ட நெடுநாட்களாக பரிச்சயமான ஒரு நண்பருடன் பேசுகிற தோரணையில் தான் பேச வருகிறது.
ஒரே ஒரு சினிமாவில் தலைகாட்டியது பற்றியும், எடி மர்பியின் படத்தை தழுவி அவர் திரைக்கதை எழுதிய தமிழ்த் திரைப்படம் பற்றியும், அவர் கதைகளிலே அடிக்கடி தலைகாட்டும் வத்ஸலா பற்றியும், வீடு சிறுகதை பற்றியும், கணையாழி கடைசிப் பக்கத்தில், அவர் அஞ்சலி படத்துக்கு எழுதிய விமர்சனம் பற்றியும், பூர்ணம் விசுவநாதனுடனான நாடக தினங்கள் பற்றியும், டில்லி பாரதி பாலு என்கிற நகுபோலியன் பற்றியும், ஆர்யபட்டா கதைக்கும், பாலசந்தரின் அந்த நாள் திரைப்படத்துக்கும் இருக்கும் ஒற்றுமை பற்றியும், நைலான் ரதங்கள் பற்றியும் , மேகலாவில் எழுதி நான் தலைப்பு மறந்து போன ஒரு குறுநாவல் பற்றியும், குமுதம் ஆசிரியர் தினங்கள் பற்றியும் கேட்கவேண்டியது நிறைய இருந்தது என்று உறைத்தது, அவர் சுமார் ஏழரை மணிக்கு, " என்ன முடிச்சுக்கலாமா? " என்று கேட்ட போது..
இன்னும் பேசவேண்டியது நிறைய இருக்கிறது என்று சொன்னேன், சந்திப்பு முடிந்து அவர் கிளம்பிய போது, அவருக்கு மட்டும் கேட்கிற விதமாக.
ஆவட்டும் பாக்கலாம் என்றார் காமராஜர் மாதிரி.
* - * - * - *
ராமசந்திரன் உஷா,ஹோம் மேக்கர் , இவர் எழுதிய கதைகள் இணையத் தளங்களிலும் கணையாழியிலும் வந்திருக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு அரை மணிநேரம் சந்திப்பு, இப்பொழுது நான்கு நாட்களுக்கு முன்பு இரண்டு மணி நேர சந்திப்பு.
நாங்கள் ஏழு பேர்கள், அனைவருமே எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்கு தீவிர ரசிகர்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் அந்த இரண்டு மணி நேர சந்திப்புக்கு பிறகு ஜெண்டில்மேன் என்ற நற்சான்றிதழ் அனைவர் வாயிலும் வந்தது. கதை சொல்வதில், நடையில் இருக்கும் துள்ளல் பார்க்கும் உருவத்தில் இல்லாவிட்டாலும் பேசும் முறையில் வயதானவர்களுக்கே உரிதான அறிவுரை சொல்வதோ, ஆசிர்வாதமோ இல்லாமல், நன்கு அறிமுகமானவரிடம் சகஜமாய் எப்படி பேசுவோமோ அப்படி பேசினோம்.
நண்பர் சுரேஷ் சொன்னதுப் போல, ரிமோட் பட்டனைத் தட்டி சேனல் மாற்றுவதுப் போல, ஆள் ஆளுக்கு ஒரு சப்ஜெட்டில் கேள்வி எழுப்ப அனைத்துக்கும் சரியான, யதார்த்தமான, உண்மையான பதில் சட்டென்று வந்தது. தற்கால கல்விமுறையைப் பற்றி அவருடைய
கவலை, கவிதைக்கு எளிமையே அழகு என்பதற்கு அவர் சொன்ன உதாரணங்கள், குமுதத்தில் வந்த ப்ரியா கதையின் முடிவில் எஸ்.ஏ.பி சொன்ன திருத்தங்கள், ரசிகைகள் எழுதிய கடிதங்களை அவர் மனைவிப் படித்துவிட்டு சொல்லும் கமெண்டுகள், இன்றும் நல்ல சிறுகதைகள், அதாவது பிற எழுத்தாளர்கள் எழுதியதைப் படித்துவிட்டு அவர் மனைவி அதை இவரிடம் படிக்க சொல்வாராம், அந்நியன், பாய்ஸ் என்று பேச்சு மிக சுவாரசியமாய் போனது.
பிரகாஷ் அவர் எழுதிய கதைகளைப் பற்றிய புள்ளிவிவரங்களை சொல்லி அசத்தியதும், அவர் முகம் மலர்ந்ததைப் பார்க்கும் பொழுது, எந்த எழுத்தாளருக்கும் விருதுகளை விட அவர் எழுதியதை பொத்தாம் பொதுவாய் நன்றாக இருக்கிறது என்று சொல்லாமல் படித்தவைகளை விவரமாய் சொல்லுவதை விட பெரிய விருது உலகிலேயே இல்லை என்று புரிந்தது. சிலர் அவர் எழுத்து வெறும் மேலோட்டமாய் இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் பல விஷயங்களை சாதாரண வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது அவர் எழுத்துதான். அப்படி எந்த வெகுஜன பத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தாளர்கள் எழுதினார்கள்? காரில் இருந்து இறங்கி நடக்கும் பொழுதும், திரும்ப மீண்டும் காரில் ஏறும்பொழுதும் வழியில் பார்ப்பவர்களில் பெரும்பாலோர், அவரை திரும்பிப் பார்த்தும், சுஜாதா தானே என்று சின்னக் குரலில் பேசிக் கொண்டதும், சிறிது தொலைவில் பின் தொடர்ந்த என் காதிலும், கண்ணிலும் விழுந்தது. இத்தகைய பிரபலம் வித்யாகர்வம் சிறிதுக் கூட இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை அளித்தது. அந்த இரண்டு மணிநேரமும் மனதிற்கு நிறைவாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.
Old comments from my previous Blog
தேசிகன், மிக அருமையாக தொகுத்து இருக்கிறீர்கள். நன்றாக வந்திருக்கிறது.
By icarus, at Fri Jun 03, 01:48:53 PM IST
வாவ்!!!!
By அல்வாசிட்டி.விஜய், at Fri Jun 03, 02:08:42 PM IST
அருமையாக தொகுத்து இருக்கிறீர்கள்.
By வீ. எம், at Fri Jun 03, 02:09:41 PM IST
I really feel sad for missing this wonderful evening...
mitra
(Saikrishna)
By மித்ரா, at Fri Jun 03, 02:10:15 PM IST
அப்பாடா!
எல்லா நண்பர்களிடமும் இந்தச் சுட்டியைக் கொடுத்து அலட்டிக் கொண்டாகிவிட்டது!
By Pradeep, at Fri Jun 03, 02:44:58 PM IST
வழக்கமான கமெண்ட் தான்..
உங்களையெல்லாம் பார்க்க
பொறாமையாக இருக்கிறது!
:-)
By சுபமூகா, at Fri Jun 03, 02:45:49 PM IST
அன்புள்ள தேசிகன்,
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் யார் யார்? இணையத்தில் அறிவிக்கப்பட்டிருந்ததா ? இல்லையா ? முன்னமேயே தெரிந்திருந்தால் நானும் கலந்துகொண்டிருப்பேன் / என் இல்லத்தினரை அனுப்பியிருப்பேன். நாங்கள் எல்லோரும் அவர் நைலான் கயிறு எழுத ஆரம்பித்ததிலிருந்து அவரின் இரசிகர்கள்.
By லதா, at Fri Jun 03, 02:58:49 PM IST
பெங்களூர்வாசிகளுக்குச் சொல்லாமல் சென்னைவாசிகளாய் நடத்திக் கொண்ட தனி ஆவர்த்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். வேற என்னத்தச் சொல்ல?
By மீனாக்ஸ், at Fri Jun 03, 03:04:19 PM IST
அன்பு தேசிகன்,
இந்தக் கலந்துரையாடலின் தொகுப்பு நன்றாக வந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் நன்றி. அடுத்த முறை சுஜாதாவை சந்திக்கும் போது இன்னும் சிறப்பான கேள்விகளோடு எதிர்கொள்ளலாம் என்று நம்புகிறேன்.
அப்புறம் .... என்னுடைய வயதில் நான்கை குறைத்து மதிப்பிட்டதற்கு நன்றி. :-)
- Suresh Kannan
By சுரேஷ் கண்ணன், at Fri Jun 03, 03:04:31 PM IST
Geek...where r u? Desikan is kalakkifying here. Its real good exp. for those attended and good writeup for those who missed up the occation. Well Done Desikan.
-Shiva
By Anonymous, at Fri Jun 03, 04:58:40 PM IST
தேசிகன்,
நல்ல தொகுப்பு. படிக்க, ரொம்ப சுவாரசியமா இருந்தது :)
அப்றம், அந்த வயித்தெரிச்சலை என்னன்னு சொல்றது ? உங்களுக்கு புரியுது தானே! :-(
என்றென்றும் அன்புடன்
பாலா
By enRenRum-anbudan.BALA, at Fri Jun 03, 05:23:20 PM IST
தேசி, சந்திப்பில் கலந்து கிட்டவங்களுக்கு அவுங்க வீட்ல "சுத்தி" போட சொல்லுங்க! சொல்லிபிட்டன் ! அப்புறம் குறை சொல்லக்கூடாது ஆமாம் !
பொறமை "கண்ணுடன்"
ரவியா
By Anonymous, at Fri Jun 03, 06:15:50 PM IST
நெறய போட்டோவில பிரவுன் கலர் சட்டையில ஆக்டர் கணக்கா ஒருதரு லுக் உடுறாரே, பாருப்பா அது?
ரவியா
By Anonymous, at Fri Jun 03, 06:48:03 PM IST
என்னத்த சொல்ல....வயிறு பத்திக் கொண்டு எரிகிறது ...
ஒரு வேளை நான் வந்திருந்தாலும் "இவர் தான் டுபுக்கு"ன்னு நீங்க அறிமுகப்படுத்திருந்தா...சுஜாதா மண்டை மேலேயே ஒரு அடி போட்டிருப்பாரோன்னு நினைக்கவும் பயமா இருக்கு!
By Dubukku, at Fri Jun 03, 06:51:59 PM IST
என்னத்தைச் சொல்ல?
கொடுத்த வெச்ச மகராசங்கப்பா.
வாழ்க்கையில ஒருதடவையாவது அவர சந்திக்கமாட்டோமான்னு ஏங்கிக்கிட்டிருக்குற என்னைய மாதிரி ஜீவனுங்க மத்தியில உங்களுக்கெல்லாம் மஹா அதிர்ஷ்டம்!
பல்லாண்டு வாழ்க அவர்!
அன்புடன்
எம்.கே.குமார்
By எம்.கே.குமார், at Fri Jun 03, 07:58:01 PM IST
Desikan, Naan Indiala irunthapo ithai een eerpadu pannala enru messengeril ketean. Adutha murai sataiyai pidithu ketka pokirean. Apadi ninaika vaithu vitathu intha pathivu. I missed it. Glad you all could meet him.
I dont know IF i have asked him anything if I have met him. I would have just sit silently and watched him talk.
Suresh Kannan article is the best. Manushanuku enna naabaga sakthi. En unmaiyaana vasakarkal ennai santhika varuvathillai enru kanaiyazhi kadaisi pakathula vantha variyai eduthu vidaraare. Suresh Kannan.. Kalakiteenga.
Prasanna article looks like he is very careful in not praising too much :-) Prasanna, praise panrathu ellam thaaraalamaa pannalam. Thiturathuku thaan yosikanum :-) Ilakiyavathi aaitaale manasu vitu paarata manasu varaathaa ooi!
Mathavanga article pathi apuram ezutha parkurean. ipo mathiyaanam boova saapida pokanum.
Thanks and regards, PK Sivakumar
By PKS, at Fri Jun 03, 09:27:42 PM IST
இங்கு உட்கார்ந்து கொண்டு இழந்து கொண்டிருக்கும் சந்தோஷங்களில் ஒன்று.
தொகுப்பு அருமையாக இருக்கிறது.
நல்லா இருங்க சாமிகளா..:-)
By Mookku Sundar, at Fri Jun 03, 11:19:07 PM IST
ராஜ்குமார், பிரசன்னாவையும் சுரேஷ் கண்ணனையும் உஷாவையும் (உஷா அப்புறம் உடனே, பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தலும் இலமே என்று வழக்கம்போல ஆரம்பித்துவிடப் போகிறார்கள் என்று பயமாக இருக்கிறது :-) ) உடன் வைத்துக் கொண்டு "கிட்டத்தட்ட அனைவருமே சுஜாதா என்ற படைப்பாளியுடன் விவாதிக்க வேண்டும் என்ற மனநிலையில் இல்லாமல், ஒரு தெய்வத்தை அல்லது சக்தி பொருந்திய ஆன்மீகப் பெரியவரை சந்திக்கும் மனோநிலையில் வந்ததுபோலத்தான் தோன்றியது" என்று எப்படி எழுதினீர்கள்? சண்டைக்கு வரப் போகிறார்கள். :-) அல்லது, பல நேரங்களில் பணிவும் மரியாதையும்கூட பக்தியாகப் பார்க்கப்படுகிற சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்கிறதா உங்கள் வரிகள்?
ராம்கி, அங்கேயும் ரஜினியை விடலையா? :-) [Kidding]
நிறையப் படிக்க வேண்டும் என்று சுஜாதா சொன்னது சத்தியம். கிடைப்பதைத் தேடித் தேடிப் படித்துப் படித்ததை வாழ்க்கையில் பொருத்திப் பார்க்க ஆரம்பித்தாலே (ஐ மீன், நாட் பாலோ இட். படித்ததுடன் தொடர்புடைய விஷயங்கள் வாழ்க்கையில் இருந்தால் அதனுடன் பொருத்திப் பார்த்துப் பொருளும் விளக்கமும் கொள்வது) நன்றாக எழுத வந்துவிடும் என்று நானும் நினைக்கிறேன். ஆனால், தவறாகப் பொருத்திப் பார்ப்பவர்களைப் பற்றியும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. அவர்களை அந்த ஈசன் காப்பாற்றட்டும்!
சுரேஷ் கண்ணன் குறிப்பிட்ட நகரம் தமிழின் சிறந்த கதைகளுள் ஒன்று என்பது என் வாசக அபிப்ராயம். அது எழுதப்பட்டு பல பத்து ஆண்டுகள் ஆனபின்னும், இன்றைக்குப் படிக்கும்போதும் அப்படியே பொருந்துவதாகவும் மனதை உருக்குவதாகவும் உள்ளது. அடிக்கடி எழுதுகிற பத்திரிகை நெருக்கடிகள் இல்லையெனில், சுஜாதாவின் பல கதைகள் நகரம் அளவுக்கு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். நகரம் அளவுக்கு இல்லையென்றாலும், அவரிடமிருந்து பல சிறந்த சிறுகதைகள் வந்திருக்கின்றன என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.
"அரிதாகக் கிடைக்கிற தகவல்களை உள்ளடக்கியதுதான் ஒரு சிறந்த பதிவாக இருக்க முடியும்" என்கிற சுஜாதாவின் வாதம் நன்றாக இருக்கிறது. உடனே, ஆளாளுக்கு என்சைக்ளோபீடியாவை எடுத்து அரிதான தகவல்களை வலைப்பதிவில் இட ஆரம்பித்துவிடுவார்களோ என்று பயமாகவும் இருக்கிறது. :-) என்னவோ போங்க! வலைப்பதிவு என்றாலே குதர்க்கமும் கோணலும் தவறான புரிந்து கொள்ளுதலும் பிடிக்காத ஆள் எதை எழுதினாலும் குற்றம் என்ற பெயர் வந்துவிட்டதோ என்பதால் இப்படிச் சொல்கிறேன். நான் இப்படி ஒரு பாரா எழுதி சொல்ல முயன்றதை சுரேஷ் கண்ணன் ஒரே வரியில் சொல்லியிருக்கிறார் பாருங்க. "ஆனால், இப்போது வலைப்பதிவு எழுதுகிறவர்களில் சிலர், இதை outlet-ஆகப் பயன்படுத்தாமல் toilet-ஆக பயன்படுத்துவதுதான் பிரச்சினை". இதுக்குதான் சுரேஷ் கண்ணன் வேண்டும் என்பது :-)
ஆனாலும் சுரேஷ் சிலர் என்று எல்லாம் சொன்னால் ஒருத்தருக்கும் உறைக்காது. பெயர் சொல்லி எழுதிவிட்டு அவதூறு வாங்க நான் தயாரில்லை என்கிறீர்களா? பெயர் சொல்லி எழுதினாலும் ஒன்றுக்கும் உறைக்காது. அதனால், இந்தப் பிரச்னை எல்லா இடங்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கும். விஷயமறிந்தவர்கள் சொல்கிறார்கள். தமிழ்.நெட், soc.culture.tamil எல்லாம் இப்படித்தான் கெட்டுப் போனதென்று. பதிலுக்கு உங்களைப் போன்றவர்கள் நல்ல விஷயங்களை எழுத எழுத இதை மேலே எடுத்துச் செல்ல முடியும். எனவே, சரோஜாதேவியைப் படிக்க இருப்பவர்கள் மாதிரி, toilet மாதிரி பயன்படுத்துபவர்களைப் படிக்கவும் இருக்கிறார்கள் என்று விட்டுவிட்டு, உங்களுக்குப் பிடித்ததை எழுதிக் கொண்டே இருங்கள்.
"ஏறக்குறைய 550 வலைப்பதிவுகளில் 20கூட நல்ல வலைப்பதிவுகள் தேறாது" என்றாரா பிரசன்னா? மாமே, அடுத்து வலைப்பதிவுலே உனக்கு டின் கட்டப் போறாங்க. :-) சரி, அந்த 20 யாருன்னு மட்டும் சொல்லும்வே.
பிரகாஷ் ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு பாராவாக விரித்து எழுத வேண்டும். அவசரத்தில் எழுதியிருக்கிறார் போலிருக்கிறது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் தாவித் தாவிச் செல்கிறார்.
உஷா எழுதியிருக்கிற எதைப் பற்றியும் கருத்து சொல்ல பயமாயிருக்கிறது :-)
சுவடு சங்கர், க்ருபா சங்கர் எழுதியதைப் படித்தேன்.
அன்புடன், பி.கே. சிவகுமார்
By PKS, at Fri Jun 03, 11:45:33 PM IST
Mookan sonnadhe emathu karuthum.
Mikka Nandrikal!
By Balaganesan , at Fri Jun 03, 11:55:59 PM IST
Dear Desikan
Excellent compilation. I enjoyed as if I also participated. He is right on blogs.
Thanks for your organization and presentation
Regards
Sa.Thirumalai
By Anonymous, at Sat Jun 04, 06:05:43 AM IST
பி.கே.எஸ்., அதிகமாக எழுதினால் பெரிய போஸ்டிங்காக போய்விடும் என்பதால் சிறியதாக எழுதவேண்டும் என்று எழுதினேன். என்னால் சிறியதாக எழுதவே முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு சிறியதாக எழுதி அனுப்பினேன். அதற்குப் பின் பார்த்ததில், சுஜாதா பேசியதை விட நான் பேசியது அதிகம் இருப்பது தெரிந்தது!!! என்ன செய்ய! சுஜாதாவைப் புகழக் கூடாது என்பதில்லை. நான் சந்திக்க நினைக்கும் ஆதர்ச எழுத்தாளர்களில் அவரும் ஒருவர் என்பதே நான் அவரை எவ்வளவு விரும்புகிறேன் எனச் சொல்லும். இன்னும் நிறையக் கேள்விகள் கேட்க முடியாமல் போன வருத்தம் இருக்கிறது. கூடிய சீக்கிரம் அதை நிவர்த்தி செய்யவேண்டும்.
நன்றி,
பிரசன்னா
By Haranprasanna, at Sat Jun 04, 07:18:06 AM IST
A very special and unparrellel event. This record is extremely interesting and exclusive because of the participants reviews along with after comments.
-Srinivasan Natarajan.
By Anonymous, at Sat Jun 04, 10:53:26 PM IST
I hope it is very "Hot" in chennai.
Expecting some more meetings like this...
Desikan You have become thin ...
I missed this very much.
By Anonymous, at Sun Jun 05, 09:30:20 AM IST
Desikan, did you capture the audio during the get together?
By புலம்பல்ஸ், at Sun Jun 05, 10:04:46 AM IST
¿¡õ º¢Ä §À¨Ã ´ÕӨȡÅÐ À¡÷òÐô §Àº §ÅñÎõ ±ýÚ ¾Åõ ¸¢¼ô§À¡õ. ¬É¡ø §¿Ã¢ø «ó¾ Å¡öôÒ ¸¢ðÎõ ¦À¡ØÐ Å¡÷ò¨¾¸û ¦ÅÇ¢§Â Åà «¼õÀ¢ÊìÌõ. þó¾ì ¸ÄóШá¼Ä¢ø ¸ÄóÐì ¦¸¡ñ¼ «¨ÉÅÕìÌõ þÐ ²üÀðÊÕ츢ÈÐ ±ýÚ ¿¢¨É츢§Èý.
By மஞ்சூர் ராசா, at Sun Jun 05, 06:14:59 PM IST
தேசிகன்.. மற்றும் பங்குகொண்டவர்களே,
நல்ல பதிவு. அப்படியே படங்களில் யார் யார் இருக்கிறீர்கள் என ஒரு குறிப்பும் கொடுத்தால் நன்று.
- அலெக்ஸ்
By Alex Pandian, at Mon Jun 06, 01:35:20 PM IST
Avial suvaiyaaga irundhudhu
By Uma, at Mon Jun 06, 05:36:00 PM IST
சே, இது ரொம்ப அநியாயம். இதுக்காகவே சென்னைக்கு ஜாகையை மாத்திக்கலாமான்னு இருக்கு.
ஆனாலும் படிச்சதும் நானும் அங்கே ஒரு சேர்ல உட்கார்ந்துட்டுத் தான் இருந்தேன்னு இருந்தது.
தேசிகன்... அவர்கிட்ட சொல்லிடுங்க... நாங்கல்லாம்(நானும் என் நான்கு ஒன்று விட்ட அக்காக்களும்) தமிழ் மீடியம், விடாமல் குமுதம், விகடன் படிப்போம். என் ஒன்றுவிட்ட அண்ணா டான்பாஸ்கோ சரக்கு. தமிழ் தடுமாறும் தடுமாறும் அப்படித் தடுமாறும். தமிழ் மார்க்கு வர்ற வரைக்கும் பேயறஞ்ச முகம். அப்புறமும் தான்.
அவனுக்கு திடீர்ன்னு எதோ ஒரு வெறி வந்து எண்பதுகளில் அத்தனை சுஜாதா புத்தகங்களும் லெண்டிங் லைப்ரரியில் எடுத்து படிக்க ஆரம்பித்திருந்தான். எங்களுக்கும் கொடுக்க சொன்னால் நீங்கள் வீணாக்கிற நேரத்தில் நான் இன்னொரு புத்தகம் படித்து விடுவேன் என்பான். காசு வேற பிரச்னை. படிக்க படிக்க புத்தகம் மூடிப் போனால் விட்ட இடத்தை தேடிக் கண்டு பிடிக்கவே அவனுக்கு ஒரு மணி நேரம் ஆகும். அவ்வளவு தமிழ் ஞானம். ஆனாலும் எல்லாம் படித்திருக்கிறான். நான் அன்றைக்கு அங்கிருந்தால் இதைச் சொல்லியிருப்பேன் என்று படிக்கும் போது தோண்றியது.
நிர்மலா.
By Nirmala, at Mon Jun 06, 07:41:17 PM IST
அவரின் வீச்சின் ஆழமும் அகலமும் பிரமிப்பையூட்டுவன.
அவரின் time management பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
By Dharumi, at Wed Jun 08, 10:08:14 AM IST
Comments
Post a Comment