Skip to main content

சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல்-0 2

ராம்கி,(சில சமயம் ரஜினி ராம்கி), வயது 29. சென்ட்ரல் எக்ஸைஸில் இருக்கிறார். http://rajniramki.blogspot.com.


 சுஜாதாவின் வருகைக்காக உட்லண்ட்ஸ் வாசலில் காத்திருந்த நேரத்தில் மனதில் தோன்றியது இதுதான். சுஜாதா எழுதாத விஷயங்கள் எதைப்பற்றி. 'அதுக்கு முதல்ல அவரு எழுதின எல்லாத்தையும் படிச்சிருக்கணும்டா மவனே' மனசாட்சியின் குரலை அலட்சியம் பண்ணாமல் கூட்டத்தோடு கூட்டமாய் அடக்கி வாசிக்கலாம் என்று முடிவெடுத்த நேரத்தில்தான் சரியாக ஆறு மணிக்கு காரில் வந்து இறங்கினார். எப்போதும் எக்கனாமிக் டைம்ஸ் படிக்கும் எதிர்வீட்டு மாமாவை ஞாபகப்படுத்தும் தோற்றம். நடையில் மட்டும் நிறையவே தாத்தாக்களை. வெளிச்சமில்லாத இடத்தில் பக்கத்து சீட் ஹிந்தி ஆசாமிகளின் கூச்சல்களுக்கு நடுவே ரவுண்டு கட்டி உட்கார்ந்து பேசுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. பாக்கெட் நாவலின் கடைசி பத்து பக்கங்களில் வரும் கேள்விகளைப் போல 'ஸார், நீங்க வஸந்தா, கணேஷா'ன்னு நம்ம ஸ்டைலில் கேட்டு பூஜையை போட்டுவிடலாமான்னு நினைத்த நேரத்தில் அவரே ஆரம்பித்தார், கொஞ்சம் கனமான விஷயத்தில். நுழைவுத்தேர்வு குளறுபடிகளை பற்றி ஏ.சி ரூமில் உட்கார்ந்து பேசி அரசாங்கத்தை நொந்து கொள்வதோடு பேச்சு நின்றுவிடுமோ என்று நினைக்க ஆரம்பித்த நேரத்தில் அதற்கான ரெமிடியைப் பற்றியும் பேச ரெடியானார்.


இரண்டு மாதத்திற்கு முன்பு இன்காம் டாக்ஸ் ஆபிசுக்கு லெக்சர் கொடுக்க வந்தபோது உட்கார சீட் இல்லாமல் தூண் ஓரமாக நின்று கொண்டே கவனித்தது ஞாபகத்திற்கு வந்தது. பரவாயில்லை, இப்போது நேருக்கு நேர் கண்ணைப் பார்த்து பேசவும் குறுக்கே கேள்வி கேட்டு பதில் வாங்கவும் முடிந்திருக்கிறது. மூன்று பக்க இன்கம்டாக்ஸ் ரிட்டர்னை ஒரே பக்கத்தில் வருவது மாதிரி 'கற்றதும் பெற்றது'மில் ஒரு சாம்பிள் கொடுத்திருந்தார். இன்கம்டாக்ஸ் கூட்டம் முடிந்து கேஷ¥வலாக அடிஷனல் கமிஷனர் தோள் மேல் கைபோட்டு டாக்ஸ் சிம்பிளிபிகேஷன் பற்றி சளைக்காமல் பேசியதற்கு ஏதாவது புண்ணியமிருக்கும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவர்தான். இருந்தாலும் ஊதற சங்கை ஊதி வைப்போமேன்னு அவர் கொடுத்த ஐடியாவெல்லாம் புருவத்தை பெரிசாக்கின விஷயங்கள்.


சினிமாக்காரர் என்கிற சுஜாதாவின் முகமும் நிறைய கேள்விகளை கேட்க வைக்கிறது. ப்ரியா, காயத்ரி, நினைத்தாலே இனிக்கும் பற்றியே நண்பர்கள் அதிகமாக கேட்டதன் காரணம் அறியேன். (ரோஜா, விக்ரம், பம்பாய் பத்தியெல்லாம் ஏன் யாரும் கேள்வி கேட்க மாட்டேங்கிறாங்க!) நினைத்தாலே இனிக்கும் சரியாக போகததற்கு அவர் சொன்ன காரணங்களும் பொருத்தமாகத்தான் இருந்தன. விமர்சனத்தில் அவரோட பெயரை சொல்லலைன்னு கோபித்துக்கொண்டவர்களுக்கு ஒரு நற்செய்தி. கதைதான் சுஜாதாவாம். திரைக்கதை அனந்து பண்ணியதாம்! மும்பை எக்ஸ்பிரஸ் பற்றிய விமர்சனத்தோடும் அந்நியன் பற்றிய எதிர்பார்ப்புகளுடனும் சினிமா செஷன் முடிந்தது.


சுஜாதாவின் தொடர்கதைகளை பற்றி அவரிடம் ஒரு மணி நேரத்திற்குள் பேசிவிடமுடியுமா என்கிற தயக்கமே என் வாயை அடைத்துவிட்டது. நினைவு தெரிந்த நாள் ஊர் உலகத்தில் எழுத்தாளர் என்றாலே அது சுஜாதா மட்டும்தான் என்று நினைத்துக்கொண்டிருந்த ஜாதி நான். அதிகம் பேசாமல் கவனிக்க ஆரம்பித்தபோதுதான் ஒரு ஆச்சர்யம். இந்த வயதிலும் தன்னுடைய எல்லா சிறுகதைகளையும் ஞாபகத்தில் வைத்திருக்கிறாரே!


சுஜாதா சொன்ன இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.


1. நிறைய படிக்கவேண்டும். படிப்பது என்றால் நாம் எழுதியது, அடுத்தவர் எழுதியது என்றெல்லாம் வகை தொகையில்லாமல் படிக்கவேண்டும்
2. காட்டமான விமர்சனங்களுக்கான பதிலடியை படைப்புகளின் மூலமாகத்தான் சொல்லவேண்டும்; பகிரங்கமாக அல்ல.


சுஜாதாவை படிப்பவர்களுக்கு போரடிப்பதில்லை. பலரை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். நிறைய பேரை எழுத வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழில் சுஜாதாவுக்கு மட்டும் ஏகலைவன்கள் அதிகம். புதிதாக எழுத வருபவர்களை ஊக்கப்படுத்தவேண்டும் என்ற பிரசன்னாவின் கருத்தையே நானும் வழிமொழிந்தேன். சுஜாதாவை அழைத்து வந்ததுமில்லாமல் போண்டோவையும் காபியும் வாங்கிக்கொடுத்த தேசிகனை பாராட்ட ஓடுவதற்குள் மற்றவர்கள் முந்திக்கொண்டார்கள்.


1994-1996 வருஷம். அதிகமாக வாசகர் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்த காலம். குமுதம் அப்போதெல்லாம் வாராவாரம் 'புதுசு கண்ணா புதுசா'ன்னு ஏதாவது ஒரு தினுசில் வரும். இலக்கியத்திலிருந்து ஏ ஜோக்ஸ் வரை எல்லாமும் இருக்கும். 1994 வருஷம் குமுதத்திற்காக சுஜாதா, ரஜினியை சந்தித்தது பத்திரிக்கை பேட்டி விஷயத்தில் சத்தியமாய் ஒரு மைல்கல். இயல்பான உரையாடலாக ஆரம்பித்து ரஜினி சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் சொன்ன சந்திப்பு. ரஜினியுடன் நானே உட்கார்ந்த மாதிரியான உணர்வை தந்த சந்திப்பை ஞாபகப்படுத்தி என்னுடைய புத்தகத்தையும் கொடுத்தேன். ரஜினி பற்றி ஒரு புத்தகமா என்கிற ஆச்சரியத்தோடு வாங்கிக்கொண்டார். ம்...வந்ததுக்கு தண்டனை!


 



* - * - *
சுரேஷ்கண்ணன், ஸ்வஸ்திக், விளம்பரத்துறை, வயது 31 இருக்கலாம். http://pitchaipathiram.blogspot.com


சுஜாதா என்கிற எழுபது வயது இளைஞர் சுஜாதா, கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எழுதும் போது, தன்னை வந்து சந்திக்கும் வாசகர்களைப் பற்றி குறிப்பிட்டு விட்டு இவ்வாறு எழுதினார்: 'எனது உண்மையான வாசகர்கள் என்னை வந்து சந்திப்பதில்லை'.


எனக்கு இதில் உடனே உடனே உடன்பாடு ஏற்பட்டது. ஏனெனில், ஒரு சிறந்த படைப்பாளி தன்னுடைய படைப்புகளிலேயே தாம் தீவிரமாக நம்புகிற கருத்துக்களையும், எண்ணங்களையும் முழுமையாக எந்த வித உபகேள்விகளுக்கும் இடமில்லாமல் மிக நேர்மையாக எழுதி விடுகிறார். ஆக அந்தப் படைப்பாளி எழுதியதையே நாம் முழுவதையும் உள்வாங்கிக் கொண்டால் அது போதுமானதாக இருக்கும். அதை விட்டு, அந்தப் படைப்பாளியை சந்தித்து அபத்தமாக உரையாடுவது, ஆட்டோகிராப் வாங்குவது போன்றவை, 'நான் அந்த எழுத்தாளரை சந்தித்தேன்' என்று ஜம்பமடிப்பதற்கு உதவுமே தவிர வேறொன்றிற்குமில்லை. ஆனால் படைப்பாளி எழுதின வட்டத்தையும் தாண்டி சிந்தித்து தனது ஐயங்களை அவரிடம் தெளிவுபடுத்திக் கொள்ள முயலும் வாசகர்கள் அரிதானவர்கள்; இந்த நிலையிலிருந்து விதிவிலக்கானவர்கள்.


இந்த காரணத்திற்காகவே, நான் பொதுவாக எந்த எழுத்தாளரையும் சந்திக்க முயல்வதில்லை, என் வாசகப் பயணத்தை நல்லதொரு திசையில் மாற்றியமைத்த மற்றும் என் மிகுந்த அபிமானத்திற்குரிய சுஜாதா உட்பட.


()


ஆனால் கடந்த வாரத்தில் ஒரு நாள் பிரசன்னா தொலைபேசியில் "நண்பர் தேசிகன் மூலமாக எழுத்தாளர் சுஜாதாவை சந்திக்கலாமென்றிருக்கிறோம். நீங்கள் சுஜாதாவின் படைப்புகளில் மிகுந்த பிரேமை கொண்டிருக்கிறவர் என்று நான் அறிவேன். நீங்களும் வருகிறீர்களா?" என்று அழைத்த போது வந்த சந்தர்ப்பத்தை தவற விட வேண்டாமே என்று உடனே ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டேன்.


28.05.2005. மாலை ஆறு மணி. உட்லண்ட்ஸ் டிரைவ்-இன் ரெஸ்டாரண்ட்.


இதுவரை புகைப்படங்களிலும், நூல் வெளியீட்டு விழாக்களில் தூரமாக நின்று மட்டுமே பார்த்திருந்த சுஜாதா, தனது அசாதாரணமான உயரம் காரணமாக சற்று குறுகினாற் போல் தளர்ச்சியாக நடந்து வர, 'இவரிடம் என்ன கேள்வி கேட்டு, என்னத்த பதில் சொல்லப் போகிறார்' என்று ஆயாசமாக இருந்தது. கற்றுக் கொடுத்தவர்கள் அனைவரும் ஆசான்கள் எனில் சுஜாதா எனக்கு முக்கியமானதொரு ஆசான். எழுத்துலகில் துரோணரைப் போல் திகழும் அவரின் பல்லாயிரக்கணக்கான ஏகலைவன்களில் நானுமொருவன். பதிலுக்கு சுஜாதா, நல்ல வேளையாக கட்டை விரலையெல்லாம் கேட்காமல், தன்னுடைய மெத்து மெத்தான ஐந்து விரல்களையும் மென்மையான புன்னகையுடன் என்னிடம் நீட்டினார். "நான் சுரேஷ் கண்ணன்" என்று சந்தோஷத்துடன் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.



உணவகத்தின் குளிர்பதனம் செய்யப்பட்ட அறையில் ஆரம்பித்தது எங்கள் அரட்டைக் கச்சேரி. நாங்கள் ஐந்து பேர். நான், பிரசன்னா, ராஜ்குமார், ரஜினிராம்கி, ராமச்சந்திரன் உஷா. எங்களை உரையாடவிட்டு பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்த தேசிகன். (இகாரஸ் பிரகாஷ், சுவடுகள் ஷங்கர், ஷங்கர் கிருபா, பிரதீப் போன்றோர் பிற்பாடு வந்து இணைந்து கொண்டனர்)


ஒரு சிறிய ராணுவ பட்டாலியன் போல் சுஜாதாவை நோக்கி கேள்விக் குண்டுகளை சரமாரியாக நாங்கள் எறிய, நிறைய பேசுவாரோ மாட்டாரோ என்கிற என் தவறான அனுமானத்தையெல்லாம் தூள்தூளாக்கும் வகையில் அனுபவம் மிகுந்த ராணுவ தளபதி போல் எங்கள் கேள்விகளை அனாயாசமாகவும், உற்சாகமாகவும் புன்னகையுடனும் எதிர்கொண்டார் சுஜாதா என்கிற அந்த 70 வயது இளைஞர். ஒரு திட்டமிட்ட உரையாடலாக இல்லாமல், நட்புடன் கூடிய கலந்துரையாடலாக இருந்தது அது. எங்களில் பெரும்பாலானோர் அவரை முதன் முறையாகப் பார்ப்பதினால் ஆர்வத்துடன் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு பல கேள்விகளை முன்வைத்தோம். பல்வேறு ரசனை கொண்ட குடும்ப உறுப்பினர்கள், தொலைக்காட்சியில் தங்களுக்குப்பிடித்த சேனல்களை மாற்றி மாற்றி அமைப்பது போல் இருந்தது அது.



இதில் நான் கேட்ட கேள்விகளை மட்டும் தொகுத்தளித்துள்ளேன். சுஜாதா பேச்சு மொழியில் கூறிய பதில்களை நான் உரைநடைத்தமிழில் இடங்களில் மாற்றியமைத்துள்ளேன். இதில் ஏதேனும் கருத்துப் பிழைகளிருந்தால், அது என் தவறாக இருக்கக்கூடும்.


"இந்த போண்டா ரொம்ப புஷ்டியாயிருக்கிறதே" என்கிற சுஜாதா பிராண்ட் நகைச்சுவையுடன் ஆரம்பித்த அந்த உரையாடலில் இருந்து சில முக்கியமான பகுதிகள்.



()



உரையாடல் இயல்பாக இன்றைய கல்வித்துறையின் போக்குகளில் இருந்து ஆரம்பித்ததால், என் முதல் கேள்வி:


சுரேஷ் கண்ணன்: "இன்றைக்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ரேஸ் குதிரைகள் போல் வளர்க்கின்றார்கள். இன்றைய தேதியில் கல்வி என்பது அடித்தட்டு மக்கள் நுழைய முடியாதது போல், வாங்க முடியாத luxury பொருள் போல் ஆகி விட்டதே? இதனால் கிராமப் புறங்களில் உள்ள மாணவர்கள், அவர்கள் விரும்பிய படிப்புக்களை படிக்க முடியாமல், ஏதோவொரு கிடைத்த துறைப் படிப்பை படிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்களே?"



சுஜாதா: "இடஒதுக்கீட்டின் மூலம் பின்தங்கிய மக்களும் விரும்பிய படிப்பை படிக்கிற வாய்ப்பு இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாகவும், சில மேல்தட்டு மக்கள் முறையற்ற வழிமுறையில் அந்த வாய்ப்பை குறுக்கு வழிகளில் பயன்படுத்துவதாலும் இந்த நிலை ஏற்படுகிறது."



சுரேஷ் கண்ணன்: "பாலகுமாரன் தன் முன்கதைச் சுருக்கத்தில் 'சுஜாதா தனக்கு சிறுகதை எழுதுவதற்கான வழிமுறைகளை சொல்லித் தந்தார்' என்று குறிப்பிட்டிருக்கிறார். எழுதுவதில் ஆர்வமுள்ள நாங்களும் அதே கேள்வியை இப்போது உங்கள் முன்வைத்தால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். அதேதானா? அல்லது updated-ஆன விஷயங்கள் ஏதேனும் உள்ளதா?"


சுஜாதா: "கதையை முதல் வரியிலேயே ஆரம்பித்து விடுங்கள். இதுதான் நான் அவருக்கு சொன்னது. வேறொன்றுமில்லை"


சுரேஷ் கண்ணன்: "உங்கள் சிறுகதையில் எனக்கு பிடித்தது 'பிலிமோத்ஸவ்' "


சுஜாதா: "அப்படியா?


சுரேஷ் கண்ணன்: நீங்கள் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் பெரும்பான்மையினர் தங்களுக்கு பிடித்ததாக கூறும் சிறுகதை 'நகரம்'. அதை நிதானமாக திட்டமிட்டு எழுதினீர்களா? அல்லது பத்திரிகைகளின் துரத்தல்களுக்கேற்ப அவசரமான மனநிலையில் எழுதினீர்களா?"


சுஜாதா: "மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரை பார்க்கச் சென்றிருந்த போது, அங்கு பார்க்க நேர்ந்த காட்சிகளின் தாக்கத்தில் உடனடியாக எழுதப்பட்ட கதை அது."


சுரேஷ் கண்ணன்: "இப்போது இணையத்தில் ஏறக்குறைய 500 பேர் வலைப்பதிகிறார்கள். பொதுவாக வலைப்பதிவுகளைப் படிக்கிறீர்களா? வலைப்பதிவுகளின் போக்கு எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?"


சுஜாதா: நிறைய வலைப்பதிவுகளப் படிக்கிறேன். சில பேர்களின் வலைப்பதிவை எழுத்துரு பிரச்சினை காரணமாக படிக்க இயலவில்லை. பத்ரி, தேசிகன் போன்றோர்களின் பதிவுகள் படிக்கமுடிகிறது. பொதுவாக வலைப்பதிவுகள் அனுமார் வால் போல் நீண்டு கிடக்கிறது. அரிதாக கிடைக்கிற தகவல்களை உள்ளடக்கியதுதான் ஒரு சிறந்த பதிவாக இருக்க முடியும்.


சுரேஷ் கண்ணன்: "நீங்கள் உங்கள் சிறுவயதில் எழுதிக் கொண்டிருந்த கையெழுத்துப் பத்திரிகைகளின் நவீனவடிவம்தானா இந்த வலைப்பதிவுகள்?"


சுஜாதா: "ஆம். நாங்கள் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையில் நாங்களே படம் வரைவோம். இதெல்லாம் எழுதுகிற ஆர்வமிருக்கிறவர்களுக்கு ஒரு outlet மாதிரித்தான்.


சுரேஷ் கண்ணன்: "ஆனால்... இப்போது வலைப்பதிவு எழுதுகிறவர்களில் சிலர், இதை outlet-ஆக பயன்படுத்தாமல் toilet-ஆக பயன்படுத்துவதுதான் பிரச்சினை."


(உரையாடல் இப்போது தமிழர்களின் ஆதார விஷயமாகிய சினிமாவின் பக்கம் திரும்புகிறது)


சுரேஷ் கண்ணன்: "பாய்ஸ் படத்திற்கு ஏன் அவ்வளவு எதிர்ப்பு? ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடத்திய, எதிர்கொண்ட விஷயங்கள்தானே அதில் இருந்தது?"


சுஜாதா: "அவர்கள் அதை திரையில் பார்க்க விரும்பவில்லை"


சுரேஷ் கண்ணன்: "ஒரு படத்தின் வசனங்கள் ஆட்சேபத்திற்குரியதாக இருக்கும் பட்சத்தில், யாரை நாம் திட்ட வேண்டும்? இயக்குநரையா? வசனகர்த்தாவையா?"


சுஜாதா: "ஒரு இயக்குநர்தான் படத்தின் எல்லாத்துறைகளுக்கும் பொறுப்பு. அவர் தீர்மானித்த பின்தான் அவை காட்சிகளில் இடம் பெறுகின்றன. மேலும் வசனகர்த்தா எழுதிய வசனங்கள் அப்படியே இடம் பெறும் என்கிறது கிடையாது. சம்பந்தப்பட்ட நடிகர்களும் தங்கள் சொந்த வசனங்களை பயன்படுத்துவார்கள். 'பாய்ஸ்' படத்தில் சில காட்சிகளில் விவேக் அதை செய்தார்"


சுரேஷ் கண்ணன்: உங்கள் சிஷ்யர்களில் ஒருவரான, பெங்களூர் இரவிச்சந்திரன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?


சுஜாதா: அவர் இறந்து விட்டார். அவருக்கு நேர்ந்த சில அந்தரங்கப் பிரச்சினை காரணமாக தொடர்ந்து மதுவருந்தியதின் காரணமாக இறந்து போனார். நல்ல எழுத்தாளர்.


(நான் இதைக் கேட்டு திகைப்பும், அதிர்ச்சியும் அடைகிறேன். இந்தச் செய்தியை ஊர்ஜிதப்படாமல் இணைய நண்பர்கள் மூலம் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தாலும், சுஜாதா மூலமாக மிக உறுதியாக இந்தச் செய்தியை கேடக நேரும் போது வருத்தமாகவே இருந்தது. இந்த வருத்தம் சுஜாதா குரலிலும் எதிரொலித்தது)


சுரேஷ் கண்ணன்: "இன்றைக்கு மரபு தெரியாமலே பலர் கவிதை எழுத வந்து விடுகின்றனர். எனக்கு கவிதை என்கிற வடிவமே தொடர்ந்து பிடிக்காமலே இருக்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? எனது முன்னோர்களின் ஜீன்களில் ஏற்பட்டிருக்கிற ஏதாவது குறைபாடா?" (சிரிப்பு)


சுஜாதா: "You may not come across several good poems" அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.".


சுரேஷ் கண்ணன்: "இவ்வளவு பழைய விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிற நீங்கள் ரம்யா கிருஷ்ணன் பெயரை மறந்து விட்டீர்களே?" (சிரிப்பு)


சுஜாதா: (சிரிப்பு)


சுரேஷ் கண்ணன்: "நீங்கள் ஆனந்த விகடனில் 70 ஆண்டு நிறைவையொட்டி எழுதியிருந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது"


()


நண்பர்களின் பல கேள்விகளுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் பதிலளித்த சுஜாதா 7.30 மணிக்கு தனது உரையாடலை முடித்துக் கொண்டார். மனமில்லாமல் நாங்கள் எழுந்து கொள்கிறோம். 'உங்களை ரொம்பவும் சிரமப்படுத்தி விட்டோமா' என்பதற்கு 'அதெல்லாம் இல்லை' என்கிறார். தேசிகனை அவர் 'என் சிஷ்யன்' என்று குறிப்பிட்ட போது, தேசிகன் மீது சற்று பொறாமையாக இருந்தது. நண்பர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதும், கையெழுத்து வாங்குவதுமாக இருக்கின்றனர். வழக்கம் போல் நான் ஒதுங்கி நிற்கிறேன்.


"இவ்ள நேரம் எங்களுக்கு பத்தலைங்க. என்சைக்ளோபீடியாவ ரெண்டு பக்கம் புரட்டிப் பாத்தா மாதிரிதான் இருக்குது. இன்னும் கூட நெறைய பேச வேண்டியிருக்கு. வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க" என்கிற எங்களுக்கு புன்னகையுடன் கையசைத்து விடைபெற்று காரில் ஏறிக் கொள்கிறார்.


()


இன்னும் சில விமரிசனப்பூர்வமான கேள்விகளை கேட்கலாமா, வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்த நான், மகிழ்ச்சியும், சிரிப்பும் பொங்கி வழிந்த அந்த உற்சாகமான சூழ்நிலையை கெடுக்க விரும்பாமல் எனக்குள்ளேயே அந்த கேள்விகளை மூழ்கடித்துக் கொண்டேன். இன்னொரு வேளையில் பார்க்கலாம். நாங்கள் தயாரான கேள்விகளோடு மிகவும் முன்னேற்பாடோடு வந்திருந்தால் இந்தக் கலந்துரையாடல் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கலந்துரையாடல் எனக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. சுஜாதா என்கிற அந்த பன்முக ஆளுமையிடமிருந்து இன்னும் நிறைய விஷயங்களை கேட்டிருக்கலாம்.



பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் என்று பல சினிமா ஜாம்பவான்களிடமும், பல துறையிலுமுள்ள அறிஞர்களோடும் புழங்கிய சுஜாதா, அவரோடு ஒப்பு நோக்கும் போது குஞ்சுகுளுவான்களாகிய எங்களோடு சரிக்கு சமமாக பேசுவாரா என்கிற தயக்கத்தையெல்லாம் உடைத்தெறிந்து விட்டார். சுஜாதா என்கிற அந்த எழுத்தாளரிடம்..... எழுத்தாளரை விடுங்கள்.... ரங்கராஜன் என்கிற அந்த எளிய மனிதரிடம் ஒன்றரை மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தது ஒரு நிறைவான அனுபவமாக இருந்தது.


இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய நண்பர் தேசிகனுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். (மனிதருக்கு அபரிதமான நகைச்சுவை உணர்ச்சியிருக்கிறது. நண்பர் ராஜ்குமார், தாம் பெரம்பூர், திரு.வி.க.நகரில் இருந்து வருவதாக கூறியவுடன் இவர் "நான் பெங்களூர்ல இருந்து வர்ற வழில பார்த்த ஊர் மாதிரியிருக்கே" என்று கிண்டலடிக்கிறார்)


இந்த மாதிரியான எழுத்தாளர்களுடன் கூடிய நிறைவான சந்திப்புக்கள் அடிக்கடி நிகழ நான் வணங்கும் இயற்கையை பிரார்த்திக்கிறேன்.

Comments