புத்தகக் (கண்)காட்சிக்கு பொங்கல் அன்று சென்னை சென்றிருந்தேன். காலை 11 மணிக்கு, கூட்டம் அதிகமாக இருக்காது என்று நினைத்தேன். ஆனால் நான் போன சமயம் அப்படியில்லை; நுழைவு சீட்டு வாங்குவதற்கே க்யூ இருந்தது.
முதலில் விகடன் பிரசுரம் இருந்தது. தீபாவளி பட்டாசு கடை போல் கூட்டம் அலை மோதியது. எனக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு வெளியே வருவதே ஒரு பெரிய சாதனையாக இருந்தது. அதிகம் விற்பனையானவை - கற்றதும், பெற்றதும், மதன் ஜோக்ஸ், ஓ-பக்கங்கள். பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் 4000/= முன் பதிவு செய்தால் 1999 என்று தூள் பறந்தது. விகடனில் மொத்தம் 113 தலைப்புகள் இருக்கின்றன.
அடுத்தது கிழக்கு பதிப்பகம் வந்தேன். ஏகப்பட்ட தலைப்புகள், எல்லோரும் எப்போதும் போல் கிழக்கு யுனிஃபார்ம் போட்டுக்கொண்டு வரவேற்றார்கள். ஹாய் மதன், துப்பறியும் சாம்பு ( முழு தொகுப்பு, படங்கள் ரொம்ப சுமார், பழைய படங்களில் சாம்புவிற்கு இருக்கும் மூக்கு இந்த புத்தகத்தில் இளைத்திருக்கிறது, அட்டைப்படத்தில் சாம்பு ஓட்டும் பைக் TN-06-DS-007 ரெஜிஸ்டரேஷன்!. முன்னுரையில் சீக்கிரம் தேவனின் படக்கதை வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். அலையன்ஸ் பதிப்பித்த புத்தகத்திலும் இதையே தான் சொல்லியிருந்தார்கள். பத்ரி மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது), உடல் மண்ணுக்கு ( Line of fire ) என்று அடுக்கியிருந்தார்கள். வாங்கிய புத்தகத்திற்கு ஒரு (நல்லி ஜவுளிக் கடை போல்) பை கொடுக்கிறார்கள். வாங்கிய எல்லா புத்தகங்களையும் அதில் தான் போட்டுக்கொண்டு வந்தேன். பத்ரி எப்போதும் கல்லாபெட்டியில் ஒரு பிளாஸ்டிக் டப்பா வைத்துள்ளார் "ராசியான டப்பாவா ?"
கிழக்கு பதிப்பகம் பையை வைத்துக்கொண்டு காலச்சுவடு ஸ்டாலுக்கு வந்தேன். நுழையும் போது ஒருவர் ஓடி வந்து ( சிகரேட் பெர்ஃப்யூம் போட்டுக் கொண்டிருந்தார்.)
"சார் இங்கே ஒன்லி இலக்கியம் சம்பந்தமான புத்தகங்கள் தான்!" என்றார்.
"அப்படியா.." என்று ஸ்மைல் செய்து விட்டு உள்ளே போனேன். பின்னாடியே சிகரெட் பெர்ஃப்யூம் தொடர்ந்ததால் சீக்கிரம் அந்த ஸ்டாலை விட்டு நக்கீரன் ஸ்டாலுக்கு போனேன்.
நக்கீரன் ஸ்டாலில், ஒருவர் மூலிகைப் புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கினார். வயது 50க்கு மேல் இருந்த ஒருவர் டாக்டர் நாராயண ரெட்டியின் "எது சுகம்" என்பதைப் படித்துக்கொண்டிருந்தார். போன முறை, 'இந்து மதம் எங்கே போகிறது?' அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய புத்தகம் இந்த முறை கெட்டி அட்டையில் வந்திருக்கிறது. இரண்டாம் பாகமும் வந்திருக்கிறது. நக்கீரன் ஸ்டாலில் எல்லோரையும் கவர்வது அங்கு வைத்திருக்கும் மக்கள் களம் போஸ்டர்.
அடுத்தது என்னைக் கவர்ந்தது பாரதி புத்தகாலயம் - 5, 10, 15, 20 25 ரூபாய்க்கு புத்தகங்கள் கிடைக்குமா ? கிடைக்கும். தவக்களையும் சுண்டைக்காயும், ஈ-யக்கா மாப்பிளை தேடிய கதை என்று சிறுவர்களுக்கு அழகான புத்தகங்கள். மலர் அல்ஜீப்ரா ( இரா. நடராசன் 25/=), எதிர்பாராத கண்டுபிடிப்புகள் ( பட் பட் பட்டாசு, நுண் அலை அடுப்பு, அனஸ்தீசியா, டெஃப்லான், உடையாத கண்ணாடி, ஸ்டெதஸ்கோப்... ) என்ற புத்தகம் 10 ரூபாய். ( ஒரு காப்பி 10 ரூபாய் ). கிறுகிறுவானம் - எஸ்.ராமகிருஷ்ணன்( 78 பக்கம் , 25/=).
அடுத்து அலையன்ஸ் பதிப்பகம் - நக்கீரன் ஸ்டாலில் இந்து மதம் எங்கே போகிறது என்பதை வாங்கியவர் இங்கு வந்து சோ எழுதிய "ஹிந்து மஹா சமுத்திரம்" (முதல் பாகம்) வாங்கினார். ஹிந்து மதம் அடுத்த ஸ்டாலுக்குச் சென்றது. அவரை தொடர்ந்து நானும் போனேன்.
பச்சை அட்டை அடுக்கியிருக்கும் வர்த்தமானன் பதிப்பகம். "சித்தர் பாடல்கள்" மூலமும் உரையும் இரண்டு பாகங்கள் . என்ன எழுதியிருக்கிறது என்று திறந்து பார்த்தால்
எங்குமுள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென்று அணுகிலார்
எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம்அன்றியே உண்மைஇரண்டும் இல்லையே
பிரபஞ்சம் முழுதுமாகப் பரவியுள்ள கடவுள் எங்கள் உடலில் புகுந்த பின், அக்கடவுளைக் கூறு போட்டு வேற்றுமை செய்பவர் கருத்திற்கு ஏற்ப இருப்பதில்லை. எல்லா உடம்பிலும் ஒரே கடவுளே புகுந்துள்ளார். அதை உணராது எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்று சமய வேறுபாடு செய்வது சரியாகுமா ? சமயவாதிகள்தாம் வேறுபட்டிருக்கிறார்களே தவிர கடவுள் ஒன்றுதான்! என்றது!.
அடுத்தது படங்கள், போஸ்டர், சிடிக்கள் என்று அடுக்கியிருக்கும் "பரமஹம்ச ஸ்ரீநித்யானந்தர்" ஸ்டாலுக்குப் போகும் போது "கூட்டத்தில் யாராவது டாக்டர் இருந்தால் அலுவலகத்துக்கு வரவும் என்று அறிவிப்பு வந்துகொண்டிருந்தது. (அரங்கினுள் காற்றோட்டம் கொஞ்சம் கம்மியாக இருந்ததால் ஒருவர் மூர்ச்சையாகியிருந்தார் என்று சொன்னார்கள்) ஸ்டால் உள்ளே, 'கதவைத் திற காற்று வரும்' என்ற புத்தகம் இருந்தது.
அடுத்தது பாவை பப்ளிகேஷன்ஸ் ஸ்டாலில் பக்கம் போன என்னை வலுக்கட்டயமாக உள்ளே அழைத்து கல்கியின் படைப்புக்களைப் பாருங்கள் என்றார்.
"பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை எல்லாம் சேர்த்து 500/= தான் சார்!"
"என் கிட்டே எல்லாம் இருக்கே!"
"பரவாயில்லை சார் யாருக்காவது கிஃப்ட் செய்யுங்கள்.." என்றார்.
அடுத்த ஸ்டால், "தமிழிலேயே சாட் செய்யுங்கள்" என்றது. மெதுவாக நழுவும் போது, உள்ளே இருக்கும் நவபாஷாண முருகன் சிலை என்னைக் கவர்ந்தது. உள்ளே போய் என்ன ஏது என்று விசாரித்து வந்தேன். தமிழ் சிடிக்கள் நடுவே முருகன் சிலை, முருகன் நிஜமாகவே தமிழ்க் கடவுள் தான்.
குழந்தைகள் "POGO" டீவியில் விரும்பிப் பார்க்கும் MAD நிகழ்ச்சியின் புத்தகமும் வந்திருக்கிறது.
உமா பதிப்பகம் ஆறு காண்டங்கள் - ஏழு தொகுதிகளில் கம்ப ராமாயணம் மூலமும் உரையும் ( உரையாசிரியர் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார்) போட்டிருக்கிறார்கள். விலை 2500/=
அடுத்த ஸ்டாலில் என்னைக் கவர்ந்தது அங்கு வைக்கப்பட்டிருக்கும் "தமிழ் கடிகாரம்". அங்கு இருந்தவரிடம், "இந்தக் கடிகாரம் எவ்வளவு?" என்றேன்
"சார், 135 ஒன்லி!" என்றார்.
அதற்குள் 100 மீட்டர் ரேஸ் ஓடியது போல் களைத்துப் போனதால் நேராக கேண்டீன் போனேன். பாதிக் கூட்டம் இங்கு தான் இருக்கிறது. இந்த முறை "ஃபுட் கோர்ட்" முறையில் இருந்தது. அறுசுவை இல்லாதது ஆறுதலாக இருந்தது. ஒரு டோக்கன் வாங்கினால், பஞ்சு மிட்டாய், பேல்பூரி, மினி மீல்ஸ், நான், புலாவ், கார்ன், பாப்கார்ன் என்று எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
சாப்பிட்டு விட்டு உயிர்மை ஸ்டாலுக்குச் சென்றேன். நான் அங்கு இருந்த போது இரண்டு மூன்று பேர், "சார், 'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்' வந்துவிட்டதா?" என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். நாளைக்கு வரும் என்று அலுக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
உயிர்மை ஸ்டாலுக்குப் பக்கத்தில், "பொன்னியின் செல்வன் தொடர்கிறது... " என்ற ஸ்டாலில் போய்ப் பார்த்தால் "அனுஷா வெங்கடேஷ்" பொன்னியின் செல்வனுக்கு பாகம் பாகமாக sequel எழுதியிருக்கிறார்கள். பெயர் காவிரி மைந்தன். கொஞ்சம் பயந்துபோய் அடுத்த ஸ்டாலுக்கு நகர்ந்தேன்.
காந்தி புத்தகங்கள் அடுக்கியிருந்தது. யாருமே இல்லாததால் ஸ்டாலில் இருந்தவர் நிதானமாக டிபன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். காந்தி படம் பக்கத்தில் "இது யாரப்பா ?" என்றது ஒரு குழந்தை. இது "காந்தி தாத்தா" என்று சொல்லிவிட்டு அப்பா அடுத்த ஸ்டாலில் உள்ள நியூமராலஜி புத்தகத்தைப் பார்க்கப் போய்விட்டார்.
கிழக்கு பதிப்பகம் Prodigy என்று தனி ஸ்டால் அமைத்திருக்கிறார்கள். குழந்தைகள் ஆர்வமாக கலர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு வந்த ஒரு குழந்தை எனக்கு பலூன் வேண்டும் என்று அடம்பிடிக்க மேலே இருந்த பலூன் ஒன்றைப் பறித்துத் தந்தார் ஒருவர்.
குமுதம் ஸ்டாலில் ஈ-ஓட்டிக்கொண்டிருந்தார்கள். "சார் எதாவது புது புத்தகம் வந்திருக்கிறதா ?" என்றேன்.
"நான் எல்லாப் புத்தகங்களையும் படிக்கவில்லை, அதனால் எனக்கு எல்லாமே புதுசு!" என்று ஜோக் கடித்தார். வேறு வழியில்லாமல் சிரித்துவிட்டு வந்தேன்.
எனி இந்தியன் ஸ்டாலில் ஜெயமோகன் புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகக் கையெழுத்து போட்டு கொடுத்து, என்னை போட்டோ எடுத்தார். ஹரன் பிரசன்னா. நன்றி.
பழனியப்பா பிரதர்ஸ், "மதராசபட்டினம் சென்னை 1600-1947 - இது ஒரு மாநகரத்தின் கதை" வெளியிட்டுள்ளார்கள். சென்னப்பட்டினம் காரர்கள் வாங்குவார்கள் என்று விட்டுவிட்டேன். ( விலை 275/= )
சுட்டி விகடனின் அறிவியல் விளையாட்டு அரங்கத்தில் கூட்டம் அலைமோதியது. வெளியே வந்த நான் என் பைக்கை எங்கே வைத்தேன் என்று தேடத் தொடங்கினேன்...
சில சிறந்த பட்டியல்...
சிறந்த படம் காமிக்கும் ஸ்டால் - நக்கீரன், சுட்டி விகடன்.
சிறந்த 'விலை'ப்பட்டியல் - கிழக்கு பதிப்பகம்.
கூட்டமான ஸ்டால் - விகடன்
ஈ-ஓட்டும் ஸ்டால் - குமுதம்
மாறாத ஸ்டால் - The Hindu
சிறந்த குழந்தைகளுக்கான தமிழ் புத்தகங்கள் - கிழக்கு, பாரதி புத்தகாலயம்.
சிறந்த புராணம் ஸ்டால் - பிரேமா பிரசுரம்.
எல்லா ஸ்டாலிலும் கிடைக்கும் புத்தகம் - ஃபிரியாக அவர்களுடைய விலைப்பட்டியல், மலிவு விலையில் கல்கியின் பொன்னியின் செல்வன்
எங்கும் நிறைந்திருநதவர்கள் - சுவாமி சுகபோதானந்தா, சுகி சிவம்,
சிறந்த புதுவரவு ஸ்டால் - ஆதி 'த' சாம்ராஜ் வெள்ளைக்கார சாமியார் ஸ்டால், எல்லோருக்கும் வெள்ளைகார பெண்மணியின் ஸ்மைல் இலவசம்.
எல்லோரும் செலவழித்த ஸ்டால் - கேண்டீன்
புத்தகக் கண்காட்சி ஆல்பம் பார்க்க
போன முறை சென்ற அனுபவம் இங்கே
Comments
Post a Comment