ஒரு நாள் விஜயமாக திருச்சி சென்றிருந்தேன். வைகுண்ட ஏகாதசி முடிந்து ஸ்ரீரங்கத்தில் கூட்டம் கம்மியாக இருந்தது. ரெங்க விலாஸ் கடைகளில் கலர் பரமபதம் லேமினேட் செய்து விற்பனை செய்கிறார்கள். ( விலை 7/= ). சின்ன வயசில் அப்பா எனக்கு வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் சேவித்துவிட்டு வரும் வழியில் இந்தப் படம் மற்றும் தாயக்கட்டை வாங்கித் தருவார். அப்போது எல்லாம் சிகப்பு, கருப்பு அல்லது நீல நிறத்தில் இருக்கும். அந்தக் காலத்தில் டிவியின் தாக்கம் அதிகம் கிடையாது; அதனால் இதை விளையாட முடிந்தது. இப்போது எவ்வளவு பேருக்குப் பொறுமை இருக்கும் என்று தெரியாது. முதலில் தாயம் போட்டு ஆரம்பித்து, பிறகு ஏணிமேல் ஏறி, பாம்பின் வால் வழியாக இறங்கி கடைசியில் தாயமாகப் போட்டு போட்டு சொர்க்கம் செல்ல வேண்டும். சில சமயம் விளையாட்டு முடியாமல், அடுத்த நாளுக்கும் தொடரும்.
தற்போது வந்திருக்கும் படம் நான் சிறிய வயதில் பார்த்த படம் இல்லை. எல்லாம் மாறிவிட்டது, ஏணிகள் இடம் மாறிவிட்டது, பாம்புகள் சிரிக்கின்றன. பரமபத விளையாட்டு எல்லோருக்கும் புரியும்படி, நல்ல குணங்களான தருமம், நீதி, நேர்மை, சத்தியம் மற்றும் அநீதி, தீமை இவற்றால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றையும் சுட்டிக் காட்டும். சற்று உற்றுக் கவனித்தால் (எவ்வளவு பேர் கவனித்திருப்பார்கள் என்று தெரியாது ) இதில், தாவரங்கள், விலங்குகள், மனிதன், எனப் பரிணாம வளர்ச்சி, மனிதன் தேவனாக உயரும் நிலை, பிறகு துன்பமில்லாத சுவர்க்கம். இவைகளை அடைய பாம்புகள் நமக்குத் தடையாக இருக்கும். எவ்வளவு சீக்கிரம் சுவர்க்கம் போகிறோம் என்பது தான் விளையாட்டு. கடைசியில் சில தெலுங்கு எழுத்துக்கள் இருக்கும், சுவர்க்கம் போவதற்குள் தெரிந்தால் நல்லது !
சோபானம் என்றால் என்ன ? விடை பாம்பின் வால் அடியில்
* * *
திருச்சிக்கு ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை; அதனால் KPN பஸ்சில் சென்றேன். நன்றாக கவனித்தால், இரண்டு சீட்டுக்கு நடுவில் கைவைத்துக்கொள்ள ஒரு கட்டை வைத்திருக்கிறார்கள். நான் போன சமயம் குண்டாக ஒருவர் அந்தக் கட்டையை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார். நான், இருந்த கொஞ்சம் இடத்தில் கையை வைத்தால், தள்ளிவிட்டார். இந்த விளையாட்டு இரவு முழுவதும் நடந்தது. பிறகு எனக்கு போர் அடித்து, தூங்கிவிட்டேன். ஆக்கிரமிப்பு என்பது முகாலயர்கள் முதல் தற்போது வரை இருக்கிறது. பலசாலி வெற்றி பெருகிறார். தோற்றவன் பிளாக் எழுதுகிறான்!.
***
சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். கூட்டம் கொஞ்சம் அதிகம். அதனால் நாதஸ்வரம் தவில் கோஷ்டி பக்கத்தில் தான் உட்கார இடம் கிடைத்தது. கீரவாணி, கல்யாணி எது வாசித்தாலும் மேடையில் வாத்தியார் கையசைத்தால் கெட்டி மேளம் வாசித்துவிட்டு தாளம் தப்பாமல் தொடர வேண்டும். இந்த நாதஸ்வர கோஷ்டி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தார்கள். அடிக்கடி 'கெட்டி மேளம்' வாசித்தார்கள். எனக்கு ஏன் என்று புரியவில்லை. தாலி கட்டிய பின் மணமேடைக்கு சென்ற மணமக்களிடம் வாழ்த்து தெரிவித்துவிட்டு இறங்கிய போது திரும்பவும் 'கெட்டி மேளம்' சத்தம் கேட்டது. வாத்தியார் அக்குளைச் சொரிந்துகொண்டிருந்தார். கெட்டி மேளத்தின் ரகசியம் இது தான்.
சோபானம் என்றால் நிறைய விளக்கங்கள் இருக்கு.
☞ சோபானம் என்றால் படிக்கட்டு என்று பொருள். சோபானவகை என்றால் பாரம்பரியம் என்று பொருள்.
☞ சோபானம் என்றால் பராக்கிரமம் என்றும் பொருள். கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு நல்லவைகளைப் புகட்டுவதற்காகப் புர்ரகதா போன்ற இசைக் கதை நிகழ்ச்சிகள் பிரபலமாயின. விளையாட்டு மூலம் சிறுவர்கள் மனத்தில் நல்லவைகளை வித்திடுவதற்கு பரமபத சோபான படம் பயன்படுத்தப்பட்டது. இதனை நாயக்க மன்னர்களும் தொடர்ந்து ஆதரித்தனர். வெள்ளைத் துணியைக் கடுக்காய் ஊறப் போட்ட தண்ணீரில் நனைத்து, அதில் கலம்பாரி முறையில் சித்திரம் தீட்டிப் பயன்படுத்தப் பட்டதாம். அதற்கு பின்னால் காதிதம் உருவான பிறகு துணியில் வரையப்பட்ட படங்கள் காலப்போக்கில் மறைந்து விட்டன.
☞ பரமபதசோபானம் - வேதாந்ததேசிகர் இயற்றியதும் திரு மாலின் பரமபதத்தை அடைவதற்குரிய மார்க்கத்தைப் படிப்படியாய் அறிவிப்பதுமான தமிழ்ப்பிரபந்தம்.
Comments
Post a Comment