Skip to main content

வினோத அனுபவங்கள்

'வியர்டு' என்ற சொல்லுக்கு தமிழில் 'வினோதமான' என்ற வார்த்தை, கொஞ்சம் பக்கத்தில் வருகிறது. உங்களிடம் உள்ள வினோத குணம் பற்றி எழுதுங்கள் என்றார்கள். என்னுடைய கிறுக்குத் தனங்களைப் பற்றி என்னை விட என் மனைவிக்குத் தான் அதிகம் தெரியும். கோடை விடுமுறைக்குச் சென்றிருப்பதால் வந்தவுடன் எழுதச் சொல்லுகிறேன். இந்தப் பதிவில், எனக்கு நடந்த சில வினோத அனுபவங்களைச் சொல்லலாம் என்று இருக்கிறேன். அரை டஜன் முதல் தவணையாக.இன்றைய பயணம் நேற்றைய டிக்கெட்
பெங்களூர் வந்த பிறகு வாரா வாரம் சென்னை செல்வது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஒரு வாரம் போகவில்லை என்றால் கூட ரயில்வேயிலிருந்து "ஏன் சார் இந்த வாரம் உடம்பு கிடம்பு சரியில்லையா?" என்று கேட்பார்கள். சுமார் 8 மாதம் முன் நடந்த இந்த அனுபவத்திற்கு என் மாமனாருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். பெங்களூர் வந்திருந்த மாமனார் 'மாப்பிளைக்கு எதாவது உபகாரம் செய்யலாம் என்று சென்னை செல்ல மைசூர் எக்ஸ்பிரஸில் டிக்கெட் புக் செய்துகொடுத்தார். மைசூர் எக்ஸ்பிரஸ் பற்றி சில குறிப்புகள் -  'பெங்களூர் சிட்டி' ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ( மெஜஸ்டிக் ) ராத்திரி 11:45க்குப் புறப்படுகிறது. கண்டோன்மெண்ட் 12:00, கே.ஆர்.புரம் 12:10 என்று ( சரியான சமயத்தில் கிளம்பினால்) வரும்.


என் மாமனார் நான் எப்போதும் கே.ஆர்.புரத்தில் தான் ஏறுவேன் என்று எனக்கு கே.ஆர்.புரத்திலிருந்து ஏறும்படி டிக்கேட் வாங்கியிருந்தார். அந்த வாரம் ரயில் ஏறியதும், எங்கள் சீட்டில் ஒருவர் கால் நீட்டி படுத்துக்கொண்டிருந்தார். அவரை தூக்கத்திலிருந்து எழுப்பி, இது எங்களுடைய  இடம் என்றோம். அப்படியா என்று எங்கள் டிக்கெட்டைப் பார்த்தார். பிறகு அவர் டிக்கெட்டைக் காண்பித்தார். இரண்டும் ஒரே நம்பர். அதற்குள் எங்கள் பேச்சு எல்லோரையும் எழுப்பியது. டிக்கெட் பரிசோதனை செய்பவரும் (TTE/TTR என்றும் தமிழில் அழைக்கலாம்.) வந்து சேர்ந்தார். என்ன குழப்பம் என்று இரண்டு டிக்கேட்டையும் வாங்கிப் பார்த்தார். பிறகு தான் புரிந்தது, கே.ஆர்.புரத்திலிருந்து 12:10க்குப் புறப்படுவதால் அடுத்த நாள் டேட் போட்டு டிக்கெட் வாங்க வேண்டும். அதாவது எங்களிடம் இருந்தது நேற்றைய டிக்கேட்!.


என்ன செய்வது என்று தெரியவில்லை. அதற்குள் டிக்கெட் பரிசோதிப்பவர், அடுத்த ஸ்டேஷன் வைட் ஃபில்ட் அதில் இறங்கிவிடுங்கள் என்றார். நான் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். வண்டி வைட்ஃபீல்ட் ஸ்டேஷனைக் கடந்து சென்று கொண்டிருந்தது.


டிக்கேட் பரிசோதிப்பவர் என்னிடம் வந்து "என்ன செய்யலாம் என்று இருக்கிறீர்கள் ?" என்றார்.


"நீங்கள் தான் சொல்லவேண்டும்.." என்றேன்.


"சரி, என் பின்னாடி வாருங்கள்!" என்று அழைத்து சென்றார். ஒரு பெட்டியில் சில காலி இடங்கள் இருந்தன. அந்தக் காலி இடங்களைக் காண்பித்து இங்கே படுத்துக் கொள்ளுங்கள் என்றார்.


காலை சென்னை வந்த போது, "என்ன நன்றாக தூங்கினீர்களா ?" என்று கேட்டுவிட்டுச் சென்றார்.


பாஸ்போர்ட்
அலுவலகத்தில் கொஞ்சம் நாள்  'டெக்னிகல் மார்கெட்டிங்' செய்து கொண்டிருந்தேன். ஐரோப்பா முழுக்க நன்றாகச் சுற்றினேன். அப்படிச் சுற்றிய ஒரு சமயம், ரயிலில் ஃபிரான்ஸிலிருந்து பெல்ஜியம் வந்துகொண்டிருந்தேன்.( ஃபிளைட் போர் அடித்ததால் ரயிலில் வந்தேன்.) நான் வந்த ரயில் பெட்டியில் என்னையும் சேர்த்து 5 பேர் தான் இருந்தார்கள். அதில் ஒரு காதல் ஜோடியை குளிர் பாடாய்ப்படுத்தியது. அதை பார்த்த எனக்கு குளிர் ஜுரம் வந்தது. அதை பற்றி எழுதப் போவதில்லைல் பயப்படாதீர்கள். நான் ஒரு ஜன்னல் சீட்டில் உட்கார்ந்துகொண்டேன்.  ப்ரஸ்ஸல்ஸ் செண்ட்ரல் ஸ்டேஷன் வந்த போது மணி இரவு 11:30. நான் அடுத்த இரண்டாவது ஸ்டேஷனில் இறங்க வேண்டும். அப்போது தான் அந்தச் சம்பவம் நடந்தது. ரயில் பெட்டியில் இருந்தவர்கள் எல்லோரும் இறங்கிவிட்டார்கள். அப்போது என் ஜன்னல் கதவை யாரோ ஒருவன் வேகமாகத் தட்டினான். நான் சைகையில் "என்ன? " என்பது போலக் கேட்டேன். அவன் விடுவதாக இல்லை, திரும்பவும் தட்டினான். நான் அவனைக் கவனிக்காமல் இருப்பது போல் இருந்தேன். ஆனால் அவன் விடுவதாக இல்லை, இன்னும் வேகமாகத் தட்டினான். திரும்பவும் அவனைப் பார்த்த போது, ஏதோ கெட்ட சைகை காண்பித்துக் கொண்டிருந்தான். நான் அவனை பார்த்துக் கொண்டிருந்த சமயம் வேறு பக்கமாக இன்னொருவன் வந்து என் லெப்டாப் பையை எடுத்துகொண்டு ஓடிவிட்டான். 'ஆர்கனைஸ்ட் கிரைம்' என்பதற்கு அர்த்தம் புரிந்தது. அவனைத் துரத்திக்கொண்டு ஓட ரயில் கிளம்பிவிட்டது. நான் எதையோ பிடித்து எழுந்தேனோ, அல்லது அழுத்தினேனோ சரியாக நினைவில்லை,  டிரெயின் நின்றது. டிக்கேட் பரிசோதிப்பவர் வந்து, என்ன லேப்டாப் போயிவிட்டதா ? என்று கேட்டார் ? ஆமாம். என்றேன். "தினமும் நடப்பது தான்!" என்று சொல்லிக்கொண்டு நடையைக் கட்டினார். ரயில் கிளம்பியது.


அந்த லெப்டாப் பையில் 1000 டாலர், என் ஹோட்டல் ரூம் சாவி, முகவரிகள்,  மற்றும் முக்கியமாக பாஸ்போர்ட் இருந்தது.


அடுத்த நாள் போலீஸ், இந்திய தூதரகம் என்று அலைந்து. எமர்ஜன்ஸி சர்டிபிகேட் வாங்கி இந்தியா வந்து சேர்ந்தேன். அடுத்த முறை சென்ற போது ஒன்பது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்துக்கொண்டு போனேன். ஏன் என்றால் பாஸ்போர்ட் தொலைந்தால் இந்தியத் தூதரகத்தில் கேட்பார்கள்.


பாண்டவர்களை முழுங்கிய கிணறு
அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்த சமயம். சம்மர் வெக்கேஷனுக்கு வருடா வடுடம் ஹைதிராபாத் செல்லுவது வழக்கம். எங்கள் அம்மா வழிப் பாட்டி, தாத்தா இருந்தார்கள். பத்து வீடு தள்ளி ஒரு சிவன் கோயில், கோயிலை ஒட்டி வில்வமரம், அதுக்கு பக்கத்தில் கோயில் குருக்கள் வீடு இருந்தது. அவருக்கு ஐந்து மகன்கள் இருந்தார்கள். எல்லோரும் எனக்கு ரொம்ப சீனியர். அவர்கள் வீட்டில் ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் அந்தக் கிணற்றில் ஒரு பாத்திரமோ வாளியோ விழுந்துவிட்டது. அவர்கள் வீட்டில் இது அடிக்கடி நடக்கும் சம்பவம் தான் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அப்படி விழும் போது, இந்த ஐந்து பேரில் யாராவது ஒருவர் கிணற்றில் இறங்கி அதை எடுத்து வருவார்.  அன்றும் அதே போல் ஒருவன் இறங்கினான், ஆனால் ரொம்ப நேரம் ஆகியும் வேளியே வரவில்லை. என்ன என்று பார்க்க அடுத்தவனும்  இறங்க அவனும் மேலே வரவில்லை, இப்படியே அண்ணன், தம்பி என்று ஐந்து பேரும் உள்ளே போக யாரும் வெளியே வரவில்லை. தீயனைப்புப் படையினர் வந்து எல்லா பிரேதங்களையும் வெளியே எடுத்தனர். அதில் ஒருவன் உயிர் பிழைத்துக் கொண்டான் ஆனால் அவனுக்கும் கொஞ்ச நாளில் மனநிலை சரியில்லாமல் போய்விட்டது. கிணற்றினுள் உள்ள விஷவாய்வு தாக்கி எல்லோரும் இறந்தார்கள் என்று அடுத்த நாள் பேப்பரில் செய்தி வந்தது. சிலர் கோயிலில் இருக்கும் சிவனுக்கு ஏதோ கோபம் என்று பேசிக்கொண்டார்கள்.


ஜீன்ஸுடன் ஏள பண்ணிய ஸ்ரீராமானுஜர்
இது நடந்து ஐந்து வருடங்கள் இருக்கும். திருச்சி போயிருந்த சமயம், உறையூர் நாச்சியார் கோயிலுக்குப் போயிருந்தேன். பெருமாளை சேவித்துவிட்டு வரும் போது, அங்கே உற்சவம் நடந்துகொண்டிருந்தது. கொஞ்சம் நேரம் மனைவியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பல்லக்கில் ஸ்ரீராமானுஜரை ஏளப் பண்ணிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் இருந்த மனைவியிடம் எனக்கும் ஒரு நாள் ஏளப் பண்ணிப் பார்க்க வேண்டும் என்று ஆசை என்று கிசுகிசுத்தேன். அதற்கு என் மனைவி, "முதல்ல கோயிலுக்கு ஜீன்ஸ் எல்லாம் போடாம வாங்க!" என்றார். அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. கொஞ்சம் நேரத்தில் புறப்பாடு ஆரம்பித்தது. முன்னாடி வலது, இடது பக்கம் இரண்டு இரண்டு பேர் இருந்தார்கள். தீடீர் என்று முன்னால் இருப்பவர்  என்னை அழைத்தார், அவர் பக்கத்தில் சென்றேன். அவருக்கு பதில் என்னை ஏளப் பண்ணச் சொன்னார். நிச்சயம் நான் என் மனைவியிடம் பேசியதை அவர் கேட்டிருக்க வாய்ப்பில்லை. நான் முகம் மலர்ந்து ஏற்றுக்கொண்டேன். புறப்பாடு முடித்துவிட்டு எனக்கு ஸ்பெஷல் மரியாதை, பிரசாதம் வேறு. ஜீன்ஸ் போட்டுக்கொண்டு ஏளப் பண்ணிய ஒரே நபர் நான் தான் என்று நினைக்கிறேன்.


அருணாச்சலம் போல செலவு செய்யுங்க
10 வருடம் முன் இருந்த இணையம் வேறு இன்று இருக்கும் இணையம் வேறு. ரயில் முன் பதிவு, வங்கிக்கு போகாமல் டிடி, உங்கள் நண்பரின் அகௌண்ட்டுக்குப் பணம் பரிவர்த்த்தனை, டெலிபோன் பில்,  கிரேடிட் கார்ட் கட்டணம் எல்லாம் உட்கார்ந்த இடத்திலேயே செய்யலாம். அப்படி ஒரு சமயம் கிரேடிட் கார்ட் கட்டணம் கட்டும் போது ஒரு வினோதமான அனுபவம் நடந்தது. எனக்கு கிரேடிட் கார்ட் பில் 10,026 ரூபாய் வந்தது. அன்று என் ரிஷப ராசிக்கு 'கவனம் தேவை' என்று போட்டிருந்தால் ஆச்சரியப்பட்டிருப்பேன். 10,026 க்கு பதில் நடுவில் எக்ஸ்டிராவாக ஒரு சைபர் சேர்த்துக் கட்டிவிட்டேன். அதாவது 10,026 பதில் 1,00.026!. பத்தாயிரத்துக்கு பதில் ஒரு லட்சம்!. உடனே கிரேடிட் கார்டில் போட்டிருக்கும் நம்பரை தொலைபேசியில் அழைத்தேன். அவர்கள் உங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியை நாடுங்கள் என்றார்கள். அவர்களை அழைத்தால் நீங்கள் கிரேடிட் கார்ட் டிவிஷனை அணுகுங்கள் என்றார்கள். இத்தனைக்கும் இரண்டும் சிட்டி பேங்க். கொஞ்சம் டெலிபோனில் போராடியபின் இன்னும் 24 மணி நேரத்தில் என் வங்கிக்குத் திரும்ப வந்துவிடும் என்றார்கள். 24 மணி நேரம், 240 மணி நேரம் ஆகியும் அது நடைபெறவில்லை. திரும்பவும் அழைத்தால், அவர்கள் "தப்பு உங்களுடையது தான், அதனால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள் அல்லது, மீதிப் பணத்திற்கு அருணாச்சலத்தில் ரஜினி செலவு செய்வது போல எதாவது செலவு செய்யுங்கள்!" என்றார்கள். ஒரு மாதம் ஆகியும் பணம் வந்த பாடு இல்லை. கடைசியாகக் காட்டமாக ஒரு கடிதம் எழுதிய பின் தான் திரும்ப வந்தது.


நான் வரும் முன் வீட்டுக்கு வந்த பர்ஸ்
காலேஜ் படிக்கும் போது, தில்லைநகரில் இருக்கும் 'சிப்பி' தியேட்டரில் ஆங்கில படம் திரையிடுவார்கள். வெள்ளிக்கிழமை புது படம் திரைக்கு வரும். காலேஜ் 'கட்' அடித்துவிட்டு 'மாட்னி' காட்சிக்குச் செல்வது வழக்கம். ஒரு முறை 'டை ஹார்ட்' ( Die Hard) என்று நினைக்கிறேன், பாத்துவிட்டு வீட்டுக்கு வந்த போது, அப்பா "எங்கடா போயிட்டு வர ?" என்றார். திடீர் என்று கேட்டதால் பொய் சொல்ல வரவில்லை. மாட்னி ஷோ என்று உண்மையைச் சொல்லிவிட்டேன். "உன் பர்ஸ் எங்கே?'" என்றார். பேண்ட் பாக்கெட்டில் தேடிப் பார்த்தேன். அங்கு இல்லை. முழித்தேன். இதோ இங்கே இருக்கு பார் என்று கொடுத்தார். தியேட்டரில் என் பாக்கெட்டிலிருந்து நழுவியதை என் பக்கத்து சீட்டுக்காரரோ பின் சீட்டுக்காரரோ அதில் இருக்கும் அட்ரஸைப் பார்த்துவிட்டு என் வீட்டுக்கு நான் வரும் முன்னே வந்து கொடுத்துள்ளார். அப்பா தொடர்ந்தார் "இனிமே மாட்னி போகாதே, நைட் ஷோ போ, நானும் வரேன்!" என்றார்.

Comments