நிரந்தர கணக்கு எண்/அட்டை, சிம்பிளாக PAN CARD, பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சில வாரங்களுக்கு முன் 45 நாள் ஆன குழந்தைக்கு இந்த நிரந்தர கணக்கு அட்டை கிடைத்தது என்று செய்தி படித்தேன்.
நான் 1999 ஆம் வருடம் இதற்கு விண்ணப்பித்தேன். பிறகு சோம்பல் காரணமாக ( பிஸி என்றும் தமிழில் சொல்வார்கள் ) கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். ஆண்டுக்கு ஒரு முறை தனி நபர் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான படிவத்தில்
PAN NO: _____________
என்று பார்த்தவுடன் தான் 'அட, நாம விண்ணப்பித்து ஒரு வருடம் ஆச்சே!' என்று நினைவுக்கு வந்தது. சரி, நாமே வருமானவரி அலுவலகத்துக்குச் சென்று பார்க்கலாம் என்று போனேன்.
வரவேற்பாளர், காப்பி குடித்து முடிக்கும் வரை காத்திருந்துவிட்டு, "ஒரு வருஷம் ஆச்சு சார், இன்னும் எனக்கு பான் கார்ட் வரவில்லை... யாரை பார்ப்பது?" என்றேன்.
"உங்க அப்ளிகேஷன் கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்றார்.
காண்பித்தேன்.
பார்த்துவிட்டு, "அடுத்த கட்டிடத்தில் இருக்கும் ஏழாம் எண் ரூம் போங்க" என்றார்.
சென்றேன்.
ஆனால் யாரும் இல்லை. ஃபேன் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. ஃபேன் ஓடுவதால் நிச்சயம் யாராவது வருவார்கள் என்று கொஞ்சம் நேரம் காத்துக் கிடந்தேன். யாரும் வரவில்லை. அடுத்த சில அறைகள் தள்ளி ஒருவர் இருந்தார், அவரிடம் "ஒரு வருடம் ஆகியும்... " டைலாக் சொன்னேன். நேராகப் போனால், வரவேற்பாளர் இருப்பார், அவரிடம் கேளுங்கள் என்றார். பரமபதத்தில் பாம்பின் தலைவழியாக ஆரம்பித்த இடத்திற்கே வருவது போல் திரும்பவும் வந்தேன்.
"சார், அங்க யாரும் இல்லை"
"அங்கேயே வெயிட் பண்ணுங்க, வருவாங்க!"
"இவ்வளவு நேரம் வெயிட் பண்ணேன்..."
"வருமான வரி தாக்கல் செய்ற இடத்தில போய் கேட்டுப் பாருங்க" என்றார்.
அங்கே சென்ற போது, ஆடித் தள்ளுபடி கூட்டம் போல் அலைமோதியது, 'சரல்', 'பார்ம் 2 F' போன்ற குரல்களுக்கு இடையில் "சார், நான் பான் கார்ட் அப்ளை செஞ்சு ஒரு வருடம்... " என்றவுடன் "சார், இங்கே வந்து அதை கேட்காதீங்க, பாருங்க அடுத்த பில்டிங்ல இருப்பாங்க, போய் அங்கே கேளுங்க" என்றார்.
"நான் அங்கிருந்து தான் சார் வரேன், அங்கே யாரும் இல்லை..."
என்ன தோன்றியதோ, யாரோ ஒரு பியூனைக் கூப்பிட்டு என் விணப்பத்தை பார்க்கச் சொன்னார்.
அரை மணி கழித்து, அந்த பியூன் என் பிரசித்தி பெற்ற நிரந்திர கணக்கு எண்ணை(PAN number) எழுதி தந்தார். "இன்னும் ஒரு மாசத்தில வந்துடும் சார், எல்லா அப்பளிக்கேஷனையும் கிளியர் செய்துகிட்டு இருக்கோம்," என்றார். அவருக்கு நன்றி கூறிவிட்டு, அந்த வருடத்திய தனி நபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து முடித்தேன்.
திரும்பவும் ஆபிஸ் பிரஷர் காரணமாக அப்படியே விட்டுவிட்டேன். அடுத்த வருடம் 'பார்ம்-16' படிவத்தை பார்த்தவுடன் தான் தெரிந்தது, அட இரண்டு வருஷம் ஆகியும் இன்னும் எனக்கு பான் கார்ட் வரவில்லை என்று. பான் எண் தான் தெரியுமே என்று அந்த வருடமும் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். அடுத்தவருடம் திரும்பவும் வருமானவரி அலுவலகத்திற்கு சென்று 'பான் கார்ட்' வரவில்லை என்று எழுதிக் கொடுத்தேன்.
பிறந்த நாள் போல், வருடத்திற்கு ஒரு முறை ஜூலை மாதம் இது நினைவிற்கு வரும். இப்படியே வருடங்கள் ஓடின.
2006ல் டிமேட்(DMAT) கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் நிரந்திர கணக்கு எண்(PAN Card) அட்டையின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு புது விதியை கொண்டுவந்திருந்தார்கள். அதனால் என் டிமேட் கணக்கு முடக்கபட்டது. இந்த முறை வருவானவரி அலுவலகத்திற்குச் சென்ற போது, பான் அட்டையைக் கொடுக்கும் பொறுப்பை UTISL, NSDL, Karvy போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டோம், அவர்களிடம் போய் கேளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
அடுத்து UTI யிடம் சென்று ஒரு புது விண்ணப்பம் கொடுத்தேன். கொடுத்து சில மாதங்கள் ஆன பின் என்ன ஆச்சு என்று விசாரித்த போது, "வருமானவரி அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டோம்!" என்றார்கள். ஆன்லைனில் உங்கள் விண்ணப்பதின் நிலவரம் தெரியும் என்றார்கள். என் விண்ணப்ப எண்ணை கொடுத்து பார்த்ததில் "Your PAN application is with the Income Tax Department. We shall intimate you once the Income Tax Department processes your application" என்று பகலிலும், இரவிலும் வந்தது.
இப்படி ஒரு வருடம் ஓடியது.
அதற்குள் நான் பெங்களூர் வந்துவிட்டேன். என் அலுவலகத்தில் சக பணியாளரின் மனைவி, வருமானவரி அலுவலகத்தில் வேலை செய்வதால் அவரிடம் இந்தக் கதையைச் சொன்னேன்.
"உங்க ஃபைல் சென்னை அலுவலகத்தில் இருக்கிறது, அது பெங்களூர் வரவேண்டும், பார்க்கலாம்" என்றார்.
திரும்பவும் விண்ணபிக்க சொன்னார்.
திரும்பவும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ(பழைய போட்டோவை காட்டிலும் இதில் வயசாகியிருந்தது), அட்ரஸ் ஃபுரூப் எல்லாம் கொடுத்தேன். கொடுத்து இரண்டு மாதத்திற்குப் பிறகு எனக்கு ஒரு லெட்டர் வந்தது.
அதில் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு மயக்கம் வந்தது.
"உங்கள் அப்பா பெயர் 'KR Narayanan' என்று போட்டிருக்கிறீர்கள், ஆனால் எங்களிடம் உள்ள டேட்டா பேஸில் வெறும் 'Narayanan' என்று தான் இருக்கிறது எது சரி ? எங்களுக்குத் தெரிவிக்கவும்" என்று கேட்டிருந்தார்கள். திரும்பவும் லெட்டர், ஃபுரூப் .. எல்லாம் அனுப்பிவிட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்று வந்தேன். 15 நாளில் பிரசித்திபெற்ற அந்த பான் கார்டு வந்தது. அதில் என் போட்டோ கூட இருந்தது.
கட்டுரை முடியவில்லை. இன்னும் இரண்டு வரிகள் இருக்கின்றன.
போன மாசம் திரும்பவும் ஸ்ரீரங்கம் போய்விட்டு வந்த போது வருமானவரி அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது, அதில் இன்னொரு பான் கார்டு!. அதிலும் என் படம் இருந்தது.
இந்த மாசம் திரும்பவும் ஸ்ரீரங்கம் போகிறேன்
Comments
Post a Comment