Skip to main content

திருமழிசையாழ்வார்

[%image(20070204-thirumazhisai1.jpg|167|242|Thirumazisai)%]

நேற்று திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்.


முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்தே, உடன் வாழ்ந்த ஆழ்வார் திருமழிசையாழ்வார். தொண்டை நாட்டில் உள்ள திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர். (கடலுக்கு மேற்கில் காஞ்சிபுரத்துக்குக் கிழக்கில் உள்ள ஊர்.) ("தொண்டை நன்னாடு சான்றோருடைத்து" என்கிறார் ஒளவையார்.)
இவரது பிறப்பும் கண்ணனின் அவதாரத்தை ஒத்தது.  தேவகியின் மகனாகப் பிறந்து, யசோதையின் அரவணைப்பில் வளர்க்கப் பெற்றது போல திருமழிசை ஆழ்வார் வளர்ந்தார்.



திருமாலின் அடியவராகத் திகழ்ந்த பார்க்கவ முனிவருக்கும், கனகாங்கி என்னும் தேவமங்கைக்கும், திருமழிசை என்ற திருத்தலத்தில் பெருமானின் சுதர்சனச் சக்கரத்தின் அம்சமாய் அவதரித்தவர் திருமழிசையாழ்வார். கை, கால்கள் இன்றிப் பிறந்ததால் பெற்றோர் இக்குழந்தையை ஒரு பிரம்புப் புதரின் கீழ் போட்டுவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்பு பிரம்பு அறுக்கும் தொழில் செய்யும் திருவாளன், அவரது மனைவி பங்கயச் செல்வி என்பவர்களால் வளர்க்கப் பெற்றதாக குருபரம்பரை கூறுகிறது.


இவர் திருமழிசையில் பிறந்ததால் திருமழிசையாழ்வார் என்றும், பக்திசாரர், மழிசைப் பிரான் என்றும் அழைக்கப்பட்டார். [சில சமயம் திருமழிசை ஆழ்வாரை, திருமழிசைப் பிரான் என்றும் சொல்லுவதுண்டு. இறைவனுக்குரிய 'பிரான்' என்ற பெயரை இவர் ஏற்று, ஆழ்வார் என்ற பெயரை பெருமாள் ஏற்றுக் கொண்டதாகக் (ஆராவமுதாழ்வார் என்று) கூறுவர். ]


திருமழிசையார்வார் பற்றி பல கதைகள் உண்டு; கணிகண்ணனைப் பற்றிய கதை முக்கியமானது.


இவரது சீடனான கணிகண்ணன் என்பவன் பல்லவ மன்னனின் ஆணைப்படி, கச்சியை விட்டு வெளியேறிய போது, திருமழிசை ஆழ்வாரின் பாட்டுக்கு ஏற்பத் திருவெஃகாவில் பள்ளி கொண்டிருந்த பெருமான், தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு இவர் பின் சென்றாராம். பிறகு மனம் வருந்தி மன்னன் மன்னிப்புக் கோரியவுடன், இவரது வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஊர் திரும்பித் தன் பைந்நாகப் பாயை விரித்துப் பள்ளி கொண்டதாகக் கூறுவர்.


இந்தக் கதையின் ஆதாரம் திருமழிசை பாடியதாக சொல்லப்படும் இரண்டு தனிப்பாடல்கள்:


கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்.


என்று முதல் பாட்டுக்குப் பெருமாள் எழுந்து செல்ல, சமாதானமானதும் அதைச் சற்றே மாற்றி


கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் துணிவுடைய
செந்நாப் புலவரும் செலவொழிந்தான் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.


என்று முடியுமாறு பாட, திரும்ப வந்து விட்டாராம்.


அதே போல் பெற்ற தாயின் பாலை இவர் அருந்தாது,  வளர்த்த தாயின் பாலையும் மறுத்து, தன்பால் பரிவுடன் நின்ற உழவர்குல முதியவர் ஒருவர் கொடுத்த பாலை அருந்தி வளர்ந்தார் என்பதை


எந்தையே வினையேன், தந்த இந்தத்
     தொள்ளமுதினை அமுது செய்க என்று,
சிந்தையோடு அவன் பரவிட, அவன் அருள் செய்தே
     அந்த நற்சுவை அழிழ்தினை அமுது செய்தனனால்


என்று திவ்வியசூரி சரிதம் ( பாடல் 57 ) சொல்கிறது.


[%image(20070204-thirumazhisai2.jpg|165|247|Thirumazisai)%]

முதல் ஆழ்வார்கள் வாழ்ந்த காலம் கிபி 6 நூற்றாண்டு என்பதால், அவர்களின் பாடல்களில் காணாத அளவுக்கு மாற்று சமயங்களைக் கண்டிக்கும் இயல்பு, திருமழிசை ஆழ்வார் பாடல்களில் காணப்பெறுவதால், அவர்கள் காலத்துக்குப் பின்னரும் திருமழிசை ஆழ்வார் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாலர்களின் கருத்து. இவர் காலம் கிபி 6ஆம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டின் முன்னும் என்று கூறுவர் ( திரு. பு.ரா. புருஷேத்தம நாயுடு )


மாற்று சமயக் கருத்துகளைவிட திருமாலே பரம்பொருள் என்னும் பேருண்மையை நிலைநாட்டுவதில் மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் இவர் அழுத்தமாகச் சொல்லுவதால், ஆழ்வாரை, மணவாள பெருமாள் நாயனார், "உறையில் இடாதவர்" என்று ஆசாரிய ஹ்ருதயத்தில் போற்றியுள்ளார். ( என்றும் பகை அழிக்க ஆயத்தமாய் இருப்பவர் என்று பொருள், இங்கே பகை என்பது மாற்றுச் சமய கருத்துகளைக் குறிக்கும் )


மற்றைச் சமயங்கள் பல தெரிந்து, மாயோன்
அல்லால், தெய்வம், மற்று இல்லை என உரைத்த
வேதச் செழும் பொருள்


என்று வேதாந்த தேசிகன் தேசிக பிரபந்ததில் இதைக் குறிப்பிடுகிறார்.


நாலாயிர திவ்விய பிரபந்தத்தில், முதலாயிரத்தில், "திருச்சந்த விருத்தம்" இவருடையது. 120 பாசுரங்கள் கொண்டது. இது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்துள்ளது.


இயற்பா என்ற பிரிவில் அமைந்த 'நான்முகன் திருவந்தாதி' என்ற பிரபந்தங்கள் 96 பாசுரங்களைக் கொண்டது.
இவை வெண்பா என்னும் யாப்பினால் ஆனது.


வேதச் செழும்பொருள் நான்முகன் தொண்ணூற்று ஆறு பாட்டும்
மெய்ம்மிகுந்த திருச்சந்த  விருத்தப் பாடல் விளங்கிய நூற்று இருபதும் என்றும்


எழில் மிசைப் பிரான் இருநூற்று ஒரு பத்தாறும் என்று தேசிக பிரபந்ததில் வேதாந்த தேசிகன் குறிப்பிடுகிறார்.


"ஆழ்பொருளை அறிவித்தேன், சிந்தாமல்
கொண்மின் நீர்தேர்ந்து"


என்று தொடங்கி,


"இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன், எம்பொருமான் உன்னை"

என்று திருமாலே பரம்பொருள் என்ற கருத்தினைக் கூறி முடிக்கிறார்.



இவர் மங்களாசாசனம் செய்த திருத்தலங்கள் 17.


மணவாள மாமுனிகள் "துய்மதி பெற்ற மழிசை பிரான்" ( உபதேசரத்தினமாலை 4 ) என்றும் இவர் அவதரித்த திருநாளை "நல்லவர்கள் கொண்டாடும் நாள்" ( உபதேசரத்தினமாலை 12 ) என்றும் சிறப்பித்துக் கூறுகிறார். இன்று திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம் நாமும் அதைக் கொண்டாடலாம்.


திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்!!


[ மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்கள் 1)  திருஅரங்கம் 2) திருஅல்லிக்கேணி
3) திருஅன்பில் 4) திருஊரகம் (காஞ்சிபுரம் அருகில்) 5) திருஎவ்வுள் (திருவள்ளுர்) 6)திருகஇத்தலம் (கபிஸ்த்தலம்)7) திருக்குடந்தை (கும்பகோணம்)8) திருக்குறுங்குடி
9) திருக்கோட்டியூர்10) திருத்துவாரபதி (த்வாரகா)11) திருக்கூடல்12) திருப்பரமபதம் 13) திருப்பாடகம் 14)  திருப்பாற்கடல்15) திருவடமதுரை (மதுரா)16) திருவெகா (காஞ்சிபுரம் அருகில்) 17) திருவேங்கடம் ]


****
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா


 

Comments

  1. I have shared this post Desikan!!!! Just wanted to read the post and understand the story. Excellent information with such minute details that makes the reading very understanding!!!! Thanks a lot. Please do not mistake me for sharing. I have duly mentionned your name. Thanks endless for your huge efforts!!!

    ReplyDelete
  2. இன்றைக்குத்தான் படித்தேன். இவர் முற்காலத்தில் சிவனடியாராக இருந்து பின்பு வைணவராக மாறியவர் என்று படித்திருக்கிறேன். இவரது பள்ளிப்படை (அல்லது திருவரசு என்று சொல்லவேண்டுமா?) கும்பகோணத்தில் இருக்கிறது. இவர் சிவனைத் தொழுதபோது எழுதிய பாடல்களும், திருச்சந்த விருத்தமும் பல இடங்களில் ஒத்துப்போகும். எனக்கு அதன் தமிழுக்காக திருச்சந்த விருத்தம் மிகவும் பிடிக்கும். ஆனால் நிறைய மறைபொருட்களை வைத்து பாடல்கள் எழுதியிருப்பார். (பூநிலாய ஐந்துமாய்... ஆறு ஆறு ஆறுமாய், ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் என்றெல்லாம் எண்களைப் பயன்படுத்தி எழுதியிருப்பது அவருக்கு எத்தகைய பரந்துபட்ட-indepth knowledge என்பதைக் காண்பிக்கும்)

    ReplyDelete
  3. திருமாலைக் குறித்து வேள்வி செய்துகொண்டிருந்த பார்க்கவர் என்ற முனிவர், விதிவசத்தால் கனகாங்கி என்ற தேவகன்னிகையின் அழகில் மயங்கினார். விதிவசத்தால் கட்டிக்காத்த பிரமசரிய விரதம் கெட்டுவிட்டதே என்றெண்ணி, வருந்தி கனகாங்கியைப் பிரிந்து சென்றுவிட்டார். கனகாங்கிக்கு உருப்பெறாத பிண்டம் சிசுவாக வெளிப்பட்டது. பிண்டத்தைப் பிரிந்து கனகாங்கி அகன்றுவிட்டாள். பிரம்பறுக்க வந்த வேளாளனாகிய திருவாளன் கையில் அந்தக் குழந்தை கிடைத்தது. திருமழிசையான் என்ற பெயரோடு வளர்த்தனர். இவர் உண்ட பாலின் மிச்சத்தை திருவாளனும் அவர் மனைவியும் அருந்தியதால் அவர்களுக்கு உருவான குழந்தை கணிகண்ணன். பிற்காலத்தில் கணிகண்ணன் திருமழிசையாழ்வாரின் சீடனானான்.

    பிண்டத்தினுள் புகுந்துகொண்டவர், பூர்வஜன்மத்தில் சிவவாக்கியராக இருந்த சித்தர் என்று ஒரு கருத்து. (அதை நம்பக் காரணத்தைப் பின்னால் சொல்லுகிறேன்). அதனால் அவர் மந்திர தந்திரங்களிலும், சித்து வேலைகளிலும் திறமையானவராக இருந்தார்.

    திருமழிசையாழ்வாருக்கு உபதேசம் செய்தவர் பேயாழ்வார். பின்பு, ஹரி பக்தியைப் பரப்பியவண்ணம் வாழ்ந்த திருமழிசை ஆழ்வாரின் ஹரி பக்தியைச் சோதித்து அவருடைய வைராக்கிய பக்தியால் பெருமாள் (ஈசன்) வியப்போடு அவரைப் 'பக்திசாரர்' என்ற திரு'நாமமிட்டு வாழ்த்தினார்.

    முதலாழ்வார் மூவரும், திருமழிசை ஆழ்வார் தவக்கோலத்தில் இருந்தபோது, அவரைக் கண்டு அவருடன் அளவலாவினர். ஆழ்வாரிடம் வயது முதிர்ந்த பெண்மணி நெடுங்காலமாகப் பணிசெய்துகொண்டிருந்தார்.அவளது தொண்டில் மகிழ்ந்து, அவள் கேட்ட வரமான 'இளமை மாறாத பேரழகை' வயது முதிர்ந்த பெண்ணுக்கு அருளினார். அந்த நாட்டு அரசனாகிய பல்லவராயன், இந்தப் பேரழகியை (பூர்வம் தெரியாமல்) மணந்துகொண்டான். நாட்பட நாட்பட பல்லவராயன் வயதாகிறான்.. ஆனால் அவன் மனைவி இளமையோடிருக்கிறாள். ஆழ்வாரின் சீடரான (தம்பி) கணிகண்ணனை, தனக்கு வரம் கிடைக்கச் செய்யவேண்டும் என்று கேட்டபோதுதான், ஆழ்வார் இம்மை சுகத்துக்காக இத்தகைய அருள் தரமாட்டார் என்று சொல்கிறார். கணிகண்ணனும் தனக்கு உதவாததால், அவரை ஊரைவிட்டு வெளியேற உத்தரவிட்டதால், அவருடன் திருமழிசை ஆழ்வாரும் செல்கிறார். (அதைப் பற்றி மேலே சொல்லியுள்ளது). இவருடைய வரலாற்றில் சில பல கதைகள் உள்ளன.

    இவரது ஜீவ சமாதி, கும்பகோணத்தில் கும்பேசுவர கோவிலின் அருகில் உள்ள சாத்தாரத் தெருவில் இருப்பதாகப் படித்துள்ளேன்.(கோவில் முகப்பில் திருமழிசை ஆழ்வார் கோவில் என்று போட்டுள்ள படமும் பார்த்துள்ளேன்).

    ReplyDelete
  4. சிவவாக்கியத்துக்கும் (சிவவாக்கியர் எழுதிய 500+ பாடல்கள்), திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தத்துக்கும் பல ஒற்றுமைகளை (பாடல் வடிவம், எழுதிய முறை போன்று பல) நான் பார்த்துள்ளேன். இரண்டுமே, எண்களை வைத்து விளையாடிய பாடல்கள், 96 தத்துவங்களையும் பாடல்களில் கொண்டுவந்துள்ளவை. இவைகளைத் தெரியவில்லை என்றால், பாடல்களை அனுபவிக்க முடியாது. உதாரணமாக சில பாடல்களை, சிவவாக்கியத்திலிருந்தும், திருச்சந்தவிருத்தத்திலிருந்தும் கீழே கொடுத்திருக்கிறேன்.

    சிவவாக்கியம் (பாடல் எண் அடைப்புக்குறிக்குள்)

    (98) இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே
    சுருண்டு மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்ததீ
    முரண்டெழுந்த சங்கினோசை மூல'நாடி ஊடுபோய்
    அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே!
    174 நாலொடாறு பத்து மேல் நாலு மூன்றும் இட்டபின்
    மேலு பத்து மாறுடன் ஊமேதிரண்ட தொன்றுமே
    கோலி அஞ்செழுத்துடே குருவிருந்து கூறிடில்
    தோலி மேனி நாதமாய்த் தோற்றி நின்ற கோசமே

    270 ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
    ஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
    வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
    ஊறும் ஓசையாய் அமர்ந்த மாயமாயம் மாயனே

    271 எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய்
    எட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்ற ஆதி தேவனே
    எட்டுமாய் பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே
    எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே
    272 பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடும் ஒன்பதாய்
    பத்து நாற்திசைக்கு நின்ற நாடு பெற்ற நன்மையாய்
    பத்துமாய் கொத்தமோடும் அத்தலம்மிக் காதிமால்
    பத்தர்கட்கலாது முத்தி முத்தி முத்தி யாகுமே

    திருச்சந்த விருத்தம்

    2 ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
    ஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
    வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
    ஊறொடாசை ஆய ஐந்தும் ஆய ஆய மாயனே (சிவவாக்கியர் 270)

    77 எட்டும் எட்டும் எட்டுமாய் ஓரேழும் ஏழும் ஏழுமாய்
    எட்டு மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனை
    எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்று அவன்பெயர்
    எட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்ல வானம் ஆளவே (சிவவாக்கியர் 271)

    79 பத்தினோடு பத்துமாய் ஓரேழினோடு ஓர் ஒன்பதாய்
    பத்தினால் திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்
    பத்தினாய தோற்றமோடு ஓராற்றல் மிக்க ஆதிபால்
    பத்தராம் அவர்க்கல்லாது முத்தி முற்றலாகுமே? (சிவவாக்கியர் 272)

    இதுபோல் நிறைய ஒற்றுமைகளைப் பார்க்க முடிந்தது. இன்னும் ஒரு புத்தகத்தில் திருமழிசை ஆழ்வார் 4700 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகவும், ஆரம்பத்தில் சிவவாக்கியராக இருந்தவர் கடைசியில் திருமழிசையாழ்வாராகினர் என்றும் படித்தேன். அது convincingஆக இல்லை.

    நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. இந்த சிவவாக்கியர் ஓரு சித்தர் ஆவார்.மேலும் இவர் உருவ வழிபாடு மற்றும் திருவிழாக்களை கண்டித்தவர்.திருமழிசையாழ்வார் தன் விஷ்ணு பிரபந்தங்களை காவிரியில் போடும் போது மற்ற பாடல்கள் எல்லாம் நீரோட்டத்தில் மறைய,'நான்முகன் திருவந்தாதி'மற்றும் 'திருச்சந்தவிருத்தம்'ஆகிய இரு பிரபந்தங்கள் மட்டும் உலகோரை உய்விக்க போதும் என்று, ஆற்று நீரை எதிர்த்து வந்தன.

      தாங்கள் குறிப்பிட்ட'சிவவாக்கியர்' ஒரு சித்தர் ஆவார்.

      Delete
    2. அன்புள்ள மாலோலன்,

      1. நான் படித்த பிரகாரம், திருமழிசை ஆழ்வார் 4000+ வருடங்கள் இந்தப் பூவுலகில் உயிர்வாழ்ந்து, சைவ, பெளத்த, சமண மதங்களின் கருத்துகளையெல்லாம் கற்று இறுதியில் நாராயணனே முக்தி அளிக்கும் தெய்வம் என்பதை உணர்ந்து வைணவப் பாடல்கள் பாடினார் என்று ஐதீகம். அவர் சைவ சமயத்தில் ஒழுகியபோது பாடிய பாடல்கள் (அப்போதைய பெயர் சிவவாக்கியர்), வைணவரானபோது பாடிய திருச்சந்த விருத்தத்தில் இருக்கின்றன.

      2. திருமழிசை ஆழ்வார், மூச்சினை அடக்கி தவம் செய்யும் சித்தி பெற்றவர். அவர் இருந்த ஒவ்வொரு தலத்திலும் இவ்வாறே 700 வருடங்கள் தியானத்தில் (தவத்தில்) இருந்தார் எனவும் (திருமழிசை, திருவல்லிக்கேணி, காஞ்சீபுரம் போன்று), கடைசியில் காவிரி கரையோரம்- கும்பகோணத்தில் தவத்தில் இருந்தபோது, அவர் இறந்துவிட்டார் என நினைத்தவர்கள், அவரின் உடலின் மீது சமாதி எழுப்ப, உள்ளிருந்தே அவர் குரல் கொடுத்தார் எனவும், அங்கேயே கோவில் எழுப்புங்கள், நான் உள்ளேயே தவமிருக்கிறேன் என்று சொல்லி, அவர் இன்னும் அங்கேயே ஜீவனுடன் இருப்பதாகவும் ஐதீகம். அவர் வாழ்நாள் ஆரம்பத்திலிருந்தே வைணவர் என்றுதான் அங்குள்ள அர்ச்சகர் சொன்னார்.

      அவருடைய வரலாறே அவர் இறைசக்தி நிரம்பபெற்றவர் என்று சொல்லும் (சித்து). அதனால்தான் குடந்தை ஆராவமுதன், உத்தான சயனத்தில் இருப்பது.

      அவருடைய திருவரசு (இல்லை, ஜீவனோடு அவர் அதன் கீழ் இன்னும் இருப்பதாக ஐதீகம். அவர் மறையவில்லை) கும்பகோணத்தில் சமீபத்தில் இருமுறை சேவிக்கும் ப்ராப்தம் கிடைத்தது. சக்ரபாணி, ஆதிவராகர் கோவில் இவைகளின் அருகே, நடக்கும் தொலைவில் உள்ளது.

      Delete

Post a Comment