Skip to main content

4. பாவை குறள் - மழை

 4. பாவை குறள் - மழை

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

வருணதேவனே! சிறுதும் ஒளிக்காமல், கடலில் புகுந்து நீரை மொண்டு இடிஇடித்து ஆகாயத்தில் ஏறி திருமாலின் திருமேனி போல் கறுப்பாகி அழகான தோள்கொண்ட பத்பநாபன்கையில் உள்ள சக்கரம் போல் மின்னலடித்து, அவனுடைய சங்கம்போல் அதிர்ந்து முழங்க உன்னுடைய வில்லாகிய சார்ங்கம் வீசிய பாணங்கள் போல் மழை பெய்து உலகம் அனைத்தும் வாழ, நாங்களும் மகிழ்ந்து மார்கழி நோன்புக்கு நீராடுவோம் என்கிறாள் ஆண்டாள். 

திருப்பாவையில் ஆண்டாள் சின்ன சின்ன வார்த்தைகளை ஆங்காங்கே ஒளித்து வைத்து நம்மை ஆச்சரியப்பட வைப்பாள். சுமங்கலியான பெண்கள் தலையில் பூ வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இரண்டாம் பாசுரத்தில் ’மலரிட்டு நாம்முடியோம்’ என்று கூறுகிறாளே என்று தோன்றும். இங்கே ‘நாம்’ என்ற வார்த்தையைக் கவனிக்க வேண்டும். நாங்களாகச் சூடிக்கொள்ள மாட்டோம், ஆனால் கண்ணனின் பிரசாதமாக அதைச் சூட்டிக்கொள்வோம் என்று புரிந்துகொள்ள வேண்டும். 

இதே போல், மூன்றாம் பாசுரத்தில் ‘நாடெல்லாம் திங்கள் மும்மாரி’ பெய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும்  ஆண்டாள் ‘தீங்கின்றி’ என்ற வார்த்தையைச் சேர்த்திருக்கிறாள். 

‘தமிழக வெள்ள நிவாரண உதவிகேட்டு பிரதமரை இன்று முதலமைச்சர் சந்தித்தார்’, ‘பிரதமரை சந்தித்து முதலமைச்சர் வறட்சி நிவாரண நிதி கேட்டார்’ என்ற செய்திகள் நமக்குப் புதிதல்ல. மழை அதிகமாக வந்தாலும் கஷ்டம், வரவில்லை என்றாலும் கஷ்டம். ’தீங்கின்றி’ என்ற வார்த்தையை அழகாகச் சேர்த்திருக்கிறாள் ஆண்டாள்.  

இந்தப் பாசுரத்தில் பலரும் வியக்கும் விஷயம் கடலிலிருந்து நீர் ஆகாயத்துக்குச் சென்று மழையாகப் பொழிவதை ஆண்டாள் கூறும் விஷயத்தை இன்றும் நாம் எந்த மாறுதலும் இல்லாமல் அறிவியலில் படித்துக்கொண்டிருக்கிறோம். 

வள்ளுவர் வான் சிறப்பு என்ற ஓர் அதிகாரத்தையே மழைக்கு ஒதுக்கியுள்ளார். அந்த அதிகாரத்துக்கு பரிமேலழகர் ’கடவுளின் ஆணையால் உலகமானது நிலை பெறுவதற்கேதுவாய் இருக்கும் மழையினது சிறப்பை சொல்லும் அதிகாரம்’ என்கிறார். 

அதில் ஒரு குறளைப் பார்த்தால் உங்களுக்கு வியப்பைத் தரும். 

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

மேகம் கடலிலிருந்து முகந்த நீரை மீண்டும் கடலிலே பெய்யாமல் போனால், நீண்ட பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும் என்கிறார் வள்ளுவர். அதாவது திருப்பதிக்கே லட்டு என்பது போல கடலுக்கே மழை தேவை என்கிறார். அதுவும் அந்த மழை ‘தடிந்தெழிலி’ பொழிய வேண்டும் என்கிறார் முனிவர். 

’தடிந்தெழிலி’ -  தடிந்து எழிலி என்றால் மேகமானது மின்வெட்டி இடிஇடித்துப் பெருமழை பெய்வது குறிக்கும். மின்னலும் இடியுமாக ‘cloud-burst’ மழை பெய்ய வேண்டும் என்பதைத் தான் ‘ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து*

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்’ என்கிறாள்.  வள்ளுவர் இதை ‘தடிந்து எழிலி’ என்கிறார். இந்த அதிகாரத்தின் மற்ற சில குறள்கள் 

எல்லோரும் பள்ளியில் படித்த குறள் 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். இன்னொரு குறளில் 

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

மழை பெய்யாமல் இருந்தால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் என்கிறார். 

இந்த அதிகாரத்தின் சுருக்கம் - விவசாயம் செய்ய, குடிக்க, பசிக் கொடுமை போக்க மழை அவசியம். அதுவே அமுதம். தானம், தவம், கோயில் பூஜை, எல்லாம் மழை இல்லை என்றால் நின்று போகும். மழை இல்லை என்றால் பசும் புல்லைக் கூடப் பார்க்க முடியாது மொத்தத்தில் மழை இல்லை என்றால் உலக வாழ்க்கை நடைபெறாது என்கிறார். இதைத் தான் ஆண்டாள் ‘வாழ உலகினில் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்திடாய்’ என்று ‘நல்ல மழையை’ வேண்டும் என்று பிராந்தனைச் செய்கிறாள்.. 

வள்ளுவர் நல்ல மழை, கெட்ட மழை என்று இரண்டையும் சொல்லியிருக்கிறார். 

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பெய்யாதும் மிகுதியாகப் பெய்தும் மக்களை கெடுப்பதும், அளவாய்ப் பெய்து வாழ வைக்க செய்ய வல்லமையுடையது மழை. 

அந்த ’கெட்ட மழை’ தான் கண்ணன் ‘குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தான்!’ 

ஆண்டாள் மழையை வேண்டினாள். அந்த மழை வந்ததா ? பிறகு பார்க்கலாம்!

- சுஜாதா தேசிகன்
19-12-2020
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art Comments

  1. Cloud burst கெட்ட மழைன்னுன்னா இப்பல்லாம் கேள்வி படரோம்..திருப்பதிக்கே லட்டா?சுவையான மழைப்பாட்டு

    ReplyDelete

Post a Comment