Skip to main content

8. பாவை குறள் - அருள்

8. பாவை குறள் - அருள்


கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து  உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்;  கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருள் — ஏலோர் எம்பாவாய்.

கிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது எருமைகள் சிறிது நேரம் பனிப்புல் மேய சிறு தோட்டங்களுக்குப் பரவின கிளம்பிய மற்ற பெண்களைத் தடுத்து நிறுத்தி உன்னையும் அழைத்துச்செல்ல வாசலில் வந்து காத்திருக்கிறோம் குதூகலமுடைய பெண்ணே! எழுந்திரு. கண்ணனைப் பாடி நோன்பு மேற்கொள்வோம் குதிரையாக வந்த அசுரனை(கேசியை) வாயைக் கிழித்தவன் மல்லர்களைக் கொன்ற தேவாதிதேவன், அவனைச் சேவித்தால் நம் குறைகளை ஆராய்ந்து ஐயோ என்று இரங்கி வருவான்.

இந்தப் பாசுரத்திலும் ஆண்டாள் இன்னொரு தோழியை ஒரு விடியல் அடையாளத்தைக் கூறி எழுப்புகிறாள். இந்தப் பாசுரமும் இன்னொரு திருபள்ளியெழுச்சி !

கிழக்கே வெளுக்க ஆரம்பித்துவிட்டது. சூரியன் வரப் போகிறது. எருமைகள் பனிப்புல் மேயச் சென்றுவிட்டது  என்பதை ‘மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்’ என்று திருப்பள்ளியெழுச்சியில் தொண்டரடிப்பொடி ஆழ்வார் இளம் எருமைகளைக் காலை மேய்ச்சலுக்கு இடையர்கள் கட்டவிழ்த்துவிடுகிறார்கள் என்கிறார்!

இங்கே மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய என்று கண்ணைக் குறித்துக் கூறிவிட்டு, அவனை ’தேவாதி தேவன்’ என்று அழைக்கிறாள். 

தேரெழுந்தூர் சென்ற திருமங்கையாழ்வார் பரகால நாயகியாக ‘மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ’ என்று பாடிவிட்டு இவன் மிக அழகாக இருக்கிறான் இவன் ‘தேவாதிராஜன்’ என்று அஞ்சி ஓட ஆழ்வாரை பெருமாள் பிடித்து இழுத்தார். யார் இப்படி இழுப்பது என்று ஆழ்வார் திரும்பி பார்க்க ’கலியனே! பயந்து ஓடாதீர்’  தேவாதிராஜன் என்றாலும் நான் சாராதண மாடு மேய்க்கும் ஆமருவியப்பன் ( பசுவை மேய்ப்பவன்) என்று காட்சி கொடுத்தார். ( தேரெழுந்தூர் பெருமாள் தேவாதிராஜன் ஆமருவியப்பன்

இங்கே ஆண்டாள் அவன் மாடுமேய்க்கும் கண்ணனே தேவாதி தேவன் அவன் அருளுவான் என்கிறாள். 

அருள் என்றால் என்ன ? 

வள்ளுவர் அருளுடைமை என்று ஓர் அதிகாரத்தையே இதற்கு ஒதுக்கியுள்ளார். 

”அருளுடைமை என்பது எல்லா உயிர்களிடத்திலும் கருணையோடு நடந்து கொள்வது. 'அருள்' என்பது 'அன்பு' என்பதன் முதிர்ச்சி. இல்லறத்தான் மனைவி, மக்கள், உற்றார், உறவினர்களிடத்தில் காட்டுகிற பரிவுக்கு அன்பு என்று பெயர். அதே பரிவை எல்லா மனிதர்களுக்கும் மற்றெல்லா உயிருள்ள பிராணிகளுக்கும் காட்டுகின்றபோது அது அருள் எனப்படும். அன்பு விரிந்து அருளாகின்றது” என்கிறார் இது அப்படியே ஸ்ரீராம சரம ஸ்லோகம்! 

ஸ்ரீ ராமாயணத்தில் விபீஷண சரணாகதி அளிக்கும் முன் ஸ்ரீராமர் உன்னுடையவன் என்று எந்தப் பிராணி வந்தாலும் அபயம் அளிக்கிறேன். இது என் விரதம் (”ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே அபயம் சர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம”) என்கிறார். 

வள்ளுவர் 

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள

செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளால் வரும் செல்வம். மற்ற செல்வங்கள் சிறப்பு இல்லை என்கிறார் வள்ளுவர் 

எப்படி அருள் புரிவான் ? 

குதிரையின் வடிவில் கேசியின் வாயைப் பிளந்த போது கேசி ‘ஆ ஆ’ என்று கத்தியது போல, நாம் அவனைத் தேடிக்கொண்டு ”சென்று நாம் சேவித்தால்”   “ஆ ஆ என்று” ( ‘ஐயோ’ நீ ஏம்பா வந்தே சொல்லியிருந்த நானே வந்திருப்பேனே )  வாய் பிளந்து  இரங்கி வந்து அருள்புரிகிறான். ஸ்வாமி வேதாந்த தேசிகன் பெருமாளுக்கு முன் பின்னந்தலையை சொறிந்துகொண்டு நின்றாலே அவன் அருள் கிடைக்கும் என்கிறார். அப்படி அருள் புரிகிறவன் யார் ‘தேவாதி தேவன்” 

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் 

மனத்து உள்ளான் வேங்கடத்தான், மா கடலான்  மற்றும்
நினைப்பு, அரிய நீள் அரங்கத்து உள்ளான் - எனைப் பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன் ஒரு நாள்
மாவாய் பிளந்த மகன்

கேசியின் வாயைப் பிளந்த பெருமான் தேவர்களுக்கு எல்லாம் தேவன், திருவேங்கடவத்தில் உள்ளான், திருப்பாற்கடலில் உள்ளான் திருவரங்கத்தில் இருக்கிறான், என் மனத்திலும்  இருக்கிறான் என்கிறார். இதில் ஆச்சரியமான விஷயம் ஆண்டாளைப் போல ‘தேவாதி தேவன்’ என்ற சொற்தொடர் அதே கேசியின் உதாரணம் ! 

திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம். 

கோ ஆனார் மடியக் கொலை ஆர் மழுக்கொண்டு அருளும்
மூவா வானவனை முழு நீர் வண்ணனை, அடியார்க்கு
ஆ ஆ! என்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதி தேவனை, யான் கண்டு கொண்டு திளைத்தேனே.
 

இதில் திருமங்கை மன்னன் அவதாரம் எடுத்த பெருமாள், அடியார்களிடம் “ஐயோ ஐயோ” என்று இரங்கி வருகிறான் என்கிறார். இங்கு ஆண்டாளைப் போலவே திருமங்கை ஆழ்வாரும் “ஆ ஆ என்று இரங்கி” என்று சொல்லிவிட்டு ”தேவாதி தேவன்” என்கிறார். என்ன ஒற்றுமை ! 

நம்மாழ்வார் எனக்கு இன்னும் பெருமாள் அருள் புரியவில்லை என்ற ஏக்கத்தில் இப்படிப் பாடுகிறார். 

பிரிந்து ஒன்று நோக்காது, தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒருகால்
ஆ ஆ! என இரங்கார், அந்தோ! வலிதே கொல்*
மா வாய் பிளந்தார் மனம்? 

என் நெஞ்சு என்னைப் பிரிந்து பெருமாள் பின்னே அலைகிறது. அதைப் பார்த்துவிட்டு அவன் ‘ஆ ஆ’ என இரங்கி வருவான், ஆனால் இன்னும் ஏனோ வரவில்லை. கேசியின் வாயைப் பிளந்த கண்ணனின் மனம் வன்மையாக இருக்கிறதோ ?  நான் என் செய்வேன் என்று புலம்புகிறார். எங்கேயும் கேசியுடன், ‘ஆ ஆ’ என்று வருவதைக் கவனிக்கலாம். 

வள்ளுவர் இன்னொரு குறளில் 

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்வு இல்லை என்பது போலப்  போல அருளில்லாதார்க்கு அவ்வுலகம் இல்லை. 

ஸ்ரீ வைஷ்ணவத்தில் செல்வம் என்றால் அது கைங்கரியச் செல்வம் தான்.ஆண்டாள் கூறுவது மிகச் சுலபம். 

உனக்குக் கைங்கரியம் செய்ய வேண்டும் ( ‘பாடிப் பறை கொண்டு’ ) என்ற ஆசையால் அவனை நோக்கி ஓர் அடி  ‘சென்று நாம் சேவித்தால்’ ‘ஆஆவென்று’ அவன் பதறிக்கொண்டு நமக்கு அருள் புரிய ஓடி வருவான் அந்த தேவாதி தேவன் என்கிறாள். 

விடியற்காலை எழுந்து திருவரங்கம் இருக்கும் திசையை நோக்கி ஒர் அடி எடுத்து வைத்தாலே போதும் ! 

- சுஜாதா தேசிகன்
23-02-2020
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art 



Comments

Post a Comment