Skip to main content

1. பாவை குறள் - நாராயணனே

1. பாவை குறள் -  நாராயணனே 


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்!
பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்.

மார்கழி மாதம் பௌர்ணமி நாள் இது, பெருமாளின் குணங்களில் குளிக்கலாம் வாருங்கள் என்று எல்லோரையும் அழைக்கிறாள் ஆண்டாள். அவர்களிடம் அந்த பெருமாளை வர்ணிக்கிறாள். 

என்ன ஆபத்து நேருமோ என்று தன் கூர்மையான வேலை கையில்  ஏந்தி காக்கும் நந்தகோபனின் செல்லப் பிள்ளை! அழகான கண்களுடைய யசோதையின் சிங்கக் குட்டி! 

கார் மேகம் போன்ற உடல், தாமரை போன்ற அழகிய சிவந்த கண்களும், சூரியனைப் போன்ற பிரகாசமும், சந்திரனைப் போன்ற குளிர்ச்சியான திருமுகம்… என்று வர்ணித்துக்கொண்டு வரும் போழுது,  அட நமது கண்ணன் என்று நாம் நினைக்கும் போது ஆண்டாள் கண்ணன் என்று கூறாமல் அந்த  ‘நாராயணனே’ நாம் விரும்பியதைக் கொடுப்பான் எல்லோரும் வாருங்கள் என்கிறாள்.  

’நாராயணன்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு இரண்டு பொருள் இருக்கிறது. 

நாரங்களுக்கு அயநம்
நாரங்களை அயநமாக உடையவன்

பயப்படாமல் இதைச் சுலபமாகப் புரிந்துகொள்ள முயலலாம். 

’ர’ என்பது அழியக் கூடிய, அறிவில்லாத பொருள்களைக் குறிக்கும்.
’நர’ என்பது என்றுமே அழியாத ஜீவாத்மாவைக் குறிக்கும்.
’நார’ என்பது ஜீவாத்மாக்களின் கூட்டத்தைக் குறிக்கும். 

அயநம் என்றால் இருப்பிடம். 

நாரங்களுக்கு அயநம் - ‘நாரங்களுக்கு ஆதாரமானவன் நாராயணன். நாரங்களுக்கு இருப்பிடமாய் உள்ளவன் நாராயணன். நாம் அவனைச் சுலபமாகப் பற்றி இருக்கலாம். அவன் சுலபன். 

நாரங்களை அயநமாக உடையவன் - நாரம் ஒவ்வொன்றிலும் முழுமையாக இருப்பவன் நாராயணன். நாரங்களை இருப்பிடமாக உடையவன். நம்மிடம் இருக்கும் அன்பினால் அவன் நம்முள் இருக்கிறான். அவன் வாத்ஸல்யம் மிகுந்தவன். 

இந்த இரண்டும் புரியவில்லை என்றால் பரவாயில்லை. உங்கள் உள்ளேயும், நீங்கள் வெளியிடும் மூச்சுக் காற்றிலும் நாராயணன் இருக்கிறான். எல்லாம் நாராயணன் என்று புரிந்துகொண்டால் போதும். 

நம்மாழ்வார் ‘உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம் பெருமான்’ ஒரு வாக்கியம் கண்ணன் இந்தப் பரம்பொருளான நாராயணனே எல்லாம் என்று எளிமையாகக் கூறுகிறார். 

நாராயணனே எல்லாவற்றிற்கும் மூலகாரணம். ’அ’ என்ற சொல் ஸ்ரீமந் நாராயணனையே குறிக்கும் அதுவே மங்களமான எழுத்து. அதனால் தான் 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்று ‘அ’வில் ஆரம்பிக்கிறார் வள்ளுவர். எழுத்துக்கு எல்லாம் எப்படி ’அ’ முதலோ அது போல நாராயணன் எல்லாவற்றிற்கும் மூலம் என்கிறார். பகவான் என்று தானே கூறுகிறார் இங்கே நாராயணன் இல்லையே என்று யோசிக்கலாம். 

கோயில் என்றால் அது ஸ்ரீரங்கம் மாதிரி பகவான் என்றால் அது ஸ்ரீமந் நாராயணனையே குறிக்கும். கீதையில் ‘கிருஷ்ணர் சொன்னார் என்று சொல்லாமல் ‘ஸ்ரீ பகவான் உவாச’ என்று பகவான் சப்தம் இங்கே கண்ணனான நாராயணனையே குறிக்கிறது. கண்ணன் சம்பந்தப்பட்டதால் ‘ஸ்ரீமத் பாகவதம்’ என்று கூறுகிறோம். கண்ணின் பக்தர்களை ’பாகவதர்கள்’ என்கிறோம்.  இன்று பல பகவான்கள் முளைத்துவிட்டபடியால் மக்கள் குழம்பிவிடுவார்கள் அதனால் ’ஆதி பகவன்’ என்கிறார் வள்ளுவர். 

அவதாரங்களும் அவதார அற்புதச் செயல்கள் எல்லாம் நாராயண நாமத்தின் பொருளே என்கிறார்கள் நம் ஆசாரியர்கள். பத்து அவதாரங்களையும் போற்றிய கலியன் ’நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்கிறார். 

ஆயிரம் நாமங்கள் இருக்க, வேறு எந்த நாமங்களையும் கூறாமல், நாராயணன் என்று ஆண்டாள் மூலமந்திரத்தைக் கூறுகிறாள். அவளுடைய தந்தை பல்லாண்டில் ‘நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராய ணாயவென்று’ என்று கூறியதைப் பின்பற்றி ஆண்டாள் உறுதியாக எந்தச் சந்தேகத்துக்கும் இடம் கொடுக்காமல்  ‘நாராயணனே’ ஆதி பகவன் என்று முதல் பாசுரத்தை ஆரம்பிக்கிறாள்.

- சுஜாதா தேசிகன்
16-12-2020

Comments

  1. குறள் வேகமெடுக்கிறது..

    ReplyDelete

Post a Comment