Skip to main content

9. பாவை குறள் - கண்வளரும்

9. பாவை குறள் - கண்வளரும்


தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்தூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில் எங்கும் விளக்குகள் எரிய வாசனைப்புகை வீசப் படுக்கையில் தூங்கும் மாமன் மகளே! கதவைத் திறந்துவிடு அம்மணி! உன் பெண்தான் எழுப்புங்கள் அவள் ஊமையோ? செவிடோ? சோம்பேறியோ? அல்லது மந்திரத்தால் மயங்கித் தூங்குகிறாளோ? மாயன், மாதவன், வைகுந்தன் என்ற பகவானின் நாமங்கள் பலவற்றைச் சொல்லி நற்பயன் அடைய வேண்டியிருக்கிறது சீக்கிரம் உன் மகளை எழுப்பு என்கிறாள் ஆண்டாள். 

இன்னொரு பெண் பிள்ளையை ஆண்டாள் எழுப்பும் திருப்பள்ளி எழுச்சி பாசுரம் இது. 

இதில் ’தூமணி மாடத்தில்,  சுற்றும் விளக்கெரிய,  தூபம் கமழ...மணிக் கதவம்’ என்று ஓர் இல்லத்தை விவரிக்கிறாள். எட்டு வரிகள் கொண்ட பாசுரத்தில் இரண்டு வரி ஓர் இல்லத்தை விவரிக்க ஏன் ஆண்டாள் எடுத்துக்கொண்டாள் ?  

கூரத்தாழ்வானைப் பார்த்து ஒருவர் “என் வாழ்கை நன்றாக நடக்க வேண்டும். அதற்கு ஒரு நல்வார்த்தையை அருளுங்கள்” என்று கேட்டார். அதற்கு ஆழ்வான் “ஒரு ஸ்ரீவைஷ்ணவனுடைய இல்லத்துக்கு யாத்திரையாகச் சென்று அதைப் பார்த்துவிட்டு வா. அதுவே போதும்” என்றார். 

ஒரு ஸ்ரீவைஷ்ணவனுடைய திருமாளிகையின் சிறப்பை மனத்தால் மகிழ்ச்சியுடன் நினைத்தாலே ஒருவர் உய்வு பெறலாம் என்பது கூரத்தாழ்வான் திருவாக்கு. அதனால் தான் ஆண்டாள் இங்கே ஒரு ஸ்ரீவைஷ்ணவ இல்லத்தை நம் கண் முன்னே காண்பிக்கிறாள். 

ஆண்டாள் கூறும் இந்தத் திருமாளிகையை நாம் கொஞ்சம் அனுபவிக்கலாம். மாடம் என்றால் மேலும் கீழுமாக மாடி விடு, ஒளி பொருந்திய இரத்தினக் கற்களாலே செய்யப்பட்ட மாடி வீடு அதனால் அது ’தூமணி மாடம்’

சுற்றும் விளக்கெரிய - அந்தத் திருமாளிகையில் பல சுற்றுக்கள் இருக்கிறது. தாழ்வாரம், முற்றம், படிக்கட்டு, பால்கனி .. எல்லாவற்றிலும் விளக்குகள் எரிந்துகொண்டு பிரகாசமாக இருக்கிறது. 

வீட்டிலிருந்து மெல்லிய காற்றில் ’ரூம் பிரஷ்னர்’ மாதிரி நறுமணப் புகை ‘தூபம் கமழ' வாசனையாக வருகிறது. அங்கே அழகிய கட்டிலில் மெல்லிய மலர்ப்படுக்கையில் பஞ்சனை மேல் துயிலில் ’உறங்கும்’ மாமான் மகளே என்று கூறாமல் ‘கண்வளரும்’ என்று மரியாதையோடு சொல்லுகிறாள். 

‘தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய’ அந்த ‘சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம்’ என்று வியக்கும் போது ‘தூபம் கமழும்’ ‘நாற வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ’ என்று உள்ளே துயிலணைமேல் ஒருத்தி படுத்துக்கொண்டு இருக்க அவளைப் பார்த்தவுடன் ‘படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டான்’ என்று அவளுக்கு அரங்கன் நினைவுக்கு வர  உடனே மரியாதையாக ‘கண்வளரும்’ மாமன் மகளே என்று அழைக்கிறாள். 

( சுடரொளி, நாற வைகறை - தொண்டரடிப் பொடியாழ்வார்; படுத்த பைந்நாகணை - பெரியாழ்வார் ) 

எம்பெருமானை மட்டும் அல்ல அவர்களுடைய அடியார்களை மதிப்பும் மரியாதையும் கொண்டு விளிக்க வேண்டும் என்பது நம் பூர்வங்களின் நிர்வாகம். 

வள்ளுவர் 

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

அன்பும் தூய்மையும் அறமும் உடைய உண்மையான சொல்லே இன்சொல்லாம் என்கிறார். இனிக்கப் பேசுவதெல்லாம் இன்சொல் ஆகாது, யார் வேண்டும் என்றாலும் இன்சொல் பேசலாம். அதனால் தான் வள்ளுவர் இங்கே ‘செம்பொருள் கண்டார்’ கூறும் வாய்ச் சொல்லே இன்சொல் என்கிறார். உண்மைப் பொருளை உபதேசிக்கும் நல்லோர்(செம்பொருள் கண்டார்) கூறும் இன்சொல். 

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து

வேறொரு சொல் அச்சொல்லைக் காட்டிலும் சிறந்தது இல்லை என்பதை அறிந்து சொல்லைச் சொல்லுக என்றும் இன்னொரு குறளில். 

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

சொல்லும்போது கேட்பவரை வசீகரித்துக் கேட்காதவரும் கேட்க விரும்புமாறு சொல்லுவதே சொல்

ஆண்டாள் நமக்குத் திருப்பாவை முழுவதும் இப்படிப் பட்ட ‘சொற்களால்’ ஒரு பாமாலையை அருளியிருக்கிறாள். 

ஆண்டாளுடைய சொல்லாட்சிக்கு இந்தப் பாசுரத்திலேயே ஓர் எடுத்துக்காட்டு பார்க்கலாம். ‘ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?’ என்பதில் ‘ஏமம்’ என்றால் என்ன என்று முதலில் புரிந்துக்கொள்ளலம் 

வள்ளுவரின் ஒரு குறள் இது 

பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து

நோயின்மை, செல்வம், விளைச்சல், இன்பம், காவல் இவை ஐந்தும் நாட்டுக்கு அணிகலங்கள் என்கிறார். இங்கே ஏமம் = காவல்

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?’ என்பதற்கு விளக்கம் ‘காவலில் வைக்கப்பட்டாளோ ? பெருந்துயிலிலே ஆழ்ந்து கிடக்கும்படி யாராவது மந்திரத்தால் வயப்படுத்தி விட்டார்களோ?’ என்று பொருள். 

அசோகவனத்தில் சீதையை காணவந்த அனுமார் காவல் புரியும் அரக்கிகளைப் பார்க்கிறார். அவர்களை மந்திரத்தால் உறங்கச் செய்தார். இதை கம்பர் 

காண்டற்கு ஒத்த காலமும் ஈதே; தெறு காவல்
தூண்டற்கு ஒத்த சிந்தையினாரும் துயில்கில்லார்;
வேண்டத் துஞ்சார்’ என்று, ஒரு விஞ்ஞை வினை செய்தான்;
மாண்டு அற்றாராம் என்றிட, எல்லாம் மயர்வு உற்றார்

சீதைப் பிராட்டியைக் கண்ட அனுமார் தூங்காமல் விழித்துக்கொண்டு காவல் காத்துக்கொண்டிருந்த அரக்கிகளை ஒரு மந்திரத்தால் (வினை செய்தான்) உயிரற்றவர் போல மயக்க அடையச் செய்தான். 

ஆண்டாள் இதை ஒரே வரியில் ’ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?’ என்று கூறிவிட்டாள்! 

அனுமார் மந்திரத்தால் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுமாறு செய்தது ஒருவித ’மெஸ்மரிசம், ஹிப்னாட்டிசம்’. ஆண்டாள் ‘மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்று’ நம்மை பெருமாளிடம் ஆழ்ந்து போகும் பக்திக்கு அழைக்கிறாள். பெருமாளிடம் ஆழ்ந்துவிடுபவர்கள் தானே ஆழ்வார்கள் ! 

- சுஜாதா தேசிகன்
24-12-2020
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art 


Comments

Post a Comment