6. பாவை குறள் - உள்ளத்துக் கொண்டு
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
பறவைகள் கூவிவிட்டன. கருடனை வாகனமாகக் கொண்ட விஷ்ணுவின் கோவிலில் வெண்சங்கொலி பெரிய ஓசையிட்டு அழைப்பது கேட்கவில்லையா?
இளம் பெண்ணே! எழுந்திரு பூதனா என்றும் அரக்கியின் நச்சு முலையை உறிஞ்சி, வஞ்சகமான சகடாசுரன் வண்டி உருவில் வந்த போது கட்டுக் குலையும்படி காலால் உதைத்தவன் பாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டு, உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை
முனிவர்களும் யோகிகளும் ஹரி ஹரி என்று கூறும் ஒலி
எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்தது என்று ஆண்டாள் தன் தோழிகளை எழுப்ப ஆரம்பிக்கிறாள்.
நாம் கோயிலுக்குச் செல்லும் போது, பெரும்பாலும் கூட்டம் இருப்பதை விரும்புவதில்லை. ஏதாவது பிரசாதம் கிடைத்தாலும் அதை மறைத்து எடுத்து வந்துவிடுகிறோம். நல்ல அனுபவத்துடனும் சுயநலம் வந்துவிடுகிறது
ஆண்டாள் இந்தப் பாசுரம் தொடங்கி, அடுத்த பத்துப் பாசுரத்தில் தோழிகளை எழுப்பி வாருங்கள் எல்லோரும் சேர்ந்து அனுபவிக்கலாம் என்று கூப்பிடுகிறாள்.
சாவை நீக்கும் அமிழ்தமாக இருந்தாலும் அதைத் தான் மட்டும் உண்பது தவறு என்று வள்ளுவரும் கூறுகிறார்.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
பெருமாளை அனுபவிக்கச் செல்லும் போது, நம் முன் வினைகள் அவற்றைத் தடுத்துவிடும். அன்று நடந்த மஹாபாரதக் கதைகளில் உதாரணம் தேடலாம். இன்று பெருமாளைச் சேவிக்கும் போது மொபைல் சத்தம் போட்டுக் கெடுப்பது எல்லாம் இது தான்.
இவற்றை எல்லாம் பெருமாளை அடைய வேண்டும் என்ற இச்சையும், தூய மனத்துடன் அவனிடம் பக்தி செய்தால் பெருமாளை அடையவிடாமல் நம் முன் வினைகள், வரப் போகும் வினைகள் எல்லாம் தீயில் பஞ்சு போல அழிந்துவிடும். எந்தக் கலக்கம் வந்தாலும் பெருமாளே உபாயம் என்று அவனை அடையும் முயற்சியிலிருந்து விலகக் கூடாது.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
ஊழ்வினையால் ஒரு செயல் முடியாமல் போனாலும், முயற்சி செய்தால் முடியாதது இல்லை என்கிறார் வள்ளுவர். பெருமாளை அடைய வேண்டும் என்ற முயற்சி செய்து அவனே அவனை அடையும் உபாயம் என்றால் முடியாமல் போகுமா ?
கண்ணனின் பெருமைகளைக் கூறி அவனை அனுபவிக்கலாம் வாருங்கள் என்று அழைக்கிறாள். இப்படிக் கூப்பிட்டு உபதேச செய்வது ஒரு யாகம். ஆசாரியர்கள் வைபவங்களில் ஆசாரியன் தன் அபிமான சீடனின் காதுகளில் துவயத்தை உபதேசித்தார் என்று கேட்டிருக்கிறோம்.
செவியை ஒரு ஹோமம் செய்யும் குண்டமாக வைத்து அக்கினியில் சொரியும் அவியைப் போன்றது, பெரியோர் சீடர்களுக்கு அவர்களுடைய செவி மூலம் தரும் அறிவு என்கிறார் வள்ளுவர்
செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து
ஆசாரியன் ஒரு பெரிய வேள்வியைச் செய்யும் பயனை அடைவான்; அவியப் பெற்றுத் திருப்தியடையும் தேவர்களைப் போல் ஆவான் அறிவை பெறும் சீடன்.
’முதல் தனி வித்தேயோ முழு மூவுலகு ஆதிக்கு எல்லாம்’ என்ற நம்மாழ்வாரைப் போல ஆண்டாள் அந்த வித்தான ஆதிபகவனே ஆதிசேஷனின் மீது துயிலில் இருக்கிறான். அந்த வித்தினை, உள்ளத்தில் வைத்திருக்கும் முனிவர்களும், யோகிகளும் மெல்ல எழுந்தார்கள் என்கிறாள் ஆண்டாள்.
இதைக் கொஞ்சம் அனுபவிக்கலாம்.
பகவானை எப்போதும் மனத்திலே தியானித்துக் கொண்டிருக்கும் முனிவர்களும் யோகிகளும் மனத்தில் எழுந்தருளியிருக்கும் பகவானுக்கு எந்த அதிர்வுகளும் ஏற்படாதவண்ணம் நிறைமாதக் கர்ப்பிணிகள் படுக்கையிலிருந்து எழுந்திருப்பது போல மெள்ள எழுந்துகொள்கிறார்கள்.
இந்த முனிவர்களும் யோகிகளும் பெரியாழ்வார், நம்மாழ்வார் போன்றவர்கள்.
பெரியாழ்வார்
அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவல் பொருட்டே
ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டு அழகிய பாற்கடலில் அலை மோத, செந்தாமரைப் பூவில் பெரிய பிராட்டியுடன் பெருமாள் அடியார்களுடன் தன் திரு உள்ளத்துள் வந்து புகுந்ததை விஷ்ணுவை தன் சித்தத்தில் வைத்திருந்த பெரியாழ்வார் பாடிப் பரவினார். அதனால் தம் உடலைக் காக்கும்படி பகவானை வேண்டினார்.
நம்மாழ்வார்
மாய பிரான் என வல்வினை மாய்ந்து அற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்
தேசத்து அமரர் திருக்கடித்தானத்தை
வாச பொழில் மன்னு கோயில் கொண்டானே
மாயப்பிரான் என் கொடிய வினைகள் தொலையச் செய்து, என் மீது உள்ள அன்பினால் என் நெஞ்சத்தில் எழுந்தருளினான். என் நெஞ்சமே அவனுடைய கோயில் என்கிறார்.
இந்த யோகிகளும் முனிவர்களும் நமக்கு ‘ஹரி’ என்ர நாமத்தை உணர்த்தும் ஆசாரியர்கள். நமக்கு உபதேசம் செய்வதே அவர்களுக்கு யாகம் போன்றது.
ஸ்ரீவேதாந்த தேசிகன் அருளிய ‘ஸ்ரீ வைஷ்ணவ தினசரி’யில் முதல் பாசுரம்
வரியிருள் அழி வழி மனம் வரும் உணர்வொடு
கரி கிரி மருவிய கரியபன் அடியிணை
பரிவோடு பரவும் நல் அடியவர் பழ வுரை
யரி யரி யரி யரி யரி யரி யரியே
பெருமாளின் திருவடிகளை அன்புடன் (மெள்ள எழுந்து) பணியும் பாகவதர்கள் (உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும்) அதிகாலை நித்திரை நீங்கிய பின் மனத்தெளிவு பெற்று வெகு காலமாய் ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி என்று ஏழுமுறை அனுஸந்திப்பர்( அரி என்ற பேரரவம்). இது தொன்று தொட்டு வந்த முறையாகும்!.
வள்ளுவர் தவம் செய்வது போல ஏமாற்றுபவர்களை
தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த்து அற்று
தவக்கோலத்தில் மறைந்துகொண்டு தீய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது. இப்படிப்பட்டவர்கள் மனித வெடிகுண்டாகவோ( ’பேய்முலை நஞ்சுண்டு ) அல்லது வாகன வெடிகுண்டாகவோ( கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி) அவர்களை அழித்துவிடுவான். அவன் மீது இச்சை இருந்தால் அவன் நம் உள்ளம் புகுந்து குளிரவைப்பான் என்கிறாள் ஆண்டாள்.
- சுஜாதா தேசிகன்
21-12-2020
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art
பாவை குறள் திரட்டுப் பாலாய் இனிக்கின்றது.ரிதம் அமைந்து உன்னிப்பாக கேட்க வைக்கின்றது.கோதை அருளும் வள்ளுவர் நுண்ணறிவும் ஒருங்கே இணைந்து உம்மிடம் வந்து எங்களுக்கு விருந்து படைக்கின்றது.மிக்க நன்றி ஸ்வாமி
ReplyDelete