பாவை குறள் - முன்னுரை
சென்ற வருடம்(2019) திருப்பாவையுடன் ஸ்ரீமத் ராமாயணத்தைச் சேர்த்து அனுபவித்தோம். அதுபோல் இந்த வருடம் என்ன எழுத உத்தேசம் என்று சிலர் கேட்டார்கள். இந்த வருடம் திருப்பாவையுடன் திருக்குறள் என்பதை யூகித்திருப்பீர்கள்.
திருப்பாவைக்கும் திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் ? பள்ளியில் படித்த சீத்தலைச்சாத்தனார் முதல் ஔவையார் வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட புலவர்கள் திருவள்ளுவரையும் திருக்குறளையும் புகழ்ந்து பாடியுள்ளார்கள். அந்தப் பாடல்களின் தொகுப்பு ’திருவள்ளுவர் மாலை’ என்று தொகுக்கப்பட்டுள்ளது.
அதில் ’உக்கிரப் பெருவழுதியார்’ என்ற புலவர் பாடிய பாடல்
நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம்
சிந்திக்க கேட்க செவி
நான்கு வேதங்களின் மெய்ப்பொருளைக் கொடுத்த நான்முகன் பிரம்மாவே வள்ளுவனாகத் தோன்றி அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற முப்பால் நூலை என்தலை வணங்கட்டும்; வாய் வாழ்த்தட்டும்; மனம் சிந்திக்கட்டும், செவி கேட்கட்டும் என்கிறார்.
அடுத்து ’வெள்ளி வீதியார்’ என்ற புலவரின் பாடல்
செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே – செய்யா
அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல்
ஒருவராலும் இயற்றப் படாத வேதமும், திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் கூறும் பொருள் ஒன்றே. வேதம் அந்தணர்கள் மட்டுமே கூற முடியும் ஆனால் திருக்குறளோ எல்லோரும் பொது என்கிறார்.
வேதத்தின் பொருளே திருக்குறள் என்று சங்கத்தமிழ்ப் புலவர்கள். திருவள்ளுவ மாலையில் கூறுகிறார்கள். திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு விளக்கமாக அமைந்த நூலுக்கு ‘நுண்பொருள் வாசகமாலை’ என்று பெயர். நுட்பங்களைக் கூறவந்த நூல்கள் பல ‘மாலை’ என்று பெயர் பெற்றவை. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் ‘சங்கத்தமிழ் மாலை’
’சங்கத்தமிழ் மாலை’ என்ற திருப்பாவையைப்
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ்
ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.
என்று வேதத்துக்கு எல்லாம் ஆண்டாளின் திருப்பாவை வித்து என்கிறார் வேதப்பிரான் பட்டர். வேதம் தானே திருப்பாவைக்கு முன்பு தோன்றியது திருப்பாவை எப்படி வேதத்துக்கு வித்தாக முடியும் ? என்ற கேள்வி எழலாம். ஒரு மாம்பழத்தில் எவ்வளவு கொட்டை என்று கேட்டால் ஒன்று என்று உடனே பதில் கூறலாம். ஆனால் அந்தக் கொட்டையினுள் எவ்வளவு மாம்பழம் இருக்கிறது என்றால் யாராலும் பதில் கூற முடியாது. திருப்பாவையும் அப்படியே.
இந்த வருடம் வேதத்தின் சாரமான திருக்குறளையும், வித்தான திருப்பாவையும் சேர்த்து ஒரு மாலையாக அனுபவிக்க முடியும் என்ற நம்பிக்கையில் ’பாவை குறள்’ என்ற தலைப்பில் முயலலாம் என்ற எண்ணம்.
தினமும் எழுதலாம் என்று ஆசை இருந்தாலும், முன்கூட்டியே எந்த ‘ஹோம் வர்க்கும்’ செய்யாமல் ஆண்டாள் திருவடிகள், வள்ளுவன் திருவடிகளுக்குப் பல்லாண்டு பாடி யோசிக்க ஆரம்பிக்கிறேன்.
இங்கே பார்க்கும் ஆண்டாள் படத்தைத் தந்து உதவிய Srishti - Tales of Teerthams & Kshetrams அவர்களுக்கு என் நன்றிகள் பல.
- சுஜாதா தேசிகன்
15-12-2020
Adiyenin Namaskarangal
ReplyDelete" சென்ற வருடம்(2019) திருப்பாவையுடன் ஸ்ரீமத் ராமாயணத்தை"
Could you please share the above said concept or could u share the link for it.. Pls .. Adiyen
ஸ்ரீ சீதாராம திருப்பாவை என்று எழுதினேன். அவை முகநூலில் வந்தது. தனி புத்தகமாக பிரசுரிக்கும் எண்ணம் இருக்கிறது.
Deleteபோன வருஷம் ராமன் ஆவிர்பவித்து செம்மையாக தம் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டார் என்றால்!
ReplyDeleteதிருவள்ளுவர் மட்டும் தேசிகனின் *சாற்றுமறையை*
வேணாம்னு விட்டுவிடுவாரா என்ன?
இப்போதே களை கட்டுகிறது.அமர்ந்தோம் உம் வலையில் ஆர்வமாக
Azhagu
ReplyDelete