Skip to main content

10. பாவை குறள் - சுவர்க்கம்

 10. பாவை குறள் - சுவர்க்கம் 

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

நோன்பு நோற்றுச் சுகம் அனுபவிப்பவளே! வாசல் கதவைத் திறக்காதவர்கள் பதில் கூடவா சொல்ல மாட்டார்கள் ? நறுமணமுள்ள துளசிமாலையைச் சூடிய நாராயணன், நம்மால் போற்றப்பட்டு அருள் புரிபவனான இராமாவதாரத்தில் யமன் வாயில் இரையாக வீழ்ந்த கும்பகர்ணனும் உன்னிடத்தில் தோல்வியடைந்து தனது பேருறக்கத்தை உனக்குத் தந்தானோ ? எல்லையற்ற சோம்பலுடையவளே! சிறந்தவளே தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக!

சில வருடங்களுக்கு முன் வைகுண்ட ஏகாதசி சமயம் ஸ்ரீரங்கத்தில் ஒருவரிடம் ‘சொர்க்க வாசல் எத்தனை மணிக்குத் திறப்பார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் சம்பிரதாயத்தைப் பற்றி எழுதும் நீரே சொர்க்க வாசல் என்று கூறலாமா ? அது பரமபத வாசல் அன்றோ?’ என்றார். அவர் கூறியதில் எந்தத் தவறும் இல்லை. (செய்திகளில் ‘சொர்க்க வாசல் திறப்பு!’ என்று படிப்பதால் நாமும் அதையே உபயோகிக்கிறோம்)  சொர்க்கம் என்பது தேவலோகம், பரமபதம் என்பது மோட்சம். 

ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் ‘சுவர்க்கம்’ என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறாள். இங்கே ஆண்டாள் கூறும் சுவர்க்கம் என்னும் சொல் சுகத்தைக் குறிக்கிறது. கிருஷ்ணாநுபவம் என்ற சுகம். ‘சுவர்க்கம்’ என்ற சொல்லை ஆண்டாள் உபயோகிக்கலாமா என்று நமக்குத் தோன்றும். 

ஸ்ரீராமர் வனவாசத்திற்குத் தயாராகும் போது. சீதைப் பிராட்டி தானும் கூட வருகிறேன் என்கிறாள். அப்போது ஸ்ரீராமர் ‘அங்கே மிகுந்த கஷ்டமாக இருக்கும் வேண்டாம்’ என்று தடுக்கிறார். அப்போது பிராட்டி “உன்னுடன் கூடியிருந்தால் அது சுவர்க்கம். உன்னைப் பிரிந்திருந்தால் அது நரகம்’ என்கிறாள். இளையபெருமாள் ‘எம்பெருமானோடு கூடியிருப்பது சுவர்க்கம். அவனைப் பிரிந்திருப்பது நரகம்’ என்கிறார். 

தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலையில் 

நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கம் ஆகும் நாமங்கள் உடையன் நம்பி
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே

யமனும் முற்கலனும் பெருமாள் திருநாமங்களைக் கூற அதைக் கேட்டவுடன் நகரமே சுவர்க்கமாக மாறியது. இத்தகைய மகிமை பொருந்திய அந்த நாமத்தை உடையவன் திருவரங்கத்தில் இருப்பதை மக்கள் மறக்கலாமா ? என்கிறார். 

சென்னை வெய்யிலுக்கு  ஏசி சொர்க்கம். நல்ல பசியில் ஃபுல் மீல்ஸ் கிடைத்தால் சொர்க்கம், கூட்டமான பஸ்ஸில் இடம் கிடைத்தால் சொர்க்கம்...  சுகத்தைச் சொர்க்கம் என்று கூறுகிறோம்.  

ஆழ்வார்களுக்குச் சுகம் என்பது ’கிருஷ்ண சுகம்’ இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே!  என்று ஆழ்வார் கூறுவது ’திருவரங்க சுகம்’ எனக்கு போதும் என்பது. 

இந்தக் கிருஷ்ணச் சுகம் எப்படி இருக்கும் ? 

வள்ளுவர் காமத்துப் பாலில் ஒரு குறளை அனுபவிக்கலாம். 

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு ?

தாம் விரும்பும் காதலியின் மென்தோள்களில் உறக்கம் கொள்ளும் இன்பத்தைவிடவா இனியது தாமரைக் கண்ணான் உலகு? என்று காதலன் மகிழ்ந்து கூறுகிறான். 

இக் குறளை முதலில் ஒழுங்காகப் புரிந்துகொள்ளலாம் பிறகு தாமரைக் கண்ணான் உலகு என்றால் என்ன என்று பார்க்கலாம். 

’தாமரைக் கண்ணான் உலகு’ என்ற சுகத்தைவிடவா காதலியின் மெந்தோள்களில் தழுவி உறக்கம் கொள்ளும் சுகம் ? இல்லை ! என்று படிக்க வேண்டும். 

ஸ்வாமி தேசிகன் ஹம்ஸ ஸ்ந்தேசம் என்று ஒரு காவியத்தை அருளியிருக்கிறார். அனுமார் மூலம் சீதை இருக்கும் இடத்தை அறிந்த ராமர் அவளின் பிரிவைப் பொறுக்க முடியாமல் அன்னப்பறவை ஒன்றைக் கண்டு அதனிடம் தூது செல்லும்படி வேண்டுகிறார். 

அதில் ஒரு ஸ்லோகத்தில் ’சிறந்த காதலர்கள் தங்கள் காதலியைத் தழுவிக் கொள்வதைக் காட்டிலும் தூது விடுவதற்கு ஏற்ற வழியைக் கண்டுபிடித்தால் அதுவே பெரும் மகிழ்வை கொடுக்கும்’ என்கிறார் ( ஸ்லோகம் 4 )  


சுகம் என்பது தோள் தழுவலைக் குறிக்கிறது. தூது சென்று வந்த நல்ல செய்தி கூறிய அனுமனிடம் ‘எனக்கு கொடுக்க ஒன்றும் இல்லை’ என்று அனுமனைத் தோள்களால் ஆரத்தழுவிக் கொண்டான். அந்த தழுவல் இன்பத்தை நுகர்ந்த அனுமார் இந்தத் தழுவலே போதும் எனக்கு வைகுண்டம் வேண்டாம் என்றார். அதாவது அனுமான் கூறியது இது ‘நாற்றத் துழாய்முடி நாராயணனின் நாமங்களான மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் சொல்லிக்கொண்டு இங்கேயே இருக்கிறேன்’ என்கிறார். 

’தம்மை உகப்பாரைத் தாம் உகப்பார்’ என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கூறுகிறாள். இங்கே வள்ளுவர் இருவரும் ஆரத்தழுவி  ‘தாம்வீழ்வார்’ என்கிறார். திருமங்கை ஆழ்வார் ‘அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரந்தோளான்’ என்கிறார்.  தோள்கண்டார் தோளே கண்டார் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். 

பரமாத்மா ஜீவாத்மாவை ஆரத்தழுவி மகிழ்விப்பதைக் காதலி காதலனை தழுவி மகிழ்விப்பதை உபநிஷதம் உவமானமாகக் கூறுகிறது. ஸ்வாமி தேசிகன் பரமபத ப்ராப்தியில் பெருமாளுக்குச் சின்ன உதவி செய்தால் அவன் தன் திருத்தோள்கள் பரிசாகக் கொடுக்கிறான் என்று அனுமனுக்கு ஸ்ரீராமர் கொடுத்து மகிழ்ந்த தழுவலைக் எடுத்துக்காட்டுகிறார். 

அனுமார் சீதையிடம் ஸ்ரீராமரின் அடையாளங்களைக் கூறும் பொழுது ‘இராமன் தாமரைக் கண்ணன்’ என்று ஆரம்பிக்கிறார். கண்ணபிரானைச் சரணம் அடைந்த அர்ச்சுனன் ‘தாமரைக் கண்ணா!” என்று விளித்து கீதையை உபதேசம் செய்ய வேண்டுகிறான். அவதாரம் செய்த கண்ணபிரானை  ‘அற்புதப் பாலகனைத் தாமரைக் கண்ணனை வசுதேவர் கண்டார்’ என்கிறது பாகவதம். 

நம்மாழ்வார் ‘செந்தாமரைக்கண் திருக்குறளன்’ என்கிறார். ’சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை’ என்று ஆண்டாளும், ’மிளிர்ந்து செவ்வரி ஓடி. நீண்ட அப்பெரிய வாய கண்கள்’ என்று திருப்பாணாழ்வாரும் கூறுகிறார்கள். பரமபதமாகிய வைகுந்தம் என்னும் பேரின்ப உலகு என்பது தாமரைக்கண்ணான் உலகு. 

இந்த உலகை அடைய வள்ளுவர் கூறும் குறள் 

யான் எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

நான் என்னுடையது என்னும் கர்வமற்றவன் தேவர்க்கும் எட்டா உயர்நிலையை அடைவான். அந்த உயர் நிலை தான் தாமரைக் கண்ணான் உலகு!

உபநிஷம் இன்ப அளவை கூறுகிறது. மனிதனின் இன்பத்திலிருந்து அளக்கத் தொடங்கி. மனிதனின் இன்பம் = 1 என்றால் அதைவிட நூறு மடங்கு தேவ கந்தர்வர்களுடைய இன்பம் இப்படி.. நூறு நூறாக பொறுக்கிக்கொண்டே சென்று இந்திரன் பிறகு நான்முகன் கடைசியில் பரமாத்மா ஆனந்தத்தை அளக்க முடியாது என்கிறது. இவ்வளவு இன்பத்தை அவன் தரும் பொழுது  எந்தப் பாத்திரம் கொண்டு நாம் பிடித்துக்கொள்வது ? அதற்கு ஒரு சிறந்த கொள்கலம் வேண்டும். அது தான் ஆண்டாள் கூறும் அருங்கலமே! அவனுடைய தயைக்கு நாமே பாத்திரமாக இருக்க வேண்டும். 

’ராமானுஜ தயாபாத்திரம்’ ஸ்ரீசைலேச தயாபாத்திரம்’ மாதிரி ஆண்டாள் ’கிருஷ்ண தயாபாத்திரத்துக்கு’  நறுமணமுள்ள துளசிமாலையைச் சூடிய நாராயணனைப் போற்றி பாடினால் அந்தச் சுகமான சொர்க்க வாசல் உங்களுக்கு திறக்கப்பட்டு மீளாப் பேரின்பமான தாமரைக்கண்ணான் உலகு கிடைக்கும் என்கிறாள். 

- சுஜாதா தேசிகன்
25-12-2020
வைகுண்ட ஏகாதசி

முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art
நம்பெருமாள், தாயார் ஓவியம் நன்றி திரு கேஷவ். 




Comments