Skip to main content

7. பாவை குறள் - கேட்டிலையோ ?

 7. பாவை குறள் - கேட்டிலையோ ?

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?

தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய்.கீசு கீசு என எங்கும் வலியன் பறவைகள் ஒன்று கூடிக் கூவிய கூச்சல் ஒலி கேட்க வில்லையா பேதைப் பெண்ணே! காசுமாலையும், குண்டுமாலையும் கலகலவென்று ஒலிக்க வாசனையுடைய கூந்தலை உடைய இடைப்பெண்கள் கைகளை அசைத்து மத்தினால் கடையும் தயிரின் ஓசை கேட்கவில்லையோ! பெண்கள் தலைவியே! நாராயணனான கண்ணனை நாங்கள் பாடக் கேட்டுக்கொண்டே படுத்துக் கிடக்கிறாயோ? பிரகாசமானவளே ! கதவைத் திறப்பாயாக என்று ஆண்டாள் அடுத்த பெண்ணை எழுப்புகிறாள். 

ஏன் இப்படி ஒவ்வொரு இல்லத்துக்கும் சென்று எழுப்புகிறாள் என்று நமக்குத் தோன்றும். பெருமாளுடன் கூடுவதை விட அடியார்களுடன் கூடுவதைத் தான் ஆழ்வார்கள் விரும்புகிறார்கள். நம்மாழ்வார் ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ’ என்கிறார். 

கோயிலுக்கு செல்லும் போது எல்லோரும் சேர்ந்து செல்ல வேண்டும். அதனால் ஆண்டாள் ‘அனைத்து இல்லத்தாரும்’ ( திருப்பாவை 12) என்று ஒரு இல்லமும் விடாமல் எழுப்புகிறாள். 

வள்ளுவர் 

காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள

தனக்குக் கிடைத்ததை காக்கை மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்; இப்படிப்பட்ட இயல்புடையவருக்கே செல்வம் பெருகும் என்கிறார். 

வினா இல்லை என்றால் விடைகள் இல்லை என்பர்கள். இந்தப் பாசுரம் ‘கீசு கீசு’ என்ற விடையுடன் ஆரம்பிக்கிறது. அப்படி என்றால் இதற்கு முன் ஒரு கேள்வி உரையாடல் நடந்திருக்கிறது என்பதை யூகிக்கலாம். என்னவாக இருக்கும் ? 

’பொழுது விடிந்துவிட்டது, ஏன் எழுந்துகொள்ளவில்லை ?’ என்று ஆண்டாள் கோஷ்டி கேட்க அதற்கு உள்ளே இருக்கும் பெண் ’அப்படியா ?’ என்று கூற, அதற்குப் பதிலாக  ‘கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!” என்பது விடை. 

இதற்குப் பிறகு விடிந்துவிட்டது, இல்லை என்று சச்சரவு கொஞ்சம் நடந்திருக்க வேண்டும். ‘சொன்னதற்கு எல்லாம் இல்லை என்று மறுத்துப் பேசுகிறாயே எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத பேய் பெண்ணே!’ என்று அழைக்கிறார்கள். 

வள்ளுவர் இந்தக் குறளில் 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்

உலகம் கூறும் உண்மையை மறுப்பவன் பேயாகக் கருதப் படுவான் என்கிறார். இங்கே பேய்பெண்ணே. 

ஆண்டாள் பல ஓசைகளை இந்தப் பாசுரத்தில் கூறுகிறாள். பறவைகளின் கீசு கீசு என்ற பேச்சரவம்; தயிர் கடையும் போது காசு மாலையின் கலகலப்பு ; ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தும் தயிரரவம். கேசவனை குறித்து பாடும் பாடல். 

வள்ளுவர் 

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

கேள்வி அறிவால் துளைக்கப்படாத செவிகள் ஓசையைக் கேட்டு என்ன பிரயோஜனம் ? என்று என்கிறார் வள்ளுவர். 

இந்தப் பெண் எழுந்து வந்தாளா ? என்ற கேள்வி எழும். ’பேய்பெண்ணே!’ என்று கூறிய ஆண்டாள் கோஷ்டி, அவளைச் சமாதானப் படுத்தும் விதமாக ‘நாயகப் பெண் பிள்ளாய்’ என்கிறாள்.  கடைசியில் அவள் வந்தவுடன்  ‘தேச முடையாய்!’ என்று அழைக்கிறாள். 

தேசமுடையாய் என்றால் நல்ல தேஜஸ்சுடன் பிரகாசமாக இருப்பவளே என்று பொருள். வள்ளுவர் ஒரு குறளில் 

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசுஊர மாய்ந்து கெடும்

சோம்பல் என்ற குற்றம் அங்கே புகுந்துவிட்டால் பிரகாசம் கெட்டு மறைந்து போகும் என்கிறார். இங்கே அந்தப் பெண் சோம்பலை விட்டு எழுந்துவிட்டாள் அதனால் அவளை ஆண்டாள் ஒளிப் படைத்தவளே!   பிரகாசமானவளே என்று கூறுகிறாள். 

‘கீசு கீசு’ என்று பறவைகள் ஒன்றுக்கும் ஒன்று கலந்து ’கிருஷ்ண கிருஷ்ண’  பேச்சொலியாக கண்ணனை நினைவு படுத்துகிறது.
வாங்கக் குடம் நிறைக்கும் பசுக்கள் இருப்பதால் ’முப்போதும் கடைந்தீண்டிய வெண்ணெய்’  தயிர்கடையும் ’கலகல’ என்ற வீச்சொலியும். தயிரவமும் சேர்ந்து கண்ணை நினைவு படுத்துகிறது.
கேசவா என்று பாடும் பாட்டொலி கேசியை நினைவு படுத்துகிறது!

பல ஒலிகளை ஒலிக்க வைத்த இந்த பாசுரம், திருப்பாவையில் இருக்கும் திருப்பள்ளியெழுச்சி !

- சுஜாதா தேசிகன்
22-12-2020
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art 


Comments