Skip to main content

15. பாவை குறள் - இளங்கிளியே !

15. பாவை குறள் - இளங்கிளியே



எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்;
வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்;
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்;
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை  மாயனைப் பாடு — ஏலோர் எம்பாவாய்.

நாம் கதைகளைப் படிக்கும் சில உரையாடல்கள் வரும். உதாரணத்துக்கு ஒருவர் தொலைப்பேசியில் பேசுவதை இப்படி எழுதலாம்.   

“ஹலோ!...”

”.....”

“ஹலோ.. ஹலோ… கேக்குதுங்களா ?” 

“.....”

“டாக்டர் இருக்காரா ?”

“......”

“என் பெயர் …. எப்ப வருவார்?”

“......”

“பர்சனல்”

“.......”

“சரி, நாலு மணிக்கு வரேன்”

“......”

“டாக்டர் வந்தா சொல்லிடுங்க…”

”......”

“நன்றி”

மேலே உள்ள சம்பாஷனையில் மறுமுனையில் யாருடன்,எந்தச் சமயத்தில், என்ன பேசினார் என்று படிக்கும் போது சுலபமாக யூகிக்கலாம். இதே போல் திருப்பாவை ஆறாம் பாசுரத்திலிருந்து பதினான்காம் பாசுரம் வரை நாம் உரையாடலை யூகித்துக்கொள்ள வேண்டும். 

உதாரணமாக ஆறாம் பாசுரத்தில் என்ன நடந்திருக்கும் ? 

“சீக்கிரம் எழுந்துகொள் விடிந்துவிட்டது!”

“அதற்குள் விடிந்துவிட்டதா ? பொய் சொல்லாதே!”

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?”  ( பறவைகள் சத்தம், சங்கொலி கேட்கவில்லையா ? )

அடுத்து பதிமூன்றாம் பாசுரத்தில் 

”சீக்கிரம் எழுந்துகொள் ராமா கிருஷ்ணா என்று பாடிக்கொண்டு மற்றவர்கள் எல்லாம் கிளம்பிச் சென்று விட்டார்கள்” ( பிள்ளைகள் எல்லாரும்  பாவைக் களம்புக்கார்)

“என்ன அதற்குள் விடிந்துவிட்டதா ?”

“ஆமாம் நீயே வந்து பார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!” 

“வானத்தில் ஏதாவது நட்சதிரத்தை பார்த்து தப்பாகக் கூறியிருப்பீர்கள் ஒழுங்காக பாருங்கள்”

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!” ( பறவை சத்தம் கேட்கவில்லையா ? )

இந்த இரண்டு பாசுரங்களிலும்  ‘புள்ளும் சிலம்பின காண்’ என்ற ஒரே அடையாளத்தை ஆண்டாள் ஏன்  கூறுகிறாள் ? 

காலை 3-4 மணிக்குப் பறவைகள் எழுந்துகொள்ளும் போது இருட்டாக இருக்கும். அந்தச் சமயம் அவை கூடுகளில் விடியலுக்காகக் காத்துக்கொண்டு ஒலி எழுப்பும். இதை ‘bird chorus’ என்பார்கள். இது ஆறாம் பாசுரத்தில் வரும் ‘புள்ளும் சிலம்பின காண்’

சூரிய வெளிச்சம் சற்று வந்தப் பிறகு அவை ஆரவாரம் செய்து இரை தேட செல்லும். இதை தான் ஆண்டாள் பதிமூன்றாம் பாசுரத்தில் ‘புள்ளும் சிலம்பின காண்’ என்கிறாள். 

பறவை முழித்துக்கொண்டு இரை தேட செல்லும் வரை இந்தச் சத்தம் கிட்டதட்ட 30 நிமிடம் இருக்கும் என்கிறார்கள். ஆக 6ஆம் பாசுரத்திலிருந்து 13ஆம் பாசுரம் ஒவ்வொரு வீடாக செல்ல அவர்களுக்கு 30 நிமிடம் ஆனது என்று வைத்துக்கொள்ளலாம். 

இரண்டு பாசுரத்திலும் ‘புள்ளும் சிலம்பின காண்’ என்று ஆறாம் பாசுரத்தில் கூறும் போது  இருட்டாக இருக்கும் அப்போது எப்படி அந்தப் பறவைகளைக் காண முடியும் ? 

நாம் பேச்சு வழக்கில் ‘காலிங் பெல் அடித்தது  பார்த்தையா ?” என்போம்.  அது போலத் தான் முதலில் வரும் ‘காண்’ 

பிறகு அடுத்த பாசுரத்திலேயே வெளிச்சம் வந்துவிட்டது அதனால் ஆண்டாள் அந்தப் பறவைகளை ‘ஆனைசாத்தன்’ என்று அடையாளம் சொல்லுகிறாள். அதற்குப் பிறகு எல்லாப் பறவைகளும் ஆரவாரம் செய்து இரை தேடப் புறப்படும் சமயம் அந்தப் பறவைகளைப் பார்க்க முடியும் இந்தக் ‘காண்’ கண்ணால் பார்ப்பது! 

இதுவரை தோழிகளை எழுப்பும் போது அந்தத் தோழி என்ன கூறினாள் என்று நமக்குத் தெரியாது என்று முன்பு பார்த்தோம் முதல் முறையாக இப்பாடலில் துயிலிலிருந்து விழித்துக்கொண்ட கோபியருடன் ஆண்டாள் உரையாடுவதைக் காணலாம். இந்தப் பாசுரத்தில் ஒரு வித டிராமா போல ஆண்டாள் நமக்கு அந்த உரையாடலை அருளியிருக்கிறார். டிராமா போல கூறினால் தான் மனதில் நன்கு பதியும் அல்லவா ? 

பாசுரத்தின் பொருள் எளிய உரை: 

[எழுப்புபவர்] இளங்கிளி போன்றவளே என்னே இன்னமா தூங்குகிறாய் ?

[எழுந்திருப்பவர்] பெண்களே ! இதோ வருகிறேன் ! ‘சில்’ என்று கூச்சலிட்டு எழுப்பாதீர்கள் !

[எழுப்புபவர்] நீ வாயாடி. நீ சொல்லும் கட்டுக்கதைகள் முன்னமே நாங்கள் அறிவோமே !

[எழுந்திருப்பவர்] நீங்கள்தான் வாயாடிகள்;பரவாயில்லை; நானே தான் வாயாடியாக இருந்துவிட்டுப் போகிறேன்

[எழுப்புபவர்] நீ உடனே புறப்பட்டு வா வேறு என்ன வேலை இருக்கிறது ?

[எழுந்திருப்பவர்] எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா ?

[எழுப்புபவர்] எல்லோரும் வந்து விட்டார்கள். நீயே வந்து எண்ணிப்பார்.

குவலயாபீட யானையையும் கம்சன் முதலிய பகைவர்களையும்

அழித்த கண்ணன் புகழ் பாட எழுந்துவா


நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இந்த ஒரு பாசுரம் மட்டும் தான் இது போல் உரையாடலில் அமைந்திருக்கிறது, இதில் மிக முக்கியமான வைஷ்ணவக் குணம் சொல்லப்பட்டிருக்கிறது. 

அடியேன், தாசன் என்று சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது மற்றவர்களின் அபராதங்கள் ( தவறுகளை) தங்கள் மீது போட்டுக் கொண்டு பரஸ்பர நீச பாவத்துடன் இருக்க வேண்டும் என்பது ஸ்ரீவைஷ்ணவத்தின் ஆதார கருத்து. 

இந்த மிக உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவ ‌லட்சணத்தை ஆண்டாள் ‘நானே தான் ஆயிடுக’ என்று இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டாள்.  இங்கே இரண்டு பெண்கள் ஒருவருக்கு ஒருவர்  ‘Blame Game’ ஈடுப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பிறகு ஒரு கட்டத்தில் உள்ளே இருப்பவள் குற்றத்தை தன் மீது சுமத்திக்கொண்டு ‘நானே தான் ஆயிடுக’ என்று கூறுவதைக் கவனிக்கலாம். இங்கே ஆண்டாள் 'இளம்கிளி’ என்ற பெண்ணின் கதாபாத்திரத்தை மிக அருமையாக சித்தரித்திருக்கிறாள். நாமேதாம் ஆயிடுக என்று கூறாமல், நானே தான் ஆயிடுக என்று கூறுவதை இங்கே கவனிக்க வேண்டும். 

வள்ளுவர் 

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது. என்கிறார். நல்ல பேச்சே அறம் என்கிறார் வள்ளுவர். இனிய பேச்சு செல்வம் ஒருவனுக்குக் கிடைத்துவிட்டால் அதுவே பெரிய பாக்கியமாகும். 

ஒருவன் நமக்கு மரணத்தைப் போலப் பொறுக்க முடியாத தீமை செய்தால் அதனால் நமக்கு மிகுந்த வருத்தமும் துக்கமும் உண்டாகிறது. அந்தச் சமயம் நாம் என்ன செய்ய வேண்டியது என்ன என்று வள்ளுவர் ஓர் அறிவுரை கூறுகிறார். 

மரணம் போலத் தீமை செய்தவன் ஏதேனும் ஒரு நன்மை முன்பு செய்திருப்பான். அதை நினைவுக்குக் கொண்டு வந்து நினைத்துப் பார்த்தால் அவன் செய்த தீமையை மறப்பதற்கு உதவும். 

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

முன் உதவி செய்தவர் பின்பு மரணம் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தால் அந்தத் துன்பம் கெடும். இன்னொரு குறளில் 

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவர்க்கு ஒருநாள் மட்டுமே இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு என்கிறார் வள்ளுவர். மேலும் ஒரு குறளில் 

துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோக்கிற் பவர்

கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறவிகளைவிடத் தூய்மையானவர்கள் என்று புகழ்ந்து அடுத்த குறளில் மேலும் புகழ்கிறார் 

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

பட்டினி கிடந்து விரதம் இருக்கும் பெரியோர்களை விடப் பிறரின் கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் மேலானவர்கள் என்கிறார். 

'நானே தான் ஆயிடுக' என்ற சொன்ன இளம் கிளியை பரதாழ்வானை இங்கே எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள் நம் ஆசாரியர்கள். பரதன் என்ற பெயருக்கு ராஜ்யத்தைச் சுமந்தான் என்ற காரணப் பெயர் பொதுவாகக் கூறினாலும்,  அவன் சுமந்தது பழியை ! அதனால் அவனுக்கு என்ன கிடைத்தது ? 

'நானே தான் ஆயிடுக' என்ற உயர்ந்த இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே !  பரதன் என்ற இளம் கிளி பழியை சுமந்ததால் அதற்கு ஸ்ரீரமாரின் பாதுகைகளை தலையில் சுமக்கும் பெரும்பேறு கிடைத்தது, அப்படிப் பட்ட அக்கிளியை வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று அந்த மடக்கிளியைக் கைகூப்பி வணங்குவார்கள்.

- சுஜாதா தேசிகன்
30-12-2020
கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art



Comments