Skip to main content

13. பாவை குறள் - வெள்ளி - வியாழம்

13. பாவை குறள் - வெள்ளி - வியாழம்புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்;
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்து — ஏலோர் எம்பாவாய்.

பறவையாய் வந்த பகாசுரனின் வாயைப்பிளந்தவனும் கொடிய இராவணனுடைய தலையைக் கிள்ளியெறிந்த திருமாலைப் பாடிக்கொண்டு பாவை நோன்பு நோற்கும் இடத்தை அடைந்துவிட்டார்கள். சுக்கிரன்(வெள்ளிக்கிரகம்) உச்சிக்கு வந்து குரு(வியாழன்) மறைந்துவிட்டது. பறவைகள் கூவுகின்றன பூபோன்ற மான்கண் உடையவளே உடல் குளிர நீராடாமல் படுத்துக் கிடக்கிறாயோ? நீ உன்னுடைய கபடத்தை விட்டுவிட்டு எங்களுடன் வந்து கலந்துவிடு!

‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்ற இந்த வரி மிகப் பிரபலம். சுக்கிரன், குரு கிரக நிலைகளைக் கொண்டு ஆண்டாள் எந்தக் காலத்தில் திருப்பாவை பாடியிருப்பாள் என்று ஆராய்ச்சி செய்துள்ளார்கள். இப்படி ஆராய்ச்சி செய்தவர்கள் ’நற் செல்வன் தங்காய்’ என்று போன பாசுரத்தில் வந்த அந்த ‘நற்செல்வன்’ யார் என்று ஆராய்ச்சி செய்யவில்லை. நாமும் இந்தக் கட்டுரையில் சில ஆராய்ச்சிகளைச் செய்யலாம்.  

முதலில் ’நற் செல்வன்’ யார் என்று பார்க்காலாம். 

பெரியாழ்வார் 

சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட
ஒரு கையால் ஒருவன் தன் தோளை ஊன்றி ஆநிரை இனம் மீள குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
அருகே நின்றாள் என் பெண் நோக்கி கண்டாள் அது கண்டு இ ஊர் ஒன்று புணர்க்கின்றதே

மாலை நேரம் ஆகிவிட்டது. மாடுகளை மேய்த்துவிட்டு கண்ணன் அழுக்காக வரும் அந்த அழகைப் பார்க்க வேண்டும் என்று கோகுலத்தில் எல்லோரும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது கண்ணனின்  சிறு கத்தி, வில், செண்டு கோல், மேலாடையை அவனுடைய தோழர்கள் ஏந்தி ஓட, அவனுடைய உயிர்த் தோழனின் தோள் மீது சாய்ந்துகொண்டு வருவான் கண்ணன். 

வள்ளுவர்
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்று நிலை

சிறந்த நட்பு எது என்றால் எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும்போதெல்லாம் தாங்கும் நிலையாகும். தோள் கொடுப்பான் தோழன் என்று இதனால் தான் சொல்லுகிறோம். 

ஒரு நல்ல நண்பனே சாய்ந்துகொள்ளத் தோள் கொடுப்பான்.

தன் தோளைக் கொடுத்து கண்ணனைத் தாங்கும் அந்த நல்ல தோழன் தான் ’நற் செல்வன்’. 

அடுத்து இன்னொரு சுவையான விஷயத்தைப் பார்க்கலாம். 

‘புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடி’ 

இங்கே ஆண்டாள் ’பறவையாய் வந்த பகாசுரனின் வாயைப்பிளந்த கண்ணனும்,  கொடிய இராவணனுடைய தலையைக் கிள்ளியெறிந்த ராமரையும் என்று பாடுவதாகப் பொருள். ஸ்ரீ உ.வே. கருணாகராச்சாரியார் ஸ்வாமிகளின் திருதகப்பனார் இந்த வரி முழுவதும் ஸ்ரீராமரைக் குறிப்பதாகும் என்று தன் அனுபவத்தை கூறினார். அதன் சுருக்கம் இது 

ஆண்டாள் இங்கே கொக்கு என்று கூறாமல் பொதுவாகப் புள் ( பறவை ) பற்றிக் கூறியிருக்கிறாள். அதனால் எந்தப் பறவை வேண்டும் என்றாலும் இருக்கலாம். புள்ளின் வாய் என்பதைப் புள் இன் வாய் என்று படித்தால் இனிய வாயை உடைய பறவை என்று பொருள் வரும். ஸ்ரீமத் ராமாயணத்தில் இன் வாய் உடைய பறவை ஜடாயு. 

ஜடாயு அடிப்பட்டு இருக்கிறது. ஸ்ரீராமர் குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் ஜடாயுவைப் பார்த்துத் துடிக்கிறார். அப்போது ஜடாயு ராமரைப் பார்த்து ‘சீரஞ்சீவியான ஸ்ரீராமரே. நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்’. என்று பெரியாழ்வார் போலப் பல்லாண்டு இரு என்று மங்களாசாசனம் செய்கிறார். மேலும் ஜடாயு சீதையை இராவணன் விந்த முகூர்த்தத்தில் திருடியிருக்கிறான் அதனால் உனக்கு சீதை கிடைப்பாள் என்கிறார்.(விந்த முகூர்த்தக் காலத்தில் திருடப்பட்ட பொருள் உரியவருக்கே கிடைத்துவிடும் என்கிறது ஜோதிடச் சாஸ்திரம்)

மரணப் படுக்கையில் இருக்கும் போதும் இப்படி இன் சொற்களைப் பேசிய ஜடாயுவை பொல்லா அரக்கனான இராவணனை ஸ்ரீராமர் கிள்ளி களைந்தான் என்றும் அனுபவிக்கலாம். 

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்

இனியசொல் மறுபிறவியிலும் இப்பிறவியிலும் இன்பம் கொடுக்கும் என்கிறார் வள்ளுவர். 

திருக்குறள் எல்லாச் சமயம், மதத்திற்கும் பொது என்று திட்டமிட்டு ஒரு கருத்தைப் பல காலமாகச் சொல்லி வருகிறார்கள். 

திருக்குறள் சனாதன தர்மத்தை தான் போதிக்கிறது என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் இருக்கிறது. கிரகணத்தின் போது ஹிந்து மத நம்பிக்கையாக நிலவைப் பாம்பு சாப்பிடுகிறது என்ற கருத்தைக் கேலி செய்வார்கள். 

திருவள்ளுவர் ஒரு குறளில் 

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று

'நான் அவரைக் கண்டது ஒரே ஒரு நாள் தான்; ஆனால் 'திங்களைப் பாம்பு கொண்டது' செய்தி போல் அந்த விஷயம் ஊரெங்கும் பரவிவிட்டதே' என்கிறாள் காதலி. 'திங்களைப் பாம்பு கொண்டற்று' என்ற தொடர்க்கு 'நிலவைப் பாம்பு விழுங்கியது போல' ( கிரகணம்) என்பது பொருள்.

பேயாழ்வாரின் சுவை மிகுந்த பாசுரத்தைப் பாருங்கள்
குன்று ஒன்றின் ஆய குறமகளிர் கோல் வளை கை
சென்று விளையாடும் தீம் கழை போய் வென்று
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளம் குமரர் கோமான் இடம்

திருவேங்கட மலையைத் தவிர வேறு இடம் செல்லாத குறத்திகள் அங்கே விளையாடுவார்கள். தம் அழகிய வளையல் அணிந்த கைகளால் மூங்கில்களை வளைப்பார்கள். அம்மூங்கில்கள் வானில் ஓங்கி ராகுவை விலக்கி சந்திரனை விடுவிக்கும் என்று பாடுகிறார். 

நம் துன்பங்களைக் கிள்ளிக் களைய பெருமாள் இருக்க அவன் கீர்த்தியைப் பாடாமல் சுக்கிர திசை,  குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என்று பரிகாரங்கள் தேடி அலைய வேண்டாம் !

- சுஜாதா தேசிகன்
28-12-2020

கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art

Comments