2. பாவை குறள் - தீக்குறளை சென்று ஓதோம்
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.
பூமியில் வாழ்பவர்களே நம்முடைய பாவை நோன்புக்குச் செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்! நெய், பால் இவற்றைத் தவிர்த்து, விடியற்காலை குளித்துவிட்டு, கண்ணுக்கு மை இல்லாமல், கூந்தலுக்கு மலர் சூட்டாமல். செய்யக்கூடாத தப்பான காரியங்களைச் செய்யாமல், கோள் சொல்லாமல், தானத்தையும் பிச்சையையும் நம்மால் முடிந்த வரை கொடுத்து… என்ற ஒரு பட்டியலை ஆண்டாள் தருகிறாள்.
போன பாசுரத்தில் ‘நாராயணனே’ என்று கூறிய ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் ‘பரமன்’ என்று ஒரு வார்த்தையைக் கூறுகிறாள். யார் இந்தப் பரமன் ? பாற்கடலில் சதா சர்வ காலமும் யோக நித்திரையில் யோசித்துக்கொண்டு இருக்கும் பரமன். என்ன யோசிக்கிறான் ? இந்தச் சம்சாரிகளை எப்படிக் கரையேற்றலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறான். இந்தச் சம்சாரிகள் வேறு யாரும் இல்லை நாம் தான்.
சம்சாரிகளுக்குக் கொஞ்சம் வயதான பிறகு, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ‘Spiritual life’ ( ஆன்மீக வாழ்க்கையை) தேடிச் செல்லும் ஆர்வம் வரும். நம் வசதிக்கு ஏற்றார் போல அடுத்த தெருவில் இருக்கும் கோயிலுக்கோ, அல்லது இமயமலைக்கோ, அல்லது ஏதாவது ஆசிரமத்தையோ தேடிச் செல்கிறோம்.
இப்படிப் பட்ட சம்சாரிகளுக்கு இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் ‘Spiritual life’க்கான ஃபார்முலாவைச் சின்ன கேப்ஸ்யூலில் தருகிறாள்.
நெய், பால், மை, பூ இவற்றை எல்லாம் துறக்க வேண்டும். இவற்றைத் துறந்தால் தான் பெருமாள் கிடைப்பாரா என்று நமக்குத் தோன்றும். அதில் மை, பூ இவை எல்லாம் பெண்கள் விஷயம் நமக்கு இல்லை என்று ஆண்கள் யோசிக்கலாம். ஆண்டாள் கூறும் இவை எல்லாம் ஒரு விதக் குறியீடு. புரிந்துகொள்ள பெரியாழ்வார் பாசுரம் ஒன்றை பார்க்கலாம்.
கண்ணா நான்முகனை படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை ஓவாதே நமோ நாரணா என்று
எண்ணா நாளும் இருக்கு எசு சாம வேத நாள்மலர் கொண்டு உன் பாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே
நான்முகனைப் படைத்த கண்ணா ! எல்லாப் படைப்புக்கும் காரணமானவனே ! நீல நிறத்தவனே! உன் அடியவனான எனக்குச் சாப்பிடாமல் இருந்தாலும் பசியில்லை. இடைவிடாது நமோ நாராயணா சொல்லாத நாளும், வேத மந்திரங்களைச் சொல்லி பூக்களைக் கொண்டு உன் திருவடியை வணங்காத நாள்களே எனக்குப் பட்டினி என்கிறார்.
அதாவது நம்மையே சிந்தித்துக்கொண்டு இருக்கும் பரமனின் அடியை சதா சர்வகாலமும் நம் சிந்தனையில் நிறுத்தினால் பசிக்காது (நெய் உண்ணோம், பால் உண்ணோம்), மனம் சபலம் அடைந்து நடை உடை பாவனையில் நாட்டம் இல்லாமல் ( மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்), தினமும் காலை நீராடிவிட்டு ஆசார அனுஷ்டானங்கள் கடைப்பிடித்து( நாட்காலே நீராடி ) செய்யக்கூடிய செயல்களைச் செய்ய வேண்டும் (செய்யாதன செய்யோம்) என்கிறாள்.
செய்யக்கூடிய செயல்களைச் செய்வது தான் அறம் என்கிறார் வள்ளுவர். பரிமேலழகர் ’இம்மை மறுமை வீடு’ என்னும் மூன்றுக்கும் பயன் தருவது அறன் என்கிறார்.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
ஒருவனுக்குச் செய்யக்கூடிய செயல்களே அறம்; செய்யக் கூடாத செயல்கள் பழியே. எது செய்யக் கூடிய செயல்கள் நம் முன்னோர்கள் எதைச் செய்தார்களோ அதைக் கடைப்பிடிப்பதே அறம் ( மேலையார் செய்வனகள் என்று ஆண்டாள் 26ஆம் பாசுரத்தில் கூறுகிறாள்).
வள்ளுவர் இந்த அறவழிக்கு அறத்துப்பால் என்ற பகுதியையே ஒதுக்கி, அதில் ’அறன் வலியுறுத்தல்’ என்று ஓர் அதிகாரமே தந்துள்ளார். அதில் அறம் என்றால் என்ன பல விதங்களில் கூறியுள்ளார்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற
மனதில் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும் ; அறம் அவ்வளவு தான். மற்றவை ஆரவாரம் என்கிறார்.
இன்னொரு குறளில்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் வாழ்வதே அறமாகும் என்கிறார்.
அறம் என்பதில் எல்லாம் அடங்கும் அப்படி இருக்க, ’தீக்குறளை சென்று ஓதோம்’ என்று ஆண்டாள் அதைத் தனியாக ஏன் வலியுறுத்திச் சொல்லுகிறாள்.
’தீக்குறளை சென்று ஓதோம்’ என்றால் பிறரைப் பற்றி கோள், பொய், தப்பான விஷயம் பேசுவது என்று பல விஷயங்கள் இதில் அடங்கும்.
‘தீக்குறளை சென்று ஓதோம்’ என்பதற்கு வள்ளுவர் ‘புறங்கூறாமை’ என்று ஒரு முழு அதிகாரத்தையே ஒதுக்கியுள்ளார். ஒருவன் அறநெறியை விட்டுவிட்டு பாவங்களையே செய்துகொண்டு இருந்தாலும், அவன் புறம் பேசாமல் இருந்தாலே போதும். புறம் பேசுதல் எல்லாப் பாவங்களைவிடக் கொடியது.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
புறம் பேசாமல் இறந்தால், மறுபிறப்பில் அறநெறியில் வாழ்ந்தவர் பெறும் பலனைப் பெறுவார். மாசு படிந்த மனம் தான் கோள் சொல்லும், நண்பர்களை இழப்பார்கள் என்று அடுக்கிக்கொண்டு போகும் வள்ளுவர்
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.
புறம் கூறுபவர்களை இந்தப் பூமி ’இவனை எல்லாம் சுமக்க வேண்டியிருக்கிறதே’ என்று தன் தர்மத்தைக் காக்கவே சுமக்கிறது.
ஔவையார் கொன்றை வேந்தனில் ‘கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு’ என்கிறாள். கோள் கேட்க விரும்பும் காதில் சொன்ன கோட் சொல் காற்றுடன் தீ போன்று ஆபத்தானது.
இவற்றை எல்லாம் ஆண்டாள் ‘தீக்குறளை சென்று ஓதோம்’ என்று மூன்றே வார்த்தையில் முடித்துவிட்டாள்.
பற்றை விடுவது கஷ்டம். அதுவும் சம்சாரிகளுக்கு இன்னும் கஷ்டம். அதற்கு ஒரு சாதனம் வேண்டும். அந்தச் சாதனம் ‘நீயே கதி’ என்று பரமன் அடி பாடி பக்தி செய்து, பகவானிடம் பற்று வைப்பது தான். ’பகவானிடத்தில் பற்று வைத்தால், துறந்த விஷயங்களின் மீது மீண்டும் மோகம் தீரும்’ என்கிறான் கண்ணன் கீதையில். நல்லவை தீமையும் எனக்குத் தெரியும். தெய்வ பக்தி தேவை இல்லை என்று சொல்லுபவர்கள் அகங்காரத்தின் வெளிப்பாடு. அதுவே அவர்களை ஏமாற்றி அழித்துவிடும். அதனால் தெய்வப் பற்று மிக முக்கியம்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
அதாவது பற்றில்லாதவனாகிய பெருமாளின் பற்றை மட்டுமே பற்றிக் கொள்ள வேண்டும்; மற்ற பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும்.
பற்றற்றான் என்பது பகவானைக் குறிக்கும். நம்மாழ்வார் ‘பற்றிலன் ஈசன்’ என்கிறார்.
கடைசியாக ஆண்டாள் சம்சாரிகளைப் பார்த்து 'ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி’ என்று தானமும், (சந்நியாசிகளுக்கு) பிட்சையையும் கொடுங்கள் என்கிறாள்.
வள்ளுவர்
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
இல்லறத்தில் வாழ்பவன் அறவழியில் தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவருக்கும் அவர்களுக்கு ஏற்ற உதவிகளை செய்து துணையாக இருப்பான் என்கிறார்.
வையத்தில் வாழ்பவர்களே! ‘அப்பற்றை’ பற்றும் வரை நம் வாழ்க்கையே ஒரு நான்பு தான். பரமன் அடி பாடி அவன் திருவடி சேரும் நாளே உண்ணும் நாள்; திருவடி பணியாத நாள்கள் பட்டினி நாள் என்கிறாள் ஆண்டாள்.
- சுஜாதா தேசிகன்
17-12-2020
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art
அருமை...
ReplyDelete