Skip to main content

20. இராமானுசன் அடிப் பூமன்னவே - அரங்கேற்றம்

20. இராமானுசன் அடிப் பூமன்னவே - அரங்கேற்றம்
நாதமுனிகளின் பிரபாவத்தையும், திருமொழி, திருவாய்மொழி திருநாள் அரையர்கள் குறித்து எத்தினை முறை கேட்டாலும் அமுதம் போல இனிக்கும். நாதமுனிகளுடைய அபிமானச் சீடரான  உய்யக்கொண்டார் கூறக் கேட்க அந்த அனுபவம் எப்படி இருந்திருக்கும் என்பதை வாசகர்களுடைய கற்பனைக்கு விட்டுவிடுகிறோம். 

மறுநாள் மணக்கால் நம்பியும் மற்ற சிஷ்யர்களும் கம்பரின் இராமாயண அரங்கேற்ற நிகழ்வைக் கேட்கக் கோயில் மண்டபத்தில் ஆவலாகக் காத்துக்கொண்டு இருந்தார்கள். 

உய்யக்கொண்டார் வந்து அமர்ந்த போது அவருடைய திருவடியில் விழுந்து வணங்கிய சிஷ்யர்களில் ஒருவர் “நேற்று அரையர் சேவைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தீர்கள். பெருமாளின் நாமங்களை ஏன் ஆடிப் பாடிக் கொண்டு சொல்ல வேண்டும் ?” என்றார் 

உய்யக்கொண்டார் புன்னகையுடன் “மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை ’அமுது ஊறும் என் நாவுக்கே’ என்று அதன் சுவையை உணர்ந்து  ’பாவின் இன்னிசை  பாடித் திரிவனே’ என்று எல்லா இடங்களுக்கும் அவருடைய பாசுரங்களைப் பாடிக்கொண்டு திரிந்தார்.  

நம்மாழ்வார் தலை காலை தட்ட, கால்கள் தலையைத் தட்டும்படி(1) தன்னை மறந்து பெருமாளை நினைத்து நினைத்து ஆடிப் பாட வேண்டும் என்கிறார்.  

நாம் இப்படி ஆடிக்கொண்டு பாடினால் நம்மைப் பார்த்து எவரேனும் கைகொட்டிச் சிரித்தால், அவர்கள் கைத்தட்டலைத் தாளமாகக் கொண்டு அதற்கு ஏற்றார்போல உங்களின் ஆட்டத்தை மாற்றி ஆடுங்கள், மற்றவர்களும் உங்களுடன் சேர்ந்து பெருமாளின் திருநாமங்களைச் சொல்லக்கொண்டு ஆட ஆரம்பிப்பார்கள். 

பகவானின் திவ்விய நாமங்களைப் படுத்துக்கொண்டு உச்சரித்தால் அதை பெருமாள் உங்கள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு கேட்கிறான். உட்கார்ந்துகொண்டு உச்சரித்தால் அவன் உங்கள் அருகில் நின்றுகொண்டு கேட்கிறான். நின்றுகொண்டு உச்சரித்தால் அவன் ஆடிக்கொண்டு அனுபவிக்கிறான். நீங்கள் ஆடிக்கொண்டு உச்சரித்தால் அவன் உங்களுக்குக் காட்சிகொடுக்கிறான்!(2) பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருப்பாணாழ்வார், நாதமுனிகள் என்று ஆழ்வார்களுக்கும் நம் ஆசாரியனுக்கும் காட்சி கொடுத்திருக்கிறான் அல்லவா ?” என்றார் 

சிஷ்யர்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருக்க உய்யக்கொண்டார் கம்ப இராமாயணம் அரங்கேற்ற நிகழ்வைக் கூற ஆரம்பிக்க, நாமும் அதைக் கேட்கலாம் வாருங்கள். . 

”கம்பர் சோழ நாட்டில் திருவழுந்தூரில் ஆதித்தன் மகனாகப் பிறந்தார். இளமையிலேயே தந்தையை இழந்தார். தம் தாயுடன் திருவெண்ணெய் நல்லூர் சடையப்பவள்ளளிடம் சேர்ந்து அவரால் ஆதரிக்கப் பெற்றார்.  பரம வைணவர். இவர் நம்மாழ்வார் ‘முதல் தனி வித்தேயோ முழு மூவுலகு ஆதிக்கெல்லாம் என்று கூறுவதைப் போல, கம்பர்  ‘முவர்க்கும் தலைவரான மூர்த்தி மூலமே இல்லாத முதல்வன்’ என்று திருமாலே முழுமுதற் கடவுள் என்று திடமாக நம்பினார்.

கம்பர் ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால் பட்டவர். ஆழ்வார் பாசுரங்களில் உள்ள அரிய கருத்துக்களையும், அரிய தொடர்களையும் தன் காப்பியத்தில் பயன்படுத்தியுள்ளார். 

நம் குலசேகர ஆழ்வார் போல கம்பருக்கும் திருவரங்கத்து பெருமாள் மீது அதிக ஈடுபாடு. இராமனால் பூஜிக்கப்பட்டு விபீஷணன் மூலம் இஷ்வாகு குலதனமான திருவரங்கனுக்கோ ஆழ்வார்கள் பாசுரங்களின் மீது மிகுந்த ஈடுபாடு. ஆழ்வார்களின் அருளிச் செயல்களைக் கேட்கவே திருவரங்கத்தில் தங்கிவிட்டார். அதனால் கம்பருக்குத் திருவரங்கன் மீது பிரியம் அதிகம். சமயம் கிடைக்கும் போது எல்லாம் திருவரங்கனைப் பாடி உருகிப் போவார். 

வால்மீகி இராமாயணம் இராமன் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது. கம்பர் தான் இயற்றிய இராமாயணத்தை இராமன் ஆராதித்த திருவரங்கன் முன் அரங்கேற்றம் செய்ய விரும்பினார்.  

கம்பர் தான் இயற்றிய இராமாயணத்தைத் திருவரங்கத்தில் உள்ள மேலோர்கள் அவையில் வெளியிட்டு அங்கீகாரத்தைப் பெற்று அரங்கேற்றம் செய்ய  விரும்பினார். அதற்கு முதலில் சடகோபனின் அருள் பெற்ற நாதமுனிகளின் அருளும் ஆசியும் அவருடைய அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்று முடிவு செய்து சடையப்ப வள்ளலிடமும், அந்நாட்டை ஆண்ட தரணி குலோத்துங்க சோழனிடம் தெரிவித்தார். 
அவர்களும் அதற்கு அனுமதி கொடுத்தார்கள். 

கம்பர் நாதமுனிகளை வணங்கி தன் எண்ணத்தை வெளியிட்டார். நாதமுனிகளும் மிக மகிழ்ந்து இராமாயணப் பாடல்களை வாசித்து, உகந்து அங்கீகாரப் பாராட்டுப் பத்திரத்தை ஓலையில் எழுதிக் கொடுத்தார். கம்பர் அதை இரு கரங்களால் பெற்றுக்கொண்டு தலையில் சுமந்து, திருவரங்கம் வந்தடைந்து அங்குள்ள பெரியோர்களைத் தண்டம் சம்ர்பித்து தாம் வந்த காரியத்தையும் நாதமுனிகளின் அங்கீகாரப் பத்திரத்தையும் சமர்ப்பித்தார். 

திருவரங்கத்தில் இருந்த திருவோலக்கத்தார்(8) ‘கம்பரே நீர் வந்த காரியம் சீரியதே! எனினும் நாதமுனிகளிடம் அபிநந்தனப் பத்திரிக்கை வாங்கி வந்திருந்தாலும் செந்தமிழில் தேர்ச்சி பெற்ற தில்லை திருச்சிற்றக்கூடம் மூவாயிரவரிடத்தும்(5) அபிநந்தனப் பத்திரிக்கை வாங்கி வந்தால் திருவரங்கத்தில் இராமாயணத்தை அரங்கேற்றலாம்” என்றனர். 

அவர்கள் கூறியபடியே கம்பர் தில்லைத் திருச்சிற்றக்கூடம் சென்று மூவாயிரவரிடத்தில் தான் வந்த காரியத்தை விண்ணப்பித்தார். அவர்களும் கம்பர் வந்த விஷயங்களைக் கேட்டு ‘மூவாரவரனைவரும் ஒன்று சேரும் காலத்தில் தான் புதிதாகப் பாடிய பாசுரங்களைக் கேட்டு அபிநந்தனப் பத்திரிகை கொடுப்பது வழக்கம். நாங்கள் ஒன்று சேரும் பொழுதுதான் நீர் வந்த காரியம் நிறைவேறும்” என்றனர். 

ஆண்டுகள் பல குமர் இருந்து போயின(3), நான்கு ஆண்டுகள் கழிந்தபின்பும் மூவாயிரவர் ஒன்று சேரும் காலம் வரவில்லை. கம்பர் மிகவும் மனம் தளர்ந்து பத்து இருபது பட்டினி கொள்ள(4), தில்லை கோவிந்தராஜனுடைய திருவடிகளையே தியானித்துக் கொண்டு, ஓர் இரவு அக்கோயில் ஒரு தூணில் சாய்ந்துகொண்டு சோர்வினால் தளர்ந்து சரிந்து நித்திரையில் ஆழ்ந்தார். 

அன்று இரவு திருச்சிற்றக்கூட கோவிந்தராஜப் பெருமாள் அவர் கனவில் தோன்றி “கம்பரே! கவலை வேண்டாம். நாளை மூவாயிரவரது தலைவனின் மூத்த குமாரன் பாம்பினால் தீண்டப்பட்டு இறப்பான். அந்தச் சமயம் மூவாயிரவர் ஒன்று சேருவர். அந்தச் சமயம் நீர் அங்குச் சென்று, நீர் பாடிய இராமாயணத்தில் உள்ள நாகபாசப் படலத்தில் உள்ள கருடா கமனத்தை வருணிக்கும் பாடல்களை எடுத்துப்படியும்” என்று கூறி மறைந்தார். 

மறுநாள் அவ்வாறே நடந்தது.‘மூவாரவரனைவரும் அங்கே மிகுந்த சோகத்துடன் ஒன்று கூடினர். பெருமாள் கூறியபடி அங்கே சென்ற கம்பர் நாகபாசப் பாடலை பாடியபொழுது, இறந்த அச்சிறுவன் உறக்கத்திலிருந்து விழித்ததுபோல் உயிற் பெற்று எழுந்தான். அதைக் கண்டு அங்குக் கூடியவர்கள் கம்பரின் புலமையை வியந்து அவருடைய மற்றப் பாடல்களைக் கேட்டு அபிநந்தனப்(6) பத்திரிக்கையை அளித்தார்கள்.

கம்பர் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு மீண்டும் திருவரங்கம் புறப்பட்டார். அங்கே நாதமுனிகளைக் கண்டு அவரிடம் அபிந்தனப் பத்திரிக்கையைக் கொடுத்தார். அதைப் படித்த நாதமுனிகள் கம்பரை மெச்சி, இராமாயணத்தை அரங்கேற்றுவதற்கு நல்ல முகூர்த்த நாளை தேர்ந்தெடுத்து அரங்கேற்ற பத்திரிக்கையை தெரிவிக்கவேண்டிய சான்றோர்களிடமும், முக்கியமான மேலோர்களிடம் சம்பர்பிக்கப்பட்டது. 



அரங்கேற்றம் மேட்டழகிய சிங்கப் பெருமாள் சந்நிதி முன்புறத்தில் மண்டபத்தில் மேடை அமைக்கப்பட்டது. வாழை, மாவிலை, கமுகு தோரணம் கட்டி அலங்கரித்தார்கள். கம்பர் அரங்கேற்றத் தினத்துக்கு முன்னாள் திருவரங்கன் சந்நிதிக்குச் சென்று இராமாயண ஓலைச்சுவடிகளை பெருமாள் திருவடியில் வைத்து ‘அரங்கேற்றம் நல்லபடியாக நடக்க வேண்டும்’ என்று பிராத்தித்தார். 

அந்தச் சமயம் ‘நம் சடகோபனைப் பாடினையோ?’ என்று கேட்டார். அதனைக் கேட்ட கம்பநாட்டாழ்வார் உடனே காரிமாறன் கழலினை தொழுது ‘வேதங்கள் நான்கையும் திவ்யபிரபந்தங்களாக அருளிய சடகோபரே என் மனதில் அருள்வீராக’ என்று வேண்டி  ‘வேதத்தின் முன் செல்க’ என்று தொடங்கி ‘குற்றம் நீங்கின வேதங்களே’ என்று அந்தாதியாக நூறு  பாடினார். கூட இருந்த அவருடைய சிஷ்யர்கள் அதை அங்கேயே ஓலைப்படித்தினார்கள். கம்பர் அதை ‘சடகோபர் அந்தாதி’ பெயரிட்டு எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளைத் திருவரங்கன் திருவடிகளில் சம்ர்பித்தார். திருவரங்கர் மிக உகந்து, தீர்த்த பிரசாதம் முதலிய மரியாதைகளை வழங்கி அவரை அனுப்பிவைத்தார். 

கம்பர் மனம் குளிர்ந்து,  சடகோபர் அந்தாதி ஓலைச்சுவடிகளை இராமாயண ஓலைச்சுவடிகளின் மீது வைத்துப் பட்டுத் துணியில் கட்டி தலை மீது சுமந்துகொண்டு கோயிலைச் சுற்றி வலம் வந்தார். 

மறுநாள் அரங்கேற்ற மண்டபத்தில் நாதமுனிகளும் மற்ற பெரியோர்களும், சாஸ்திர சம்பன்னர்களும் வீற்றிருந்தார்கள். கம்பர் சபைக்கு வந்து, ஸ்ரீரங்கநாச்சியாரை வணங்கி, அங்கே இருந்த பெரியோர்களையும் அடியார்களையும் கீழே விழுந்து வணங்கினார். குறித்த நல்ல நேரம் வந்தவுடன், நாதமுனிகள் கம்பரை அழைத்து ‘செந்தமிழ் செல்வரே! நீர் இராமாயண அரங்கேற்றத்தை ஆரம்பிக்கலாம்” என்று அரங்கேற்றத்தைத் தொடங்கி வைத்தார். 

கம்பர் தான் எழுதிய ஓலைச் சுவடிகளை பொற்பிடத்தில் வைத்து நம்மாழ்வாரையும், நாதமுனிகளையும் மனதில் தியானித்து இராமாயணப் பாடல்களைக் கூறி, தன் செம்பொருள், குறிப்புப் பொருள்களை எல்லாம் விளக்கி  கம்பீரமாக பல நாள் பிரசங்கித்தார். 

ஒரு நாள் இரணியவதைப் படலத்தை ஆரம்பித்த போது திருவோலக்கத்திலிருந்த சிலர் நீர் பாடியது சுவையாக இருந்தாலும், இது வால்மீகி இராமாயணத்தில் இல்லையே, இதை இராமாயணத்தில் புகுத்துவது குற்றமல்லவா? இதை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?” என்று கேட்டார்கள். 


இதனைக் கேட்ட கம்பர் “அடியேன் இதை திட்டமிட்டபடி பாடவில்லை அதுவாக அமைந்தது” என்றார். திருவோலக்கத்தினர் ‘நீர் சொல்லுவது உண்மையாக இருந்தாலும், இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று கூற அரங்கேற்றம் தடைப்பட்டது. 

கம்பர் நம்மாழ்வாரை தியானித்து நம்மாழ்வார் பாசுரமான 

ஆடி ஆடி அகம் கரைந்து, இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி, எங்கும்
நாடி நாடி ‘நரசிங்கா’ என்று
வாடி வாடும் இவ்வாள்நுதலே 

என்று பிரகலாதன் எங்கேயும் தேடவில்லை, அலையவில்லை, வருந்தவில்லை ஆனால் அவனுக்கு உடனே தோன்றிய நரசிம்மர் மாதிரி அருள் புரிய வேண்டும் என்று வேண்டினார். 


அந்தச் சமயம் மேலே வீற்றிருந்த மேட்டழகிய சிங்கர் சந்தியிலிருந்து எல்லாப் பிரகாரங்களிலும் எதிரொலிக்கும்படி ’ஹாஹா’ வென்ற பெரும் சிரிப்பு ஒலி சிங்கத்தின் கர்ஜனையாகக் கேட்டது. இதனைக் கண்ட திருவோலக்கத்தார் அனைவரும் மேட்டழகிய சிங்கப் பெருமாள் திருவுள்ளம் உகந்த பெரும் காவியம் இது என்று ஏற்றுக்கொண்டார்கள். 

கம்பரும் நாதமுனிகளின் அனுமதி பெற்று இரணியாவதைப் படலத்தை விரித்து உரைத்தார். நாதமுனிகளும் மிக உகந்து அவரை குளிரக் கடாட்சித்து ’கம்பநாட்டாழ்வார்’ என்ற பட்டத்தை அப்போது சூட்டினார். 

பிறகு திருமங்கை ஆழ்வார் அருளிய திருவேழுக்கூற்றிருக்கையின் இறுதியிலும், சிறிய திருமடல் இறுதியிலும், பெரிய திருமடல் இறுதியிலும் கம்மநாட்டழ்வாரின் சில தனிப் பாடல்களைச் சேர்த்துப் பாடும்படி வகுத்தருளினார். பங்குனி உத்திரத் திருநாளில் சடகோபர் அந்தாதியிலிருந்து ஒரு பாடலையும், ஆழ்வார்திருநகரியில் திருமஞ்சனம் நடைபெறும் சமயங்களில் சடகோபர் அந்தாதியின் பாடல்களைப் பாடு வேண்டும் என்று நாதமுனிகள் நியமித்தார். 

பழங்கிணற்றில் உற்றுக்கண்கண்டுபிடித்து செம்மைப் படுத்தி நீர் வருவது போல, ஆழ்வார்களின் அருளிச் செயல்களைக் கண்டுபிடித்து பக்தி தாகத்துக்குத் தண்ணீராகக் கொடுத்தார். 

கம்பநாட்டாழ்வானுக்கு நிழல் மரமாக இருந்து இராமாயணக் காவியம் திருவரங்கத்தில் அரங்கேற்றம் நிகழ்ந்து ஏற்றம் கிடைத்தது” என்று உய்யக்கொண்டார் கூறி முடிக்கக் கேட்டுக்கொண்டு இருந்த அனைவரும் ஆனந்தத்தில் திளைத்தார்கள். 

சில காலம் கழித்து ஒரு நாள் உய்யக்கொண்டார் பெரியாழ்வார் பாசுரங்களைக் காலட்சேபம் செய்யும் போது  ‘பறவையேறு பரம்புருடா ! நீ என்னைக் கைக் கொண்டபின் பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும்படமாகின்ற தால்’ என்ற இடத்தை இருமுறை கூறி தன் கண்கள் மலர புன்முறுவலுடன் ‘திருநாட்டுக்கு செல்லும் காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தார். 

சில நாளில் அவர் உடல் சோர்வடைந்து ’பரமபதத்துப் படிக்கட்டுகள் தெரிகிறது’ என்று மணக்கால் நம்பியிடம் கூறினார். மணக்கால் நம்பி மிகவும் விசனப்பட்டு எதுவும் செய்யமுடியாமல் தவித்தார். 

பயணம் தொடரும்… 
- சுஜாதா தேசிகன்
01-12-2020
கோட்டோவியம் : சுஜாதா தேசிகன்
முகப்பு ஓவியம் : ஜனனி இசை தட்டின் படம். நன்றி. 
-----------------------------------
(1) ’மலையை யெடுத்துக்கல் மாரி காத்துப் பசுநிரை தன்னை’ என்ற திருவாய்மொழி மற்றும் ’வார் புனல் அம் தண் அருவி’ நம்மாழ்வார் கூறியுள்ளபடி
(2)புறந்திரதாசர் கீர்த்தனை
(3)குமர் இருந்து போயின - பயனின்றிப் கழிதல் 
(4)பத்து இருபது பட்டினி கொளல் - ஏங்கச் செய்தல் 
(5)மும்மையாயிரவர் - தில்லை வாழ்ந்த அந்தணர்கள். இவர்களைத் தில்லை மூவாயிரவர் என்பர். ’தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி ஆசனத்து இருந்த அம்மான் தானே’ என்று பாடியிருக்கிறார். 
(6)அபிநந்தனப் பத்திரிக்கை - பாராட்டுக் கடிதம் 
(7) திருவோலக்கம் - தர்பார். 


Comments

  1. ஆஹா! கம்பனின் காவிய அரங்கேற்றத்தில் அடியேனும் பங்கு கொண்டது போல் நிஜ நிகழ்வாக கண்முன் கொண்டு நிறுத்தி விட்டீர்.

    ReplyDelete

Post a Comment