Skip to main content

16. பாவை குறள் - தூயோமாய்

16. பாவை குறள் - தூயோமாய் நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே!  கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே!  மணிக்கதவம் தாள் திறவாய்,
ஆயர் சிறுமியரோமுக்கு  அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா!  நீ
நேய நிலைக் கதவம் நீக்கு — ஏலோர் எம்பாவாய்.

கடந்த பத்து பாசுரங்களில் பல விதமான கோபியரையெழுப்பிய ஆண்டாள் அடுத்த நான்கு பாசுரங்களில் மற்றவர்களை எழுப்பி அவர்களின் அனுமதியுடன் சென்று கண்ணனை அனுபவிக்க போகிறார்கள். 

இப்போது ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் நந்த கோபன் திருமாளிகையை அணுகி வாயில் காப்போனைக் கதவைத்திறக்கச் சொல்லுகின்றனர். 

எங்களுக்குத் தலைவனான நந்தகோபனுடைய மாளிகையைக் காப்பவனே ! கொடிகள் கட்டப்பட்டு விளங்கும் தோரண வாசல் காப்பானே ! அழகிய தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளேவிடு ! ஆயர்குலப் பெண்களான எங்களுக்கு மாயன் கண்ணபிரான் நேற்றே விரும்பியதைத் தருகிறேனென்று வாக்களித்துள்ளான் எனவே, அவனைத் துயிலெழுப்ப பாட தூய்மையுடன் வந்துள்ளோம். முதல் முதலிலே மறுக்காமல் பிணைந்து மூடிக்கொண்டுள்ள கதவைத் திறந்து எங்களை உள்ளேவிடு. 

நாம் பெருமாளை சேவிக்க செல்லும் போது, எப்படி சேவிக்க வேண்டும் என்ற ஒரு முறை இருக்கிறது. ஆனால் இவர்களோ இடைச்சிகள், இடக்கை வலக்கை தெரியாதவர்கள் எப்படி இதை எல்லாம் தெரிந்துகொண்டு செய்கிறார்கள் என்ற கேள்வி எழும். 

அறத்துடன் எது செய்தாலும் அது சாஸ்திரத்துக்கு விரோதமாக இருக்காது. அதனால் இவர்கள் முன்பே ‘தூயோமாய் வந்துநாம்’ என்று அறத்துடன் செய்கிறார்கள் அதனால் இவர்கள் எது செய்தாலும் அது சாஸ்திரத்தின்படி இருக்கும்படி பெருமாள் பார்த்துக்கொள்கிறான். இந்தப் பாசுரத்திலும் ’தூயோமாய் வந்தோம்' என்று கூறிகிறாள். இது என்ன தூய்மை என்று கடைசியில் பார்க்கலாம். 

வள்ளுவர் 

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்

ஒருவன் தவறான நெறியில் சென்று தீய செயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம் என்கிறார். இந்த பாசுரத்தில் ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்பதற்கு எடுத்துக்காட்டு ’நாயகனாய்’  என்று வார்த்தையை பொருத்தமாக அமைத்த விதம். 

- நாயகனான நந்தகோபனுடைய திருமாளிகையை காப்பவனே
- நந்தகோபனுடைய திருமாளிகைக்கு காவலாய் இருக்கும் நாயகனே
- நந்தகோபனுடைய திருமாளிகையின் வாசலைக்  காக்கும் நாயகனே!”

நாயகன் என்றால் நமக்கு திரைப்பட கதாநாயகன் தான் நினைவுக்கு வரும்.  ‘உதவி செய்பவன் நாயகன்’ என்பது தான் அதன் அழகான பொருள். 

கண்ணனுக்கு ஏதாவது ஆபத்து வரப் போகிறது என்று நந்தகோபன் கோயில் காப்பான், வாயில் காப்பான் என்று செக்யூரிட்டி அமைத்திருக்கிறான். அவர்களுடன் ஆண்டாள் மறைமுகமாக ஒரு உரையாடலை நிகழ்த்தியிருப்பதை ’ஆயர் சிறுமியர்’ என்ற வார்த்தையைக் கொண்டு அதைக் கண்டுபிடிக்கலாம். 


கோயில் காப்பான் ஆண்டாளையும் கூட வந்தவர்களையும் உள்ளே விட வாயில் காப்பான் அவர்களை தடுத்துவிடுகிறான். ஆண்டாளும் அவள் தோழிகளும் அவரிடம் கதவைத் திறக்க வேண்டுகிறார்கள். அந்த வாயில் காப்பான் ஆண்டாளிடம் “காலம் கெட்டு கிடக்கிறது.. இப்படிக் கூட்டமாக ...இன்னும் பொழுது கூட விடியவில்லை நீங்கள் எல்லாம் யார் எதற்காக வருகிறீர்கள் ?” என்று கேட்கிறான். 

“ஐயா நீங்கள் எங்களைப் பார்த்து அஞ்ச வேண்டாம்! நாங்கள் பெண்கள் அல்லவா ?”

“திருமங்கை ஆழ்வார் கூறுவது போல அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய் ! அரக்கர் குலப்பாவையான சூர்ப்பணகையும் பெண் தானே ? வாயில் காப்பான் இல்லாததால் தானே அவள் வந்தாள் ?” 

“இருக்கலாம்! அவளோ ராட்சசி நாங்கள் இடைப்பெண்கள். அதனால் பயப்பட வேண்டாம்!”

“ஏன் பூதனையும் இடைச்சிதானே அதனால் எனக்கு இன்னும் அதிகம் அஞ்ச வேண்டியிருக்கிறது!”

“நீ அப்படியெல்லாம் அஞ்ச வேண்டாம். நாங்கள் ஆயர் சிறுமியர்கள். நாங்களும் கண்ணனுக்கு என்ன நேருமோ என்று அஞ்சும் குடியில் பிறந்தவர்கள்” என்று ஆண்டாள் அந்த வாயில் காப்பான் அருகில் சென்று காதுகளில் கிசுகிசுத்தாள். 

இவர்களிடம் இருந்து வெளிப்பட்ட அந்த முடை நாற்றம் உள்ளே இருக்கும் கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் நாற்றமும் ஒன்றாக இருக்க அந்த காப்பான் “சரி எதற்கு வந்தீர்கள் ?” என்று கேட்க “கண்ணனுக்கு திருபள்ளி எழுச்சி பாடி அவனைத் துயிலிருந்து எழுப்பத் தூய்மையுடன் வந்துள்ளோம்” என்கிறாள் ஆண்டாள். 

தூய்மை என்றால் மனம், மெய், மொழி என்ற மூன்றையும் அடக்கி நல்வழியில் செலுத்துவதே தூய்மைக்கு வழி என்கிறார் வள்ளுவர். 

மனதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கஷ்டம். கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். அதற்குச் சக்தி இல்லை என்றால் பேச்சையாவது அடக்க முற்பட வேண்டும். அதுவே பெரும் நன்மை தரும் என்கிறார். 

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்கவேண்டும்; காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர். எண்ணத்தின் வாகனம் நாவு. அதனால் பொய், கடுஞ்சொல், பயனில்லாத சொல் என்று நம் நாவில் பார்த்துப் பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர். 

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

என்கிறார் இன்னொரு குறளில். தீய சொற்கள் நாவில் ஏறிச் செல்வதற்கு முன்பே அதைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அடுத்து வள்ளுவர் மனத்தில் பொங்கும் கோபம் பெரும் பகை என்கிறார். 

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

உள்ள கொதிப்பை அடக்கிய வல்லவனைக் காண்பதற்கு அறம் காத்துக் கிடக்கும். திருட்டு, கொலை, புலால் உண்பது போன்ற தீயசெயல்கள் இல்லாமல், தானம் தருமம் போன்ற நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்.  தீயச் செயல்களை செய்ய வேண்டாம்  நினைப்பதே தீமை என்கிறார். 

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்

குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே; அதனால் பிறர் பொருளை அவன் அறியாத வகையால், `வஞ்சித்துக் கொள்வோம்’ என்று எண்ணாதிருக்க வேண்டும் என்று கூறிய வள்ளுவர் பிறருக்குக் கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக்கூடாது. எண்ணினால், எண்ணியவனுக்குக் கேடு விளையுமாறு அறம் எண்ணும் என்பதை 

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு

என்கிறார். 

ஸ்ரீமன் நாராயணனே அனைவருக்கும் நாயகன்.  தூய மனத்துடன் சென்றால்,  அந்த நாயகனை அடைய ஆசாரியன்  என்ற வாயில் காப்பான் நமக்கு ரகசிய அர்த்தங்களின் பொருளை விவரித்து நேயத்துடன் தெருக்கதவைத் திறந்துவிடுவார்கள். 

ஆண்டாள் முன்பே தூயோமாய் வந்துநாம் என்று கூறிவிட்டாள் இங்கே மீண்டும் தூயோமாய் வந்தோம் என்று கூறும் இத் தூய்மை என்ன ? பெருமாளிடம் போகும் போது எனக்கு எதுவும் வேண்டாம் நீயே வேண்டும் என்ற மனமே தூய்மையான மனம் ! 

- சுஜாதா தேசிகன்
21-12-2020
கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art

Comments