Skip to main content

27. இராமானுசன் அடிப் பூமன்னவே - அழகிய ரத்தினம்

 27. இராமானுசன் அடிப் பூமன்னவே - அழகிய ரத்தினம் 



திருவரங்க மாநகரில் ஆளவந்தார் ஆசிரமத்தில் வீற்றிருக்க,  சிஷ்யர்களும், அடியார்கள் புடைசூழ அந்த இடம் திருவிழா போல் காட்சி அளித்தது. கூட்டத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. கன்றுக்குப் பாலை ஆசையும் அன்பும் நிறைந்து கொடுப்பது போல ஆளவந்தார் பிறருக்கு ஓர் உபகாரம் என்று நினையாமல், தன்பேறாக நினைத்து ஆண்டாள் அருளிய திருப்பாவையின் ரசத்தைப் பலர் பருகிச் சுவைக்க அதை அளித்துக்கொண்டு இருந்தார். 


அங்கே என்ன நடைபெறுகிறது என்று காண நேயர்களை அழைக்கிறோம்.


கணீரென்ற குரலில் ”....நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானிடம் உள்ளே செல்லுவதற்கு அனுமதி வேண்டி நின்றனர். இவர்களுக்கு கண்ணபிரான் நாயகனேயன்றி கோயில் காப்பவனோ, நந்தகோபனோ நாயகன் அல்லவே! அப்படியிருக்க இவர்களை நாயகன் என்று கூறியது எதனால் ? சாத்திரங்கள், கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் போன்ற எவையும் திருவரங்கனை அடைவதற்குச் சாதனம் இல்லை. எம்பெருமானை அடைவதற்குச் சாதனம் அவனுடைய அடியார்களை முன்னிட்டுக் கொண்டு அவனையே உபாயமாகப் பற்றுவதே!(1) உள்ளே சயனத்தில் இருப்பவன் சாதாரணமானவனா  ?  (2)வேதங்களாலும் அறியமுடியாத ஆயிரம் திருவடிகளையும், சிவந்த பொன்மயமான அழகிய கிரீடத்தையும் தரித்த ஆயிரம் திருமுடிகளையும், மாலையைத் தரித்த ஆயிரம் திருத்தோள்களையும், ஆயிரம் திருக்கண்களையும் தன்னிடத்தில் கொண்ட ஒளிவடிவமான அவன் அடியவர்கள் தன்னை கண்டுகளிப்பதற்குத் திருவரங்கம் கோயிலில் ஆதிசேஷன் மீது சயனத்தில் இன்றும் நாம் அரங்கனைக் கண்டு களிக்க முடிகிறதே! பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன்” என்றவர் கண்ணை மூடிக்கொண்டு  ஆழ்ந்த சிந்தனைக்குச் சென்றார். 


குழுமியிருந்தவர்கள் மெளனமாக ஆளவந்தாரைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். சிறிது நேரம் கழித்து, மெதுவாக கண்களைத் திறந்து ”மிகவும் விலை உயர்ந்த ரத்தினத்தை ஒருவர் நமக்குக் கொடுத்தால், அந்த ரத்தினத்தின் மதிப்பை அறிய அறிய, அந்த ரத்தினத்தின் மீது உள்ள ஈடுபாட்டைக் காட்டிலும் ‘இவ்வளவு உயர்ந்த ரத்தினத்தை நமக்கு அளித்தாரே! என்று அதை நமக்கு அளித்தவர் மீது அன்பும் மதிப்பும் பெருகும். (3)

அது போல அடியேனுக்குத் திருவரங்கன் என்ற உயர்ந்த ரத்தினத்தை அடியேனின் பாட்டனாரான நாதமுனிகள் உய்யக்கொண்டார். மணக்கால் நம்பி மூலம் அளித்துள்ளார். 

நாதமுனிகள், நினைக்க முடியாத ஆச்சரியமான பகவானுடைய அருளாலே எளிதாகக் கிடைத்த ஞான, வைராக்கியக் குவியல் ! பகவானையே மனனம் செய்து,  ஆழ்ந்த பகவத் பக்தி என்கிற பெருங்கடல் !  நாதமுனிகளை எவ்வளவு வணங்கினாலும் என் மனம் திருப்தி அடைவதில்லை, ஒவ்வொரு முறையும் இந்த அழகிய மணவாள ரத்தினத்தை நினைக்கும் பொழுதும், சேவிக்கும் பொழுதும் என் பாட்டனார் மீது அன்பும் மதிப்பும் பல மடங்கு பெருகுகிறது! 

கோபிகைகள் கண்ணபிரானை அடைவதற்கு நந்தகோபரை முன்னிடுவது போல நாதமுனிகளைப் பற்றுவது தானே முறை ! என்றவர் மடை திறந்த வெள்ளம் போல 

நமோ சிந்த்யாத்புதா க்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராஸயே
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே

என்று ஒரு ஸ்லோகத்தைக் கூற(4) உடனே அதைப் பெரிய நம்பி மடியில் சொருகிய ஓலையில் குறித்துக்கொண்டார்.  

பெரிய பெருமாளின் அனுபவத்தில் திளைத்த ஆளவந்தார், தன் காலட்சேபத்தை முடித்துக்கொண்டு,  சிஷ்யர்களுடன் பெரிய பெருமாளைச் சேவிக்கப் புறப்பட்டார். 

(5) கருட மண்டபத்தைக் கடந்து, நாழி கேட்டான் வாசலை அடைந்து துவஜஸ்தம்பத்துக்கு முன் கீழே விழுந்து, தன் மார்பில் பட்ட புழுதியைத் தட்டிக்கொள்ளாமல், காயத்திரி மண்டபம் வந்து அடைந்தவர் அப்படியே நின்றுவிட்டார். சிஷ்யர்கள் என்ன என்று புரியாமல் அவர்களும் நின்றார்கள்.. அங்கே அவர்கள் கண்ட காட்சி 

ஒரு பெண்மணி கழுத்தும் கப்படமுமாய்(6), கண்ணும் கம்பலையுமாக பெரிய பெருமாளை  பிரதக்ஷணம் செய்துகொண்டு இருந்தாள். அவள் முகத்தில் ஏதோ கவலை தென்பட்டதை ஆளவந்தார் கவனித்தார். அப் பெண்மணி ஆளவந்தாரைக் கவனியாமல் திருவுண்ணாழி திருச்சுற்றைப் பல முறை சுற்றினாள்.. பல முறை சுற்றி வந்து பெருமாளைச் சேவித்துவிட்டுச் செல்லும் போது ஆளவந்தாரைக் கவனித்த அப்பெண்மணி  தன் புடவை தலைப்பால் கண்ணீரை ஒற்றிக்கொண்டு அவருக்கு கை கூப்பி வணங்கிவிட்டுச் சென்றாள். 

ஆளவந்தார் உடனே பெருமாளைச் சேவிக்க உள்ளே செல்லவில்லை. காயத்திரி மண்டபத்தின் ஒரு தூண் அருகில் சற்று நேரம் காத்துக்கொண்டு இருந்துவிட்டு பெரிய பெருமாளைச் சேவிக்க உள்ளே நுழைந்தார்.  அரங்கனைக் கண்குளிரச் சேவித்துவிட்டு,  தீர்த்தம், சடகோபம், திருத்துழாய் பெற்றுக்கொண்டு வெளியே வந்தார். 

அந்தப் பெண்மணி பெரிய பெருமாள் முன் ஆசாரியனைச் சற்று காக்க வைத்துவிட்டாளே என்று தெய்வவாரி ஆண்டானுக்குச் சற்று வருத்தம். கேட்டுவிட்டார் “ஆசாரியரே! கோயிலுக்குத் தினமும் பலர் வந்து செல்வார்கள் அவர்கள் சென்ற பிறகு தான் சேவிக்க வேண்டும் என்றால் அது கடினம் அல்லவா, அந்தப் பெண்மணி சேவித்துவிட்டுச் செல்ல ஏன் காத்துக்கொண்டு இருந்தீர்கள் என்று அடியேனின் மனதில் உள்ள கேள்வி” என்றார். 

ஆளவந்தார் புன்னகைத்துவிட்டு “அண்டானே! அந்த அம்மையாருக்கு மனதில் ஏதோ கவலை, அவளுடைய கண்ணீரே அதைக் கூறியது! அந்தக் கவலையைப் பெரிய பெருமாளிடம்  நிறைவேற்றித் தரும்படி  பல முறை பிரதக்ஷணம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டு இருக்கும் போது நாம் சென்றால்,  அவளைப் போல அடியேனுக்கும் ஏதாவது கேட்கும் குணம் வந்துவிட்டால் என்ன செய்வது ? என்று சற்று நேரம் ஒதுங்கி இருந்தேன்” என்றார். 

“அப்படி என்றால் அவள் சென்ற பிறகு உடனே செல்லாமல், மேலும் சற்று நேரம் தூண் அருகில் காத்துக்கொண்டு இருந்தது ஏன் என்பது அடியேன் தெரிந்துகொள்ளலாமா ?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் ஆண்டான். 

“அந்த அம்மையார் பிராத்தித்துவிட்டுச் சென்ற பிறகு நாம் பெருமாள் முன் நின்றால் நம்மையும் ஏதோ கேட்க வந்திருக்கிறார்கள் என்று பெரிய பெருமாள் நினைத்துவிட்டால் ? அதனால் தான் தாமதித்தேன்” என்றார் 

ஆண்டான் “வைஷ்ணவர்கள் பெருமாளிடம் எதையும் வேண்டிக்கொள்ள மாட்டார்கள்.  ஆனால் இன்று நீங்கள் மனம் உருகி வேண்டிக்கொண்டீர்களே?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டார். 

ஆளவந்தார் “அந்த அம்மையாரின் குறையைத் தீர்த்துவைக்க வேண்டும் பெரிய பெருமாளே! என்று வேண்டிக்கொண்டோம்!. வேறு ஏதாவது கேள்விகள் இருக்கிறதா ?” என்று புன்னகையுடன் ஆசிரமத்தை நோக்கி வேகமாக நடக்க தொடங்கினார். 

விரைவில் திருவனந்தபுரம் நோக்கி இதே போல் நடக்க போகிறார் என்று அப்போது அவருக்குத் தெரியவில்லை. 

பயணம் தொடரும்... 

- சுஜாதா தேசிகன்

--------------------------------------------------------------------------------------

(1) திருப்பாவை ஐதீகம் 

(2) பிள்ளை பெருமாள் ஐயங்காரின் திருவரங்கத்து மாலை. 

(3) திருப்பாவை ஐதீகம் 

(4) ஆளவந்தார் அருளிய ஸ்தோத்திர ரத்தினம் முதல் ஸ்லோகம்

(5) வார்த்தா மாலை 394 வார்த்தையில் விவரிக்கப்பட்ட சம்பவம். ஆண்டான் கேள்விகள் கற்பனை. 

(6) கழுத்தும் கப்படமுமாய் என்றால் சேலையை கழுத்தை சுற்றி அடக்கமாக என்று பொருள்



Comments