Skip to main content

வதரி வணங்குதுமே !

 

வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்

இன்று பத்ரி, பதரிகாசிரமம் என்பதைத்தான் ஆழ்வார்கள் வதரி என்று தூய தமிழில் சொல்லுகிறார்கள். வதரி என்றால் இலந்தையைக் குறிக்கும். இங்கே இருக்கும் பெருமாள் பதரிவிஷால். இலந்தை மரத்துக்குக் கீழே தியானம் செய்யும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அதனால் இந்தப் பெயர். 

எல்லோருக்கும் குறிப்பாக ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தன் வாழ்நாள் முடிவதற்குள் பத்ரிக்கு ஒருமுறை சென்று வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளுடன் திருமங்கை ஆழ்வார் வதரி வணங்குதுமே என்று அருளிய பாசுரங்களுடன், ஸ்ரீ ராமானுஜர் சென்று வந்த பாதையில் பத்து நாள் யாத்திரையாகப் பத்ரிக்குச் சென்று அங்கு நான்கு நாட்கள் தங்கியது வாழ்நாளில் மறக்க முடியாத இனிய அனுபவம். 

தன்னுடைய பத்ரி பயணம் பற்றி சுஜாதா எழுதிய ‘கடவுள்களின் பள்ளத்தாக்கு என்ற கட்டுரையைப் படித்தபோது கொஞ்சம் வெலவெலத்தது. குளிருமாமே?ஜட்டி கூட தெர்மல் வேரில் கிடைக்கிறது, ரிஸ்க் எடுக்காதீர்கள், வாங்கிக் கொண்டு போய்விடுங்கள் என்ற அறிவுரைகளையும் “போன வாரம் நல்ல மழையாம், நேற்று நல்ல குளிர்… நாங்கள் போனபோது நிலச்சரிவு மாட்டிக்கொண்டோம் போன்ற மிரட்டல்களையும் கடந்து பத்ரிக்குச் சென்றேன். 


இன்றைய செயற்கைக்கோள் யுகத்தில் அடுத்த ஐந்து மணி நேரத்தில் மழை வருமா என்று சொல்லிவிடலாம். இப்போது பத்ரியில் எத்தனை டிகிரி குளிர் என்று அலைபேசியில் கண்டுபிடிக்கலாம். ஆனால் இது எதுவுமே தெரியாத திருமங்கை ஆழ்வார் ஆடல்மா குதிரையில் எப்படிப் போயிருப்பார் என்ற வியப்பு இன்னும் எனக்குத் தீரவில்லை. ஆயிரம் வருடம் முன் ஸ்ரீ ராமானுஜர் கால்நடையாக பத்ரி சென்றார். இந்த நினைப்பே அங்கே என்னைப் போக வைத்தது. 

ஹரித்துவார்

டெல்லியில் இறங்கி பேருந்தில் கரடு முரடான சாலை, விவசாயப் பேரணி எல்லாம் கடந்து ஏழு மணி நேரப் பிரயாணம் செய்து மாலை ஐந்து மணிக்கு ஹரித்துவார் சென்றடைந்தோம். ஹிமாசலத்தின் அடிவாரத்தில் அமைந்த இந்த இடம், முக்தி தரும் ஷேத்திரங்களில் ஒன்று. இங்கேதான் கங்கை கடல் மட்டத்தில் ஓடுகிறது. 

பத்ரிக்கு மேலே சொர்கா ரோகிணி என்ற இடம் இருக்கிறது. அதன் வழியாகத்தான் பாண்டவர்கள் சொர்கத்தை அடைந்தார்கள். அதற்கு இது வாசலாகத் (துவாரமாக) இருப்பதால்தான் இதை ‘ஹரி துவாரம் என்கிறார்கள். ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பத்ரி ஸ்ரீ நாராயணனான ‘ஹரியை அடையும் துவாரமாக இருக்கிறது. 

ஹரித்வாருக்கு நாங்கள் போன சமயம் சின்ன இலைகளால் ஆன தட்டில் பூக்களுடன் சின்ன விளக்குகளைக் கங்கையில் விட்டுக்கொண்டு இருந்தார்கள். கங்கா ஆரத்தி என்பது தினமும் நடக்கும் நிகழ்ச்சி. மணி ஓசை, கங்கையின் சலசலப்பு, கூட்டத்தின் ஆரவாரத்துடன் நம்முடைய இந்தியாவைப் பார்த்து ரசிக்கலாம்.

ஓம் ஜெய் கங்கே மாதா என்ற அனுராதா பாத்வால் பாடல் ஒலிக்கக் கூட்டத்தில் ஒரு வித மின்சாரம் பாய்வதை நாம் உணரலாம். இதே மாதிரி ஆர்த்தியை நாம் ஸ்ரீரங்கம் காவிரிக் கரையிலும், திருநெல்வேலி தாமிரபரணியிலும் கொண்டு வர வேண்டும். 

மறுநாள் விடியற்காலை ஹரித்துவாரில் ஓடும் கங்கையில் குள்ள குளிர குடைந்து நீராடிவிட்டு தேவப்பிரயாகை நோக்கிப் புறப்பட்டோம்.

தேவப்பிரயாகை 

பேருந்து உள்ளே ஆழ்வார் பாசுரங்கள் சேவித்துக்கொண்டே ஜன்னல் வழியாக முறிந்த மரங்களில் துளிர்களையும், நிலச்சரிவுச் சுவடுகளையும், பம்புளிமாஸ் வியாபாரத்தையும் பார்த்துக்கொண்டே தேவப்பிரயாகை என்ற கண்டமென்னும் கடிநகர் வந்து சேர்ந்தோம். 

ஹரித்துவாரத்திலிருந்து சுமார் 100 கிமீ தூரத்தில் இருக்கிறது இந்தத் திவ்ய தேசம். 2720 அடி உயரத்தில் பெரியாழ்வார் ‘கண்டம் என்னும் கடிநகர் என்று பாடியுள்ளார். கண்டம் – பாரத கண்டம், கடி என்றால் சிறப்பான என்று பொருள். 

பத்ரிக்குச் செல்லும்போது வரும் முதல் திவ்ய தேசம் இது. பிரயாகை என்றால் ஆங்கிலத்தில் confluence என்று கூறுவர். தமிழில் சங்கமம். பாகீரதியும், அலகநதா நதியும் சங்கமிக்கும் இடம் இது. சங்கமித்த பிறகு அதற்கு கங்கை என்று பெயர்!

பஞ்சகச்சத்தில் வேட்டியின் கறை மேலும், கீழுமாக இருப்பது போல, பயணம் முழுவதும் கங்கை நம் கூடவே மேலும் கீழுமாக வருகிறாள். கூடவே ஜியோ ஃபைபர் கேபிளும் வருகிறது. 

கங்கை நம் பாரத தேசத்துப் புண்ணிய நதிகளுக்குள் முதன்மையானவள். ஸ்ரீமந் நாராயணன் திருவிக்கிரமாவதாரத்தில் ‘ஓங்கி உலகளந்த போது அவரது இடது திருவடி பிரம்மாவின் சத்ய லோகத்தை அடைந்தது. நான்முகன் பக்தியுடன் புனித நீரால் கழுவ, அதுவே கீழே பரமசிவனின் திருமுடி வழியாகக் கங்கையாக நமக்கு மொத்தம் 2525 கிமீ ஓடுகிறாள். கங்கா என்றால் பூமியை நோக்கிக் கருணையோடு இறங்கி வந்தாள் என்று பொருள். கங்கோத்திரி என்ற மலையில் உள்ள பனிப் பாறையில் தொடங்கி, உத்ராஞ்சல், உத்திரப் பிரதேசம், பிஹார், வங்காளம் சென்று கடலில் கலக்கிறாள் கங்கை. 

ஸ்ரீரங்கம் கோவிலில் தர்ம தரிசன வரிசைக் கூட்டம் அலை மோதிக்கொண்டு போகும். 250 ரூபாய் சீட்டு வரிசை அதிகம் கூட்டம் இல்லாமல் மெதுவாகச் செல்லும். இரண்டு வரிசையும் சேர்ந்து பாகுபாடு இல்லாமல் ஒரே வரிசையாகச் செல்லும் இடத்தில் பெருமாள் தெரிவார். அதுபோல அலகநந்தா அடித்துப் புரட்டிக்கொண்டு வேகமாகவும், பாகீரதி மெதுவாகவும் வருகிறது. வந்து சேரும் இடம் புனித கங்கை ஆகிறாள்! இரண்டு நதிகளும் வெவ்வேறு நிறங்கள். சேர்ந்த பிறகு ஒரே நிறமாகச் செல்கிறது. 

நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும்
நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழி புனலால் புகர் படு கங்கைக்
கண்டம் என்னும் கடிநகரே 

என்கிறார் பெரியாழ்வார்.

அதாவது பரமசிவனின் தலையிலிருந்த கொன்றை மலரும், பெருமாள் பாதத்திலிருந்த துளசியும் இங்கே இரண்டு நதிகளாக ஓடிவருகின்றன. நதியின் அழகை ரசிக்கும்போது, 2013ல் வெள்ளம் வரும்போது தண்ணீர் எதுவரை வந்தது என்ற இடத்தைக் காண்பித்தார்கள். பயமாகத்தான் இருந்தது. இங்கே ஸ்ரீராமானுஜர் வந்து தங்கியுள்ளார். அவருக்கு ஒரு கோவில் இங்கே உள்ளது. கோவிலில் சயன திருக்கோலத்தில் இருக்கும் ஷேசசாயி பெருமாளும் உற்சவர் ராமானுஜரும் 2013ல் வந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார்கள். உற்சவர் ராமானுஜர் மட்டும் காப்பாற்றப்பட்டு பத்ரியில் இருக்கிறார். அதைப் பின்னர் பார்ப்போம்.

கண்டம் என்னும் கடிநகரில் இருக்கும் பெருமாள் நீலமேகப் பெருமாள், புருஷோத்தமன் என்று திருநாமம். ஸ்ரீராமராகச் சேவை சாதிக்கிறார். பெரியாழ்வாரும் இந்தப் பெருமாளை ஶ்ரீராமனாகவே பாடியுள்ளார். ஸ்ரீராமர் தவம் புரிந்தபோது அமர்ந்த மேடை ஒன்று இங்கே இருக்கிறது. 

தமிழை வளர்க்கத் தமிழ்நாட்டில் கஷ்டப்படும்போது எங்கோ மலை உச்சியில் பெரியாழ்வாரின் பாசுரங்களைத் தமிழில் எழுதிப் போட்டிருக்கிறார்கள். அங்கே இருக்கும் நரசிம்ம சந்நிதிக்கு அவர்களே நரசிம்ம கோயில் என்று சிகப்பு நிறத்தில் தமிழில் எழுதியிருக்கிறார்கள்! 

பெரியாழ்வாரின் இந்தப் பாசுரம் மிக முக்கியமான ஒன்று. 

மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால்
மூன்று எழுத்தாக்கி* மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய
எம் புருடோத்தமன் இருக்கை*
மூன்று அடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி
மூன்றினில் மூன்று உரு ஆனான்*
கான் தடம்பொழில்சூழ் கங்கையின் கரைமேல்
கண்டம் என்னும் கடிநகரே

மூன்று எழுத்தைப் பயப்படாமல் மெதுவாகப் படித்தால் அர்த்தம் புரியும்.  என்ற மூன்று எழுத்தை ‘அகாரம் உகாரம் ‘மகாரம் என்று மூன்று சொற்களாக்கி, ஓம் என்ற பிரணவமாக்கினார். பிறகு பிரணவத்திலிருந்து மேலும் வளர்ந்து ‘ஓம் நமோ நாராயணாய’ என்று உருவாக்கி, அதன்மூலம் ஜீவனுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள மூன்று குணங்களை வெளிப்படுத்துகிறார். பிரணவம் எப்படி வளர்கிறதோ அதே போல திரிவிக்கிரம அவதாரத்தில் பெருமாள் மூன்று அடி நிலம் கேட்டு வளர்ந்தார். அந்தப் பெருமாள் கண்டம் என்னும் கடிநகரிலே இருக்கிறார் என்று பெரியாழ்வார் சொன்ன இடத்திலிருந்து அதை விரிவாகத் தெரிந்துகொண்டு திருப்பிரிதிக்கு புறப்பட்டோம். 

திருப்பிரிதி (ஜோசிமட்) 

ஜோஷிமட் என்று இன்று அழைக்கப்படும் இடமே திருமங்கை ஆழ்வார் பாடிய திருப்பிரிதி. ஆனால் திருமங்கை ஆழ்வார் பாடிய திருப்பிரிதி வேறு இடத்தில் இருக்கலாம் என்று ஆன்றோர்கள் நினைக்கிறார்கள். ஏன் என்பதற்கு சில காரணங்கள்:

திருமங்கை ஆழ்வாரின் பாடல்களுடன் நாமும் பயணித்தால் பாரத தேசத்து திவ்ய தேசங்களின் பூகோள வரிசைப்படி இருக்கும். ஆனால் இந்தத் திவ்ய தேசம் மட்டும் வரிசையில் இல்லை.

திருமங்கை ஆழ்வாருடைய இன்னொரு சிறப்பு அந்த அந்தத் திருத்தலத்துக்குச் சென்று அந்தப் பெருமாளையும் இயற்கைக் காட்சிகளையும் பாடுவார். இந்தத் திவ்ய தேசத்தை வர்ணிக்கும் ஆழ்வார் ‘நடம் செய்யும் தடம் சுனை என்ற ஒரு ஏரியைப் பாடுகிறார். இங்கே ஏரி எதுவும் இல்லை. 

இன்னொரு விஷயம் பெரியாழ்வார் தேவப்பிரயாகை குறித்துப் பாடும்போது கூடவே வரும் கங்கையைக் குறிப்பிடுகிறார். அதே போல் பத்ரியைப் பற்றிப் பாடும் திருமங்கை ஆழ்வார் பல பாடல்களில் கங்கையைக் குறிப்பிடுகிறார். ஆனால் திருப்பிரிதி கங்கைக்கரையிலிருந்தாலும் கங்கை பற்றிய குறிப்பு பாசுரங்களில் இல்லை. திருமங்கை ஆழ்வார் பாடும் திருப்பிரிதி பாசுரங்களில் ‘இமயத்துள் என்றும் எல்லாப் பாசுரங்களிலும் குறிப்பிடுகிறார். ஆனால் திருப்பிரிதி இமயத்துள் இல்லை. 

ஆழ்வார் திருப்பிரிதி பெருமாள் ‘அரவணை பள்ளிகொள்ளும் பரமா என்று சயனத் திருக்கோலத்தில் இருக்கும் பெருமாளைக் குறிப்பிடுகிறார். ஆனால் இங்கோ நரசிம்ம பெருமாள் இருக்கிறார். 

ஆழ்வார் பாடிய திருப்பிரிதி இமயத்துள் திபெத் நாட்டில் மானசரோவர் ஏரிப்பக்கம் பக்கம் இருந்திருக்க வேண்டும். இன்று நரசிம்மரையே திருப்பிரிதி பெருமாளாக எல்லோரும் தரிசித்து வருகிறார்கள். நாமும் அவர்களைப் பின்பற்றித் தரிசிக்கலாம். 

பெங்களூரிலிருந்து எங்களுடன் யாத்திரைக்கு வந்தவர் இந்தப் பெருமாளுக்கு ஏலக்காய் மாலை சமர்ப்பித்தார். “ஏலக்காய் மாலை இந்தப் பெருமாளுக்கு விசேஷமா? என்று கேட்டேன். அதற்கு அவர், “திருமங்கை ஆழ்வார் இந்தப் பெருமாளைப் பற்றிப் பாடும் முதல் பாசுரத்தில் ‘அன்று, ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்த நல் இமயத்துள் என்று பாடியிருக்கிறார். ஏலம் மணத்துடன் கூடிய நறுமணம் என்று ஆழ்வார் சொல்லியிருக்கிறார். அதனால் ஏலக்காய் மாலை சமர்ப்பித்தேன்” என்றார். மம் இருந்தால் மார்க்கம் உண்டு! 

பத்ரியில் வருடத்தில் ஆறு மாதங்கள் பனியால் மூடிவிடும். அப்போது அந்தப் பெருமாளை இங்கே கொண்டு வந்துவிடுவார்கள். அவருக்குப் பூஜை, ஆராதனம் எல்லாம் இங்கே தான் நடைபெறும். 25 கீமீ மேலே இருக்கும் பத்ரிக்குப் புறப்பட்டோம். 

பத்ரி

பதரிகாசிரமம் தானே உருவான திவ்ய தேசம். இதை ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரம் என்பார்கள். எட்டு எழுத்து மந்திரம் (பிரணவத்துடன் கூடிய நமோ நாராயணா) அவதரித்த இடம். திருமங்கை ஆழ்வார் தனது பெரிய திருமொழியின் தொடக்கத்தில் இந்த எட்டு எழுத்து மந்திரத்தின் பெருமைகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு வரும்போது பெற்ற தாயைக் காட்டிலும் நமக்கு நன்மை செய்யும் என்கிறார். 

பிறகு இந்த மந்திரத்தால் சொல்லப்பட்ட பெருமாளை திருப்பிரிதியில் தரிசித்து பாசுரங்கள் பாடுகிறார். அதற்குப் பிறகு இந்த மந்திரத்தை உபதேசித்த நாராயணப் பெருமாளைப் பதரிகாசிரமத்தில் பாடுகிறார். 

பத்ரி வந்தாச்சு! என்ற சத்தம் கேட்டுத் தூக்கத்திலிருந்து எழுந்தபோது மாலை ஐந்து மணி வெளியே இருட்டாக இருந்தது. பேருந்து ஜன்னல் வழியே உற்றுப் பார்த்தபோது கருப்பாக மலை மாதிரி தெரிந்தது. மேலே நட்சத்திரங்கள் மின்னியது. பேருந்திலிருந்து கீழே இறங்கியபோது குளிர் முகத்தில் அறைந்தது! ‘ஏதாவது ஒரு அறையில் சென்று கதவைக் அடைத்துக்கொள்’ என்று எல்லா உறுப்புக்களும் கெஞ்சின. 

இருட்டில் யாரோ டார்ச் அடித்துக்கொண்டு வந்தார்கள். உங்கள் பேருந்து நம்பர் என்ன?  – சொன்னோம். இதோ அங்கே இருக்கும் இடம்தான் நீங்கள் தங்கும் இடம் என்றார்கள். தூரத்தில் சின்ன விளக்கு எரிந்துகொண்டு இருந்தது. மீண்டும் பேருந்தில் ஏறினேன். “ஸ்வாமி! பஸ்ஸுள்ளே எதுக்கு போறீங்க? அங்கே நடந்துதான் போக வேண்டும். பஸ் அங்கே எல்லாம் போகாது என்றபோது பத்ரி உடனடி முக்தி தரும் ஷேத்திரம் என்பது விளங்கியது. 

நூறு அடி நடந்திருப்பேன். ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கம் வாங்கிய உணர்வு ஏற்பட்டது. ஏதோ ஒரு அறை ஏதோ ஒரு படுக்கை கிடைத்தால் போதும் என்று படுக்கையில் விழுந்தபோது குழந்தை உச்சா போனது மாதிரி ஈரமாக இருந்தது. “படுக்கை மழையில் நனைந்திருக்கும் என்று சொன்னேன். இங்கே இப்படித்தான். பனியில் நனைந்திருக்கும் என்றார்கள். வெளியே தண்ணீர் சலசலப்பு ஓயாமல் கேட்டுக்கொண்டு இருந்தது. “என்ன சத்தம் இந்த நேரம்? என்றேன். கங்கை! காலை அங்கே குளிக்கலாமா? என்றபோது ஆழ்வார் “கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடு வினை களையலாம்” என்று சொல்லியிருக்கிறார். சொன்னாலே போதும் எதற்குக் குளிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

“மணி ஏழு, பத்ரி கோயிலுக்குப் போய்விட்டு வரலாம்! என்று யாரோ சொல்ல, பெட்டியைத் திறந்து பத்து நாளைக்கு எடுத்து வந்த துணிகள் எல்லாவற்றையும் ஒன்றாக அணிந்து சர்க்கஸ் கோமாளி மாதிரி புறப்பட்டேன். 

கோயிலுக்கு முன் பக்தர்கள் கூட்டமாக முண்டி அடித்துக்கொண்டு சென்று கொண்டு இருந்தார்கள். பக்தர்கள் கூட்டத்தில் நசுங்குவது குளிருக்கு இதமாகச் சுகமாக இருந்தது. கோயிலை விட்டு வெளியே வரும்போது நாளைக்கு இந்த நடுக்கும் குளிரில் குளிப்பது இருக்கட்டும், எப்படி வாய்க் கொப்பளிப்பது என்ற பயம் கவ்விக்கொண்டது. 

பத்ரியில் நான்கு நாட்கள் தங்கினோம். தினமும் காலை கோயிலுக்குக் குளிக்கச் செல்லுவோம். குளிக்கவா? ஆச்சரியப்படாதீர்கள். கோயிலுக்கு வெளியில் ‘தப்த குண்டம் என்ற இடம் இருக்கிறது. இது ஒரு வெந்நீர் ஊற்றுக் குளம். இந்தக் குளிரில் வரும் பக்தர்கள் கஷ்டப்படக் கூடாது என்று பெருமாளே நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்த ஊற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஊற்று வரும் தொட்டி உள்ளே இறங்கினால் தப்த குண்டம் கொடுக்கும் கதகதப்பில் அது தவக் குண்டம் ஆகி, வெளியே ரம்பையும் ஊர்வசியும் வந்தால் கூட வெளியே வரமாட்டோம். 

குளித்துவிட்டு பெருமாள் சேவித்துவிட்டு வேளுக்குடி ஸ்வாமிகள் திருமந்திரத்தின் அர்த்தத்தை அது தோன்றிய இடத்திலிருந்து தினமும் சில மணி நேரம் உபதேசிப்பார். உணவு, பிறகு மீண்டும் திருமந்திரத்தின் உபதேசம். மாலை கோயில் என்று நான்கு நாட்களும் எங்களுக்கு இதுதான் தினசரி வழக்கமாக இருந்தது. பத்ரி பற்றிய திருமங்கை ஆழ்வார் பாடல்கள் சிலவற்றைப் படித்தால் இதைப் போல் ஓர் இனிய அனுபவம் மீண்டும் கிடைக்குமா என்று தெரியவில்லை. 

திருமங்கை ஆழ்வார் ‘வதரி வணங்குதுமே என்று பத்ரி குறித்துப் பாடிய பாசுரங்களை நோக்கினால் ‘நொந்து நூடுல்ஸ் ஆவதற்குள் பத்ரிக்குச் சென்று வந்துவிடு என்று சொன்னது எவ்வளவு நிஜம் என்பது புரியும். 

முதல் பாசுரத்தைப் பார்க்கலாம் 

முற்ற மூத்து, கோல் துணையா,
முன்னடி நோக்கி வளைந்து*
இற்றகால் போல், தள்ளி, மெள்ள
இருந்து அங்கு இளையாமுன்*
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி
பெரு முலை ஊடு* உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான்
வதரி வணங்குதுமே.

முதுமை முற்றிய காலத்தில் ஊன்றுகோல் கொண்டு கூன் முதுகிட்டு, காலை முன்னே வைக்க யோசித்து, எங்காவது தடுமாறி முறிந்துவிடப் போகிறது என்று மெள்ள உட்காரும் கிழட்டுத்தனம் வரும் முன்பே பூதனையின் உயிரைக் பாலுடன் உண்ட கண்ணன் இருக்கும் இந்த அரிய வதரியை வணங்கிவிடு என்று ஆரம்பித்து, அடுத்தடுத்த பாசுரங்களில் மேலும் கூறுகிறார். 

ஒரு கையால் கொம்பு ஒன்றை ஊன்றி உடல் நடுங்கி நடக்கும்போது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும். கண்களில் பீளை வழியும். பேச்சில் கோழையோடு இருமல் மேலிடும். நரம்புகள் புடைக்கும். இளம் பெண்கள் ‘சீச்சீ இந்தக் கிழவனைப் பாரேன்! என்ற கிழட்டுத்தனம் வரும் முன்னே வண்டுகள் இசைபாடும், அழகிய நீருடைய கங்கைக் கரைமேல், எங்கும் பூத்துக்குலுங்கும் சிறப்பு மிக்க வதரியை வணங்கு என்கிறார். 

எல்லா பொருட்களின் மீதும் ஒரு காலம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. உதாரணமாகத் தென்னை மரம், மண் பானை, குழந்தை என்று எல்லாவற்றிலும் ‘காலம் இருக்கிறது. காது ஓரத்தில் நரைத்த முடி திடீரென்று ஒரு நாளில் முளைத்தது அல்ல. நரைமயிரை எதிர்த்து உங்களால் போராட முடியாது. டை அடித்துக்கொள்ளலாம் ஆனால் அந்த டைக்கு கூட expiry date என்ற ஒரு காலம் உண்டு. 

திருமங்கை ஆழ்வார் சொன்ன இந்தக் கிழட்டுக் குறிப்புகளில் பல பத்ரி சென்றபோது என்னிடம் எட்டிப்பார்த்தது. இந்தப் பத்து பாடல்களைப் படித்தால், ஒவ்வொரு நாளும் முதுமை நமக்கு வருகிறது என்பதை உணர்த்தி, ஆழ்வார் ஏன் அவசரப்படுத்துகிறார் என்பது புரியும். 

திருமங்கை ஆழ்வார் சொன்ன இந்த முதுமையை என் கண்முன்னே நான் பார்த்தேன். அதைப் பற்றி விவரிக்கும் முன் பத்ரியின் முக்கிய மலைகளைப் பற்றிச் சொல்லுகிறேன். பத்ரிகாசரமம் நான்கு மலைகளுக்கு நடுவில் இருக்கிறது. ஒரு புறம் பனிபடர்ந்த நீலகண்டமலை. இன்னொரு புறம் ஊர்வசி பர்வதம். நாராயண பர்வதம் இன்னொன்று சிறிய நர பர்வதம். 

முதல்முதலாக நீலகண்ட மலை. ஒரு நாள் காலைப் பார்த்தபோது அப்படியே அதன் அழகில் மயங்கினேன். மயங்கியதற்குக் காரணம் அது இந்திய வரைபடம் போன்ற வடிவத்திலிருந்தது. நான் பார்த்த அதன் மீது உள்ள பனி வெள்ளி போல ஜொலித்தது. 

இந்த மலையைச் சூர்யோதயத்தின்போது பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். கூட இருந்தவர்களிடம் இதைச் சொன்னபோது “திரும்பப் பெங்களூர் போகும் எண்ணம் இல்லையா? பேசாமல் போர்த்திக்கொண்டு படுங்கள் என்றார்கள். கேமராவும் கையுமாகத் தனியாகக் கிளம்பினேன். இருட்டு, குளிர். கூட்டமாகக் கருப்பு நாய்கள். பார்க்க ஓநாய் மாதிரி இருந்தது. திருமங்கை ஆழ்வார் கையில் வைத்திருக்கும் வேலை நினைத்துக்கொண்டு அருகில் சென்றேன். அவை எனக்கு வழி விட்டன. ஆனால் அதற்குள் என் அட்ரினல் சுரப்பிகள் வேலை செய்து குளிருடன் நடுங்கினேன். 

கேமராவை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டு இருந்தேன். என் வாழ்கையில் மறக்க முடியாத அந்தக் காட்சி வர ஆரம்பித்தது. இருபதே நிமிடங்களில் முடிந்தது. 

முதலில் மலை உச்சி தங்கம் போல மின்னியது. பிறகு மெதுவாகச் சூரியன் மலை முழுவதையும் ஆக்கிரமித்து முழு மலையும் வெள்ளி போலக் காட்சி அளித்தது. கேமராவை கிளிக் கூடச் செய்ய முடியாமல் கை விரல்கள் விரைத்துப் போயிருந்தன! 

இந்த அற்புத காட்சியைச் சுமார் நூறு படங்கள் எடுத்தபின், திருமங்கை ஆழ்வார் விவரித்த அந்த முதுமை காட்சியைக் கண்டேன். 

ஒரு வயதான பெண்மணி பத்ரி பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்று தன் மகனுடன் நடந்து போகிறாள். அப்படியே சரிந்து விழுகிறாள். அவளுடைய மகன் ‘உனக்கு முடியாது என்று எவ்வளவு தடவை அடித்துக்கொண்டேன். பிடிவாதம் உனக்கு என்று கண்டபடி ஏசுகிறான். தன் அம்மாவைத் தூக்க முடியாமல் தூக்குகிறான். எழுந்தவள் மீண்டும் சரிந்து விழுகிறாள். பக்கத்திலிருந்தவர்கள் தண்ணீர் கொண்டு வருகிறார்கள். மருத்துவமனை இல்லை, சிக்னல் இல்லை. வயதான அந்த அம்மா பேசமுடியாமல் விரலை நீட்டுகிறாள். கண்ணில் தீர்மானமும், நீட்டிய இடத்தில் மலை இடுக்கில் பத்ரி கோயிலும் தெரிகிறது. 

*

சுமார் 10,800 அடி உயரத்தில் இருக்கும் பத்ரி பெருமாள் கோயிலுக்குள் சென்றவுடன் கருடன் நம்மை வரவேற்கிறார். அவருக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு நுழைந்தால் கர்பகிரஹம் தெரிகிறது. மூலவர் பதரிநாராயணப் பெருமாள். பத்ரிவிஷால் என்று பெயர். தாயார் அரவிந்தவல்லி தாயார். 

நடுவாகப் பதரிவிஷால் பெருமாள் இலந்தை மரத்துக்குக் கீழ் பத்மாசனத்தில் அமர்ந்த தியானத் திருக்கோலம். இவருடைய திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. தங்கக் குடையின் கீழ், ரத்தின கிரீடம், வண்ண வண்ண கற்கள் பதிக்கப்பட்ட மாலைகள் அணிந்து கொண்டு சேவை சாதிக்கிறார். நான்கு திருக்கரங்கள். மேல் நோக்கி இருக்கும் கரங்களில் சங்கு சக்கரம், கீழ் நோக்கி இருக்கும் கரங்களைத் தன் மடியில் வைத்துக்கொண்டு இருக்கிறார். 

பெருமாளின் வலதுபக்கம் கருடன் அவர் அருகே குபேரன் இருக்கிறார். இடதுபக்கம் நாரதரும் அவருக்கு அருகே உத்தவரும். நர நாராயணர்கள் இருவர் என்று மொத்தம் ஏழு மூர்த்திகள் இருக்கிறார்கள். 

‘நர நாரணனாய், உலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் என்கிறார் ஆழ்வார். அதாவது பெருமாளே நாராயணன் என்ற ஆசாரியனாகவும், அவரே நரன் என்ற சிஷ்யராகவும், இரட்டை வேடத்தில், சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக இங்கே இருக்கிறார். 

பத்ரி பெருமாளை மூன்று முறை தண்ணீருக்குள் இருந்து மகான்கள் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். முதலில் அலகநந்தா நதிக்குள். அடுத்து நாரத குண்டத்திற்குள். மூன்றாவது முறை தப்த குண்டத்திலிருந்து. 

கண்டமென்னும் கடிநகர் என்ற இடத்தில் 2013ல் வந்த வெள்ளத்தில் பெருமாள் மற்றும் ராமானுஜர் விக்கிரகங்கள் அடித்துச் செல்லப்பட்டார்கள், உற்சவர் ராமானுஜர் மட்டும் காப்பாற்றப்பட்டார் என்று முன்பு சொல்லியிருந்தேன். அந்த உற்சவர் விக்கிரகத்தை பத்ரியில் ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். 

நாங்கள் இந்த ராமானுஜரை பல்லக்கில் அமர்த்தி ஊர்வலமாகப் பாசுரங்கள் சேவித்துக்கொண்டு பத்ரி கோயில் வாசல்வரை வந்து பத்ரி பெருமாளுக்கு உகந்த பாசுரங்களைப் பாடினோம். ஸ்ரீராமானுஜரை என் கையால் எழுந்தருளச் செய்ய முடிந்தது என் வாழ்நாளில் கிடைத்த பெரும்பேறாகக் கருதுகிறேன். 

இந்தியாவின் கடைசி கிராமம் மாணா என்ற இடத்துக்கு ஒரு நாள் கிளம்பினோம். இயற்கைக் காட்சிகளை விவரிக்க முடியாது. மாணா கிரமத்துக்குச் செல்லும்போது அடிக்கடி மூட் ஸ்விங்ஸ் வந்தது. எனக்கு இல்லை பத்ரிக்கு. அங்கே காலைப் பத்து மணிக்குச் சூரியன் பளிச் என்று அடித்தால் கொஞ்சம் இதமாக இருக்கும். அதே சூரியன் மேகத்தில் மறைந்து கொஞ்சம் ‘மூடியாக இருந்தால் நமக்குக் குளிர் நடுங்கும்.

கிராமம் போகும் வழியில் பீம் பூல் என்ற பீமன் திரௌபதிக்காக ஏற்படுத்திய பாலம், பேரிரைச்சலோடு சரஸ்வதி நதி பூமிக்குள் செல்லும் இடம் (அதற்குப் பிறகு சரஸ்வதி நதி அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கா, யமுனா, சரஸ்வதி கலக்கும் இடம்) கலக்கிறாள். பாண்டவர்கள் சொர்க்கத்தை நோக்கிச் சென்ற சுவர்க்கா ரோகிணி வாசலுக்குச் சென்றபோது ‘இப்படியே நடந்து சென்றால் நான்கு நாட்களில் சொர்க்கம் வரும்’ என்றார்கள், திரும்பிவிட்டேன். 

வியாச குகைக்குள் சென்று வியாச பகவனைச் சேவித்துவிட்டு சற்று தூரம் நடந்தபோது இந்தியக் கொடி ஒன்று பறந்துகொண்டு இருக்க, அதற்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தபோது இந்தியாவின் கடைசி டீக்கடை என்ற பலகையைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம். 

 

வரும் வழியில் ஸ்வெட்டர்கள் விற்கிறார்கள். உல் விற்கும் அந்த அப்பாவி மக்களைப் பார்க்கும்போது உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதவர்கள் என்று தெரிகிறது. எப்போதும் முகத்தில் அப்படியொரு சிரிப்பு!

பத்ரி பயணம் பேருந்தில்தான். பேருந்துகள் பள்ளத்தாக்கின் விளிம்பில் (கீழே கங்கை!) போவதும், தப்பித்தவறியும் மலைமேல் படாமல் செல்வதும் (இடித்தால் நிலச்சரிவு ஏற்படும்) பார்க்க ஏதோ சினிமாவில் கிராபிக்ஸ் மாதிரி தோன்றும். ஓட்டுநர் மீது நம்பிக்கை. அவர் பத்ரி பெருமளை சேவிக்க வைத்து மீண்டும் கீழே கொண்டு வந்தும் விடுகிறார் (அலுவலகம் இருக்கிறதே!)

 

உடி ஆலன் ஒருமுறை, “மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு செட் மாற்று ஜட்டி, பனியன் எடுத்துப் போவேன் என்றார். திருமங்கை ஆழ்வார் சொன்ன நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்ற எட்டு எழுத்து மந்திரம் அவதரித்த பத்ரியில் அதன் உட்பொருளைக் கேட்டபிறகு மாற்று ஜட்டி, பனியனுக்கு அவசியமே இல்லை.

- சுஜாதா தேசிகன்
வலம் ஜூன் 2020 இதழில் பிரசுரம்

Comments

  1. ஜெய் பத்ரி விஷால்.

    பத்ரி பயணம் குறித்த உங்கள் கட்டுரை நன்று.

    ReplyDelete

Post a Comment