Skip to main content

ஆழ்வார்கள் வரிசை

 ஆழ்வார்கள் வரிசை 



சுஜாதா ஒரு முறை ’கற்றதும், பெற்றதும்’ல் போகிற போக்கில் ஓரத்தில்  

”சிறு தொழில் சேவை நிறுவனங்கள் (SISI) திரு.வி.எஸ்.கருணாகரன் அவர்களைச் சந்தித்த போது 

ஆழ்வார் பொம்மை ஒன்று தனக்கு கிடைத்தது” என்று எழுதியிருந்தார்.  

சுஜாதாவை சந்தித்த போது “ஆழ்வார் பொம்மை.. “ குறித்து விசாரித்தேன்.  கிண்டியில் SISI விசாரித்து பாருங்க என்றார். 

கூகிள் இல்லாத காலத்தில் சிலரிடம் விசாரித்தேன் கிண்டியில் நேராக, ரைட், லெப்ட் என்று வழி சொன்னார்கள். சென்றேன். 

காக்கி உடை அணிந்த ஒருவரிடம் “சார் இங்கே கருணாகரன் சாரை பார்க்க வேண்டும்” என்றவுடன் மேலும் கீழும் பார்த்து 

”நீங்க யாரு ?” என்ற கேள்விக்கு பதில் சொல்லும்வரை காத்திராமல் ”அப்பாயின்மெண்ட் இருக்கா ?” என்று சினிமா  இயக்குநர் வீட்டு செக்யூரிட்டி போல கேட்டார். 

”இல்லையே” என்றேன் பரிதாபமாக

”அப்ப முடியாது... ஐயா ரொம்ப பிஸி” என்று நடந்து செல்லும் போது கூடவே சென்று ”எங்கே இருக்கார் ?”  என்றேன். 

“இருக்காரு .. அங்கே ” என்றார். 

‘அங்கே’ பார்த்த போது ஒரு அறையின் வாயிலில்  சிகப்பு கலர் பல்ப் ’பிஸி’ என்றது.  இது போன்ற சிகப  கிளினிக் வாசலில் ஒளிருவதைப் பார்த்திருக்கிறேன். 

”எதுக்கு பார்க்கணும் ?”

“ஆழ்வார்...”

“என்னது ஆல்வாரா ?” 

“பர்சனல் விஷயமா...” என்று மாற்றினேன். 

“இன்னிக்கு பிஸி....  நாலு மணிக்கு கிளம்பிவிடுவார்” 

கொஞ்சம் கெஞ்சல், கொஞ்சல் எல்லாம் கலந்து “ஐந்து நிமிஷம் தான்”  என்றேன். 

”சரி இருங்க கேட்டு சொல்றேன்... “ என்று சிகப அணைய காத்துக்கொண்டு இருந்தேன். 

3.50க்கு சிகப அணைந்தது. 

காக்கி உள்ளே சென்று சில நிமிஷங்களில் வெளியே வந்து ’வரலாம்’ என்ற சைகையில் சீக்கிரம் அடங்கியிருந்தது. 

உள்ளே சென்ற போது ஏஸி மேல் அடித்தது. சின்ன பர்த்டே பார்ட்டி செய்யும் அளவுக்கு மினி ஹால்... . 

“யெஸ்” வந்த திசையில் வடகலை திருமணுடன் காட்சியளித்தார் திரு.வி.எஸ்.கருணாகரன் என்ற ஸ்வாமி! 

அறையையும், அவரையும் பார்த்து கொஞ்சம் பயந்துகொண்டு 

“ரைட்டர் சுஜாதா ஆழ்வார் பொம்மை பற்றி எழுதியிருந்தார்.. அது இங்கே கிடைக்கும் என்று...” இழுத்தேன். 

“முதல்ல உங்க பேர் என்ன” என்றார். 

“தேசிகன்” 

“வேதாந்த தேசிகனா ? “ என்றார். 

“இல்லை வெறும் தேசிகன்” என்றேன். 

என்னை மேலும் கீழும் பார்த்து “ஆழ்வார்கள் எதுக்கு” 

கஷ்டமான கேள்வியாக இருந்தது. 

“ஆழ்வார்கள் மீது....ஆசை...” என்றேன்

என்னை அவர் அறையின் ஒரு மூலைக்கு அழைத்துச் சென்றார். 

அங்கே எல்லா ஆழ்வார்களும் மேஜை மீது வீற்றிருந்தார்கள். 

ஆழ்வார்களை சரியா வரிசைப் படுத்தினால் தருகிறேன். 

என் அப்பா என்றோ சொல்லிக்கொடுத்தது அன்று கைகொடுத்தது. எல்லாவற்றையும் வரிசையாக அடுக்கினேன். 

சந்தோஷமாக உங்க அட்ரஸ் கொடுங்கள் இதை ஒருவன் சிறுதொழிலாக செய்கிறான் அவனை வீட்டுக்கு அனுப்புகிறேன். 

இரண்டு வாரம் ஆகும் என்றார். 

”ஆழ்வார்களுக்கு வடகலை திருமண் தானே?” என்றார் சிரித்துக்கொண்டு. 

மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு கிளம்பும் முன் சாயங்காலம் ஏதாவது வேலை இருக்கா ? 

“இல்லை இன்னிக்கு 1/2 லீவு... உங்களைப் பார்க்க” என்றேன். 

“அப்ப என்னுடன் வா” 

சரி என்றேன். 

கொஞ்ச நேரத்தில் நாங்கள் கிளம்பினோம். காக்கி சட்டை எங்களுக்கு கார் கதவை திறந்துவிட்டார். 

அடியேனை பார்த்து ஏதோ  நினைத்தது கண்களில் தெரிந்தது.  

கார் நேராக அண்ணா நகரில் ஒரு கோயிலுக்கு சென்றது. .

“ஸ்ரீ.உவே. வில்லூர் நடாதூர் கருணாகராசார்யஸ்வாமி அவர்களின் திருப்பாவை உபன்யாசம்” பலகையில் எழுதியிருந்தது. 

மேடையில் அவர் தியான ஸ்லோகம் சொல்லிவிட்டு கீழே நான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். என்னை மேலே வரும்படி அழைத்தார். நடுங்கிக்கொண்டு மேலே சென்றேன் 



“ஆண்டாள் பாசுரம் சொல்லும் போது தேசிகன் கூட இருந்தால் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் இங்கேயே இரும்”  என்று சொல்லிவிட்டு “பித்ரே ப்ரஹ்மோபதேஷ்ட்ரே மே குரவே தைவதாய” என்று ஆரம்பித்து ஆண்டாளை கொண்டாடினார். 

இரண்டு வாரம் கழித்து விடியற்காலை ஆறு மணிக்கு காலிங் பெல் அடிக்கக் தூக்க கலக்கத்துடன் கதவை திறந்த போது காலேஜ் பையன் ஒருவன் “ஆழ்வார் பொம்மை” என்றார். 

உள்ளே வந்து ஆழ்வார்களை அழகாக வரிசை மாறாமல் அடுக்கிக் கொடுத்துவிட்டு “சரியா இருக்கா பாருங்க” என்றார். 

பணத்தை கொடுத்த பின் “ஸ்ரீராமானுஜர்  செய்துக்கொண்டு இருக்கேன் 

அதுவும் உங்களுக்கு  வேண்டுமா ?” என்றார் 

இது நடந்து பல வருடங்கள் கழித்து, அடியேனுடைய ஆண்டாள் அருளிய திருப்பாவை புத்தகத்தை  ஸ்ரீ.உவே. வில்லூர் நடாதூர் கருணாகராசார்யஸ்வாமி  அவர்கள் வெளியிட்டது என் பாக்கியம். 

- சுஜாதா தேசிகன்

25-08-2020

ஆவணி உத்திரட்டாதி
ஸ்ரீ.உவே. வில்லூர் நடாதூர் கருணாகராசார்யஸ்வாமி திருநட்சத்திரம்.

Comments