Skip to main content

தினமும் கொஞ்சம் தேசிகன் - 15 - நாச்சியார் ஆசாரியர்

 தினமும் கொஞ்சம் தேசிகன் - 15 - நாச்சியார் ஆசாரியர் 





கீதை கோவிந்தத்தில் ராதை கண்ணனை அடைய வேண்டும் என்று மன்மதனை வேண்டிக்கொள்கிறாள். சுகந்தமான குங்குமம் போன்ற பொடியில் மன்மதனை ஓவியமாக வரைகிறாள். ( வண்ணப் பொடியில் நாம் ரங்கோலி கோலம் போடுவது போல ) 

பின்புலத்தில் (background) மீனை வரைகிறாள்( மன்மதனுக்கு கொடி மீன் ), கிரீடம், கையில் கரும்பு வில், மாந்தளிர் புஷ்பங்களில்  அம்புகள் என்று மன்மதனை வரைகிறாள். 


அவள் வரைந்த ஓவியத்தைப் பார்த்த தோழிகள். வியப்படைகிறார்கள். ஓவியத்தில்  கிரீடத்துக்குப் பதில் மயில் பீலி, கரும்பு வில்லுக்குப் பதில் புல்லாங்குழல், பின்புலத்தில் மீனுக்கு பதில் மாடுகள் என்று அது மன்மதன் மாதிரி இல்லாமல், மன்மதனுக்கு மன்மதன் என்று பாகவதம் வர்ணித்த கண்ணனாக அந்த ஓவியம் இருக்கிறது! தப்பித் தவறி தேவதாந்திர பூஜை செய்தால் கூட எண்ணம் எல்லாம் கண்ணனிடம் இருக்கிறது ராதைக்கு ! 


ஸ்ரீ வேதாந்த தேசிகன் பரமதபங்கத்தில் 'நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்றும், ’எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் மற்றை நம் காமங்கள் மாற்று’ என்றும் திருப்பாவையில் கூறிய நாச்சியார், கிருஷ்ணனைப் பெறுகைக்காகப் பண்ணின காமதேவ அர்ச்சனம் அவள்’வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்த’ கண்ணனுக்கு செய்த அர்ச்சனம் என்கிறார்! 


கீதை கோவிந்தத்தில் வருவதும், ஸ்வாமி தேசிகன் கூறுவதும் ஒன்றாக இருப்பதைக் காணலாம். ராதை மன்மதனுக்குச் செய்த பூஜை போல ஆண்டாளும் செய்தாள் என்பது தான் ஸ்வாமி தேசிகனின் திருவுள்ளம். (ராதை தான் நப்பின்னை என்றும் கூறுவர்)

மேலும் ஸ்ரீ  வேதாந்த தேசிகன், ஆண்டாள் மன்மதனை உபாசிக்கவில்லை, அவள் உபாசித்தது காமன் என்ற வடிவத்தில் உள்ளக் கண்ணனை. அவன் பெயர் மதனகோபாலன். 


மதுரை கூடலழகர் சந்நிதிக்கு பக்கம் மதனகோபாலின் சந்நிதி இன்றும் இருக்கிறது. வராக புராணத்தில் கண்ணனை அடைய வேண்டும் என்று விரும்பிய கோபிகைகளுக்கு நாரதர் மதனகோபாலனை உபாசிக்க சொல்லி ஒரு வழிப்பாட்டைச் சொல்லிக்கொடுத்தார். கண்ணனைப் பெறக் கண்ணனே வழியாக மதனகோபாலனை வழிபட்டார்கள். மதனகோபாலனை வழிபட்டால் வேண்டிய பலனை உடனே கொடுத்துவிடுவான் என்ற ஆசையினால் கோபியரைப் போல  ஆண்டாளும் மதனகோபாலனை மன்மதனாக எண்ணி வழிபடுகிறாள் என்றும் ஸ்வாமி தேசிகனின் திருவுள்ளம்.


படம் : கீதாசாரியனான கண்ணன் கீதையை  நமக்கு உபதேசித்தது போல வேதாந்தாசாரியரான நம் தூப்புல் தேசிகன் கண்ணன் வடிவில் நமக்கு உபதேசிக்கிறார். வேதம் அனைத்துக்கும் வித்தான கோதை தமிழை நமக்கு ஒழுங்காக புரியும் படி சர்வ தந்திர சுதந்திரர் நாச்சியாராக உபதேசிக்கிறார். ( படங்கள் கீழே )


Comments