அ, ஆ - அனுபவம்
மேலே உள்ள இந்தப் படத்தில் அத்திவரதர் திருக்கை, சில நாள் முன் பத்திரிக்கையிலும், முகநூல்களிலும் வலம் வந்தது. மா.சு.ச என்றால் என்ன என்று பலர் அதைப் பற்றி எழுதினார்கள்.
அதன் அர்த்ததுக்கு பிறகு வரலாம். அதற்கு முன் திருக்கையில் இருக்கும் கிளியைக் கொஞ்சம் கவனிக்கலாம்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் “கனி இருந்தனைய செம் வாய் கண்ணனை” என்று திருமாலையில் ”கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையுடையனான கண்ணபிரானை” என்று சொல்லுகிறார். இந்தக் கிளியும் அதே போலக் காட்சியளிக்கிறது. கிளியை வணங்கிவிட்டு மேலே படிக்கலாம். பெருமாளை வணங்கும் நாம் கிளியை என்றாவது வணங்கியிருக்கிறோமா ?
முளைக் கதிரை, குறுங்குடியுள் முகிலை, மூவா
மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற*
அளப்பு அரிய ஆர்-அமுதை, அரங்கம் மேய
அந்தணனை, அந்தணர் தம் சிந்தையானை*
விளக்கு ஒளியை, மரதகத்தை, திருத்தண்காவில்
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு*
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக; என்று
மடக் கிளியைக் கை கூப்பி வணங்கினாளே.
இது திருமங்கை ஆழ்வார் பாசுரம். இதில் கிளியைக் கைகூப்பி வணங்குகிறார் ஆழ்வார். கிளியை வணங்கலாமா ? அது சாதாரண பறவை தானே என்று நமக்குத் தோன்றலாம். இதற்கு ஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள் என்ன சொல்லுகிறார் என்று கீழே அந்த ஒலிப்பதிவில் கேட்கலாம்.
(https://w.soundcloud.com/player/?url=soundcloud.com%2Fdesikan-1%2Fsri-krishna-premi-on-kiliyai-kai-koopi-vananginaale)
ஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள் - மடக் கிளியைக் கை கூப்பி வணங்கினாளே
கிளிக்குப் பெருமாளின் திருநாமங்களை சொல்லிகொடுத்தார் ஆழ்வார். ஸ்ரீராமானுஜர் ஆழ்வார் பெயரை கிளிக்கு சொல்லிகொடுத்தார்.
உடையவர் குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழிக்கு அருளிய அருமையான வெண்பா இது.
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்* பொன்னஞ் சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன்* எங்கள்
குலசேகரன் என்றே கூறு
இதில் ’இராமாநுச நாயகி’ தான் வளர்த்த கிளிக்கு இன்னமுதம் ஊட்டிய பைங்கிளியே என் நாயகனான ‘குலசேகரன்’ என்னும் பெயரைக் கூறுமாறு சொல்லிகொடுத்திருக்கிறாள்.
இதில் குலசேகர ஆழ்வாருக்கு “தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்” என்கிற பட்டத்தைக் கொடுக்கிறார் நம் இராமானுசன்.
நமக்குத் தெரிந்து தொண்டரடிப் பொடியாழ்வார் தான் ஸ்ரீரங்கத்தைத் தவிர வேறு திவ்ய தேசத்தைப் பாடவில்லை. அதனாலேயே “பதின்மர் பாடும் பெருமாள்” என்ற பெருமையை நம்பெருமாள் தட்டிச்சென்றார். ஆனால் அவருக்கு அந்தப் பெருமையைக் கொடுக்காமல் உடையவர் குலசேகர ஆழ்வாருக்கு ”தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்” என்ற பெருமை வாய்த்தது எதனால் ?
குலசேகர ஆழ்வாருக்கு ஸ்ரீராமரிடம் உள்ள பக்தி எல்லோருக்கும் தெரிந்தது. அதனால் அவர் குலசேகர பெருமாள் என்று அழைக்கப்பட்டார். அவருக்கு அரங்கன் மீது அளவு கடந்த மோகம்
”அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்று என்
வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே”
என்று எப்போது அரங்கனைச் சேவிப்பேன் என்று மனம் உருகிப் பாடியுள்ளார். அவருக்குச் சயனித்த பெருமாள் தான் வேண்டும் என்றால் கேரளா நாட்டு திவ்ய தேசத்திலேயே திருவாட்டாற்று, அனந்தபத்மநாப பெருமாள் என்று இரண்டு பெருமாள் இருக்க அவர் திருவரங்கம் வரத் துடித்ததால் ‘தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்’ என்கிறார் உடையவர்.
ஸ்ரீராமானுஜருக்கும் தன் புகுந்த வீடாம் திருவரங்கம் மீது அளவு கடந்த மோகம் “பொன் அரங்கம் என்னில், மயலே பெருகும் இராமநுசன்” என்கிறார் அமுதனார்.
ஸ்ரீராமானுஜர் திருவரங்கத்தை விட்டு மேல்கோட்டையில் இருந்தபோது எப்போது மீண்டும் திருவரங்கம் செல்வேன் என்று குலசேகர ஆழ்வார்போலத் துடித்து அலற்றி கிளியைக் கூப்பிட்டு ‘திருவரங்கத்தைப் பாடவல்ல குலசேகரன்’ என்று கூறு என்று இந்தத் தனியனை இயற்றியிருப்பாரோ என்று கூட அடியேனுக்குத் தோன்றுகிறது.
மீண்டும் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகளின் அந்த ஒலிப்பதிவை கேளுங்கள். இதைக் கேட்டபிறகு அடியேனுக்கு கிட்டதட்ட இதே சாயலில் இன்னொரு பாடல் நினைவுக்கு வந்தது அது ஸ்ரீ பித்துக்குளி முருகதாஸ் அவர்களுடையது.
இதைக் கேட்டபிறகு இது மாதிரி நம் குலசேகர ஆழ்வார் எப்போதோ சொல்லிவிட்டாரே என்று மீண்டும் குலசேகர ஆழ்வார் நினைவுக்கு வந்தார்.
என்ன பாசுரம் என்று உங்களுக்கே தெரியும்.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
இந்தப் பாடலை அப்படியே படிக்காமல் அதன் முன்னே உள்ள பாசுரங்களையும் அதற்குப் பிறகு உள்ள பாசுரங்களையும் சற்றே பார்க்கலாம்.
“ஊன் ஏறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்” என்று தொடங்கும்
முதல் பாடலில் திருவேங்கடத்தில் ஒரு ஏரியில் வாழும் நாரையாகப் பிறக்க கடவேன் என்கிறார். பிறகு அங்கே இருக்கும் சுனையில் மீனாகப் பிறக்க வேண்டும்; பொன்வட்டில் பிடிப்பவனாகப் பிறக்க வேண்டும் ; செண்பக மரமாக என்று அடுக்கிக்கொண்டு போகிறார் ஆழ்வார். அடுத்த பாடலில் புதராய் இருக்க விருப்பப்படுகிறார். அப்படியே மலை உச்சி, காட்டாறாக, வழியாக வேண்டும் மேலும் ஆசைப்படுகிறார்.
இதை எல்லாம் சாதாரணமாகப் பார்த்தால் ஏதோ ஒன்று ஆக வேண்டும் என்று விருப்பப்படுகிறார் என்று தோன்றும். ஆனால் இவை எல்லாம் - மீன், செண்பக மரம் எல்லாம் கொஞ்சம் தள்ளியே இருக்கிறது. எல்லாவற்றிருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கவே செய்கிறது.
பறவையாக இருந்தால் எங்காவது பறந்துவிட்டால் ? மீன் அதுவும் எங்காவது நீந்திச் செல்ல வாய்ப்பு இருக்கிறது ? சரி பொன்வட்டில் நல்ல விஷயம் ஆனால் எங்கே தனக்கு பொன் என்ற கர்வம் வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார். சரி மலராகப் பெருமாளுக்கு மாலையாக ? மலர் வாடிவிடும், சரி அதன் மரமாக ? மரம் வெட்டப்படலாம் ? ஆறு - ஆறு வற்றிவிட்டால் ? சரி சந்நிதிக்கு போகும் வழியாக ? நாளை அந்த வழி மாறலாம் அல்லது இடித்துவிட்டு புதுசாகப் போடலாம் ஆனால் வழி இருந்தால் அவன் திருமுகத்தை தரிசிக்க முடியுமா ? அவன் கல்யாண குணங்களை பார்த்துக்கொண்டு இருக்க என்ன வழி என்று ஆழ்வார் யோசிக்கிறார்.
நாம் பக்தராகத் திருப்பதிக்கு சென்றால் கொஞ்சம் நேரம் ( இந்தக் காலத்தில் அதுவும் முடியாது ‘ஜருகண்டி’ ) இருக்கலாம் ஆனால் அங்கேயே இருக்க முடியுமா ? அர்ச்சகர் கூட நடை சாத்திய பின் வீட்டுக்கு வந்துவிட வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி ஒரே கூட்டம் அப்போது உங்களை யாரோ ஒருவர் கோயில் கைங்கரியம், முத்தங்கி சேவை ஒரே கூட்டம், கொஞ்சம் கூட்டத்தை ஒழுங்கு செய்யுங்கள் என்று உங்களுக்கு ஒரு வேலைக் கொடுத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். கூட்டத்தை ஒழுங்கு செய்யும் சாக்கில் பெருமாளை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அல்லவா ?
ஆழ்வார் யோசித்தார். ’கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா’ மாதிரி படியாய் கிடக்கிறேன் இன்று கோரிக்கை வைக்கிறார். அடியார்கள் அதன் மீது ஏறிச் செல்வார்கள், அதனால் அடியார்களின் பாத தூளியும் கிடைக்கும் அதே சமயம் பெருமாளின் “உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்றும் இருக்கலாம். 2-in-1 ஆகப் பெருமாளுக்கும் கைங்கரியம் செய்ய முடியும் அதே சமயம் அடியார்களுக்கும் கைங்கரியம் என்று ஆசைப்படுகிறார்.
ஆனால் இதுலேயும் ஒரு பிரச்சனை இருக்கு. படி என்பது ஒரு கல் அது ஸ்கூலில் படித்த மாதிரி ஒரு அறிவில்லாத non living thing. அசேதனம். அப்படி என்றால் படியாக இருந்தால் பெருமாளை தரிசிக்க முடியாது. ஆனால் அசேதன படியாக இருக்க வேண்டும் அதே சமயம் பெருமாளை ’காணும் படியாக’ இருக்க வேண்டும். அதனால் தான் படியாகக் கிடந்து உன் “பவளவாய் காண்பேனே” என்கிறார். படி எப்படிப் பார்க்க முடியுமா ? என்று உங்கள் மனதில் தோன்றலாம். பெருமாள் நினைத்தால் எதுவும் முடியும் !
அடுத்து பெருமாளிடம் தன் இஷ்டப்படி இப்படிக் கேட்கிறோமே அது சரியா என்று யோசித்து ’சரிப்பா உன் இஷ்டம்’ என்கிறார். அதனால் தான் “பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே ” என்று முடிக்கிறார்.
திருப்பதி பெருமாளுக்கும், அத்தி வரதரும் நின்று கொண்டு சேவை சாதித்தாலும் திருக்கையில் ஒரு வித்தியாசம் இருக்கும். திருமலையில் இருப்பவர் என் காலைப் பற்று என்று சொல்லும் விதமாக இருக்கும். அத்தி வரதர் கவலைப்படாதே என்று சொல்லும் விதமாக இருக்கும்.
திருப்பதி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், ஒப்பிலியப்பன், அத்தி வரதர் கையில் “மாமேகம் சரணம் வ்ரஜ” அல்லது “ மாசுச” என்ற வரியைப் பார்க்கலாம்.
நாம் என்ன தான் கோயில் கோயிலாகச் சென்று பல வேண்டுதல்களைச் செய்து வந்தாலும் ஒரு விதமான பயம் நமக்கு என்றுமே உண்டு. அதனால் தான் ஜோசியம், ஜாதகம், பரிகாரம், சாமியார், பாபா, என்று அலைகிறோம் பல முறை கோயில்களைப் சுற்றுகிறோம்.
அர்ஜுனன் பயத்தில் இருக்கும்போது ஸ்ரீ கிருஷ்ணர் ”ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச” என்று உபதேசம் செய்தார். இது அர்ஜுனனுக்கு மட்டும் இல்லை நமக்கும் தான்.
சரமமான உபாயத்தை சொல்லும் ஸ்லோகம் இது அதனால் இதைச் சரம ஸ்லோகம் என்கிறோம். சரமம் என்றால் கடைசி, அதாவது இது தான் last resort - இது தான் ஒரே வழி என்று கண்ணன் சொன்னது. என்ன சொல்லுகிறது ? “என்னையே பற்று. உன்னைப் பாவங்களிலிருந்து விடுவிக்கிறேன். கவலைப் படாதே” .
இது தான் சரணாகதி.
கஜேந்திரன் என்ற யானை தன் தும்பிக்கையால் அவனைப் பற்றியது ( யானைக்கு அதனால் தான் துதிக்கை என்று பெயர் வந்தது). உடனே வரதன் வந்து கஜேந்திரனை காத்தார். ஹஸ்தி' என்றால் யானை என்று பொருள். கிரி என்றால் மலை.
அந்த யானையே மலை வடிவத்தில் காஞ்சியில் இருக்கிறது. அதனால் அந்த மலைக்கு அஸ்திகிரி என்று பெயர். அதன் மீது இன்றும் வரதன் இருப்பதால் அத்தி வரதன் என்று பெயர். ( பல காரணத்தில் இதுவும் ஒரு காரணம் ! )
நன்றாக யோசித்தால், பிரகலாதனை எப்படி எப்போதும் நரசிம்மனுடன் இணைக்கிறோமோ அதே போலக் கஜேந்திரனை வரதனுடன் தான் எப்போதும் இணைக்கிறோம்.
பல திவ்ய சேதங்களில் ( உதாரணம் திருவல்லிக்கேணி) ஸ்ரீ கஜேந்திர வரதர் இருக்கிறார். கஜேந்திர நம்பெருமாள், கஜேந்திர திருமலையப்பன் என்று சொல்லுவதில்லை. கஜேந்திர வரதன் என்று தான் சொல்லுகிறோம்.
திருவேங்கடவன் ‘என்னையே பற்று’ என்று தன் திருக்கையை காண்பிக்கிறார். வரதனோ ‘கவலைப் படாதே’ என்று தன் கையைக் காட்டுகிறார். ’நாராயணனே நமக்கே’ ....என்று ஆரம்பித்த ஆண்டாள் ‘எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்’ என்று முடிகிறாள்.
வரதன் எப்போதும் கவலைப்படாதே என்று ஓடி வந்து அருள் செய்பவர். அதனால் தான் இந்தக் கூட்டம். இந்தக் கூட்டத்தை mad rush, crazy people, பைத்தியக்கார கூட்டம் என்று எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம். ஆனால் இன்று நாம் பார்க்கும் இந்தக் கூட்டம் ‘தானா சேர்ந்த கூட்டம்’
மீண்டும் முதலில் இருந்த படத்தைப் பாருங்கள்..... இவ்வளவு அனுபவத்தைக் கொடுத்த அந்தக் கிளியை எப்போதும் வணங்கலாம் !
பிகு: அ - அத்திவரதன், ஆ - ஆழ்வார்
- சுஜாதா தேசிகன்
9-8.2019
படங்கள் : Shared from FB, Whatsapp, with thanks to the original copyright holders.
Comments
Post a Comment