1988ல் வரைந்த ஓவியம் ! |
என் அப்பா தான் எனக்கு சுஜாதாவின் கதைகளை அறிமுகம் செய்து வைத்தார். (இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான்). குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் வரும் சுஜாதாவின் தொடர்கதைகளை மிகவும்
விரும்பிப் படித்து என்னிடம் அதைப் பற்றி சிலாகித்துப் பேசுவார். ( கடன்காரன் என்ன அருமையா எழுதறான்! ! நானும் ஏதோ சொல்கிறார் என்று கேட்டுக்கொள்வேன்.
நான் படித்தது ஆங்கிலோ இந்தியன் பள்ளியில். அங்கு தமிழ் சுமாராகத் தான் கற்றுத் தருவார்கள். நானும் ரொம்ப திக்கித் திணறி பாஸ் செய்வேன்; எழுத்துக் கூட்டி எழுத்துக் கூட்டிப் படிப்பேன். கோனார் நோட்ஸுக்கே ஒரு நோட்ஸ் எனக்குத் தேவைப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நான் காலேஜில் படிக்கும் போது ஒரு நாள், அப்பா அடிக்கடி ஏதோ 'சுஜாதா, சுஜாதா' என்று சொல்கிறாரே என்னதான் எழுதுகிறார் பார்க்கலாமே என்று, திருச்சி ஜங்ஷனுக்குப் போய் ஒரு லெண்டிங் லைப்ரரியில் சுஜாதா புத்தகம் ஒன்று எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தேன். முன்பே சொன்னது போல் என் தமிழ் புலமை அதிகம் ஆதலால் மிகவும் மெதுவாகப் படித்தேன். ஒரு வாரத்தில் படிக்க வேண்டிய புத்தகத்தை இரண்டு மாதத்தில் படித்து முடித்தேன். அந்த புத்தகம் படித்தவுடன் சுஜாதாவின் தமிழ் நடை, உத்தி, அவர்
மொழியைக் கையாளும் முறை போன்றவை என்னை மிகவும் வசீகரித்தது. ’A' போஸ்டர் பார்த்த விடலைப் பையன் அதைப் பார்க்க தியேட்டர் செல்வது போல, சுஜாதாவின் மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டும்
என்ற ஆர்வத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
புத்தகத்தைத் திருப்பி கொடுக்க லெண்டிங் லைப்ரரிக்குச் சென்ற போது அதை நடத்துபவர், "தம்பி, புத்தகத்தின் விலை 14ரூ, ரீடிங் சார்ஜ்,ஃபைன் எல்லாம் சேர்த்தால் 32 ரூ" என்றார். நான் 14ரூ கொடுத்து புத்தகத்தை வாங்கிவிட்டேன். அதுதான் நான் வாங்கிய முதல் சுஜாதா புத்தகம் ! அதன்
பின் வீட்டிற்கும் லெண்டிங் லைப்ரரிக்கும் அலைவதே எனக்கு வேலையாக இருந்தது. லைப்ரரிக்காரருக்கு என் மேல் ஒரு தனி மரியாதை எற்பட்டது- லைப்ரரியில் புத்தகத்தை வாங்கும் ஒரே நபர் நான்தான்.
சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகளை படித்த போது அதே மாதிரி எழுத வேண்டும் என்று ஆசை வந்தது. காலேஜில் Artificial Intelligence பற்றி அசைன்மெண்ட் கொடுத்தார்கள். வகுப்பில் எல்லோரும் எழுதி கொடுத்தார்கள். சில வாரம் கழித்து கிளாசில் எல்லோரும் எழுதியதை திருப்பி கொடுத்தார்கள் என்னுடைய கட்டுரையை திருப்பி கொடுக்கவில்லை. அந்த வகுப்பு HODயுடையது அதனால் பயந்துக்கொண்டு “சார் என் கட்டுரை..?”
“ஓ அதுவா தேசிகன்... அதை xerox எடுக்க கொடுத்திருக்கிறேன்... 35காபி கிளாசில் எல்லோருக்கும் அது தான் நோட்ஸ்... மிக அருமை” என்றார்.
ஒரே கட்டுரையில் வகுப்பு பெண்களை எல்லாம் என்னை திரும்பி பார்க்க வைத்தது அந்த ‘சுஜாதா’ மாதிரி கட்டுரை !
அவ்வப்போது எதையாவது வரைவேன். வாட்டர் கலர் கொண்டு ஒரு சுஜாதா படம் வரைந்து( 1988 ) என் ரூமில் மாட்டினேன். ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை ஹிந்து நாளிதழில் எந்த சினிமா எங்கே ஓடுகிறது என்று
பார்த்துக்கொண்டு இருந்த போது, அந்த "லயன்ஸ் கிளப்" விளம்பரம் என் கண்ணில் பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினார் திரு.சுஜாதா!. "All are Welcome!!" என்று அழைத்திருந்தார்கள். விழாவிற்குச் சென்று சுஜாதாவை ஒர் ஓரத்தில் நின்றாவது பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நான்
வரைந்த சுஜாதா படத்தை சுருட்டிக்கொண்டு விழாவிற்குச் சென்றேன். அவர் பேச்சைக் கேட்டேன். கைதட்டினேன். அவர் கிளம்பும்போது நான் வரைந்த படத்தை அவரிடம் காண்பித்து, ஒரு ஆட்டோ கிராஃப் கேட்டேன். படத்தைப் பார்த்துவிட்டு, "அட, நான் இப்படியா இருக்கேன்?" என்றார்.
"பேர் என்ன?"
"தேசிகன்"
"வீட்டில் தம்பி கூட நிறைய சண்டை போடுவியா?" என்று கேட்டு படத்தில் ஒரு கையெழுத்திட்டுத் தந்தார்(28-07-91).
நான் முதல் முதலில் சுஜாதாவைச் சந்தித்தது அப்போதுதான்! பிறகு காலேஜ் படிப்பை முடித்துவிட்டு, சென்னைக்கு வேலைக்கு வந்ததேன். இப்போது நான் பல சுஜாதா புத்தகங்களைப் படித்து முடித்துவிட்டேன். என் அப்பாவே என்னிடம் சுஜாதா புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்திருந்தார்.
தமிழ்.நெட் குழுமத்தில் உறுப்பினராக சேர்ந்து, தமிழ் கீபோர்டு, தமிழ் என்கோடிங் விவாதங்களில் கலந்து கொண்டு இருந்தேன். அப்போது திரு.முத்து நெடுமாறன்(முரசு அஞ்சல்) அவர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது.
ஒரு சமயம் முத்துவும் நானும் சுஜாதாவை தமிழ் கீபோர்ட், என்கோடிங் சம்பந்தமாக சந்திக்கச் சென்றோம். இது என் இரண்டாவது சந்திப்பு. முதல் சந்திப்பிற்கும் இரண்டாவது சந்திப்பிற்கும் ஏறத்தாழ 6 ஆண்டுகள்
இடைவெளி. தமிழ் கீபோர்ட், என்கோடிங் விவாதத்திற்குப் பிறகு, சுஜாதா அவர்கள் இண்டர்நெட்டிலிருந்து சில தகவல்களை என்னிடம் கேட்டிருந்தார். ஒரு நாள் அவர் வீட்டிற்குப் போய் கொடுத்துவிட்டு விடைபெறும்
முன்..
"சார் ! உங்கள் கதை, கட்டுரை, எல்லாம் என்னிடம் இருக்கிறது" என்றேன்.
"இருக்காது, என்னிடமே அவை இல்லை" என்றார். விட்டுக்கு வந்துவிட்டேன்.
சுஜாதா எழுதிய முன்னுரை ! |
பிறகு என்னிடம் உள்ள சுஜாதா அவர்களின் கதை, கட்டுரை, கவிதை, நாடகம், எல்லாவற்றையும் தொகுத்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அதைப் பார்த்துவிட்டு எனக்கு ஒரு மூன்று வரி பதில் அனுப்பியிருந்தார். அதில், 'நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்; நான் எவ்வளவு எழுதியிருக்கிறேன் என்று இன்று
தான் தெரிந்தது; நீதான் என் Official Biographer' என்று எழுதியிருந்தார். பிறகு சுஜாதாவிற்கு ஒரு வலைத்தளம் அமைத்து அவருடைய எழுத்துகளை அவர் அனுமதியுடன் இணையத்தில் அரங்கேற்றி மகிழ்ந்தேன். அவரே என் வீட்டுப்பக்கத்துக்கு ஒரு முன்னுரையும் எழுதிக் கொடுத்தார்.
இந்த சமயத்தில் தான் என் அப்பா அம்மா எனக்குக் கல்யாணத்திற்குப் பெண் பார்த்தார்கள். (இந்த அனுபவத்தை பற்றி தனியாக கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறேன்). கல்யாண பத்திரிகையை சுஜாதாவிடம் கொடுத்த போது அதைப் பார்த்துவிட்டு, "உன் தலை எழுத்து அப்படி என்றால் மாத்த முடியாது" என்றார். (காரணம், என் மனைவி பெயரும் சுஜாதா தான்! - சுஜாதா தேசிகன் என்று தனியாக எழுதியிருக்கிறேன்).
என் திருமணத்திற்கு வந்து வாழ்த்திவிட்டு, "எனக்கும் தேசிகனுக்கும் ஆண்டாள் சொல்லுவது போல ‘ஒழிக்க ஒழியாத உறவு’ என்று என் அப்பாவிடம் செல்லிவிட்டுச் சென்றார். பிறகு திருச்சியில் ஒரு முறை அவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருடன் ஸ்ரீரங்கத்தை
ஒருமுறை சுற்றிப் பார்த்திருக்கிறேன். என் அப்பாவிடம் பிரபந்தத்தைப் பற்றி கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தார். எனக்கு ஆழ்வார், பிரபந்தம் முதலியவற்றில் ஈடுபாடு வந்ததற்குக் காரணமும் என் அப்பா தான்.
இந்த இடத்தில் கொஞ்சம் என் அப்பாவை பற்றி... என் அப்பா சுஜாதா தொடர் கதைகளை ரொம்ப விரும்பிப் படிப்பவர். யாராவது படித்துவிட்டு அவருக்கு கதையைச் சொல்லிவிட்டால், அவருக்குப் பிடிக்காது. அவரேதான்
அதைப் படிக்க வேண்டும். சில சமயம் சுஜாதா அவர்கள் என்னிடத்தில் இந்தக் கதையை இப்படிக் கொண்டு போகப் போகிறேன், இதுதான் இந்த கதையினுடைய 'நாட்' என்று சொல்லுவார். என் அப்பாவிடம் "அப்பா,
கதை எனக்குத் தெரியும், சுஜாதா சொல்லிவிட்டார், சொல்லட்டுமா" என்றால் "வேண்டாம் டா, சொல்லிராதே, நான் அடுத்த வாரம் குமுதத்தில் படித்து கொள்கிறேன்" என்பார்.
இப்படித்தான் சுஜாதா அவர்களின் "இரண்டாவது காதல் கதை" தொடர் வந்து கொண்டு இருந்த சமயம். தொடர் முடிவதற்கு 2 வாரம் தான் இருக்கும். நான் என் அப்பாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தேன்.
'இரண்டாவது காதல் கதை' பற்றி பேச்சு எழுந்தது.
"முடிவு தெரியும் சொல்லட்டுமா" என்றேன்.
"கதை நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது, முடிவை நானே படிச்சிக்கிறேன்" என்றார்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை என் அப்பா திடீரென்று இறந்து போனார் என்று செய்தி கேட்டு திருச்சிக்குச்
சென்றேன். கடைசிவரை அவர் அந்தக் கதையின் முடிவைத் தெரிந்து கொள்ளவே இல்லை.
- சுஜாதா தேசிகன்
( 2004 )
( படம் : 1988ல் வரைந்த ஓவியம் )
பிகு: கல்லூரி படிப்பு முடித்து, ஒரு வருடம் வேலைக்கு பின் என் நண்பர்கள் எல்லோரும் அமெரிக்கா சென்றுவிட எக்ஸிபிஷனில் தொலைந்த குழந்தை போல தனியாக விடப்பட்டேன். ஒரு விதமான பியர் பிரஷரில் இருந்த சமயம் என் அப்பாவிடம் அமெரிக்கா செல்வதைப் பற்றி பேசினேன். அவர் ஒரே வார்த்தையில் “What are your values in life?” என்று யோசித்து முடிவு செய் என்றார்.
ஒரு நாள் யோசித்துவிட்டு போக வேண்டாம் என்று முடிவு செய்து அப்பாவிடம் சொன்னேன். என்ன காரணம் என்று கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை.
கடவுள்களின் பள்ளத்தாக்கு’ என்று நான் தொகுத்த புத்தகத்தில் வெளிநாட்டுக்கு போகும் இளைஞர்களை பற்றி (ஆனந்த விகடன் 1999 ) வந்த கட்டுரை வெளிவந்த சமயம் அந்த கட்டுரை பலரை சுருக் என்று குத்த பல இளைஞர்கள் சுஜாதாவை இணையத்தில் காய்ச்சி எடுத்தனர்.
அவரிடம் மெகக்கட்டு இதை பற்றி சொன்னேன். கேட்டுக்கொண்டார்.
திரும்ப என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.
“நீ ஏன் போகவில்லை ?”
“போகணும் என்று தோன்றவில்லை.. ஆனால் என்னுடன் காலேஜில் படித்தவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்”
“சரி... நீயும் போகலாமே... “
“இண்டியாவுக்காக... “
சிரித்துக்கொண்டு “இந்த பஜனை எல்லாம் வேண்டாம்...”
கொஞ்சம் தயங்கி தயங்கி அந்த உண்மையை சொன்னேன்.
“சார் நீங்க இங்கே இருக்கும் போது உங்களை விட்டுவிட்டு போக மனசு வரவில்லை...” என்றேன்.
ஒரு சின்ன புன்னகை. என் அப்பா ஒரு முறை “நீ ஏன் அமேரிக்கா போகலை என்று எனக்கு தெரியும். சுஜாதா இருக்கிறார் என்பதால் தானே ?” என்றார்.
டக் என்று பொய் சொல்ல முடியவில்லை. “ஆமாம்” என்றேன்.
போயிருந்தால் பல லட்சம் டாலர் சம்பாதித்திருப்பேன். ஆனால் சுஜாதா உட்பட பல விஷயங்களை இழந்திருப்பேன்.
Super
ReplyDeleteஎன்றும் அழியாத நினைவுகள்
I am yet to find a copy of k.k.pakkam. Uyirmai has also do not have copies. Can anybody help me? Old or new book - both are fine to me.
ReplyDeleteI dont know. Only option is keep searching.
DeleteI really do not know how to search and where to search. I badly miss it. Pls help me.
Deleteஆஹா! மிக மிக அருமை!
ReplyDeleteசிலருக்குத்தான் நட்பாகிய காதல் கிட்டும்..அது சாகவரமும் பெறும்..தங்களுக்குக் கிடைத்துள்ளது....
ReplyDeleteஅதில் எம்போன்றோர்கும் பெருமையே.
அருமை
ReplyDeleteSuperb. Adiyen another sujatha daasan.
ReplyDeleteGreat 👍😊🙏✍️
ReplyDeleteSuch a great meories of a great person - you are so privileged to interact closely 🙏
ReplyDelete