Skip to main content

பிள்ளைகளின் திருநட்சத்திரம்

பிள்ளைகளின் திருநட்சத்திரம்

ஆவணி ரோகிணி.
ஸ்ரீஜெயந்தி.
கண்ணன் அவதாரத் திருநாள்.

கண்ணனைக் குறித்து உங்களுக்குப் பல விஷயங்கள் தெரியும், அதனால் இதே நட்சத்திரத்தில் அவதரித்த பிள்ளைகளைப் பற்றி சில விஷயங்களை இன்று பார்க்கலாம். 

முதல் பிள்ளை - ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை நம்பிள்ளையின் சிஷ்யரான ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை ஆவணி ரோகிணியில் சோழநாட்டில் (தஞ்சாவூர் பக்கம்) உள்ள திருவெள்ளியங்குடி என்னும் திவ்யதேசத்திற்கு அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் இடத்தில் 1167ஆம் ஆண்டு அவதரித்தார். 

ஆவணி ரோகிணியில் அவதரித்ததால், இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார்.  கிருஷ்ணர் என்னும் திருநாமத்தையும் பெற்றார்.

குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழியில் 

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன்
உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என்
அரங்கனுக்கு அடியார்களாய்

ஆயர் குலத்துப் பெண்களை ஆய்ச்சி என்றும் ஆண்களை ஆச்சான்(அல்லது ஆயத்தான்) என்றும் அழைப்பார்கள். இயர் பெயர் கிருஷ்ணன் என்று இருந்தால் பெரும்பாலும் அழைக்கும் பெயர் ஆச்சான்/ஆயத்தான் என்று இருக்கும். பெரிய ஆய்த்தான் பிள்ளை என்பதை தான் நாம் பெரியவாச்சான் பிள்ளை என்கிறோம். 

ஸ்ரீ மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலை

பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால்
அரிய அருளிச்செயல் பொருளை ஆரியர்கட்கிப்போது
அருளிச்செயலாய்த் தறிந்து.

பெரியவாச்சான் பிள்ளையின் உரையினால் தான் ஒன்று ஆழ்வார்களை அனுபவிக்க முடிகிறது. இதனால் தான் பெரியவாச்சான் பிள்ளைக்கு "பரம காருணிகர்" மற்றும் "அபார கருணாம்ருத சாகரர்" என்ற இரண்டு உயர்ந்த பெயர்களை வைணவ உலகம் சூட்டியது மகிழ்ந்தது. திருவரங்கநாதன் "அபயப்ரதராஜர்" என்னும் பட்டத்தை இவருக்கு அருளிச்செய்தான். இராமாயண அர்த்த விசேஷங்களை எடுத்துரைத்ததால், "இராமாயணப் பெருக்கர்" என்றும் அழைக்கப்பட்டார். 

இவருடைய உரைக்கு ஓர் உதாரணம் பார்க்கலாம். பாரதப் போரில் கண்ணபிரான் தன் சக்ராயுதத்தைக் கொண்டு சூரிய அஸ்தமனம் ஆக சில நாழிகைகள் முன்பே சூரியனை மறைத்தார் என்ற கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதை பெரியாழ்வார் தன் திருமொழியில் ‘ஆழிகொண்டு அன்று இரவி மறைப்ப’ என்று கூறுகிறார். 

பெருமாளின் ஆழி பல கோடி சூரியனுக்கு ஒப்பாகும் என்கிறார்கள். . அப்பேர்பட்ட ஒளியை உடைய சக்கரம் எப்படிச் சூரியனை இருட்டாக்கும். சூரியனுடன் சேரும் போது வெளிச்சம் இன்னும் கூடுமே தவிரக் குறையாது. லாஜிக் சரியில்லையே என்று தோன்றும். பெரியவாச்சான் பிள்ளை மிகமிக அதிகமான ஒளியை கண்கொடுத்துப் பார்க்க முடியாது கண் கூசி அந்த ஒளி கண்ணை இருட்டாகி விடும். அதனால் உலகம் இருண்டுவிட்டதாக தோன்றும் என்று  விளக்கம் கூறுகிறார். 

இரண்டாம் பிள்ளை - ஸ்ரீபெரியவாச்சானுடைய குமாரரான நாயனாராச்சான் பிள்ளை. 

பெரியவாச்சான் பிள்ளை தனது சகோதரியின் மகனான "நாயனாராச்சான் பிள்ளை" என்பவரை ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டு, தான் நம்பிள்ளையிடமிருந்து பெற்ற உபதேசங்களை அவருக்கு அருளிச்செய்தார். இவர் பல கிரந்தங்கள் அருளிச் செய்தார். அதில் சரமோபாய நிர்ணயம் என்ற கிரந்தத்தில் எம்பெருமானாரே உத்தாரக ஆசாரியர் என்று நிலை நிறுத்தினார். இவருடைய நட்சத்திரமும் ஆவணி ரோகிணி. 

மூன்றாம் பிள்ளை - தூப்புல் பிள்ளையின் பிள்ளை குமார வரதாசாரியார். 

ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருக் குமாரர் ’குமார வரதாசாரியார்’ -  நாயினாராசார்யர் என்றும் அழைக்கப்பட்டார். இவருடைய திருநட்சத்திரமும் ஆவணி ரோகிணி. ஸ்ரீ வேதாந்த தேசிகன் பரமபதத்துக்கு எழுந்தருளிய சமயம் சிஷ்யர்களும் இவரும் மிகவும் வருத்தப்பட்டு, பின் தேறி எழுந்த ஸ்வாமி தேசிகனுடைய சரமத் திருமேனியைத் தண்டம் சமர்ப்பித்து, 

கவிதார்க்கிக சிம்ஹாய  கல்யாண  குணசாலிநே 

ஸ்ரீமதே வேங்கடேசாய  வேதாந்த குரவே நமஹ 

என்ற ஸ்லோகத்தை அருளினார் நாயினாராசார்யர். இதன் பொருள் : கவிகள் வாதம் செய்பவர்கள் ஆகியவர்களுக்குச் சிங்கம் போன்றவரும் மங்களக் குணங்கள் பொருந்தியவரும் உபயவேதாந்தங்களுக்கும் ஆசாரியரும் ஸ்ரீமான் வேங்கடேசன் என்ற திருநாமம் சூட்டப்பட்டவருமான ஸ்வாமி தேசிகனை வணங்குகிறேன். 

தேசிகன் விஷயமாக பிள்ளை அந்தாதி அருளினார். அதில் ஸ்ரீதேசிகனுக்கும் ஸ்ரீராமானுஜருக்கும் பொருந்துமாறு சில பாசுரங்களை அமைத்திருப்பது இதன் தனிச் சிறப்பு. இவரே ஸ்ரீரங்கநாச்சியார் நியமனப்படி ஸ்ரீரங்கத்தில் வேதாந்த தேசிகனின் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து ஆராதித்துக்கொண்டு வந்தார். 

பெரியவாச்சான் “பிள்ளை”
நாயனாராச்சான் ”பிள்ளை”
தூப்புள் பிள்ளை குறித்து பிள்ளை அந்தாதி அருளிய அவருடைய பிள்ளையான நாயினாராசார்யர் 

பிள்ளை என்றால் என்ன பொருள் ? 

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு

உறங்குவான் போலே கிடந்த இப் ’பிள்ளை’

என்று கிருஷ்ண அனுபவத்தில் பெரியாழ்வார் அருளிய பாசுரம். பெரியாழ்வார் ஆண்டாளுக்குக் கண்ணன் கதைகளைப் பாசுரங்களாக அருளினாரோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

பெரியாழ்வார் இந்தப் பாசுரத்தில் பயங்கரமான பூதனையினுடைய முலையைச் சுவைத்து ஒன்றும் அறியாது உறங்குபவனைப்போலே படுத்திருக்கும் ’பிள்ளை’ கண்ணன் என்கிறார் பெரியாழ்வார்.

அதாவது எல்லாம் தெரியும் ஆனால் தெரியாதவன் போலப் படுத்திருக்கிறான் கண்ணன் என்று பொருள். இதற்குப் பெயர் தான் ‘பிள்ளை’

உபநிஷத்தில் ஒரு வாக்கியம் உண்டு ”பாண்டித்யம் நிர்வித்ய பால்யேந திஷ்ட்டாஸேத்” இந்தச் சூத்திரத்தைப் பிரம்ம சூத்திரம் “அநாவிஷ்குர்வந் அந்வயாத்” என்ற சூத்திரத்தின் பாஷ்யத்தில் மேற்கோள் காண்பிக்கிறார்கள்.

இதன் எளிய அர்த்தம் செருக்கற்று, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், அடக்கமாக இருப்பதே பால்யம். பால்யம் என்பது ஞானம் அடைந்து தனது பெருமையை வெளியே காண்பிக்காமல் ”இந்தக் குழந்தையும் பால் குடிக்குமா ?” என்று நாம் வியப்பது. “நிறை குடம் தளும்பாது!” என்பது இது தான்.

பிள்ளை லோகாசாரியர், நம்பிள்ளை, திருவாய்மொழிப் பிள்ளை, தூப்புல் பிள்ளை ( ஸ்ரீ வேதாந்த தேசிகன்) என்று ஸ்ரீவைஷ்ணவத்தில் பல பிள்ளைகள் இருக்கிறார்கள்.

கண்ணன் தயிர்சொறுக்கு விரல் இடுக்கில் விதவிதமான ஊறுகாய் வைத்துக்கொண்டு சாப்பிடுவான். ஆவணி ரோகிணி ஸ்ரீஜெயந்தி.  அதனால் கண்ணனையும் கொஞ்சம் ஊறுகாய் போல தொட்டுக்கொள்லாலம். கிருஷ்ணர் சாந்திபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுல வாழ்க்கையைத் தொடங்கி 64 நாளில் 64 கலைகளையும் கற்றார்.64 நான்கு நாட்களில் பாடம் கேட்டுக்கொண்ட கிருஷ்ணரை பாராட்ட வேண்டுமா அல்லது 64 நாளில் அவருக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த சாந்திபனியை பாராட்ட வேண்டுமா என்ற கேள்வி வந்தது. சந்தேகமே இல்லை சாந்திபனி தான். இவரைப் போல இன்னொருவர் கிடையாது, நம்பிள்ளையைத் தவிர என்கிறார். ஏன் என்றால் நம்பிள்ளை கூடுதலாக ஆழ்வார் அருளிச்செயல் தெரியுமே” என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை.

இந்தப் பிள்ளைகள் இல்லை என்றால் நாம் கண்ணனை இப்படி அனுபவித்திருக்க முடியாது. அதனால் பிள்ளைகளின் திருநட்சத்திரத்துடன் கண்ணனையும் சேர்த்துக் கொண்டாடுங்கள்! 

- சுஜாதா தேசிகன்

30-08-2021

ஆவணி ரோகிணி 

ஸ்ரீஜெயந்தி, ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை, நாயனாராச்சான் பிள்ளை, நாயினாராசார்யர்

Comments