Skip to main content

23. இராமானுசன் அடிப் பூமன்னவே - தூதுவளை     பல மாதங்களாக இராமானுசன் அடிப் பூமன்னவே தொடரை வேறு பல வேலைகள் காரணமாக எழுத முடியவில்லை. இராமானுசரின் 1004 திருநட்சத்திரம் அன்று மீண்டும் இராமானுசருடன் நம் பயணத்தை தொடங்கலாம். பலருக்கு இதற்கு முன் பகுதி மறந்திருக்காலாம். அதை இங்கே படித்துவிட்டு இதை தொடங்கலாம்... 


வீர நாராயணப் பெருமாள் கோயிலுக்கு வந்த மணக்கால் நம்பி பெருமாள் முன் நின்ற போது ஆளவந்தார் யானையின் மீது செல்லும் காட்சி மனதில் ஓடியது. 

நடுக்காட்டில் ஒருவனுக்குக் கண்ணைக் கட்டிவிட்டு, அவனிடம் இருக்கும் செல்வத்தைத் திருடர்கள் வந்து பறித்துச் செல்ல, முள்ளும் கல்லும் நிறைந்த பாதையில், எங்கும் காட்டு விலங்குகள் இருக்க ‘ஐயோ எனக்கு நல்ல பாதையைக் காட்டுபவர் யாரும் இல்லையா ?’ என்று தவிப்பவனைப் போல ஆளவந்தார் இருக்கிறார்.  

முள்ளும், கல்லும் நிறைந்த சம்சாரம் என்ற காட்டில், மோகம் என்ற திருடர்கள் ஞானம் என்ற செல்வத்தை அபகரித்துச் செல்ல,  பாதை தெரியாமல் ஆளவந்தார் யானையின் மீது செல்கிறார். தவிப்பவனுக்குக் கண்கட்டைத் திறந்துவிட்டு நல்வழியைக் காட்டுபவன் தானே குரு. 

ஆனால் இனி ஆளவந்தாரை நேரில் சந்திக்க முடியுமா ? 

சோழ மன்னனது ராஜ்யத்தில் பாதியை ஆண்டுகொண்டு இருக்கும் யாமுனரிடத்தில் என் போன்ற சாதாரணச் சாதுவான அந்தணன் நேரில் சென்றால் வாயில் காப்பவன் என்னை உள்ளே விடுவானா ? குரு இல்லாமல் ஞானம் வராதே ?(1) என்று குழம்பிய நிலையில் பெருமாளைச் சேவித்துவிட்டு அரண்மனை நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கினார். 

அவர் எண்ணியபடியே வாயில் காப்பவன் புது அரசரைக் காண அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. பல நாள் முயன்றார் முடியவில்லை. ஒன்றும் செய்வதறியாமல், மீண்டும் வீர நாராயணப் பெருமாள் முன் ‘நாதமுனிகள், உய்யக்கொண்டார் திருவுள்ளப்படி ஆளவந்தாருக்கு ஸ்ரீ வைஷ்ணவ அர்த்தங்களைத் தெரிவிக்க வேண்டும். பல முறை சென்று முயன்று பார்த்துவிட்டேன். இனி யாரைத் தூதுவிடுவது ? அழ்வார்களைப் போலக் கிளி, குயில், வண்டு என்று இவற்றைத் தூதுவிட முடியாதே! தூதுக்குச் சென்ற இவை தூது சென்று திரும்பியதாக ஆழ்வார்கள் பாசுரங்களில் இல்லையே ! 

ஆண்டாள் திரளாக மழை பொழியும் மேகங்களைத் திருமலைக்குத் தூதுவிட்டாள்(5), அது போல என்னால் செய்ய முடியாதே! என்று காட்டுமன்னார் முன் நின்ற மணக்கால் நம்பி கண்களில் கண்ணீர்த் துளிகள் பெருகியது.  தன் குருவின் கட்டளையை எப்படி நிறைவேற்றுவது என்று மனம் துடித்தது. 

ஆசாரியனான உய்யக்கொண்டாரையும் அவருடைய ஆசாரியனான நாதமுனிகளையும் மனதில் தியானித்து “காட்டும் மன்னாரே ! நாலாயிரத்தைக் காட்டிக்கொடுத்தது மாதிரி அடியேனுக்கும் ஒரு நல்வழியை நீ தான் காட்ட வேண்டும்” என்று பிராத்தித்து நின்றார். அச் சமயம் கருமேகங்கள் ஒன்று கூடி, வானம் இருண்டு சட்டென்று மழை பொழியத் தொடங்கியது. 

அப்போது முதியவர் ஒருவர் மழையிடமிருந்து தப்பிக்க கோயிலுக்குள் நுழைந்தார். நெற்றியில் பட்ட மழைத்துளியால் திருமண் வழிந்திருந்தது.   அவரிடம் அவசரமும் பதட்டமும் தென்பட்டது.  கையில் இருந்த ஓலைக் கூடையை கீழே வைத்துவிட்டு மழை விட்டுவிட்டதா என்று வாசலைப் பார்த்துக்கொண்டே பெருமாளை வணங்கி, பிரசாதங்களை வாங்கிய சமயம் மழை ஓய்ந்திருந்தது.  வேகமாக வாசல் பக்கம் நோக்கி விரைந்ததில் கொண்டு வந்த கூடையை மறந்தார்.  

இதைக் கவனித்த மணக்கால் நம்பி ”நற்குணமுடைய பெரியவரே! “ என்று அழைத்தார். வேகமாக சென்ற அப்பெரியவர் திரும்பினார் “அவசரத்தில் கூடையை மறந்துவிட்டீர்களே! என்று மணக்கால் நம்பி கூடையை அவரிடம் கொடுக்க கையில் எடுத்தவுடன்,  பெரியவர் சந்நிதி நோக்கி ஓடி வந்து மணக்கால் நம்பியைக் கைகூப்பி வணங்கி,  

“மன்னனின் கோபத்துக்கு ஆளாகியிருப்பேன்! அதிலிருந்து என்னை காப்பாற்றீர். உம் உதவியை என்றுமே மறக்க மாட்டேன்“ என்றார். 

“கூடையில் பச்சையாக தழைகள் இருக்கிறது, இதை எடுத்துக்கொண்டு போகவில்லை என்றால் அரசர் ஏன் உங்கள் மீது கோபப்படப் போகிறார் ? விளங்கவில்லையே!!” என்றார் நம்பி. 

“புதிய மன்னர் ஆளவந்தார் அரண்மனை திருமடப்பள்ளியில் பணி செய்கிறேன்.. கூடையில் இருக்கும் இந்தக் கீரை ஒருவித வேளை(1) தாவரம். இதைக் கொண்டு ஒருநாள் கறியமுது செய்தேன். மன்னருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.  அதன் பிறகு இதற்குச் சமமாக அவர் வேறு எதையும் உண்பது இல்லை. அதனால் தினமும் இதை அவருக்குக் கறியமுது செய்து கொடுக்க வேண்டும். அதனால் இந்தக் கீரையைப் பல இடங்களில் தேடி அலைந்து பறித்துக்கொண்டு போகிறேன்.  இப்பொழுது எல்லாம் அதிகம் கிடைப்பதில்லை! கிடைத்தாலும் பறிப்பது சுலபம் இல்லை அடர்ந்த மேட்டில் ஏறுவதற்கு சிரமமாக இருக்கிறது இக் கீரையின் இலையில் ஈட்டி போல முட்கள் பரவியிருக்கும்  என்று அந்தப் பெரியவர் ஒரு கீரையை எடுத்து அவரிடம் கொடுத்தார். 

“அப்படியா ?” என்று நம்பிகள் அந்தக் கீரையை வாங்கிப் பார்த்தார்

“உதவிக்கு நன்றி. எனக்கு நேரமாகிவிட்டது.. கிளம்புகிறேன்” என்று அந்த முதியவர் கிளம்பினார். 

கோயிலுக்குப் பின்புறத்தில் ஓர் இடத்தில் இக்கீரை அடர்த்தியாக  வேலிகளில் படர்ந்து இருப்பது நம்பியின் நினைவுக்கு வந்தது. மழையினால் ஏற்பட்ட குளிர்ச்சி போல மனமகிழ்ச்சியினால் அவருடைய கவலை மறைந்து  “இந்த கீரையை தினமும் உங்களுக்குக் கொண்டு வந்து கொடுக்கட்டுமா ?” என்றார். 

வேகமாக சென்ற முதியவர் காதுகளில்  இந்த வார்த்தைகள் இன்பத் தேனாக விழுந்தது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை அது பரவி அப்படியே நின்றார் “கருணை மிகுந்தவரே! உங்கள் பெயரைக் கூட அவசரத்தில் நான் கேட்கவில்லை. ஆனால் நீங்களோ எனக்கு உதவ முன்வருகிறீர்கள்!” என்றார். 

மணக்கால் நம்பி “இங்கே வீரநாராயணபுரத்தில் வீற்றிருக்கும் காட்டுமன்னாருக்குத் தினமும் திருவாராதனம் செய்த நாதமுனிகளின் நேரடி  சிஷ்யரான உய்யக்கொண்டார் அடியேனின் ஆசாரியன்.  அன்புடன் ‘மணக்கால் நம்பி’ என்று அவர் அடியேனை அழைப்பார்” என்றார். 

முதியவர் அவரை வணங்கி “நம்பியே இந்த காட்டுமன்னார் தான் என் வேண்டுதலை நிறைவேற்றி உங்களை இன்று எமக்குக் காட்டிக்கொடுத்துள்ளார்!” என்று மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். 

மணக்கால் நம்பி புன்முறுவலுடன் காட்டுமன்னாரைப் பார்த்து “தூது செல்ல ஓர் உபாயம் கேட்டேன்.  பறவைகள்(4) தாமே தேடிவந்து நம்மாழ்வாருக்குத் தூது சென்ற நற்குணம் போல இந்த நற்குணம் பொருந்திய பச்சிலையைத் தூது அனுப்ப எமக்குக் காட்டிக்கொடுத்தாய்!” என்று கைகூப்பி வணங்கினார். 

அன்று முதல் நாள்தோறும் கோயிலுக்குப் பின்புறத்தில் வளர்ந்து இருக்கும் கீரையைப் பறித்துச்சென்று அந்த முதியவரிடம் கொடுக்க அவர் அதை பிரியமுடன் வாங்கி அரசருக்குக் கறியமுது செய்து கொடுக்க, ஒரு நாள் கூட ஆளவந்தார் கீரையை யார் கொண்டு வந்து கொடுக்கிறார்கள் என்று கேட்டது இல்லை. நன்கு அதை சமைத்த அந்த மடப்பள்ளிக்காரரும் சொல்லவில்லை. 

ஆறுமாதகாலம் ஆன பின் “நாம் கீரையை கொண்டு வந்து தருவதன் உள்நோக்கம் பற்றி தூது சென்ற கீரை தூது சொன்னதா ? அதை அறிந்தவர்கள் யாரும் இல்லையே!” என்று நினைத்த மணக்கால் நம்பி கீரை கொடுப்பதை நிறுத்திப்பார்ப்போம் என்று அன்று கீரையைக் கொடுக்காமல் கோயிலிலேயே இருந்துவிட்டார். 

அன்று ஆளவந்தார் இலையில் தினமும் இடக் கூடிய கீரையைக் காணாமல், “இன்று எதனால் கீரை இல்லை ?” என்று கோபத்தில் ஒன்றும் சாப்பிடாமல் இருந்துவிட்டார். 

பதறிக்கொண்டு மடப்பள்ளிக்காரர் “அரசே! நாளும் கொண்டு வந்து தரும் அந்த நல்ல அந்தணர் இன்று கொண்டு வரவில்லை!” என்றார் 

மிகுந்த ஞானமுள்ள ஆளவந்தாருக்குக் கீரை தூதாக வந்தது என்று புரிந்தது. ”அந்த அந்தணர் யார் ? கொண்டு வந்து தரும் கீரைக்கு என்ன கொடுப்பீர்கள் ? விவரமாக எனக்குச் சொல்லுங்கள்!” என்றார் 

மடப்பள்ளிக்காரர் பயந்துகொண்டு “மன்னா!  வேதங்களின்  முதலும், முடிவையும் அறிந்த அந்த அந்தணரை காட்டுமன்னார் கோயிலில் மழைக்காக ஒதுங்கிய போது பார்த்தேன். உங்கள் பாட்டனார் வழி வந்த சிஷ்யனை குருவாக கொண்டவர்.  நான் கேட்காமலே கீரையை தினமும் கொண்டுவந்து கொடுக்கிறேன் என்று அன்புடன் கூறி, ஆறுமாத காலமாக நாள்தோறும் கொடுத்தார். அவருக்கு ஏதேனும் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டார். அவருக்கு தாங்கள் இந்த பூமியையே தானமாக கொடுத்தாலும் வாங்கமாட்டார்!” என்றார்

இதைக் கேட்ட ஆளவந்தார் “ஒப்பற்ற ஞானத்தாலே சிறந்த அந்த அந்தணர் இனி வந்தால் அவரை என்முன்னிலையில் அழைத்து வாருங்கள்!” என்றார். 

மணக்கால் நம்பி ஒரு நாள் கழித்து மறுநாள் கீரையை எடுத்துக்கொண்டு அரண்மனை மடைப்பள்ளி நோக்கி தீர்மானமாக சென்றார். 

“வாருங்கள் நம்பியே!” என்று அவருக்காகக் காத்துக்கொண்டு இருந்த மடைப்பள்ளிக்காரர் அவரை அழைத்துக்கொண்டு சென்று ஆளவந்தார் முன் நிறுத்தி அவரது கையிலுள்ள கூடையைக் காட்டி “இவர்தான் நாள்தோறும்  கீரையைக் கொடுத்தார். இன்றும் கொண்டு வந்திருக்கிறார்!” என்று காண்பிக்க ஆளவந்தார் “வேதம் அனைத்தும் கற்றவரே! இங்கு என் அருகில் வந்து அமர்வீராக” என்று பக்கத்தில் இருந்த ஆசனத்தைக் காட்டினார். “வயதில் முதியவராக, வேதம் அனைத்தும் கற்று, எமக்காக ஆறுமாதக் கீரையையே தூதுவிட்டதன் நோக்கம் என்னவோ ? உமக்கு வேண்டிய பொருள் என்ன என்று கூறுங்கள் உடனே தருகிறேன்!” என்றார் 

”அரசனே! உமது பாட்டனார் முன்பு என்னிடத்தில் இப்பூமியில் பல உயர்ந்த பொருள்களைத் தேடிக் கொடுத்துவிட்டு விண்ணுலகு அடைந்தார். அந்தப் பொருள்கள் என்னிடம் உள்ளன. அதை உம்மிடத்தில் ஒப்படைக்க சொல்லியுள்ளார். அவற்றை நீர் பெற்றுக்கொள்ள வேண்டும்!” என்றார். 

“உங்கள் நேர்மை மெச்சினோம்! அரசனான எனக்குப் பொருள்கள் தேவை இல்லை. அதை நீரே வைத்துகொள்ளுங்கள்!” என்றார் ஆளவந்தார் 

“அரசே! நீங்கள் நினைப்பது போல இவை இந்த உலகில் காணும் பொருள்கள் இல்லை. இவை காண முடியாத பொருள்கள். பல உயர்ந்த விஷயங்களின் சீரிய பொருள்கள், அர்த்தங்கள் ! அவற்றை உமக்கு எடுத்துக்கூறப் பல நாள் ஆகும்!” என்றார் 

ஆளவந்தார் வியப்புடன் “நம்பியே! இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?” என்றார் 

”அப்பொருள்களை எல்லாம் உமக்கு எடுத்துக்கூற தினமும் வருகிறேன்.  வரும் சமயத்தில் வாயிற்காவலர் என்னைத் தடுக்காதபடி என்னை அரண்மனைக்குள்ளே விடுமாறு செய்வீராக” இரந்து(3) கேட்டுக்கொண்டார்.

“அப்படியே செய்கிறேன்!” என்று ஆளவந்தார் வாயிற்காவலனை அழைத்து “இவர் எப்போது வந்தாலும் என்னிடத்தில் அனுப்பி வைப்பாயாக!” என்று ஆணை பிறப்பித்தார்.  

நம்பி மன்னரிடமிருந்து விடைபெற்று, அடுத்த திட்டத்தை நிறைவேற்ற மன்னாரின் அருள் வேண்டி வீரநாராயண புரம் கோயிலை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தார். 


பயணம் தொடரும்....
- சுஜாதா தேசிகன்
20-04-2021


---------------------------------------------------------------------

(1) கண்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தாலும், ஆசாரியன் மூலமாக கேட்டுக்கொள் என்கிறார். 

(2)‘வேளை’ என்பது தாவர வகை. தூது சென்றதால் தூதுவேளை என்பது தூதுவளை என்று ஆனது என்பது என் அனுமானம். 

(3)திருவாய்மொழி பாசுரம் (9.3.5 ) ஈடு வியாக்கியானத்தில் 

மனமே! உன்னை* வல்வினையேன் இரந்து*
கனமே சொல்லினேன்* இது சோரேல் கண்டாய்**
புனம் மேவிய* பூந் தண் துழாய் அலங்கல்*
இனம் ஏதும் இலானை* அடைவதுமே

என்ற பாசுரத்துக்கு ஆழ்வார் தம்முடைய நெஞ்சை இரந்து கேட்டுக்கொண்டு எம்பெருமானை விடாதிருக்குமாறு கூறுவதைப் போல், மணக்கால் நம்பி ஆளவந்தார் இருக்குமிடம் சென்று இரந்து கேட்டுக்கொண்டார் என்பது ஐதீகம். 

(4)திருவாய்மொழி பாசுரம் (6.8.1 ) ஈடு வியாக்கியானத்தில் 

பொன்-உலகு ஆளீரோ,* புவனி முழுது ஆளீரோ*
நல் நலப் புள்ளினங்காள்!* வினையாட்டியேன் நான் இரந்தேன்**
முன் உலகங்கள் எல்லாம் படைத்த* முகில் வண்ணன் கண்ணன்*
என் நலம் கொண்ட பிரான் தனக்கு* என் நிலைமை உரைத்தே

என்று ‘நல் நலப் புள்ளினங்காள்’ என்று நற்குணம் உடைய பறவையை மணக்கால் நம்பிக்கு உதாரணம் என்பது ஐதீகம். 

(5)நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் 

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த* மாமுகில்காள்!* வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத்* திரண்டு ஏறிப் பொழிவீர்காள்!**
ஊன் கொண்ட வள்-உகிரால்* இரணியனை உடல் இடந்தான்*
தான் கொண்ட சரி-வளைகள்* தருமாகில் சாற்றுமினே

என்று ஆகாயத்தை விழுங்கிக் கொண்டு கிளம்புகின்ற பெரிய மேகங்களே! திருமலையிலே உள்ள, தேன் நிறைந்துள்ள மலர்கள் சிதறும்படி, திரளாக மழை பொழியும் மேகங்களே! கூர்மையான நகங்களாலே இரணியன் உயிர் கொண்ட நரசிம்மன், என்னிடம் இருந்து எடுத்துச் சென்ற என் கைவளைகளை திருப்பித் தருவதாக இருக்கிறானா என்று நான் கேட்டதாகச் சொல்லுங்கள்' என்று தூதுவிடுகிறாள். 

Comments

 1. namaskaram sir, Can I have your address sir? We would like to send a book " Yadhavapyudhayam" first sargam tamil translation by shri NR kumar. Thank you sir.

  ReplyDelete
  Replies
  1. Pl send a mail to desikann@gmail.com and i will send my address.

   Delete
 2. Very interesting narration. The thuthu valai going as an emissary and winning is logically explained.
  '

  ReplyDelete

Post a Comment